பெருஞ்சுழி 30
முதிய துயரவர்களை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஆதிரையின் தலைமையில் எழுநூறு பேர் கொண்ட குழுவொன்று சுனதவனம் கடந்து தெற்கு நோக்கி நடந்தது. இரண்டாண்டுகள் அவர்கள் நடந்தனர். நோயிலும் மூப்பிலும் பசியிலும் பலர் இறந்தனர். காமமும் அக்கூட்டத்தில் நிகழாமலில்லை. பிறப்பும் இறப்பிற்கிணையாக நிகழ்ந்தது. சுகத்யை நம்பிக்கை இழந்து விட்டிருந்தாள். வெறித்த விழிகளோடு தந்தையை தேடும் வெறி மட்டும் உந்த நடந்த ஆதிரையை நோக்கி சுகத்யை “நீ உன் தந்தையை காண வேண்டுமென்ற எளிய இச்சைக்காக எத்தனை பேரை பலி கொடுப்பதடி? நாம் தங்கிப் பிழைக்கும் நல் நிலங்கள் போகும் வழியிலேயே இருக்கின்றன. இவர்களை தங்க வைத்துவிட்டு உன்னை பெற்றதற்காக நான் மட்டும் உடன் வருகிறேன் அவரை தேடிச் செல்வோம்” என்றாள் மென் குரலில்.
பத்தியில் கல் பட்ட நாகமென சீறித் திரும்பினாள் ஆதிரை. “சீ கீழ்மகளே! வலுவான குறிச்சதைக்கென காத்திருந்த உன் போல் நினைத்தாயா என்னை? உன் கணவனையோ என் தந்தையையோ காண்பதற்காக நாம் பயணிககவில்லை. மாவலியமாய் அறியப்பட்ட இப்பெருநிலத்தின் விரிவையும் நுணுக்கத்தையும் சுனதனும் தெரிதனும் ஆய்ந்து கொண்டிருக்கின்றனர். இனி வரும் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு நம்மை நிம்மதி கொண்டு வாழவைக்கக் கூடிய பெருங்கருணையின் பேரரறிவு சுனதரிடம் உண்டு. அவர் மேற்கொண்டிருப்பது நில ஆய்வல்ல. மனித மனத்தின் கீழ்மைகளால் எதிர்காலம் எவ்வளவு சிக்கலாகும் என்பதை மட்டுமே நம் சான்றோர் நமக்குரைத்தனர். ஆனால் அக்கீழ்மைகளை வென்று சமன் செய்து இன்னும் மேலான ஒரு சமூகத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர் என் தந்தை . அவர் தனித்து விடப்படக் கூடாது. அதன் பொருட்டே நாம் செல்கிறோம். இவர்களும் உடன் வர வேண்டும். இறப்பு எங்கும் நிகழ்வதே. உன் சொற்படி நடந்தால் வலுவானவர்கள் என்னுடன் பயணிப்பார்கள். வலுவற்றவர்கள் ஆங்காங்கே தங்கி எந்தையாலும் என்னாலும் இறந்ததாக எண்ணியவண்ணமே இறந்தழிவர். அவர் குறித்து ஒரு இழிச்சொல் எழுந்தாலும் என்னால் பொறுக்க முடியாது. அது நீயே ஆயினும் தலையை அறுத்தெறிவேன். அவநம்பிக்கை விதைக்கும் ஒரு சொல் இனி உன்னில் எழுந்தாலும் உன்னை மண்ணில் அறைந்து சிதறச் செய்து முன்னேறுவேன்” என்றாள். சுகத்யை சிலைத்து நின்றாள். வாழ்வு தளிர் விட்டுக் கொண்டிருந்தது அப்பெருநிலத்தில். நிலம் திருத்தி சில இடங்களில் உழுதனர். அவர்களிடம் கேட்ட போது "பேரிறைவன் எங்களுக்கு அவர் அணுக்கருடன் காட்சி தந்தார். வலுத்த கரிய நீள் உடல் கொண்டிருந்தார். மார்பு வரை கருப்பும் வெண்மையும் கலந்த முடிக் கற்றைகள் புரண்டன. அவர் அணுக்கர் பேருடல் கொண்டவர்." என்றனர்.
அவர்கள் ஏறக்குறைய சுனதனை நெருங்கி விட்டிருந்தனர்.
சுனதனும் தெரிதரும் மூட்டப்பட்ட நெருப்புக்கு முன்னமர்ந்திருந்தனர். நெருப்பின் இளமஞ்சள் நிறம் சுனதனின் முகத்தில் பிரதிபலித்து முற்றமைதியும் தீரா மகிழ்வும் கொண்டிருந்த அவன் முகத்தை மேலும் ஒளிகொள்ளச் செய்ததாக தெரிதர் நினைத்தார். சுனதன் “என் பணி முடிந்தது தெரிதரே. ஒரு கடன் மட்டுமே இனி எஞ்சியுள்ளது" என தெரிதரின் முன் ஒரு வாளினை தூக்கி எறிந்தான் சுனதன். தெரிதர் ஒரு கணம் திகைத்து வாளை நோக்கிவிட்டு எழ மறுகணம் சுனதனின் வாள் தெரிதரின் முன் மயிர் கற்றையை அறுத்தெறிந்தது. சுனதனின் அடுத்த வீச்சு நெருங்குவதற்கு முன் இயல்பான எச்சரிக்கை உணர்வும் மிருக பயமும் தொடர்ந்த முறையான வாட்பயிற்சியும் உந்த தெரிதரின் வாள் சுனதனின் உடலில் ஆழமாக இறங்கியது.
