பெருஞ்சுழி 37
மூவாயிரம் இரவுகளும் பகல்களும் அவள் நடந்தாள். பாதி உண்ணப்பட்ட எச்சங்களை மட்டுமே மனிதன் எனக் கண்டாள் ஆதிரை. ஆழிமாநாட்டின் அத்தனை தேசங்களிலிருந்தும் கூடணையும் பறவைகள் என எவர்தொடாமேட்டிற்கு வந்த வண்ணமே இருந்தனர் என்பதை ஆதிரை கண்டாள். கருத்த தேகத்தினர்களான தென்னவர்களும் மஞ்சள் நிறம் கொண்ட கிழக்கு தேசத்தவர்களும் கருஞ்செந்நிற உடல் கொண்ட மலைக்குடியினரும் என ஆழிமாநாட்டின் குடிகளில் பலர் அங்கு இறந்து கிடந்தனர். ஆதிரையின் உடல் வலு ஏறியபடியே வந்தது. முழுமையான கானக மகளாக அவள் மாறிவிட்டிருந்தாள். அவள் புலன்கள் கூர்மை கொண்டிருந்தன. உறங்கும் போதும் விழித்திருந்தது உள் விழி ஒன்று. கருமுத்தென உடல் மின்னத் தொடங்கியது. கரு நிலவு நாளொன்றில் கருத்த தேகத்தினளாய் தன்னெதிரே தான் நிற்பதைக் கண்டாள் ஆதிரை. பின்னரே அதுவொரு பாறை புடைப்பென அறிந்தாள். நிமிர்ந்த தோள்களுடன் நின்றிருந்த அச்சிற்பத்திற்கு கீழாக சில குழந்தைகள் விளையாடுவதைப் போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அத்தனைக் குழந்தைகளையும் தான் முன்னரே கண்டிருப்பதாக ஆதிரை எண்ணினாள். அச்சிற்பத்தின விழிகளையே நோக்கினாள். கனவுகளில் கண்டவை தனித்தமர்ந்திருந்த வேலைகளில் தீண்டிக் கொண்டிருந்தவை தமையனின் தலை கொய்தவன்று தவறெனச் சொன்னவை தருக்கி எழும் போதெல்லாம் தனித்து நின்று தவித்தவை அனைத்தும் உதறி எழுந்தவன்று அகன்று சிரித்தவை. ஆம் இவ்விழிகள் தான். இவள் விழிகள் தான்.இவள் நானா? இவள் நானா? என எண்ணிக் கொண்டே அச்சிற்பத்தை தீண்ட நெருங்கினாள் ஆதிரை. அவள் விரல்களுக்கும் சிற்பத்திற்கும் இடையே இருந்த கால் அங்குல இடைவெளியில் விர்ரென பறந்தது ஒரு அம்பு. அம்பு வந்த திசை நோக்கி ஆதிரை திரும்பிய போது வலத்தோளில் ஓர் அம்பு தைத்தது. அதை பிடுங்க முயல்கையில் இடத்தோளில் தைத்தது மற்றொரு அம்பு. இரு தொடைகளிலும் அடுத்தடுத்து தைத்தன கூரம்புகள். அம்பினை பிடுங்காமல் அம்பு வரும் திசையை நோக்கி நின்றாள் ஆதிரை.
"என்னைக் கொல்லும் நோக்கம் உண்டெனில் எதிரே வா! இவ்விளையாட்டை நான் வெறுக்கிறேன்" எனச் சொல்லியவாறே கணப்பொழுதில் தொடையில் தைத்திருந்த அம்பைப் பிடுங்கி அது வந்த திசையிலேயே எறிந்தாள். அவள் எறிந்த அம்பை ஏந்தியவாறே வெளிவந்தான் பேருடல் கொண்ட ஒருவன். சில கணங்கள் ஆதிரையை நோக்கி நின்றவன் "அன்னையே என்னை பொறுத்தருளுங்கள்" என ஆதிரையில் கால்களில் விழுந்தான்.
