பெருஞ்சுழி 42
வெங்காற்று வறண்ட மதீமத்தை அழித்து எழுதத் தொடங்கியது. ஆதிரையைக் கூடியவனும் அவன் மேல் விழுந்த பன்றியும் மணலால் உண்ணப்படுவது போல் மறைந்து கொண்டிருந்தனர். ஆதிரை நடந்தாள். விரிந்த கூந்தலும் வெறி மின்னும் விழிகளுமான ஆதிபுரம் நோக்கி நடந்தாள். எதிர் நின்று வரவேற்றார் ஆதிபுரத்தின் தலைவர்.
"என்னைக் கூடியவன் இறந்தான்" என்றாள் சிவந்த விழிகளில் கனல் தெறிக்க.
"கருமேனியன் கைக்குழந்தையின் இதழ் சிரிப்புடையோன் வலுத்து விரிந்த மார்புடையோன் காட்டின் அந்தரங்க மணம் பரவிய உடலுடையோன் என் வழியாகவே பெண்ணை அறிந்தவன் இறந்தான். துள்ளி ஓட நினைத்த கரும்பன்றியை குத்திய எடை மிகுந்த ஈட்டி ஒன்று என்னவனின் கழுத்துடைத்து தொண்டை முழை வழியே வெளியேறியது. அவன் இறந்தான். என்றென்றைக்குமாக இல்லாமல் ஆனான். ஏன்? எட்டு நாழிகை நேரம் மட்டுமே எனக்கென வாழ்வு வகுக்கப்பட்டுள்ளதா?" என தணியாமல் கேட்டாள் ஆதிரை.
"ஆணையிடு தாயே! எய்தவனின் உடல் கிழித்து உள் அள்ளி உன் காலடியில் எறிகிறேன். எழட்டும் நம் படை" என்றவாறே ஆதிரை முன் கை கூப்பி நின்றான் முதிர்ந்த இளைஞன் ஒருவன்.
அதுவரை மௌனம் காத்த ஆதிபுரத்தின் தலைவர் தலை நிமிர்ந்தார். "இறந்தவன் என் மகன் சுனதன். சுனதரைப் போலவே வாழ்வினை வகுத்துக் கொண்டவன். இறையினால் இறப்பான் என்றெண்ணியே அவனை மறந்திருந்தேன். அவனை நினைத்து என்னுள் நிறைவு மட்டும் ஊறியிருந்தது. முப்பதாண்டுகள் வாழ்ந்தவனை ஆதிபுரம் முழுமையாகவே மறந்திருக்கிறது. இதுவே அவன் பெற்ற பேறென எண்ணிக் கொள்கிறேன். பழுத்த இலை மரம் நீங்குவது போல் என் மகன் மண் நீங்கியிருக்கிறான்" எனும் போது நிதானமாக ஒலித்துக் கொண்டிருந்த அவர் குரல் ஓலமானது "இரும்பினால் அவன் இறந்தான் என்பதை ஒப்ப மறுக்கிறதே என் அகம். இல்லை. அவன் முழுதாய் இறக்கவில்லை. என்னுள் என்றும் எஞ்சியிருப்பான் என் சுனதன்" என்றவர் மயங்கி மண்ணில் விழுந்தார்.
ஆதிரையிடம் ஆணையிடச் சொன்ன இளைஞன் மீண்டும் அவள் முன் வந்து நின்றான்.
