பெருஞ்சுழி 21
அடர் மௌனம் கலையா பெருவிசைகளே
ஒரு சொல்லே உரைக்கும் பேராழிகளே
நீள் மூச்சென அசையும் தென்னைகளே
நடுங்கிச் சிரிக்கும் சிறு கொடிகளே
நித்தியத்தில் நிற்கும் நிழல்களே
இருளான பெருங்கருணையே
விடிந்தெழும் பெருவல்லமையே
முட்டி முளைக்கும் விதைகளே
முட்கள் நிறைந்த கானகமே
முடிவேயற்ற பெருவெளியே
பணிகிறேன்
நெளியும் சிறுபுழுவே
ஒழுகும் பனித்துளியே
புரளும் மணற்துகளே
அலையும் வெண்முகிலே
விளையும் நெற்கதிரே
அழுகும் நறுங்கனியே
மலரும் சிறு பூவே
விழுகிறேன்
வீழ்த்தும் கொடுநஞ்சே
கிழிக்கும் நீள் நகமே
கவ்வும் வலுப்பல்லே
விழுங்கும் பெருஞ்செயலே
துப்பும் அலட்சியமே
துரத்தும் உயிர் வெறியே
புணரும் பெரு வெறியே
அஞ்சுகிறேன்
அணைக்கும் நறுமணமே
விழி துடைக்கும் பெருங்கனிவே
வருடும் சிறுவிரலே
வாழ்த்தும் விரிகரமே
ஊட்டும் குவிகரமே
இறுக்கும் இருகரமே
உன்னில் ஒடுங்குகிறேன்
சுனதன் நடந்தான். அரண்மனை விட்டு வெளியே நடந்தான். தெரிதரும் அவனும் பேசிக்கொண்டிருந்த மலையுச்சிக்கு நடக்க நினைத்தான். அங்கிருந்து மஞ்சாளினியிடம் செல்ல நினைத்தான். பின் திரன்யம். அங்கிருந்து மதீமத்திற்கு. அங்கிருந்து எவர்தொடாமேட்டிற்கு. அங்கிருந்து சுமதனியின் கருவறைக்கு. அங்கிருந்து மாசறியானின் அத்துளிக்கு. அங்கிருந்து காமுறும் அவன் எண்ணத்திற்கு. எத்தனை தூரம் திரும்பி பயணிக்க வேண்டும். முடியாது. முடியவே முடியாது. முன்னகர மட்டுமே முடியும். முன்னகர முடியுமா? இல்லை. அதுவும் முடியாது. இவ்விடத்தில் நீடிக்க? அதுவும் முடியாது. பின் என்ன தான் முடியும்? கரைந்து விட முடியும். அங்கு ஒருவன் உடல் வழியும் குருதியாக. அவன் துப்பும் எச்சிலாக. அவன் கழிக்கும் சிறுநீராக. மண்ணாக மரமாக மலமாக மனிதனன்றி எதுவாக வேண்டுமானாலும் எஞ்சி விட முடியும்.
தன்னுள்ளம் விடுபடுவதை சுனதன் நின்று நோக்கினான். அரவமற்ற புற்றினில் எழும் நாகமென ஆழ் கனவில் தோலுரியும் காமமென படர்வதை கருமை கொள்ளச் செய்யும் எரியென. ஆம்! அறிந்து விட்டேன். என் முன் பணிந்த நூற்றியிருபது சிரங்கள். அன்றே என் ஆழம் முடிவு செய்து விட்டது அவர்கள் அனைவரினும் நான் உயர்ந்தவன் என. அக்கணத்தை நிலைக்கச் செய்யவே அதன் பிறகு நடித்தேன். நடித்தேனா? ஆம். நடித்தேன். அது மட்டுமே உண்மை.
எல்லாச் சிறப்புகளும் எனை நோக்கியே இருக்க வேண்டுமென என் ஆழம் அன்றே முடிவு செய்துவிட்டது. இல்லை. இல்லை. ஆம். ஆம். அதன் அத்தனை வலுவிற்கும் பரு வடிவம் மாவலியன். அவனுக்கு சுனதன். சிரிக்கிறாள். ஆணாய் விளையாடி ஓய்ந்த என்னைக் கண்டு அவள் சிரிக்கிறாள். சிரிக்கிறாளா? பெண்ணென்றா சொன்னேன்? ஆம் பெண் தான். பெண்ணாக மட்டுமே இருக்க இயலும் ஆணின் வெறியை ஊக்குவித்து அது உச்சம் தொட்டதும் ஏளனம் செய்து சிரிக்க.
என் உடலில் எதுவொன்றை இப்போது உணர்கிறேன்? பனியில் எரியும் தீயென பொழிகிறது என் உடல். இது மட்டுமே இப்போது நான். பாலையாகவும் பசுங்குளிராகவும் என் அன்னை என்னுடன் பேசியது இவ்வுடல் வழியே. கருவறையிலேயே இருக்கும் மைந்தன் பேரு பெற்றவன். அவள் என்னை இன்னும் இறக்கி விடவே இல்லை. அதோ மரமுதிரும் காய்ந்த சருகாக. இதோ உடல் தீண்டும் மென் குளிராக. இருக்கிறாள். இன்னும் இளமை கொண்டு விட்டாள். இனியவளே வந்து விடுகிறேன்.
மடியென சரிந்து கிடக்கும் உன் மலைச்சரிவுக்கு. முலையென நிமிர்ந்திருக்கும் அதன் உச்சிக்கு. உப்பு காற்றனுப்பி உன் கடற்கதை கேட்கிறேன். வயல்களை நிறம் மாற்றி விளையாடும் உன் வித்தைகளை ரசிக்கிறேன். சதுப்புகளில் பன்றிகளோடு புரள்கிறேன். சிம்மங்களை துரத்துகிறேன். அவை சினந்தால் கொல்லப்படுகிறேன். குரங்குடன் தாவுகிறேன். களிறுகள் மேல் குதிக்கிறேன். எவ்வளவு எடையின்மை! எவ்வளவு துயரமின்மை!
அன்னையே! அணைப்பவளே! அனைத்துமானவளே! அணைத்துக் கொள்! உன் மைந்தன் மீண்டும் கருவறை நோக்கி வருகிறான்.
Comments
Post a Comment