"எழுந்திருங்கள். மூவாயிரம் நாட்கள் கடந்து நான் கண்ட முதல் மனிதர் நீர். என் மொழியும் அறிந்திருக்கிறீர். ஏதோவொரு காவல் நிரை வீரரென உம்மை எண்ணுகிறேன். சொல்லுங்கள் நான் ஆற்றிய பிழை என்ன?" என்று அம்புகளை பிடுங்கியவாறே கேட்டாள் ஆதிரை. அவனிடம் எஞ்சியிருந்த அம்புகளுக்கும் அவளை தைத்த அம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டினையும் கவனித்துக் கொண்டாள். அவளைத் தைத்தவை கூர் முனை உடைய எடை குறைந்த அம்புகள். எஞ்சியிருந்தவை எடை மிகுந்த அம்புகள். மீன் செதில் போன்ற செதுக்கிய முனை கொண்டவை. ஆழமாக இறங்கி பிடுங்கும் போது சதையை கவ்விக் கொண்டு வெளியேறுபவை. அவற்றை அவன் தன் மீது செலுத்தாததால் உயிர் பறிக்கும் நோக்கம் அவனிடமில்லை என ஊகித்து விட்டிருந்தாள்.
விம்மல் அடங்கியவனாக எழுந்தவன் "எங்கள் மூதன்னை ஆதிரையின் உருக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றான். ஆதிரை ஊகித்தது தான்.
உடலில் குருதி வழிவதை அவள் ஒரு பொருட்டெனவே கொள்ளவில்லை. "அன்னையே எங்கள் குடிலுக்கு வாருங்கள். எங்கள் மூதாதை உங்களைக் கண்டால் மகிழ்வார்" என ஆதிரையை அழைத்தான் அம்பெய்தவன்.
"தங்கள் பெயர்?" என்றாள் ஆதிரை.
"மகோதவன். தாங்கள்?"
"அலங்கை" ஆதிரை தன் மற்றொரு பெயரைச் சொன்னாள்.
மகோதவன் முன் நடக்க ஆதிரை அவனைத் தொடர்ந்தாள். வறண்ட ஒரு நதியை கடக்க நேர்ந்த போது ஆதிரை வியந்தாள் "இந்நதியின் பெயரென்ன?" என்றாள்.
"மதீமம். நீங்கள் இவ்வழியாகத்தானே வந்திருப்பீர்கள்" என்றான் அவளை திரும்பி நோக்காது.
"இல்லை" என்றாள் ஆதிரை "மதீமம் எவர்தொடாமேட்டின் எல்லையில் நுழைவதை நான் இப்போதே அறிகிறேன்" என்றாள்.
"வியப்பாக இருக்கிறது. பெரும்பாலும் எங்கள் குடியை அணுகுபவர்கள் தென்நுழைபுனலில் பிரியும் வறண்ட நதி வழியாகவே வருவார்கள். நீங்கள் உள் காட்டிலிருந்து எப்படி வந்தீர்கள்?" என்றான் மகோதவன். சுனத வனம் குறித்து ஆதிரை சொல்லவில்லை. மையமாக சிரித்தாள். உணவு சமைக்கும் மணமெழுந்தது. அவள் எதிர்பார்த்தது கானகத்திற்குள் சிதறிக் கிடக்கும் குடில்களை. ஆனால் புடைத்து நீண்டிருந்த பெருவேலியென மூங்கில்களும் ஆல மரங்களும் பிணைந்து வளர்ந்திருந்தன. அது ஒரு உயிர் கோட்டையின் ஒரு பகுதி என ஆதிரை அறிந்தாள். இடைவெளியின்றி நெருங்கி வளர்ந்திருந்த மரங்களின் கோட்டையைக் கடப்பதற்கு வழியெதுவும் ஆதிரையின் கண்களில் தென்படவில்லை. மகோதவன் ஆதிரையிடம் ஒரு நீண்ட கயிற்றை நீட்டினான். புரிந்து கொண்ட ஆதிரை தனித்து வளர்ந்திருந்த மூங்கில்களில் ஒன்றை அக்கயிற்றை எறிந்து வளைத்தாள். வளைந்த மூங்கிலில் தன்னையே அம்பெனப் பொருத்திப் பறந்தனர் இருவரும். உயரப் பறந்தவர்கள் சில நொடிகளில் அழுத்தமான கொடிகள் பரவிய தொட்டிலில் இருந்தனர்.
ஆதிரையின் எதிர்பார்ப்பு தகர்ந்த வண்ணம் இருந்தது. நிலம் திருத்தி வாழும் மக்களையே அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் செம்மண் தளத்தில் மல்யுத்தம் புரியும் உடல் வலுத்தவர்களை கண்டதும் முதலில் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அது கடந்து தன்னுள் ஒரு உவகை எழுவதையும் ஆதிரை உணர்ந்தாள்.
Comments
Post a Comment