பெருஞ்சுழி 25
சுனதர் நடந்தார். திரண்யத்தின் அருகே ஆழி உள் வாங்கியிருந்தது. மேகக் கூட்டங்கள் மண்ணில் நேரே இறங்குவது போல அறுபடாமல் மழை பெய்தது. பனித்துருவல்கள் மழையினூடாக மண்ணிறங்கின. ஏழு நாட்கள் மழையில் நடந்தார் சுனதர். பின் கால் எடுத்து நகரும் வேட்டை மிருகமென ஆழி பின்னகர்ந்தது. மழை குழைத்த சதுப்பினூடாக சுனதர் நீந்தினார். நிலத்தில் நீந்துதல்.
நினைவு தப்பியது. குறுகிய மலையுச்சியில் நடப்பது போல் நினைவு தப்பும் ஒவ்வொரு கணமும் ஆழங்களை நோக்கிச் சென்றார். இல்லாதொழி! இல்லாதொழி! யாரது ? யாரது? நான் தான் சொல்கிறேனா? எனக்கென்று சொல்லிக் கொள்கிறேனா? இது அவள் கருவறை. மூடனே முட்டி முட்டி வெளியேறு. வெளியேற்றம்? முடியுமா என்னால்? முடிந்தாக வேண்டும். புதை மணற் குழி ஒன்றில் புதைந்தார் சுனதர்.
கொட்டும் மழையிலும் கொதிக்கிறது இவ்விடம். கற்றவை கண்டவை கேட்டவை அனைத்தும் ஒன்றாகி நிற்கிறது இங்கு. அவளாக. அவள் மட்டுமாக ஆகி நிறைகிறது என் மனம். அவள் யார்? அவள் எது? கருணை. ஆம்! அவள் கருணை! கனிவே இல்லாத பெருங்கருணை. ஒற்றைத் துளியென உள் நுழைவதை உயிரெனத் துப்பச் சொல்லி ஆணை பெற்று வந்தவள் . இந்நிலம் தன்னை பிறப்பித்துக் கொள்கிறது அவளிடமிருந்து. அவளுள் வீங்குகிறது ஆணின் ஆணவம். கொந்தளிக்கும் ஆழி அவள் பனிக்குடம். சுழலும் காற்று அவள் அலறல். பெருமழை அவள் கண்ணீர். பிறக்கட்டும் இந்நிலம் மீண்டும். வெகுண்டெழுந்ததாய் நினைத்தேனடி உன்னை. நீ உயிர்த்தெழுகிறாய். உயிர்பிக்க எழுகிறாய். எழு. உன்னை நீயே பிரசவித்துக் கொள். எழட்டும் உன் தடக்கைகள். உந்தப்படட்டும் உன் வயிறு. பிறக்கட்டும். பேரோலங்களுடன் பெருவலியுடன் புது மணத்துடன் கொட்டும் குருதியுடன் சிறு சதைத் துணுக்கென எழுந்து வரட்டும் புது நிலம். இதென்ன! புதைந்தவன் மிதக்கத் தொடங்குகிறேன். நான் என நான் உணர்ந்ததனைத்தும் பயத்தால். பயத்தை மறைக்க ஆணவம். இறுதியில் அவ்வாணவமே நான் என நம்புகிறவன் மன்னனாகிறான். மாமுனியாகிறான். பெரு வீரனாகிறான். வேடங்கள். வெற்று வேடங்கள். இங்கு நான் மட்டும் இருக்கிறேன். கருவறையில் அமைதியாய் உறங்கிய பின் உதிரவாய் கடந்து வெளிவந்த போது அழுது அரற்றியவனாக நின்றிருக்கிறேன். அன்று சிற்றுயிரென கிடந்த என்னை அள்ளித் தூக்கி ஆற்றுப்படுத்த அன்னையின் சிறு கரங்கள் போதுமானவை. இன்று அறிந்து நிமிர்ந்து தனித்து நடக்கும் என் அழுகையை ஆற்ற போதாதடி அச்சிறுகரங்கள். என் ஆணவம் அளவிற்கே வளர்ந்து விட்டாள் அன்னையும். வா. என்னை அள்ளித் தூக்கு. அணைத்துக் கொள். முலையூட்டு. தாலாட்டு. புண்ணிதழ் திறந்து சிரிக்க கண்கள் மயக்குண்டு உடல் தளர உன் உடல் மணத்தில் உறங்கிப் போகிறேன். இருள். பேரிருள். ஒளி. வெண்ணொளி. மௌனம். பெருமௌனம். ஆம் இந்நொடி தான். உச்சத்தின் ஒரு நொடி. இல்லாதொழிதல். இல்லாதொழிகிறேன். எங்கும் எதிலும் நிறைகிறேன். உடலின்றிப் போகிறேன். உணர்வின்றிப் போகிறேன். எண்ணமும் இன்றி...
