பெருஞ்சுழி 31
தெரிதரின் கண்களே அனைத்தும் சொல்லிவிட்டதனால் ஆதிரை ஏதும் கேட்கவில்லை. சுனதரை ஒரு முறை அவர் எலும்பு முறி படும் அளவிற்கு இறுக்கி அணைத்தாள் . தெரிதர் கை கூப்பி கண்ணீர் வழிய நின்றிருந்தார் சொல்லென எதுவும் அற்றவராய். சுனதரின் விரைத்துப் போயிருந்த உடலை தோளில் தூக்கிக் கொண்டாள் ஆதிரை.
அருகிருந்த ஒரு மலையடிவாரத்தில் அவள் குழு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தீப்பந்தங்களை ஏற்றி வைத்து சிறு சிறு குழுக்களாக பிரிந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சுகத்யையால் அவற்றை காண முடியவில்லை. அவள் அகம் பொங்கிக் கொண்டிருந்தது. மாவலியத்தின் தலைசிறந்த மனிதர்களின் குழு உண்ணவும் உடுக்கவும் குறைவுபட்டு ஒருவனை தேடி இவ்வளவு தூரம் வந்துள்ளது. சுனத வனத்தின் அடர்காட்டினை ஓரளவு சமப்படுத்தி மனிதன் வாழும் இடமாக மாற்றியவர்கள் மாசறியானும் அவரை முதலில் காண வந்த நூற்றியிருபது துயரவர்களுமே. ஒருவகையில் அவர்கள் தான் இந்நிலப்பரப்பின் முழு உரிமையாளர்கள் என சுகத்யை எண்ணிக் கொண்டிருக்கும் போதே “இனி இந்நிலம் இவர்களாலேயே ஆளப்படும் அன்னையே” என நெருப்பினை பார்த்து அமர்ந்திருந்த சுகத்யையின் தோளில் கை வைத்தாள் ஆதிரை.
நெடியவள் என்பதாலும் இருட்டினுள் நின்றிருந்ததாலும் சுகத்யை அவளை அண்ணாந்து நோக்கினாள். பார்த்தவுடனே திடுக்கிட்டு எழுந்தாள். அவளுடைய வலது தோளில் அவள் அளவிற்கே உயரம் கொண்ட ஒரு ஆணுடல் கிடந்தது. தலை குனிந்தவாறே “தந்தை” என்றாள்.
ஒரு கணம் புரியாமல் சுகத்யை ஆதிரையை வெறித்து நின்றாள். மறு கணம் அவளுள் ஒரு சரடு அறுந்தது. கதறிய வண்ணம் ஆதிரையின் தோளோடு சுனதனை கட்டிக் கொண்டு சொல்லற்று கேவினாள். ஒரு நீளமான கல்லின் மீது சுனதரின் உடலைக் கிடத்தினாள் ஆதிரை. சுகத்யையை திரும்பி நோக்கிய போது ஆதிரை திடுக்கிட்டாள். "கொன்று விட்டாய் கொன்று விட்டாயல்லவா என் இறைவனை" என விழிகளில் குரோதம் மின்னக் கேட்டாள் சுகத்யை. "அம்மா.." என ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள். "ஆம் நீதானடி கொன்றாய். நீ இருக்கும் நம்பிக்கையில் தான் என் செல்லக் குழந்தை இறந்து கிடக்கிறது. குழந்தை என் குழந்தையடி என் குழந்தையடி" என மார்பில் அறைந்து கொண்டாள் சுகத்யை. ஆதிரை கண்டிருக்கிறாள் சுமதனியை காணும் போது சுகத்யையில் எழும் கோபத்தை. 'ஆயிரம் முறை அவனை அள்ளிச் சுமந்திருப்பாள். கோடி முறை அவனுக்கு முலையூட்டியிருப்பாள். ஆம் நீ எனக்கு தந்தை மட்டுமல்ல மகனும் கூடத்தான்' ஆதிரை எண்ணிக் கொண்டாள். அக்கூட்டத்தில் அத்தனை பேரும் அவனுக்கு அன்னையாவதையும் தந்தையாவதையும் மகனாவதையும் மகளாவதையும் ஆதிரை கண்டு நின்றாள். மொத்த கூட்டமும் விதிர்ப்பு கொண்டெழுந்தது. கலைந்த பேச்சொலிகளாக அறியப்பட்ட செய்தி அழுகையாய் முற்றி அம்மலையினை முழுமையாக நிறைத்தது. தெரிதர் பெருங்கற்களை வரிசையாய் அடுக்க ஆதிரை அப்பீடத்தில் சுனதனின் சடலத்தை கிடத்தினாள். சிறு குழந்தையென சுகத்யை ஆதிரையின் உடலில் ஒன்றிக் கொண்டு புலம்பினாள். அன்றிரவு முழுதும் துயரவர் கூட்டம் அழுதடங்கவில்லை.
