பொண்டாட்டி - பாலுறவைப் பேசும் நீதிக்கதை
எழுத்தாளன் தன்னை என்னவாக பாவித்துக் கொள்கிறான் என்பது புனைவின் அழகியல் ஒருமைக்கு ஒரு இன்றியமையாத அம்சம். அதோடு எழுத்தாளனின் புனைவு பாவனையை அறிந்து கொள்வது குறிப்பிட்ட எழுத்தாளனின் மனவெழுச்சிகளையும் அக்கறைகளையும் கண்டுகொள்ள வாசகனுக்கு பெருமளவு உதவக்கூடும். மானுடம் என்கிற பெருங்கொந்தளிப்பினை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறவனாக டால்ஸ்டாய் தன்னை போரும் வாழ்வும் நாவலில் பாவனை செய்து கொள்கிறார். ஜெயமோகனின் பெரும்பாலான ஆக்கங்களில் ஒரு வரலாற்று விசாரணையாளின் பாவனையை நம்மால் காண இயலும். புதுமைப்பித்தன் மதிப்பீடுகள் சரிவதால் கோபமும் கசப்பும் கொள்ளும் கூரிய நல்லுணர்ச்சி கொண்டவராக தன்னை பாவனித்துக் கொள்கிறார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்கள் பலரின் எழுத்துக்களுக்கு கசப்பும் விலகலும் முக்கியமான புனைவு பாவனையாக மாறியிருக்கிறது. அவ்வகையில் அராத்து என்கிற எழுத்தாளர் தன்னை என்னவாகப் புனைந்து கொள்கிறார் என்ற கேள்வி அவரது இந்த நாவலையும் பிற படைப்புகளையும் புரிந்து கொள்ள அவசியமானது என நினைக்கிறேன். /மென்பொருள் துறையில் டிரெயினிங் & கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இவர், தொழில்முறை எழுத்...