பெருஞ்சுழி 23

சுனதர் சொன்னார்.
விகண்யம்  என்ற பெருமலையின் அடிவாரம்  வரையே மாவலியத்தின்  குடிகள்  பரவியிருக்கின்றன. பெருமழை தொடங்கும்  மாதங்களுக்கு  முன் வடக்கிலிருந்து தெற்கு  நோக்கி பெருங்காற்று வீசும். விகண்யம்  ஒரு உறங்கும்  எரிமலை. மூன்று மாதங்களுக்கு  முன்  விகண்யத்தில் முதல்  வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. காற்று வீசத் தொடங்காததால் சாம்பலும் எரித்துகள்களும் தெற்கு  நோக்கி பரவவில்லை. இருந்தும்  மலையடிவாரங்களுக்கு அருகிலிருக்கும்  குடியினர் ஏற்கனவே  விளைவுகளை  உணரத் தொடங்கி விட்டனர்.
ஆயிரக்கணக்கான  மக்கள் விகண்யத்தைக் கடந்து வடக்கு  நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அவர்களின்  எண்ணிக்கை  பெருகும்  என்றே நினைக்கிறேன்.
தெரிதர்  சுனதரையே நோக்கி  அமர்ந்திருந்தார். ஒரு குழந்தையின்  பதற்றத்துடன்  சுனதர் தொடர்ந்தார். 
ஆழியில்  நடைபெறும்  மாற்றங்களும்  விரும்பத்தக்கதாக இருக்கவில்லை. விகண்யத்தைக்  கடந்த தெற்கு  நிலப்பரப்பு  முழுவதும்  ஆழியால் சூழப்பட்டுள்ளது. எந்நேரத்திலும்  ஆழியில்  ஒரு சுழல் உருவாகலாம். மாவலியத்தின்  கிழக்கெல்லையிலும் மேற்கெல்லையிலும் பேரலைகள் உள் நுழையும்.
தெரிதர்  திடுக்கிட்டார். அவரை கையமர்த்தி விட்டு சுனதர் தொடர்ந்தார்.
விகண்யத்தின் வடக்கே தொடரும்  பிற மலைகளும்  வெடிக்கத் தொடங்கி விட்டன. ஆழியில்  ஏற்பட்டிருக்கும்  மாற்றமே இவையனைத்திற்கும் காரணமாக  இருக்க வேண்டும். செய்வதற்கு  ஒன்று  மட்டுமே  உள்ளது  தெரிதரே.
"என்ன சொல்ல வருகிறீர்கள்?" புருவம் சுருங்க படபடப்பினை அடக்கியவாறே கேட்டார்  தெரிதர்.
"சுருங்கச் சொல்வதானால் ஆழியில்  ஏற்படப் போகும்  பெரு வெடிப்பின் அறிகுறிகள்  இவை. தெற்கிலிருக்கும் மக்கள்  போக்கிடமின்றி வடக்கு நோக்கி நகர்வார்கள். இங்கும் எரிமலை வெடிப்புகளால் படரும்  சாம்பலால் பயிர் உற்பத்தி பாதிப்படையும். பஞ்சம் சூழும். ஆழி அதன் பின்னே எழும். சொல்லி வைத்தவை போல ஏற்கனவே  எழுதப்பட்ட நாடகம்  போல அனைத்தும்  நடக்கின்றன. என் முன் ஊகம் தவறென இருக்க வேண்டுமென்றே நான்  விழைந்தேன். ஆனால்  இவை இருபதாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. வழி என எஞ்சியிருப்பது ஒன்றே. எவர்தொடாமேட்டினை நோக்கி மக்களை  செலுத்துவது. மதீமத்தின் கரையில்  மக்களை  குடியேற்றி அதன் பின் மெல்ல மெல்ல  அவர்களை எவர்தொடாமேடு  நோக்கி  பயணிக்க வைப்பதே எஞ்சியிருக்கும்  வழி தெரிதரே" குற்றம்  இழைத்தவன் போல் முடித்தார் சுனதர்.