"எதை நோக்கி ஆணையிடச் சொல்கிறாய்? சுனத வனம் நோக்கி முதலில் வந்த மாசறியான் மண்ணின் கொடுமைகள் தாழாமல் வனம் அடைந்தவர். அங்கே தொடங்கியது நம் செயலின்மை. வனம் நீங்கியது சுனதர் மட்டுமே. நாம் வாழவே தன் வாழ்வை அழித்துக் கொண்டவர் சுனதர். ஆனால் நாம் நிலத்தைக் காணாமல் இங்கு நிலை பெற்று வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னவன் நம் அனைவரிலும் தூயோன். அவனைக் கொன்றது நிலத்தின் நேர் அறங்களில் ஒன்றே. உங்களை மனிதர்கள் என்றே நிலம் இன்று ஏற்காது. உங்கள் மேல் வெறுப்புமிழும் உங்களை வதைக்கும் வதைத்து முன்னேறும் அதன்பின் உங்களிடம் எஞ்சியிருக்கும் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து அழியும் நோக்கில் உங்களிடம் கருணை காட்டும். நிலத்தின் மறத்தினை கானகத்தின் அறம் எதிர்கொள்ள முடியாது. ஒன்று திரள எதிர்த்தடிக்க நீங்கள் கற்கிறீர்கள். ஆனால் உங்களை உயர்வென நீங்களும் தாழ்வென அவர்களும் எண்ணும் வரை மீட்பென்பதே கிடையாது. மலை விட்டிறங்கும் காட்டாற்றின் வேகத்துடன் நிலத்தில் அணைவது மட்டுமே உங்கள் முன்னிருக்கும் வழி. முதிர்ந்து கருத்த நஞ்சொன்று உண்டு உங்கள் உடலில். வீரமென்றும் பொறுத்தல் என்றும் உங்களுள் நடிப்பது அந்நஞ்சே. சுனதனுக்காக அல்ல. சுமதனிக்காக சுகத்யைக்காக ஆதிரைக்காக நான் எழுகிறேன். நிலத்தில் எத்தனை கீழ்மைகள் நிகழ்ந்தாலும் இயங்குவதாலேயே அது மேலானது. உங்கள் எண்ணங்கள் எவ்வளவு மேன்மை கொண்டிருந்தாலும் செயலின்மையாலே நீங்கள் கீழானவர்கள். அத்தனை கீழ்மைகளையும் நின்றழிக்கும் நெருப்பென என்னை அறிந்தவன் என்னுள் இருக்கிறான்" என்றவள் மீண்டும் அவ்விளைஞனை நோக்கி "நான் ஆணையிடுகிறேன். ஆழிமாநாடு சுனதனை அறிய. நான் ஆணையிடுகிறேன் ஆழிமாநாடு பேரன்னை ஆதிரையை வணங்க. நான் ஆணையிடுகிறேன் என் துயரை இந்நிலம் அறிய. முடியுமா? முடியுமா?" என எரிவிழியுடன் அவனை நோக்கி நகர்ந்தாள் ஆதிரை.
அவன் அஞ்சவில்லை. பின்னகரவிவ்லை. திடமான குரலில் "அன்னையே! பிறந்தது முதல் நிறைவென எதையும் உணராமல் வளர்ந்தவன் நான். ஆதிபுரத்தில் உள்ளும் புறமும் என்னை வெறுக்காதவர் இல்லை. இங்கிருக்கும் ஒருவராலும் என்னை விரும்ப முடியாது. இவர்களினும் உடல் வலு மிகுந்தவன் என்பதாலேயே இவர்கள் என்னை வெறுத்தனர். என் சொற்கள் ஆணையாக மட்டுமே இவர்கள் முன் எழுந்தன. முதல் முறையாக உன் முன் என் சிரம் பணிந்தது. உன் மீது அம்பெய்தவன் மகோதவன் அல்ல. நானே. முதலம்பு உன்னை தீண்டிய பிறகே அறிந்தேன் என் கை உயிர் பறிக்கும் அம்பை எடுக்கவில்லை என. என் ஆழம் அன்றே அறிந்து விட்டது உன்னை. என் அன்னையை. இப்போது இங்கிருக்கும் அத்தனை அன்னையரும் என்னை சிறுமகவென அள்ளித் தூக்கி முலையூட்ட விழைகின்றனர். அத்தனை தந்தையரும் என்னை மார்போடு இறுக்கிக் கொள்ள விழைகின்றனர். தன்னுள் தாய்மையை உணராத ஆண் வெறும் ஆயுதம் மட்டுமே. தாய்மை என்பதென்ன? ஒரு தவிப்பு. எதையும் தனித்து விடாது தன்னுடன் இணைத்துக் கொள்ளும் கனிவு. துயர் துடைக்க எழும் பேரன்பு. அத்தவிப்பினை அக்கனிவினை பேரன்பினை என்னுள் உணர்ந்தேன். இன்றுரைக்கிறேன். உன் சொல் தீண்டும் இடத்தில் இந்த கணபாரனின் வில் தீண்டும். உன் மொழி படும் இடத்தில் என் மழு எழும். உன் விழி காட்டும் எல்லையை என் புரவி வெல்லும். உன் சித்தத்தில் எழும் நெருப்பை என் சிரம் ஏற்கும்" என்றான்.
மௌனம் கணத்தது ஆதிபுரத்தில். ஆதிரை மென்மையாக சிரித்தாள். குளிர் காற்றென அச்சிரிப்பு மக்களிடையே சிலிர்த்துக் கிளம்பியது. கண்களில் நீர் வழிய வெண்பற்கள் வெளித் தெரிய வெடித்துச் சிரித்தாள் ஆதிரை. எதிரே நின்ற கணபாரனும் சிரித்தான். எரி துளிபட்ட உலர் காடென கணத்துப் பரவியது அச்சிரிப்பு.
அவையீரே! அறிக! அன்னையின் சிரிப்பு துயரின் உச்சத்தில் எழுந்தது. அது இன்னும் அணையவில்லை. பிரமித்த விழிகளுடன் விகந்தரும் கணபாரரும் பாணனை பார்த்து அமர்ந்திருந்தனர்.
Comments
Post a Comment