பெருஞ்சுழி 24
கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர். தெரிதர் ஏதும் ஆற்ற இயலாமல் பார்த்து நின்றார். அவரின் அவசரம் கண்டு பலர் சந்தேகித்தனர்.
"மதீமத்தின் கரைகளில் உள்ள அடர் கானங்களை அழித்து அங்கு பயிர் சாகுபடி செய்ய மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்" என்று பேசிக் கொண்டனர்.
"குருதி விடாய் அடங்காத தெய்வங்களுக்கு பலி கொடுப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்" என்றனர்.
கலகங்கள் மூண்டன. மாவலியம் எனும் தேசம் கண் முன்னே இல்லாமல் ஆகிக் கொண்டிருப்பதை தெரிதர் கண்டார். எறும்பு வரிசைகள் என தெற்கிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். வீரர்கள் உளம் சோர்ந்தனர். ஊக்கும் ஒற்றை விசையாய் சுனதன் என்ற பெயர் மட்டும் இருந்தது. மூன்று மாதங்களில் களஞ்சிய இருப்புகள் தீர்ந்தன. சாம்பல் நிறம் கொண்டது நிலம். எரிமலைகள் உறுமுவது கேட்டபடி உடலொடுக்கிக் கிடந்தனர் மக்கள். மூச்சிழுக்க முடியாமல் இறந்தனர். விடியலில் எழுபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் இல்லாமல் இருந்தது.
நதிகளின் நீரோட்டம் திசை மாறியது. வடக்கே அவர்களை காக்கும் திசையென இருந்தது. தெரிதர் தன் ஆணைகள் பொருளற்று போவதை கண் முன் கண்டார். அவரும் மக்களுடன் இறங்கினார். வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
"பெருமலை வெடிப்புகள் அடர்மழை பஞ்சங்கள் என சீரழிந்தது மாவலியம். திரைச்சீலையில் வரையப்பட்ட ஓவியம் கலைவது போல மாவலியத்தில் வாழ்க்கை இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தது. அரசு சமூகம் குடும்பம் என உயிர் பிழைக்க விரும்பும் மிருகத்தின் மீது கட்டப்பட்ட அத்தனை பாவனைகளும் அழிந்து இப்போது அது வேட்க மட்டுமே விழைகிறது. கிடைப்பதனைத்தையும் உண்கிறது. வெறி கொண்டு புணர்கிறது. மார்பில் அறைந்து ஓலமிடுகிறது. இவற்றுடன் நானும் இணைந்து விடுவேனோ என அஞ்சுகிறேன். திசையென நம்பிக்கையென ஒன்று எஞ்சியிருக்கிறது. அதை நோக்கியே நடக்கிறேன். என் முன் மட்கி அழியும் உயிர்களை சிறு வயதில் கண்டிருக்கிறேன். அவை இறக்கும் போது ஒரு வித நிம்மதி நெஞ்சில் பரவும். ஆனால் இன்று அப்படி அல்ல. விசை குன்றாத வாழ வேண்டும் என்ற பெரும் இச்சை கொண்ட உயிர்கள் அழிகின்றன. பெரும் பாறையென கனக்கும் கால்களை அவர்களை திரும்பி நோக்காமல் முன்னகர்த்துகிறேன். மைய நிலத்திலும் உப்புக் காற்று வீசுவதால் கடல் உட்புகுந்திருக்கிறது என நினைக்கிறேன். மரணத்தை நிறையவே பார்த்தும் மனம் சலிக்கவில்லை. ஒவ்வொரு உயிரும் பிறிவதை உடனிருந்து பார்க்கிறேன். எனக்கு இன்றிருக்கும் ஒரே இன்பம் மரணத்தை காண்பதே. புத்தி பிசகிவிட்டதா எனத் தெரியவில்லை. நம்பிக்கையை விதைத்து பின் வீழ்த்துவதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது. நம்மை சுழற்றி விளையாடும் விசைகள் கருணையற்றவை. இறைவனை பெண்ணாக்கி அவள் அஞ்சி அழுது இறக்கும் வரை புணர வேண்டும். ஆணென நிறுத்தி அவனை அங்குலம் அங்குலமாக வெட்டி எறிய வேண்டும். குழந்தையாக தூக்கி துடிக்கத் துடிக்க கொல்ல வேண்டும். வெறி அடங்கவில்லை. உயிர் காத்துக் கொள்ள என் முன்னும் பின்னும் நடக்கின்றனவே நாளைய பிணங்கள் அத்தனையையும் இப்போது போருக்கு அழைக்கப் போகிறேன். 'வா போரிடுவோம். நம்மை ஓட வைத்து இழி பிறப்பென எண்ண வைத்து நம் தலைமுறையினர் சொற்களில் கண்ணீராக அக்கண்ணீருக்கடியில் ஏளனமாக நம்மை எஞ்ச வைக்கப் போகிறதே அதனை ஏமாற்றுவோம். ஒருவரும் உயிருடன் எஞ்ச வேண்டாம். உயிர் நிறைவது காமத்திலும் வன்முறையிலும் தான். மண்டை சிதற தோல் கிழிபட எலும்புகள் நொறுங்க உதிரம் வழிய வெறிக் கூச்சலிட்டபடி சண்டையிடுவோம். அதன்பின் புணர்வோம். புணர்ந்த பின் சண்டையிடுவோம். இங்கே மடிவோம். இப்போதே தொடங்குவோம்' இப்படித்தான் என் அகம் கூவுகிறது. இன்னும் சில நாள் இன்னும் சில நாள் என்று மட்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறேன். பாலையை கடக்கப் போகிறோம். உன்னை பார்க்கும் விருப்பம் கூட எனக்கு இப்போதில்லை சுனதா. நீ கணித்தவை சரிதான். அதற்காகவே உன்னைக் கொல்ல வேண்டும். காட்டுத் தீயில் கருகும் மட்கிய மரங்களென நாங்கள் அழிந்திருப்போம். எங்களை மீட்பதாய் நினைத்து இழிவில் தள்ளியிருக்கிறாய் மூடனே! பெரு மூடனே! என் கண்ணில் பட்டுவிடாதே. என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! மன்னியுங்கள் சுனதரே! இல்லை மன்னிக்க வேண்டாம். வா. என்னருகே வா. என் மீது கோபம் கொள். என்னை வீழ்த்து. முடியுமா? முடியுமா உன்னால்? மூடனே! எதையும் ஏற்கத் தெரியாத மூடனே! எங்கடா ஒளிந்திருக்கிறாய்? எதற்காக காத்திருக்கிறாய்? கடவுளாக காத்திருக்கிறாயா? சிரிக்கிறேன். காறி உன் முகத்தில் உமிழ்ந்து உன்னை என் காலடியில் கிடத்தி ஓங்கி மிதித்து சிரிக்கிறேன். வந்து விடு. என் இறப்பையும் அர்த்தமற்றதாக மாற்றி விடாதே" தெரிதரின் ஓலையைக் கொண்டு வந்த தூதுவன் தலை குனிந்து நின்றான். சுனதர் பெரு மூச்சு விட்டார்.
சில மாதங்களுக்கு முன் அலையடித்த கடற்கரை வெறும் சதுப்பாக மாறியிருந்தது. சுனதர் அத்திசை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
Comments
Post a Comment