மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் - பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து


பெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம்.
கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவாக இருக்கும் என்று நம்முடைய முதல் கேள்வியை சற்று பொதுமைப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வு என்ற சொல்லின் வழியாக நாம் வகுத்து வைத்திருக்கும் மாற்றங்களை புகுத்திவிட முடியாத சலிப்பூட்டும் எதார்த்தத்தில் இருந்து சற்றே நம் மனம் எம்பிக் குதிக்கையில் அது கலாப்பூர்வமான ஒரு பிரக்ஞையை அடைகிறது. தன் வாழ்வு எவ்வளவு பாதுகாப்பாக அல்லது அபத்தமாக இருக்கிறது என்பதை இந்த "எம்பல்" நடைபெறும் மனம் ஏதோவொரு விதத்தில் உணர்ந்து கொள்கிறது. தனக்கேற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மேலும் சமரசம் நோக்கியோ அல்லது மேலும் சமரசமின்மை நோக்கியோ மனம் நகர்கிறது. எப்படியாயினும் ஒரு கலையனுபவத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் மனிதனுள் நிச்சயம் ஒன்று எக்காலத்துக்குமாக மாறிவிடுகிறது. எல்லா அனுபவங்களும் நம்மை மோதி நம்முள் மாற்றத்தை விளைவிக்கவே செய்கின்றன. திடீரென அடைந்த சிநேகமாக துரோகமாக அது இருக்கலாம். திட்டமிட்டடைந்த வெற்றியாக கை பிசைந்து நிற்க வைக்கும் இழப்பாக ஆச்சரியத்தில் திகைத்து நிற்க வைக்கும் தடாலடியான மாற்றமாக எப்படி வேண்டுமானாலும் ஒரு "அனுபவம்" "நமக்கே நமக்கென" நேரிடலாம். ஆனால் அது எவ்வளவு "செறிவுடைய" அனுபவம் எனினும் அது முழுமையானதாக பெரும்பாலும் அமைந்து விடுவதில்லை. ஒரு சுய அனுபவத்தை ஒருமுறை விவரிக்கிறோம் எனக் கொள்ளலாம். அதே அனுபவத்தை ஓராண்டு கழித்து மீண்டும் சொல்லும் போது நம்முடைய விவரணையும் அந்த அனுபவம் குறித்த நம்முடைய பார்வையும் நிச்சயம் மாறியிருக்கும். யார் கண்டது பத்தாண்டுகளில் அந்த அனுபவம் நிகழ்ந்த போதிருந்த மனநிலைக்கு எதிர்திசையில் கூட நாம் திரும்பியிருக்கலாம். மகிழ்வான "பழைய" நிகழ்வுகள் கண்ணீரோடும் கொந்தளிப்பான தருணங்கள் சமநிலையோடும் சொல்லப்படுவது ஒருமுறையாவது நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கும்.
கலையும் இலக்கியமும் அனுபவங்களை சாராம்சப்படுத்துகின்றன(சாரமின்மை கூட ஒருவகை சாராம்சப்படுத்தலே). ஒரு கடத்தியின் (conductor) முனைகளில் மின்னழுத்தம் கொடுக்கப்படும் போது அக்கடத்தியில் உள்ள அணுக்கள் ஒரு திசை நோக்கி பயணிக்கத் தயாராவது போல இலக்கியம் பிரதியின் மாறாத மொழியின் வாயிலாக அனுபவங்களை முனை கொண்டதாக "நோக்கம்" உடையதாக மாற்றிவிடுகிறது. ஆக கலைகளின் நோக்கம் அர்த்தமற்ற பெருந்தொகுப்பான வாழ்வினை தன் அழகியலின் வழியாக சாராம்சப்படுத்துவது என்று வரையறுக்கலாம். அழகியல் என்ற சொல்லை ஆராயப்புகுவது கிட்டத்தட்ட மனிதனுள் உறையும் மேன்மைக்கான முழுமைக்கான ஏக்கத்தையும் தேடலையும் ஆராயச் செல்வதே. ஆகவே ஒவ்வொரு கலையும் தனக்கே உரிய ஒரு "அறிய முடியாமையை" கொண்டுள்ளது என்பதோடு அதனை நிறுத்தி நிறுவிக் கொள்ளலாம்.