ஆதிரையின் உடலுக்குள் தன்னை புதைத்துக் கொள்ள விரும்புகிறவள் போல சுகத்யை ஒரு கையால் சுனதனை தொட்டபடியே மறு கையை ஆதிரையின் இடுப்பில் கட்டிக் கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்து விசும்பிக் கொண்டிருந்தாள். திடுக்கிட்டு எழுந்தவளாய் சுனதன் கிடத்தப்பட்டிருந்த கல் மேடையில் ஓங்கித் தலையை முட்டினாள். நெற்றியில் வழிந்த குருதியைத் துடைத்தெடுத்து சுனதனின் உடலில் பூசினாள்.
வெறி கொண்டவர்களென சடலம் கிடத்தப்பட்ட கல் மேடையில் தலையை மோதி வழியும் குருதியை துடைத்து சுனதன் மேல் பூசிச் சென்றனர் துயரவர்கள். இரு நாழிகைக்குள் சுனதனின் உடல் குருதியினால் சிவந்தது. ஒரு கையில் சுகத்யையை தாங்கிக் கொண்டு சுனதனின் சடலத்தை வெறித்து நோக்கிய வண்ணமே நின்றிருந்தாள் ஆதிரை .
“துயரவர் பெருங்குடியே” என பேரோலம் ஒன்று ஆதிரையில் எழுந்தது. அவள் விழிகள் பீடத்தில் துயரவர் குருதியில் நனைந்து கிடக்கும் சுனதனின் சடலத்தில் நிலைத்திருந்தன. அதே உறுமும் குரலில் ஆதிரை தொடர்ந்தாள். “இனிய நினைவுகளாய் மட்டுமே தன்னை எஞ்சவிட்டு இறப்பவனை நல்லவன் என வகுக்கலாம். இதோ! நம் குருதி சூடி ஊழ்கத்தில் கிடக்கிறானே இச்சுனதன் இவன் நெஞ்சு விம்ம வைக்கும் நினைவுகளாய் மட்டும் நம்மிடம் நிற்கப்போவதில்லை. அர்த்தமற்றவனாய் அவன் இறந்து போகவில்லை. இப்பெருநிலத்தில் நம் குடி பரவி விரிய விழைந்தான். அதற்கெனவே வாழ்ந்தான். சுனத சாசனம் என்று பேராசிரியர் தெரிதர் அழைக்கும் இறைக் கட்டளைகளை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் சுனதர். இதனை மெய்யாக்குவதே அவர் குருதியென எழுந்த என் வாழ்வின் நிறைவென்றாகும். துணிபவர்கள் என்னுடன் எழுக" என்றாள்.
"நான்" என எழுந்தான் ஒரு இளையோன். சில கணங்களில் மொத்த கூட்டம் "நான் நான்" இரு கைகளால் மார்பில் அறைந்து கொண்டு முகத்தில் கண்ணீர் வழிய வெறி நடனமிட்டது. விரித்த கூந்தலுடன் கண்களில் ஒளி மின்ன அவர்கள் நடுவே அமர்ந்திருந்தாள் ஆதிரை அலை எழுப்பும் தடாகத்தின் மையமென அமைதியாய் ஆழமாய்.
Comments
Post a Comment