பெருஞ்சுழி 39

உவகையன்றி வேறேதும்  அறிந்திருந்தானா அவன்? உவகையன்றி வேறேதும்  உண்டா இவ்வுலகில்?  எதை நினைத்து  உவப்பது என்றெண்ணும்போதே எதை நினைத்து  உவக்காமல் இருப்பது  என்கிறான் அவன். ஒவ்வொரு  துளியும்  மழையே என்றெண்ணும் போதே ஒவ்வொரு  மழையும் துளி என்கிறான். ஒளியையும்  இருளையும்  பிரித்தவனே திசையை அறிகிறான். அவன் ஒளியின்  ஒவ்வொரு  கணுவிலும் இருளை சுவைப்பவன் இருளின்  ஒவ்வொரு  துளியிலும் ஒளியை அறிபவன். கூடியசைந்து செவியறியா மென்மொழி பேசி நெட்டி முறிக்கும்  மூங்கில்களே இறைவனின்  மூச்சு இப்படித்தான்  இருக்குமோ? மதீமம்  என்கின்றனர். அவள் என் பெருந்தோழி மதீமை. நீரின்றி நீண்டு கிடக்கும்  அவள் உடலை மலடென்கின்றனர் மண் என்கின்றனர். மடையர்கள்  கருவறை திறக்காது முலை கனியாது நிற்பவள் கனவில்  சுமக்கிறாள் கோடி புதல்வர்களை என அறிவதில்லை. பன்றியென  பரவிக்  கிடக்கின்றன அவள் முலைகள்.  வாஞ்சையோடு நக்கும் அன்னை நாய் அவள். கன்றிலிருந்து கண்ணெடுக்காமல் குனிந்து  மேயும் பசு. முட்டை திறந்து எட்டிப் பார்க்கும்  குஞ்சுகளை கனிந்து நோக்கும்  அன்னை நாகம். துதிக்கையால் குட்டியைத் துழாவும் பிடியானை. மதீமை  அறிவதில்லையடி  அவர்கள்  உன் மீது படும்  பாதங்களை ஓடும்  நதியென  உடனே நீ அழிப்பதில்லை என. ஆயிரம்  மகவுகளால்  மிதிக்கப்பட்ட அன்னை நீ. இதோ உன் இன்னொரு  மகன். ஒவ்வொரு  பாதத்தையும்  ஒற்றி எடுக்கிறேன். உன்னடியில் எங்கோ ஓடுகிறதொரு குளிர்ச்சுனை.
பச்சை. வேறெப்படி அழைப்பதுன்னை? ஆழியும் குருதியும்  நிறங்கள்  தான். வெறும்  திரவங்கள்  தான்.  ஆனால்  இக்கானகம்? எல்லைக்குள் ஓடும்  வரையில்  தான்  உவக்கின்றன  கடலும் குருதியும். அவை வெளிச்சிந்தினால் வீழ்ந்து விடுகிறது  மனிதம். ஆனால்  இப்பசுமை? எங்கும்  பரவி  நிறைவதொன்றே ஆணையெனப் பெற்று பரவுகிறாள் பசுந்தாய். எதை நோக்கி எழுகிறாள் இவள்? பச்சையாய் அசைந்து  அசைந்து எதை நோக்கிக் கூவுகிறாள் 'இங்கிருக்கிறேன் இங்கிருக்கிறேன்' என? பசுமையே கருமை பிறப்பது உன்னில். கனிவு பிறப்பது உன்னில். கனவு பிறப்பது உன்னில். காதல்  பிறப்பது உன்னில். பசுமையே இருள் விடிவது உன்னில். செயல் எழுவது உன்னில். அருள் வழிவது உன்னில். அனைத்தும்  அடங்குவது உன்னில். பசுமைப் பெருவெளியே இறைவன்  மட்டுமல்ல புல்லென நிற்கும்  நீ கூட கதறிக் கூவும்  எங்கள்  குரலுக்கு பதிலுறுப்பது இல்லை.  பிடுங்கி எறிந்தாலும் உடைத்து வீசினாலும் அறுத்து சாய்த்தாலும் அகழ்ந்தெடுத்தாலும் காற்றுடன்  நீ பேசும் ஒரு பெருஞ்சொல் கடந்து உன்னை  வதைப்பவனை ஒரு பொருட்டெனவே நீ கொள்வதில்லை. அன்னையே உன்னைப் புணர்ந்தே உண்கிறோம் உடுக்கிறோம் அறைகிறோம் வெல்கிறோம் தோற்கிறோம். மன்னிக்க உன்னிடம்  நான்  வேண்டவில்லை. முடிவின்றி மன்னிக்கக் கற்றவள் நீ. மன்னிப்பதாலேயே துன்புற்றழிபவள். அழிவதாலேயே மீண்டும்  பிறப்பவள். துயரயென ஏதுமுண்டோ பெருந்தாயே நீ சுமக்கும் வலியுணரும் உன் மகவுக்கு. வலியென ஏதுமுண்டோ பேரன்னையே குஞ்சு வெளியேறிய ஓடாய் விழா ஓய்ந்த களமாய் ஆடல் முடிந்த மேடையாய் குருவிகள்  ஒழிந்த கூடாய் தனித்துக் கிடக்கும்  உன்னை உணரும்  உயிருக்கு.
