பெருஞ்சுழி 17
முது குலப் பூசகன் மஞ்சாளினியின் கதையைத் தொடங்கினான்.
அறிக! பெருந்தியாகமும் பெருந்துரோகமும் வேறல்ல என்று! குடை விரித்து தியாகம் என்பதெழுகையில் ஆழத்து விதையென உறைகிறது துரோகம்.
இன்று போலன்றி கிளைத்து விரிந்த விருச்சமாய் நின்றிருந்தது நம் குடி. மதியர்கள் என்றழைக்கப்பட்ட நம் இனத்தின் பேரழகியாய் தோன்றினாள் மஞ்சாளினி. சூழ்ந்த குடிகள் யாவற்றிலும் அவள் வயிறுதிக்கும் மகவு உலகாளும் என்று எண்ணிப் பரப்பினர் பிறகுடியினர். மதியர்களை வீழ்த்தி மஞ்சாளினியை கவர்வதொன்றே பிற குடிகளின் நோக்கமாய் இருந்தது. அரங்கனன் என்றொரு பெரு வீரன் மஞ்சாளினியின் மீது மையல் கொண்டான். தனியனாக அவளைக் கவர்ந்தான். ஆணறியாது வளர்ந்ததால் கொண்ட முதல் ஆணை மானைக் கொடியென பற்றினாள் மஞ்சாளினி. அவன் வயிற்றுதித்தவன் மஞ்சாளன் என்றே பெயர் சூட்டப்பட்டான். சதுரங்கக் காய்கள் இடம் மாறின. மஞ்சாளன் எட்டு வயதடைந்த போது உட்கானகத்தில் வாழுந்த அரங்கனனை மஞ்சாளனின் கண் முன்னே தலையறுத்துக் கொன்று மஞ்சாளினியை கவர்ந்தான் மீகவன் என்றொரு கொடியன்.
ஒரு குறுந்தேசத்தின் மன்னனாக தன்னை அறிவித்துக் கொண்டவன். மஞ்சாளினியின் மகவைப் பெற்று அதன் வழி தன் குடிச் சிறப்பை வலுப்படுத்த நினைத்தான். அவன் செலுத்தியதை சுமந்தாள் மஞ்சாளினி. கருக் கொண்ட பின்னே மீவகனின் முழுத் திட்டமும் அறிந்தாள். அம்மகவு பிறந்தால் அதைக் கொண்டே தன் முதல் மைந்தனை மீகவன் கொல்வான் என்றும் அதன்பின் தன் வயிறு சுமந்திருக்கும் சதைப் பிண்டத்தைக் கொண்டே குடிகளை வெல்வான் என்றும் அறிந்தாள். ஒருவனை மற்றவன் அடிமைப்படுத்தும் யுகத்தின் தொடக்கம் தன் வயிற்றில் நிகழ்வதை எண்ணி அழுதாள். பிறப்பதற்கு முன் அம்மகவினை கொல்ல முயன்றாள். அவள் கனவு தவிர அவள் இருக்கும் அத்தனை இடங்களிலும் சேடிகள் காவல் நின்றனர். கரு உதிக்கும் நாள் வந்தது.
"மண் தொடாத என் செல்வமே. என்னை மன்னித்துவிடு" என அரற்றினாள் மஞ்சாளினி. மருத்துவச்சி மேல் வயிற்றை அழுத்த இருபுறமும் காவல் நின்ற வீரர்களின் உடை வாளை கை நீட்டி உறுவினாள் மஞ்சாளினி. பிறவி வாயில் வழியாக மகவின் தலை தெரிந்த நேரம் அடிவயிற்றில் இருபுறமிருந்தும் வாட்களை பாய்ச்சிக் கொண்டாள் மஞ்சாளினி. விரித்த காலிடுக்கில் சிரம் மட்டும் தெரிய இறந்திருந்தது மகவு.
"அம்மா" என அலறிக் கொண்டே கதவுடைத்து ஓடிவந்தான் அவள் மூத்த மகன் மஞ்சாளன். திறந்த கதவுக்குப் பின்னே மீவகனின் தலை உருண்டு கொண்டிருந்தது. அவன் நெற்றியை முத்தமிட்டவாறே இறந்து போனாள் மஞ்சாளினி.
அறிக! வஞ்சத்திலும் கண்ணீரிலும் துயரத்திலும் நிற்கிறது மானுடமென. அவள் வயிறுதித்த ஒரு மஞ்சாளனின் வீரத்தால் கிளைத்தெழுந்த குலமிது. பெருகுவோம். ஒரு மகவினை கொன்று நம் குலம் காத்தவளாய் கோடி மகவுகளால் நிறைப்போம். ஆடுக! ஆடிக் களி கொள்க! கூடுக! கூடி முயங்குக!
