பெருஞ்சுழி 20
திரைச்சீலைகள் அலையடித்த சாளரங்களை சில கணம் நோக்கி நின்றார் மாவலியர். நெருப்பு மையத்தை நெருங்கியிருந்தது.
"இத்தருணம் காணவே மண் நுழைந்தேன் என்றெண்ணி நிறைவுறுகிறேன் மைந்தா" என்றார் மாவலியர்.
சுனதன் தலை தூக்கினான்.
"ஆம்! நீ என் மைந்தன் தான். என் கனவுகளில் அனுதினமும் கண்டுகொண்டிருந்தது உன்னைத்தான். நான் இருக்க விழைந்ததும் நீயாகவே. மணந்தவனை மகனாக பெண் உணரும் தருணம் ஒன்றுண்டு. அதற்கிணையானது தன்னை மீறும் இளையவனை மைந்ததனென ஆண் உணரும் தருணம். எனக்குத் தெரியும் சொல்லாதொழிந்த என் சொற்கள் சுடர் விட எரியென என்னை நீ நெருங்குவாய் என. எனக்கு இருப்பது ஒரு வேண்டுகோள் மட்டுமே. உன் செவி தருவாயா?" என இரு கை விரித்து கேட்டார் மாவலியர்.
சுனதனின் விழிகள் பனித்தன. மாவலியர் தொடர்ந்தார்.
"என் விழிபட்ட முதல் நோக்கில் இருந்த சுழிப்பினை எண்ணிக் கொள்கிறேன் சுனதா. அச்சுழிப்பு எங்கும் இருந்தது. என் முகம் கண்டு அஞ்சாத ஒருவரையும் வெண்குடிநாட்டில் நான் காணவில்லை. அரசனின் மகனென நான் பிறக்காவடில் ஆயிரம் பாதங்கள் புழுவென என்னை மிதித்துத் தேய்த்தே கொன்றிருக்கும். பின் உணர்ந்தேன் அவர்கள் நெஞ்சிலூறும் பெரு வெறுப்பே என் பலமென. வெறுக்க வெறுக்க என் பலம் ஏறி வந்தது. எவள் முலை கவ்வி என் உயிர் ஈராண்டு நீடித்ததோ அவளன்றி எவருக்கும் நன்றி சொல்ல வேண்டாதவன் ஆனேன். அவளும் என்னை விலகினாள். அதுவும் ஒரு வகையில் எனக்கு நிறைவையே தந்தது. விண்ணகப் பெருவிசைகள் விதிர்த்துப் போயிருக்கும் அந்நொடியில். மாவலியன் என்றொருவன் மறக்கப்பட்டிருந்தான் என்றே என் பத்து வயது வரை எண்ணியிருந்தேன். மதகளிறொன்றை மத்தகம் தாழ்த்த வைத்த போது என்னை அவர்கள் அறியத் தொடங்கினர். அன்றுணர்ந்தேன் மாவலியன் அவர்களின் ஆழங்களில் புதைக்கப்பட்டிருக்கிறான் என்று"
"எஞ்சாது வீழ்த்துவதே என் திறன் என்றுணர்ந்தேன். சரந்தகரின் தலையைக் கிள்ளி எறிந்த போதே அறிந்திருப்பார்கள் விழைவற்றவனின் வலிமையை. ஒரேயொரு விழைவு மட்டும் ஆழத்தில் மிக ஆழத்தில் என்னுள் கனன்று கொண்டிருந்தது. புறக்கணிக்கப்பட்டவனின் வலி அது. புறக்கணிக்க முடியாதவனாக ஆகும் வல்லமை. அது தான் இவ்வளவு தூரம் என்னை இட்டு வந்தது மைந்தா. இப்பெரு நிலப்பரப்பில் மூன்றில் இரு பங்கு இன்று மாவலியமே. இருந்தும் இன்னும் ஏதோவொரு வகையில் நான் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். உன்னைப் பற்றி கேட்டதும் என்னுள் உவகை ஏறியது. உன் முகம் கண்டதும் நிறைவடைந்தேன் மைந்தா. முற்றிய கனி மரம் நீங்குவதே இயல்பு. என்னை வீழ்த்தும் விசை நீயே" என மாவலியர் சுனதன் கையில் வாளொன்றை கொடுத்தார்.
சுனதனின் நெஞ்சு அதிர்ந்தது.' இக்கணம் மாவலியரை கொன்றால் மட்டுமே கனிந்து நிற்கும் அவர் நிம்மதியடைவார். தோல்வியே காணாதவர். ஒரு சிறுவன் முன் தோற்பதை அவரால் எண்ணிப் பார்க்கவே முடியாது. அதனால்தான் கொல்லச் சொல்கிறார். இறையே! எது தான் உன் நோக்கம்? என்னை இவ்வளவு தூரம் இழுத்து வந்து விளையாடும் பெருவிசைகளே என்ன தான் நினைக்கிறீர்கள்! கொலை புரியாது வாழ்ந்தவன் என என்னைக் காத்துக் கொள்வாதா? கொன்று அவரை நிறைவுறச் செய்வதா? எண்ணிச் சொல்லெடுப்பதே நலம்' என்றெண்ணி சுனதன் பேசினான்.