எவர்தொடாமேட்டினை தெரிதர் வந்தடைந்தபோது பல லட்சம் பேர் புறப்பட்டு அந்த நிரையில் சில ஆயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
"இது சுனதன் வாழ்ந்த இடமல்லவா. இது அவன் வனம். சுனத வனம்" என உரக்கக் கூவினார். சுனத வனம் மீண்டவர்களை மாசறியானும் அவர் முதல் மாணவர் தனித்யரும் ஆற்றுப்படுத்தினர். குழந்தைகள் போல் மீண்டவர்கள் அஞ்சினர் அரற்றினர். சுனத வனத்தில் மெல்ல மெல்ல நிலை மீண்டு கொண்டிருந்தது. தெரிதரும் உடல் தேறி வந்தார். தெரிதர் அரை விழிப்பு நிலையில் விளக்கியவற்றை தனித்யர் குறிப்பெடுத்துக் கொண்டார். நிலத்தில் நிகழ்ந்த பேரிடர்களின் தடம் கூட தென்படாமல் எவர்தொடாமேடு இருப்பதை எண்ணி வியந்தார் தனித்யர்.
சுனதன் மீளவில்லை என்ற செய்தியை அவர்கள் தங்களுக்குள்ளாகவே மறைத்துக் கொண்டனர். சுனதன் குறித்துப் பேச யாரும் விழையவில்லை. அச்சொல் தங்கள் உறுதியை குலைத்து விடுமென அனைவருமே அறிந்திருந்தனர். தெரிதர் சுனத வனம் அடைந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தன. விடியலில் அருவி நோக்கிச் செல்வது தனித்யரின் வழக்கம். அவர் மகள் சுகத்யையும் அன்று உடன் சென்றிருந்தாள். முகத்தை குழல் சடையென மூடியிருக்க புன்னகைத்த இதழுடன் உடல் ஒளி கொண்டிருக்க கண்களில் கண்ணீர் வழிய மார்பில் கரங்களை வைத்து அழுத்தியவாறு சுனதர் அருவிப் பாறையொன்றில் மல்லாந்து கிடந்தார். தனித்யருக்கு சுனதரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
கதைகளிலும் கனவுகளிலும் கண்டிருந்த அவனை சுகத்யை கண்டு கொண்டாள்.
"தந்தையே அவர் சுனதர்" என அடங்கிய உறுதியான குரலில் சொன்னாள். புரியா விழிகளுடன் ஒரு கணம் சுகத்யைப் பார்த்த தனித்யர் அதிர்ந்து சுனதரை நோக்கித் திரும்பினார்.
"என் இறையே" என கதறியவாறே சுனதரின் கால்களை பற்றிக் கொண்டார்.
சுனதமகானின் மனவெழுச்சியோடு ஒன்றி எத்தனை குழந்தையை வேண்டுமானாலும் வரவேற்கத் துடிக்குது மனம். அன்னையின் பெருங்கருணையில் பங்கேற்றுப் படைப்பைப் பாதுகாக்கத் தவிக்கிறது. ஆனால் அந்நொடி! உச்சத்தின் ஒரு நொடி! இல்லாதொழிதல்! உடலின்றி....உணர்வின்றி.....எண்ணமும் இன்றி.....! ஒரு கணம் இல்லாதொழிந்து மீண்டேன். உயிர்ப்பிக்கப்பெறும் புதுநிலம் ஆணின் ஆணவக் குழந்தை! நானும் அதுவே! எத்தனைமுறை வேண்டுமானாலும் உயிர்த்தெழட்டும். ஏனெனில் மீண்டும் மீண்டும் அவளின் கருவறை அணைய வேண்டி உந்தித் தள்ளுகிறது அவளின் கனிவே இல்லாத பெருங்கருணை!
ReplyDelete