பெருஞ்சுழி 36
மரப்பிசிர்களை கவ்விக் கவ்வி மேலேற்றுகின்றன சிட்டுக்குருவிகள். பொத்தென தரையில் விழுவது போலிறங்கி விர்ரென மேலேறி ஒரு பசுங்கொடியில் கூடமைக்கின்றன. இளஞ்சிட்டொன்று தன்னினும் பல மடங்கு நீளம் கொண்ட ஒரு ஓலையை கொடியில் ஏற்ற முயன்று தூக்கி கொடியை அடைவது வரை வென்று விட்டது. அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த இன்னொரு சிட்டுடன் இணைந்து ஓலையை வளைக்க முயல்கிறது. கவ்விய ஓலையை ஒரே நேரத்தில் இரு சிட்டுகளும் விட்டுவிடவே காற்றுடன் நாணி நாணி மொழி பேசி மண் தொடுகிறது ஓலை. சில நொடிகள் திகைத்துப் பார்த்த சிட்டுகள் இரண்டும் "கீச் கீச்" என சண்டையிடத் தொடங்குகின்றன. விட்டெறிந்த கல்லென வந்தமர்கிறது இன்னொரு சிட்டு. அது வந்ததும் சண்டை ஓய்கிறது. அது கூடமைக்கும் மரப்பிசிர் எடுக்க கொடி விட்டு கீழிறங்குகையில் மீண்டும் சண்டையிலாம் என எண்ணம் கொண்டு விட்டன போலும் இரு இளஞ்சிட்டுகளும். மிச்சத்தை நாளை பார்க்கலாம் பெரு மூச்சுடன் எழுந்து நடந்தால் ஆதிரை.
சிம்மக் குருளைகள் முகம் அறைந்து விளையாடும் முதுகில் இணையும் இரு எலும்புகளும் எழுந்தமைய இரையை நெருங்கும் சிறுத்தை புலியின் வால் இழுத்து விளையாடும் சிங்கவால் குரங்கு இறந்த சிம்மத்தை கிழித்துண்ணும் கழுதைப்புலிகள் மடிசரித்து அருகுறங்க அழைக்கும் அன்னையென பொந்தடித்த மரங்கள் நின்று புணரும் நீளுடல் நாகங்கள் பறவை எச்சங்களால் வெண்மையடைந்த நீரோடை ஓரங்கள் காரணமின்றி மகிழும் கருங்குருவிகள் மணத்தாலே பசியடங்க வைக்கும் இளந்தென்றல் மலைக்குன்றென குவிந்து கிடக்கும் யானைச்சாணம் அதிலெழும் பச்சை வாசம் அதில் நெளியும் புழுக்கள் குட்டிகளை நக்கி உளற வைக்கும் காட்டு நாய் சிதறும் எலும்பினைப் போல் கொம்பினை முட்டிக் கொள்ளும் கலைமான்கள் அவற்றின் உடலில் ஒற்றியிருக்கும் பெரு உண்ணிகள் மூக்கு விடைத்த காட்டெருதுகள் சோம்பலாய் நெளியும் மலைப்பாம்புகள் கண் திறக்காமல் கொட்டாவி விடும் நாய்குட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கி அசையும் பெரும் பசுமை. ஆதிரை நடந்தாள். அலங்கனின் தலைமை ஆதிரையின் கைக்கு வந்தவன்று அவள் ஒன்றை உணர்ந்தாள். தன் குடித் தலைமையின் முடிவு விரைவில் நெருங்குமென.
