பெருஞ்சுழி 27

சுனதனின்  மார்பில்  முகம்  புதைத்து  உறங்கிக் கொண்டிருந்தாள் சுகத்யை. சுனதன்  சுகத்யையை மணம் கொள்ளவிருப்பதை அறிந்து சுனத வனத்தில்  ஒரு மென் அதிர்ச்சி முதலில்  ஏற்பட்டது.
"ஊழிக்கு பின்னர் விழுந்த முதல்  விதை. அது எழுக" என்றாள் முகத்தில்  கண்ணீர்  வழிய ஒரு முதியவள். விழவுகளின் அவசியத்தை கண் முன் கண்டான்  சுனதன்.  பெருந்துன்பங்களை விழவுகள் மட்டுமே  துடைத்தழிக்க முடியும்  என எண்ணிக் கொண்டான். சுனதனும்  சுகத்யையும்  ஒரு நிமித்தம்  மட்டுமே. பெருந்திரளாகத் தென்பட்டாலும் ஒவ்வொருவருள்ளும் இருந்து ஊறி நிறையும்  தனிமையை சுனதன்  கண்டான். விழவுகளில் தன்னை தனித்தவனாக அந்த நிர்வாணமான தனிமையினூடாக திரளுடன் இணைபவனாகிறான் மனிதன்  என எண்ணிக்  கொண்டான். போரும்  அப்படித்தானே?அப்படியல்ல. போரில்  இணைதலே நடக்கிறது. பல்லாயிரம்  கரங்களும் செவிகளும் கண்களும்  கொண்ட ஓருடலாக மாறுகிறது  ராணுவம். அப்படி  ஓருடலாக மாறும் போதே மீன் கொத்திகளைப் போல கூர்மையாகப் பாய்ந்து கொத்தித் தூக்க முடியும். தங்களுக்கான  விழவுகளையும் நாட்களையும்  மக்கள்  கண்டுகொண்டனர்.
ஒவ்வொரு  நாளும்  மற்றொரு நாளாக ஆகத் தொடங்கியது. சுகத்யை  கருவுற்றாள். எரிகுழம்புகள் மலை விட்டு இறங்குவது போல் சுனத வனம்  கடந்தும்  குடிகள்  பெருகினர். அனைத்து உறங்கிய சுகத்யையின் முகம்  தூக்கிப் பார்த்தான். சுழிப்புகள்  ஏதுமின்றி குழந்தை போல் இருந்தது  அவள் முகம். அவள் கழுத்தில்  முத்தமிட்டு எழுந்தான். அவள் வயிற்றில்  தன் கரங்களை இழைய விட்டவாறே "ஆதிரை. உள்ளுறங்குபவளே உன் பெயரது. நீ பெண் மகவென எப்படி  அறிவேன்  என்கிறாயா? அறிவேன்  அவ்வளவு தான். நான் உன் தந்தை. எவ்வளவு  பொருளற்ற  வார்த்தைகள். சுனதன்  ஆதிரையின்  தந்தை அவ்வளவு  தானா? அதற்கு  மேல்  ஒன்றுமில்லையா? தெரியவில்லையடி மகளே. தொட்டில் குழந்தை கை விரித்து தாயை அள்ளிக் கொள்ள விழைவது போல உன் தந்தை இந்நிலம்  முழுதும்  அள்ளவே விழைகிறான். நதியென ஓட நினைப்பவனை குளிர் பாறையென இறுக்கி இருக்கிறதடி இவ்வனம். நீயும்  உன் தாயும்  இப்பாறைக்குள் எரியும்  நெருப்பு. என்னை இறுக விட்டு விடாதீர்கள்" என சொல்லிக்  கொண்டிருக்கும் போதே  அவன் கண்ணீர்  சுகத்யையின்  வயிற்றில்  விழுந்தது. சுனதன்  நிமிர்ந்த  போது  சுகத்யை  விழித்திருந்தாள். ஒரு சொல்லும்  சொல்லாமல்  அவனை மார்புடன்  அனைத்துக்  கொண்டாள்.
"ஆதிரையோ நானோ இவ்வனமோ உங்களுக்குத் தடையல்ல. புறப்படுங்கள். மீண்டு வர முடியாத  பயணம்  எனினும்  சரி. புறப்படுங்கள். இனி அழுதால் இறுக்கியிருக்கும் உடலை அப்படியே  அணைத்துக்  கொன்று விடுவேன்" என அவன் முகத்தில்  மிச்சமின்றி  முத்தமிட்டாள்.
தெரிதருடன் பாலையைக் கடந்திருந்தான் சுனதன். இனி சுனத வனம்  எளிதில்  அணுகக் கூடியதாக  இருக்கும்  என எண்ணிக் கொண்டான். மதீமத்தின்  படுகை பாலை வரை நீண்டிருந்தது.
“அனைத்து  ஆணவங்களையும் கடந்தவனாக என்னை நினைத்திருந்தது எவ்வளவு  பெரிய  ஆணவம் என பெருஞ்சுழி  என்னை  அள்ளிச்  சுழற்றிய  போது  உணர்ந்தேன்  தெரிதரே” என்று தெரிதரின்  முகம்  பார்க்காமல்  தன் குதிரையை  செல்லவிட்டபடி அதுவரை  மௌனம்  கனத்த  அப்பயணத்தை  சுனதன்  உடைத்தான். அவனே  தொடரட்டும்  என தெரிதர்  அமைதி  காத்தார்.  “என்னுள் அதன்பின்  எஞ்சியது  ஏதுமில்லை  என அமைதி  கொண்டிருந்தேன்.  நான் செய்யக்  கூடுவது  ஏதுமில்லை  என இறப்புக்கு  என்னை  ஒப்புக்  கொடுக்கையில் எங்கோ  தூக்கி  வீசப்பட்டேன். சுனத  வனத்தில்  நான்  உயிரோடு  கிடந்தேன்.  அந்நேரம்  நம்மை  இயக்கும்  பெருவிசைகளை  நினைத்து  நான் உணர்ந்தது  என்னவென்று  உணர முடிகிறதா  தெரிதரே?” என்று  நிறுத்தினான்.
