பெருஞ்சுழி 44
ஆயுத சாலையில் மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். "தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை நியாயங்களை அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம் மட்டுமே போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும் விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!" அவன் செவிகளில் விறலியின் குரல் கேட்டது. கடலோசை நிறைந்த ஓரிடத்தில் கல் மண்டபம் ஒன்றில் தலை சாய்த்து அமர்ந்திருப்பதாக தன்னை உணர்ந்தான். அதே நேரம் தன்னை குனிந்து நோக்கும் ஆதிரையை கண்டான். "இளவரசர் நஞ்சளிக்கப்பட்டிருக்கிறார். போர் நெருங்கும் சமயத்தில் உங்கள் உறுதியை குலைக்கவே இச்செயல் செய்யப்பட்டிருக்கிறது" என யாரோ சொல்வது கேட்டது. ஆதிரை எழுந்துவிட்டாள். "அம்மா அம்மா" என கண்களில் நீர் வழிய அவளை அழைத்தான் அரிமாதரன். "போருடை அணிவித்து அரிமாதரனை ஆயுத சாலைக்கு அழைத்து வாருங்கள். என் தேர் தட்டில் ஒரு பாதுகாப்பான சிற்றிடம் ஒருங்கட்டும். அவன் போரைக் காண வேண்டும். அவனுக்கு நஞ்சளித்தவன...