“பேறு பெற்றேன் தெரிதரே. உம் உயிரைக் காப்பாற்றி உமைக்கிழைத்த அவமதிப்பின் பழியை இன்று தீர்த்துக் கொண்டேன். என் உயிர் எளிதாகப் பிரியாது தெரிதரே. வலுவான உன் தோளில் என்னை இறுக்கி அணைத்து என் மூச்சை நிறுத்து” என்றான்.
தான் நின்ற நிலம் தன்னை தள்ளிவிட்டு நகைப்பதாக தானெனக் கட்டி வைத்திருந்தவை உடைந்து தெறிப்பதாக உணர்ந்தார் தெரிதர். இருந்தும் தன் மனம் அதிரவில்லை. ஆம் அதிரவில்லை. அப்படியெனில்! அப்படியெனில்! அறிந்திருந்தேனா? இவையனைத்தையும் முன்னரே அறிந்திருந்தேனா? “என் இறைவா” என மண்ணில் கால் தளர்ந்து விழுந்த தெரிதர் மண்ணில் உக்கிரமாக தலையை அறைந்து கொண்டார். அழுது விசும்பி சுனதனின் பாதங்களில் தலை வைத்தார்.
“தெரிதரே! இறப்பு நிகழ்வது இறைவன் வகுப்பது. என் வாழ்வின் பயன் நான் சொல்லி நீர் தொகுத்த சாசனமே. அதனை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எனக்கு விடுதலையளியுங்கள் தெரிதரே” என கேவல் ஒலியில் தெரிதரின் தலையில் கைவைத்தான்.
தன் பேருடலால் தெரிதர் சுனதனை இறுக அணைத்தார். உயிரின் இறுதி துடிப்பிற்குப்பின் சுனதனின் உடல் அடங்கியது. ஆதிரை சுனதன் அடங்குவதை தூரத்திலிருந்து பார்த்து நின்றாள். மார்பை சுடுநீர் நனைத்த போதே பதினான்கு வயது வரை விழித்திருக்கையில் தன் விழி நீர் கண்ணம் தொட்டது அதுவே முதன்முறை என உணர்ந்தாள். என்ன நடந்து கொண்டிருக்கிறது? முடியுமா? இப்படியும் நடக்க முடியுமா? ஏன் உன் நினைவை எனக்குள் விதைத்தாய்? அதற்கு முன் ஏன் என்னை சுகத்யையினுள் விதைத்தாய்? இதற்காகவா? எண்ணவில்லையா என்னை நீ? எண்ணாமல் இருந்திருக்க முடியாமா உன்னால்? ஒரு நொடி உன் பின்னே நீ ஈன்றவள் உன்னைத் தவமிருந்தவள் உன் அருகே இருக்கிறாள் என உணரவில்லையா நீ? எந்தையே! உன் உயிர் பிரிந்து விட்டதா? ஆம் பிரிந்து விட்டது. இனி நீ பேசமாட்டாய். இதற்கு முன்னும் நீ பேசி நான் கேட்டதில்லை. எப்படி இருக்கும் உன் குரல்? எவ்வளவு கொடூரமான கேள்வி இது. எப்படி இருக்கும் உன் அணைப்பு.சுகத்யை. எங்கே சுகத்யை? ஆம் எனக்கிப்போது அவள் மட்டுமே வேண்டும். அவள் கருவறைக்குள் மீண்டும் புகுந்து கொள்ள வேண்டும். அம்மா. அம்மா. உன் மகள் அஞ்சுகிறாள். வாம்மா. வந்து அணைத்துக் கொள். என் உடலை இடைவெளியின்றி அணைத்துக் கொள். உடலை நீ அணைத்துக் கொள்வாய். உள் எரிவதை யார் அணைப்பது? உன் துயர் என்னினும் பெரிதடி. ஆம் எனக்கு நீ தேவை என்பதை விட உனக்கு நான் தேவை. எந்தையே! எந்தையே! உன் சிறு மகள் உன்னைத் தேடி ஓடி வந்திருக்கிறாள். ஏன் இறந்தாய் என்னைப் பார்க்காமல்? கடன் இன்றி இறக்க நினைத்தாயா? மூடனே! முழு மூடனே! என் கடனை எப்படித் தீர்ப்பாய்? இல்லை. நான் உனக்கு பொருட்டல்ல. உன் இச்சையும் குழப்பமும் தீர சுகத்யையின் வெறி அடங்க உன்னிலிருந்து வெளியேறிய கழிவு நான் இல்லையா?அய்யோ! என்ன எண்ணி விட்டேன். இல்லை. உன் கனவுகளில் நானே நிறைந்திருந்திருப்பேன். நிழலை உரு நேருக்கு நேர் சந்திக்க முடியாதல்லவா? நேற்று வரை நான் நிழல். இன்று முதல் நீ .
அந்த எண்ணம் எழுந்ததுமே உடைந்ததழுது ஓடி “எந்தையே என் இறைவனே” என சுனதனின் சடலத்தை தன் மார்போடு எடுத்தணைத்து முத்தங்களின் எச்சிலிலும் விழியின் கண்ணீரிலும் அவன் முகத்தை நனைத்தாள்.
Comments
Post a Comment