“அந்நேரம்  நீங்கள்  நன்றியின் கருணையின்  தோல்போர்த்திய  வெறுப்பினை  உள்ளுக்குள்  உணர்ந்திருப்பீர்  சுனதரே . என்  உயிரை  நீர்  காப்பற்றிய போது  உம்மேல் நான் உணர்ந்த அதே  வெறுப்பு”
கற்சிலை  என இறுகியிருந்த  தெரிதரின்  முகம்  கண்டு  ஒரு கணம் திடுக்கிட்ட  சுனதன்  அவர் வார்த்தையின்  பொருள்  உணர்ந்தவனாய் “உண்மை” என்றான்.
“சுகத்யையை வெறி கொண்டு  கூடிய  பிறகே  அவ்வெறுப்பினை கடந்தேன் தெரிதரே” என்றான். "அவளுடனும் என்னால்  அமைய முடியவில்லை. நம் குடிகள்  பெருகி நிலம்  நோக்கி வரத் தொடங்கும்  போது  அவர்கள்  சரியான  வாழிடங்களை அமைத்துக்  கொள்ள  உதவுவதே நான் செய்யக் கூடிய இறுதிப் பணியாக இருக்க முடியும்  தெரிதரே"
சுகத்யை  முழுதாய்  நிறைந்த  தேன்கூடென அமைதி  கொண்டிருந்தாள்.  அவள்  பேச்சு குறைந்தது.  செயல்களில் நுண்மை  கூடியது. சுனதன்  குறித்த  சொற்கள்  கூட  அவளுள்  சிலிர்ப்பினை உருவாக்கவில்லை.  அவள் பழகுவதில் கடுமையோ அன்போ ஏக்கமோ ஏதுமில்லை. ஆனால்  அவள்  பார்வையில்  வழிந்த  மிதமிஞ்சிய  கருணையை  மாவலியன்  கண்டிருந்தால் அதில்  மின்னும்  ஆணவம்  கண்டு  அவளை  போருக்கழைத்து இறந்திருப்பான். சுனதன்  கண்டிருந்தால் தன்னை  தவமிருந்தவள்  தன்னினும் மேன்மை  கொண்டுவிட்டாள்  என அவள் காலடியில்  கிடந்திருப்பான். ஆனால் சுனத  வனத்தில்  மாசறியான்  தவிர  அவள்  சுமப்பதை  யாரும்  உணரவில்லை.  மூன்று  மாதங்கள்  உதிரவாய் திறக்காத  போது  தனித்யர் உணர்ந்தார்.  நிலையற்ற  எதிர்காலம்  கூட  நினைவில்  இல்லாமல்  சுனத வனம்  அவள்  பிறப்பிக்கப்  போகும்  மகவிற்காக கொண்டாடியது. அனைத்திலும்  கலந்து  அனைத்திலும்  விலகி  இருந்தாள்  சுகத்யை. சுனதனும்  தெரிதரும் வெறி  கொண்டு  மாவலியத்தை  ஆய்ந்தனர்.பாலைகளும் சமவெளிகளும் முழுமையாக  மூழ்கடிக்கப்பட்டு  மெல்ல  மெல்ல  உயிரசைவும் வெம்மையும் அந்நிலத்தில் மீண்டு  கொண்டிருந்தது. ஆங்காங்கே  மனிதர்களையும்  காண  முடிந்தது. சுனத வனத்தின்  குதிரைகள் கலைத்து  விட்டதால்  அவற்றை  காட்டில் விட்டு  நடந்தே  பயணத்தை  தொடர்ந்தனர் இருவரும்.  சுனதன் சொல்ல ஓலைகளில் தெரிதர்  அவற்றை  குறிப்பெடுத்தார். சுனத வனத்தில்  சுகத்யை  தனக்குள்  தானென  ஒடுங்கினாள். அவள்  முகத்தின்  தெளிவு  கண்டவர்கள்  தங்களின்  கீழ்மையை  நினைத்து  அஞ்சி விலகினர். அவள் வயிறு  பெருத்தது. கட்டுப்படுத்த  முடியாதவளாய் மாறியிருந்தாள்  சுகத்யை. கருநிலவு நாளில் அவள்  குழந்தையை  ஈனுவாள் என மருத்துவர்  சொன்னார்.  அதுவரை  மயங்கியிருந்த சுகத்யை  பனிநீர் தொடைச் சுடவே எழுந்தமர்ந்தாள் . ஏதோ நினைவெழுந்தவள் என குடில் நீங்கி  மத்தகம் தாழ்த்தியிருந்த ஒரு களிற்றின்  மீதேறி  அதன் செவிகளின் பின்புறம்  அழுத்தினாள். பெண்கள்  திகைத்து  நோக்க ஆண்கள்  தடுக்க  முயல  களிறு வெறி கொண்டு  சிரிக்கும்  சுகத்யையுடன்  ஓடத்  தொடங்கியது.

Comments

  1. என்ன இது? இதெல்லாம் நடக்கிற காரியமா? பிரசவத்தின் போது இத்தனை பாடு வலிய ஏன்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

இலக்கிய விமர்சனம் - பத்துக் கட்டளைகள் - ஒரு சுயபரிசோதனைக் குறிப்பு