என்ன நடந்து  கொண்டிருக்கிறது? இல்லை  நான்  கனவு கண்டு கொண்டிருக்கிறேன். என் முன் சுனதர் இல்லை. நான் தனித்தமர்ந்திருக்கிறேன். இவையனைத்தும்  சொப்பனம். மாவலியரின் பெரு வீரத்தால்  ஒன்றிணைக்கப்பட்டு சுனதரின் பெருங்கருணையால் மீட்கப்பட்ட தேசமிது. நம்பிக்கையுடன்  எதிர்காலம்  நோக்கி நகரும்  மக்கள்  நாங்கள். இது நடக்க வாய்ப்பல்ல. கடற்கரையில்  குழந்தை கட்டிய மணல் வீடா மாவலியம்? ஒரு அலை எழுந்து கரைத்துச் செல்ல.
"பேரியற்கையின்  முன் நாம் கட்டுவது மணல் வீடு கூட கிடையாது தெரிதரே" என தெரிதரின்  எண்ண ஓட்டம்  புரிந்தவராய் சுனதர் தொடர்ந்தார்.
"நிகழ இருப்பவற்றை நான்  ஊகித்த விதத்தில்  தொகுத்திருக்கிறேன் தெரிதரே. இச்சுவடி உங்களுடன்  இருக்கட்டும். உங்களைத் தவிர  என்னை சுனதன்  என யாரும்  அடையாளம்  காண முடியாது. மாவலியத்தின்  ஒற்றர்கள்  சிலர் என்னைப் பின் தொடர  ஆணையிடுங்கள். தொடர்ந்து நிகழ இருப்பவற்றை  ஓலைகளில்  எழுதி செல்லும் வழிகளில் ஆங்காங்கே விட்டுச் செல்கிறேன். உங்கள்  ஒற்றர்கள்  உங்களிடம்  அவற்றை அளிப்பார்கள். நமக்கு  இருக்கும்  நாட்கள்  மிகக் குறைவு  தெரிதரே. மேலு‌ம்  அழிவு மெல்ல மெல்ல  நிகழப் போவதில்லை. சீராக  நிகழப் போவதுமில்லை. முடிந்த வரை உயிர்களை காப்போம்" என்றார்  சுனதர்.
ஆயிரம்  கேள்விகள்  உள்ளுக்குள்  அலையடித்தாலும் "உங்களை நான்  மீண்டும்  எப்போது சந்திப்பது?" என்றார்  தெரிதர்.
சுனதர் புன்னகைத்தபடி " நான்  மீள்வது என் கையில்  இல்லை  தெரிதரே. அறிந்து விடு அறிந்து விடு என ஆணையிட்டபடியே இருக்கிறாள் அன்னை என்னிடம். கொதிநீரில்  எழும் நீர் குமிழ்கள்  போன்றது தான் வாழ்வு என்ற நிதர்சனத்தை என்னால்  ஏற்க  முடியவில்லை. மிருகங்கள்  மேலானவை தெரிதரே. இரையை வேட்டையாடுகின்றன. இரையாகின்றன. அச்சத்தையும்  கோபத்தையும் காமத்தையும் வேட்கையையும் உடனுக்குடன்  வெளிப்படுத்துகின்றன. நாம் ஓருணர்வு வெளிப்பட எழுந்தால்  மூடி வைத்து முன் செல்லவே நினைக்கிறோம். நம் மனம்  கொண்ட அச்சமும் காமமும்  வன்முறையும்  அரசாக சமூகமாக  குடும்பமாக  மாறி நிற்கின்றன. இப்போது  அழியப் போவதும் அவை தான். இருந்தும்  அதனை இறுதி  வரை  துணிந்து எதிர்ப்பதே நாம் செய்யக் கூடுவது. எதிர்ப்புக்கு  அறிதல்  என பெயர் சூட்டிக் கொண்டு  என்னை ஏமாற்றிக்  கொள்பவன்  நான். அன்னையின்  கனிவு கண்டு கூசாத உயிர்  என ஒன்றுள்ளதா இங்கு? எதிர்த்தறிய முயல்கிறேன்  தெரிதரே அவளை. முடியவில்லை  எனில்  அவளுள்  அடைக்கலம்  தேடுகிறேன்.  மாறாத விதி என ஒன்றிருக்கும் என்றால் அது அவள் கருணையே. அதை நம்பி அவளை அறிய முற்படுகிறேன்" என அரண்மனை  நீங்கினார் சுனதர்.
இவ்வளவு  அதிர்ச்சியையும்  கடந்து தன்னுள்  ஒரு உவகை ஏறுவதை தெரிதர்  உணர்ந்தார். செயலூக்கத்தின் உவகை அது. செயல்பட்டே ஆக வேண்டிய  கட்டாயத்தில்  எழும் உவகை அது.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024