"தந்தையைக் கொன்றபின் மகன் நிறைவுற முடியுமா?மேலும்..." என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"ச்சீ நிறுத்தடா கீழ்மகனே. எஞ்சாது வீழ்த்த நினைக்கிறாயா என்னை?" அதுவரை இருந்த அத்தனை கனிவும் நீங்கி இடியென இறங்கியது மாவலியரின் குரல். தொடர்ந்தார்.
"கரும்பாறை இளகி நிற்கும் தருணத்தை காணத் தெரியாத மூடனே. கொல்லாமை அறம் காக்க பசப்புகிறாய் அல்லவா. நீ உருவாக்கியதை நின்று நோக்கும் போது உணர்வாய் நானும் நீயும் வேறல்ல என. எதிர் திசையில் இருந்து வந்து என்னுடன் மோதியவன் நீ. உடைத்தெறி என்கிறேன். தள்ளிவிட்டு நகைக்க நினைக்கிறாய். அது நடவாது மூடனே!"
சுனதன் அதிர்ந்து போய் பார்த்திருந்த கணத்தில் மாவலியரின் உடைவாள் வெளிப்பட்டு அவர் தலையை கிள்ளியது. அடுத்த கணம் மாவலியரின் சிரத்தை மாவலியரின் இடக்கை பற்றியிருக்க மாவலியரின் முண்டத்தில் குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. இறுதிச் சொற்களென வெளிப்பட்ட கொப்பளிப்புகள் அடங்கி மாவலியரின் உடல் சாய்ந்தது.
தெரிதர் அந்நேரம் அக்கூடத்தில் நுழைந்தார். சமர்வரும் அனிந்தரும் பின் நுழைந்தனர்.
நூல் கற்ற முதியவர் படை நடத்தும் சேனாதிபதி ஒன்பதாண்டுகள் உடன் தொடரும் நண்பன் என அனைவர் விழியிலும் ஒன்றே தெரிவது எப்படி என சுனதன் அதிர்ந்தான்.
"அறிந்திருந்தீர்களா? இது தான் நடக்கும் என நீங்கள் அனைவரும் அறிந்திருந்தீர்களா?" அடி வயிற்றில் இருந்து எழுந்தது சுனதனின் குரல். குரல் உயர்த்தியே பேசாதவனின் முழக்கம் தெரிதரை நடுங்க வைத்தது. இறந்து கிடக்கும் மாவவியரே அவனுள் ஏறிக் கொண்டது போல திகைத்து அவனை பார்த்து நின்றார் அனிந்தர். சமர்வர் கண்ணீர் வழிய கை கூப்பி நின்றிருந்தார்.
"சுனதரே. இது பெரு வல்லமைகளின் மோதல். நாங்கள் எளியவர்கள். இறைவன் மனிதனை நோக்கி அழுதால் எளியவர்கள் என்ன செய்ய முடியும். உங்கள் துக்கத்தை நீங்கள் மட்டுமே உணர முடியும். மாவலியர் கரம் பற்றியிருக்கும் வாளை உறுவி எதிர் படும் அத்தனை பேரையும் வெட்டி எறிய நீங்கள் விழைந்தாலும் அது தவறில்லை. முதன்மை பாதுகாவலன் என்ற முறையில் உங்களை முதலில் எதிர்த்து தலை அறுபட்டு மண் விழுவேன். சுனதரால் கொல்லப்பட்ட முதல் மனிதன் என்ற நிறைவுடன்" என குரல் இடறப் பேசினார் அனிந்தர்.
சுனதனின் உள்ளம் உணர்ந்தவனாக தெரிதர் தலை குனிந்து நின்றார்.
"விடுபட விழைகிறேன் தெரிதரே” என்றான் சுனதன். தெரிதர் அமைதியாக அவன் அருகில் வந்து மாவலியர் அவன் கையில் கொடுத்திருந்த வாளைப் பெற்றுக் கொண்டார்.
"உங்களை மேலும் வதைக்கிறேன் தெரிதரே. நம்பிக்கை என்பது காமமாகவும் வன்முறையாகவும் மட்டுமே வெளிப்பட முடியுமா? எனக்குப் புரியவில்லை தெரிதரே. என் வழியாக நிகழ்ந்தேறுவதும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வன்முறையா? மாவலியத்தில் ஒரு சொட்டு கண்ணீரைக் கூட நான் துடைக்கவில்லையா? புரியவில்லை தெரிதரே. நான் புறப்படுகிறேன்" என்று அரண்மனை நீங்கினான் சுனதன். அவன் கண்கள் உலரவே இல்லை.
Comments
Post a Comment