சுனதனுக்கு எரியூட்டிய பின் பேரன்னை ஆதிரை முற்றமைதி கொண்டவளாய் மாறிப் போயிருந்தாள். துயரவர்கள் ஆழிமாநாடு முழுவதும் பரவினர். அவர்களின் தொகுப்புத் தன்மையும் உறுதியான நோக்கமும் அவர்கள் எண்ணிக்கையை பெருகச் செய்தது. ஆதிரை ஆழிமாநாடு முழுவதும் அலைந்தாள். தெரிதரும் சுகத்யையும் அடுத்தடுத்த இறந்தனர். பன்னிரண்டு வருடங்கள் கழிந்தபின் ஆதிரை சுனத வனம் மீண்டாள் என பெருவயர் தொகுத்திருந்த குறிப்புகளை ஆதிரை படித்துக் கொண்டிருந்தாள். பெரும் நிரையாக சுனத வனம் அடைந்த ஆதிரையிடம் ஏற்கனவே சுனத வனத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பணிந்தனர். பேரழகியெனவும் பேரன்னையெனவும் ஒரே நேரத்தில் திகழ்ந்தாள் ஆதிரை. அவளைக் காமுறாதவனும் என சுனத வனத்தில் யாரும் இருக்கவில்லை. சுனத வனத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஆதிரையெனவே எண்ணினாள். ஒவ்வொரு ஆணும் தன்னவளை ஆதிரையென்றே எண்ணிப் புணர்ந்தனர். ஒவ்வொரு குடிலிலும் தான் புணரப்படுவதை தனித்து நோக்கி நின்றாள் ஆதிரை. விடியலில் அவள் முகம் காணும் போது எழும் குற்றவுணர்வை மறைக்க அவளைத் தொழுதனர். அவள் முகம் பார்க்கக் கூசினர். அக்குற்றவுணர்வு கொடுத்த உந்துதல் பெண்களை இரவுகளில் மேலும் மேலும் ஆதிரையாக்கியது. ஆதிரையாகி தன்னவனை வென்றனர். வெற்றியின் உச்சத்தில் அவ்வெற்றிக்காக கூசி அழுதனர்.
ஒரு நாள் அனைத்தும் உதறி எழுந்தாள் ஆதிரை. இன்னொரு உயிரின் இறப்பில் தோன்றும் ஆனந்தத்தை மறைக்கவே நாம் கதறி அழுகிறோம் என்று ஆதிரை எண்ணினாள். அவ்வெண்ணத்தின் எடை அழுத்தவே தலையை உதறிக் கொண்டாள். சுனத வனம் ஆதிரை வனம் நீங்கிய அன்று கதறி அழுதது. பெண்கள் உடலில் பரயிருந்த இறுக்கம் தளர்ந்து இயல்படைந்தனர். ஆண்கள் கொடுங்கனவிலிருந்து மீண்டதாக எண்ணிப் பெரு மூச்சு விட்டனர்.
அலுவல் முடிந்த ஒரு நாளில் ஆதிரை அலங்கனைக் கேட்டாள்.
"தந்தையே முற்றாகத் துறந்தவர் சுனதன். அவருக்கெனவே அனைத்தையும் துறந்தவர் சுகத்யை. அவர்களிருவம் இறந்த பின் சுனத வனம் நீங்கிய பேரன்னை ஆதிரை என்ன எண்ணியிருப்பார். தனக்கு யாருமில்லையே என்று ஒரு நொடி அவர் உள்ளம் அதிர்ந்திருக்காதா?" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் கண்கள் பனித்து விட்டன.
"இல்லையம்மா மானுடம் வாழ சிலர் தங்களை அழித்துக் கொண்டே ஆக வேண்டும்" என ஒரு பழைய சொற்றொடரை சொன்னார் அலங்கன்.
சீற்றம் எழுந்தவளாக "மூடர்களே உங்கள் கீழ்மைகளை மறைக்க உயர்ந்தவர்களை தெய்வமாக்காதீர்கள். அவள் கண்ணீரை இன்று உணர்கிறேன். என் தமையனை கொன்றேன் நான். என் தலையை அறுத்தெறியும் வெறி எழுந்திருக்க வேண்டாமா உன்னுள்? எப்படி ஒன்றும் செய்யாமல் அமைந்தால் உன் மனைவி? அன்று இறந்தது அவள் மகனல்லவா? உங்களோடு உழன்றால் நீங்கள் கொடுக்கும் பட்டங்களை சுமந்து நானும் இறந்தழிவேன். இன்றே புறப்படுகிறேன். பேரன்னை ஆதிரையின் பாதங்கள் எனக்கு வழிகாட்டும். நம் குலத்திலும் சுனத வனம் கடந்து எவர்தொடாமேட்டின் உச்சியை அடைய நினைத்து இறந்தவர்கள் உண்டு. என் முடிவும் அதுவெனில் அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி குடி நீங்கினாள் ஆதிரை. இரண்டு வருடங்கள் குடித்தலைவியாய் கட்டுண்டவள் மெல்ல மெல்லத் தளர்ந்தாள். சுனதன் மட்டுமே சென்றிருந்த எவர்தொடாமேட்டின் உட்காடுகளுக்குள் சென்ற எவரும் மீண்டதில்லை. பேரன்னை ஆதிரை உட்பட. மீளா வழி தேடி புறப்பட்டாள் ஆதிரை. அறிக பசுமை என்பது நஞ்சும் தான்.
பாணன் நிறுத்தினான்.
"தொடர்க" எனக் கையசைத்து எழுந்து நடந்தான் வன்தோளன்.
Comments
Post a Comment