உன் ஒவ்வொரு அங்கமாய் பற்றி ஏறுகிறேன் இடைவெளியின்றி இறுக்கிக் கொள்கிறேன் இருந்தும்  நீ தனித்துத்தான் இருக்கிறாய். அள்ளிவிட முடியாதடி உன்னை என் பெருந்தோழி. உன் மடியில்  அணைந்து விடுகிறேன். உன் உடலில்  புகுந்து கொள்கிறேன். ஏற்றுக் கொள் ஏற்றுக்  கொள். ஏற்றுக்  கொள்.
மலையுச்சியிலிருந்து விழ இருந்தவனை இழுத்துத் திருப்பினாள் ஆதிரை. அந்நொடியே  உணர்ந்தாள் தன் உடல் எதை நோக்கி தன்னை தள்ளி வந்திருக்கிறது என. இதழ் விரிய புன்னகைத்து விழி வழிந்து தன் முன்னே நிற்பவன்  யாரென அவள் அறியவில்லை. அவள் உடல்  அறிந்தது. அவள் விழிகளும் வழியத் தொடங்கின. உள்ளிருந்தெழும் அலையென உடல் முழுக்க அலையடித்தது உவகை. அவனை இறுக்கி அணைத்தாள். இத்தனை  நாள்  ஒவ்வொரு  செயலிலும்  ஒழுங்கெனவும் கூர்மையெனவும் நின்றிருந்த ஒன்று விலகுவதை ஆதிரை உணர்ந்தாள். உடலின் ஆதி இச்சைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அவனுடன்  இணைந்து இயங்கினாள்.
ஆதிரை  அறிந்திருந்தாள் மூதன்னை  அறிந்ததும் அவனையே என. அவள் ஏதும்  கேட்கவில்லை. விரைந்து நெருங்கிய காட்டுப் பன்றியைத் தூக்கி தோளில்  ஏற்றினான். சில நொடிகள்  அடங்கி அவன் மீதிருந்த அப்பன்றி மீண்டும்  திமிறி ஓடியது. ஆதிபுரத்தில் அவள் கண்ட குடில்களும் மனிதர்களும் எங்கோ தொலைவில்  எனத் தெரிந்தனர். சுனத வனத்தை தன் முற்பிறப்பென்றே எண்ணத் தளைப்பட்டுவிட்டாள். அவள் அவனை சந்தித்து எட்டு நாழிகைகள் கூட கடக்கவில்லை. இரவின் நறுமணத்துடன் மதீமத்தின்  வெதுவெதுப்பான  படுகைகளில்  மீண்டும்  அவனை அணைந்தாள். அவள் கண்கள்  நிறைந்தன. விழிநீரில் அவன்  முத்தமிட்டான். ஆதிரை  அவனை இறுக்கிக்  கொண்டாள். மதியம்  அவனுடன்  விளையாடிய காட்டுப் பன்றி ஒரு பெரும்  ஈட்டியால் குத்தப்பட்டு  அவன் மீது  வந்து விழுந்தது. பன்றியின்  உடலை முழுவதும்  துளைத்திருந்த ஈட்டி அவன் கழுத்தில்  இறங்கி தொண்டை முழையை உடைத்து வெளியேறி அவன் கீழே படுத்திருந்த ஆதிரையின் கழுத்துக் குழியை தீண்டிச் சென்றது. அவள் கழுத்திலிருந்து குருதி பீறிட்டது. அவனை உதறி எழுந்தாள்  ஆதிரை. ஒரு கையால்  கழுத்தை பொத்தியபடி ஆடைய அள்ளிச் சுற்றிக் கொண்டாள். பன்றியும் அவனும்  இறந்து விட்டிருந்தனர். இரு உடலிலும்  இறங்கியிருந்த ஈட்டியை உறுவினாள். அவனிடம்  குழந்தை போல் விளையாடிய பன்றியை கரங்களில்  குழி பறித்து மதீமத்தின்  படுகையில்  புதைத்தாள். அவன் உடலிலும்  ஆடைகளை  அணிவித்து தோளில்  தூக்கிக் கொண்டாள். சிறிது  தூரம்  நடந்தவள் ஏதோ நினைவெழுந்தவள் என  அவனை கீழே கிடத்திவிட்டு புதைத்த கரும்பன்றியை எடுத்து வெளியே வீசினாள். கிடத்தி வைத்திருந்தவனை திரும்பி நோக்காது  நடந்தாள்.
வெறி கொண்டு அவள் நடப்பதை அவள் விழிகள்  ஒளிர்வதை அவள் நடந்த மண் அதிர்வதை நான் கண்டேன். அவள் நடக்கும்  மண் அனைத்தும்  நடுங்கும்  என்றுணர்ந்தேன். அவையீரே அறிக பசுமை என்பது வஞ்சமும்  தான்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024