மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் - பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து
பெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவாக இருக்கும் என்று நம்முடைய முதல் கேள்வியை சற்று பொதுமைப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வு என்ற சொல்லின் வழியாக நாம் வகுத்து வைத்திருக்கும் மாற்றங்களை புகுத்திவிட முடியாத சலிப்பூட்டும் எதார்த்தத்தில் இருந்து சற்றே நம் மனம் எம்பிக் குதிக்கையில் அது கலாப்பூர்வமான ஒரு பிரக்ஞையை அடைகிறது. தன் வாழ்வு எவ்வளவு பாதுகாப்பாக அல்லது அபத்தமாக இருக்கிறது என்பதை இந்த "எம்பல்" நடைபெறும் மனம் ஏதோவொரு விதத்தில் உணர்ந்து கொள்கிறது. தனக்கேற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மேலும் சமரசம் நோக்கியோ அல்லது மேலும் சமரசமின்மை நோக்கியோ மனம் நகர்கிறது. எப்படியாயினும் ஒரு கலையனுபவத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் மனிதனுள் நிச்சயம் ஒன்று எக்காலத்துக்குமாக மாறிவிடுகிறது. எல்லா அனுபவங்களும் நம்மை மோதி நம்முள் மாற்றத்தை விளைவிக்கவே செய்கின்றன. திடீரென அடைந்த சிநேகமாக துரோகமாக அது இருக்கலாம். திட்டமிட்டடைந்த வெற்றியாக கை பிசைந்து நிற்க வைக்கும் இழப்பாக ஆச்சரியத்தில் திகைத்து நிற்க ...