இரவு இளநீலம் கொள்வதை சுனதன் பார்த்து நின்றான். அறியா மொழியில் குலப் பூசகன் பாடியதை சுனதனுக்கு ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான். சில நூறு பேர் மட்டுமே இருந்த இடம் மஞ்சாளினியின் கதை முடிந்த போது ஆயிரம் ஆயிரமாக நிறைந்தது. ஆணும் பெண்ணும் நெருங்கினர். பல வடிவங்களில் முழவுகள் முழங்கின. கல் நிறைந்த கலங்கள் தீர்ந்து கொண்டே இருந்தன. வெறி கொண்டு ஆடியது மஞ்சாளர் கூட்டம். தெரிதனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். ஆடிக் கொண்டிருக்கும் போதே தெரிதனை ஒரு பெண் கை பிடித்து இழுத்தாள். கொதித்துக் கொண்டிருந்தது அவள் முகம். அவளை அள்ளிச் சுழற்றினான் தெரிதன். வெறியாட்டு குறையத் தொடங்கியது. கல்லும் காமமும் நுரைத்து சுனதனைச் சூழ்ந்தது. ஒரு நொடி கூட அவன் விழி மூடி அமரவில்லை. தீண்டித் தழுவும் உடல்கள் தன்னை கிளர்த்துகிறதா என தன்னை தான் நோக்கி அமர்ந்திருந்தான். பற்றும் இச்சையை தன் பலத்தால் தவிர்த்தான். தன் வாழ்வின் ஆகப்பெரும் தவம் இதுவெனக் கண்டான்.
அவன் உடலின் ஒரு ரோமமும் சிலிர்க்கவில்லை. ஒரு நடுக்கம் பரவவில்லை. "வென்று செல் வென்று செல்" என்று மட்டுமே கூவியது ஆழத்தில் ஒன்று. முயங்கிவர்கள் மயங்கினர். முதலில் விழித்தெழுந்தவள் தலையை அள்ளிச் சுழற்றி முடிந்த பிறகு சுற்றிலும் நோக்கினாள். அவளுள் ஒரு வெறுமை நிறைந்தது. அங்கிருக்கும் பாறையென தனித்துக் கூவும் குயிலென மென்மையாய் வீசும் காற்றனெ பசுமை வெளித் தெரியத் தொடங்கிய மரங்களென அவள் முதல் பார்வைக்கு சுனதன் தெரிந்தான். அது ஒரு மனிதன் அதிலும் இளைஞன் இரவமர்ந்த அதே நிலையில் இன்னும் இருக்கிறான் என்று அவள் உணர்ந்த போது அவளுள் ஒரு சீற்றம் எழுந்தது. பின் அதிர்ந்தாள். பின் எழுந்தோடி "மஞ்சாளரே" என சுனதனின் கால் பற்றினாள்.
விழித்தெழுந்த கூட்டம் சாரி சாரியாகச் சென்று சுனதனின் பாதங்களில் விழுந்து அரற்றியது. தன் மேல் கிடந்தவளை அகற்றிவிட்டு எழுந்த தெரிதனுக்கு நடப்பவை புரியவில்லை. மைய நில மொழி பேசும் ஒருவனை தடுத்து " என்ன நடந்தது? ஏன் அவரைப் பணிகிறீர்கள்?" என்று உடல் குலுக்கிக் கேட்டான்.
கண்ணீர் வழிய அவன் சொன்னான்.
"முதல் மஞ்சாளர் சொல்லி இருக்கிறார் தெரிதரே. மனதை வென்றடக்கிய ஒருவன் நம் குடிக்கு வருவானெனில் அவனும் என் போல பெண் தீண்டாதவனாய் இருந்தால் அவன் பின்னே நடக்கட்டும் நம் குடியென."
"முதல் மஞ்சாளர் சொல்லி இருக்கிறார் தெரிதரே. மனதை வென்றடக்கிய ஒருவன் நம் குடிக்கு வருவானெனில் அவனும் என் போல பெண் தீண்டாதவனாய் இருந்தால் அவன் பின்னே நடக்கட்டும் நம் குடியென."
ஓலம் வலுத்து வலுத்து வந்தது. சுனதன் கூட்டத்தை விலக்கியவாறு மஞ்சாளினியின் பாதம் பணிந்தான். அப்போது தான் அவள் குறி வாயிலில் தீட்டப்பட்டிருந்த ஒரு சிறு தலையைக் கண்டான்.
அரற்றும் கூட்டத்தில் பெண்களின் ஓசை இல்லாதது கண்டு பெரு மூச்செறிந்தான்.
Comments
Post a Comment