மொழியில் நிகழ்த்தப்படும் கலையான இலக்கியத்திற்குள் இப்போது வந்துவிடுவோம். இலக்கியத்தின் இக்காலத்திய வெளிப்பாட்டு வடிவங்களில் ஒன்றான நாவல் குறித்தே இக்கட்டுரையின் முதல் கேள்வி அமைந்திருந்தது. தமிழில் கடந்த கால் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க பெருநாவல்கள் வந்திருக்கின்றன(நிறைய பக்கங்கள் என்ற அளவுகோலின்படி அல்லாமல் உண்மையில் நாவல் என்ற வடிவத்திற்கு நியாயம் செய்யும் படைப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டால் கால் நூற்றாண்டு என்பதே சரியான காலம்). நாவல் என்ற வடிவம் நீண்ட கதைகளை சொல்வதற்காக அல்லாமல் அறிவுப் பரப்பில் எப்போதும் இறுக்கமாக உரையாடப்படுகிறவற்றை வாழ்வில் நிறுத்தி வாசிப்பவரின் அனுபவமாக மாற்றிக் காட்டி வாசகனே தன்னுடைய அனுபவத்தாலும் நுண்ணுணர்வாலும் முடிவுகளை (சாரங்களை?) நோக்கிச் செல்ல வைப்பதாக உள்ளன. புறவயமான தகவல்களின் வழியாக உணர்வுநிலைகளை கட்டமைத்து வாசகனை தன் கட்டமைப்புக்குள் ஈர்த்து ஒரு நிகர்வாழ்வில் அவனை சில நாட்களோ மாதங்களோ வாழச் செய்வதே வார்த்தைகளால் சொல்லக்கூடிய நாவல் கொடுக்கக்கூடிய கலையனுபவம். இது தொடக்க நிலை மட்டுமே. ஒருவனின் வாசிப்பும் வாழ்வனுபவங்களும் பெருகப்பெருக உடன் பயணிப்பவையாக வாசகனுக்குள் வளர்பவையாக சிறந்த இலக்கியப் படைப்புகள் அமைந்து விடுவதுண்டு.
வாசகனின் மனதில் வளரும் அத்தகையப் படைப்புகளின் தொகையே சிறந்த இலக்கியப் படைப்புகள் எனப்படுகின்றன. தொடர்ச்சியாக வெவ்வேறு வகையில் அவை பயிலப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன. பெருநாவல்களின் உடனடி நோக்கம் வாசகனை நாவலாசிரியன் தான் உத்தேசிக்கும் பிரம்மாண்டமான அறிவுப் பரப்புக்குள் ஈர்ப்பதே. அதன் வழியாக தன்  எழுத்தில் பின்னிக்கிடக்கும் சமூகத்தின் மனவெழுச்சிகளை கனவுகளை மேன்மைகளை கீழ்மைகளை நாவலாசிரியன் நுட்பமாக வாசகனுக்குள் செலுத்துகிறான். அவை வளர்த்தெடுக்கப்படக்கூடியவையாக இருந்தால் அது வாசகனின் மனதில் நீட்சி கொள்கிறது. எப்படியாயினும் பெருநாவல்கள் வாசித்து "உணர்ந்து" கடந்து செல்லக்கூடியவை அல்ல. ஏனெனில் வெவ்வேறு மன அமைப்பு கொண்ட மனிதர்களால் ஒரு படைப்பு எதிர்கொள்ளப்படும் போது ஒவ்வொருக்குள்ளும் அது உருவாக்கும் விளைவு தனித்துவமானதாக இருக்கிறது. அந்த "தனித்துவங்களின் தொகை" என ஒன்று உருவாகும் போதுதான் ஒரு நாவல் உத்தேசிக்கும் மதிப்பீடுகளும் லட்சியங்களும் வெளிப்படுகின்றன. அப்படி அந்த மதிப்பீடுகள் வெளிப்படும் போது அவை ஏற்கப்படுவதையும் மறுக்கப்படுவதையும் பொறுத்து ஒரு படைப்பு சமூகத்தின் கூட்டு நனவிலிக்குள் நுழைகிறது. நம்முடைய தமிழ் வாழ்க்கையின் இன்றைய மதிப்பீடுகளை உருவாக்கிய சிலப்பதிகாரமும் குறளும் கம்ப ராமாயணமும் நம்முடைய கூட்டு நனவிலிக்குள் வாழ்வதை நாம் பரிசோதித்து அறியலாம்.
நவீன யுகம் நம்மை வேறொரு வகையான வாழ்க்கைக்குள் நுழைத்திருக்கிறது. குலச் சடங்குகளுக்குள்ளோ மதங்களுக்குள்ளோ பிறந்து விழுந்து இறந்து போகும் "மரபான" வாழ்க்கை நவீன மனிதனுக்கு வாய்க்கவில்லை. ஆகவே மரபான இலக்கியங்களின் மதிப்பீடுகளை அவனால் பின்பற்ற முடியாது. மரபிலக்கியங்களில் இருந்து அவசியமான சில மதிப்பீடுகள் அவனுக்கு கொடுக்கப்பட வேண்டுமானால அவை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். சந்தேகப்படுகிறவனாகவும் நம்பிக்கையற்றவனாகவும் தற்செயல்களின் பெருந்தொகுப்பை "கடவுள்" என ஏற்றுக் கொள்ளாதவனாகவும் ஒரு மனிதன் கடந்த முன்னூறாண்டுகளில் மேற்கில் உருவாகி உலகம் முழுவதுமே பரவிவிட்டான். அறம் என்ற ஒன்று சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்தையும் தன் தர்க்கத்தால் எள்ளி நகையாடும் ஒரு எல்லையை இவ்விளைஞன் அடைந்துவிட்டான். மொழியைக் கொண்டு தத்துவத்தையும் அறிவியலையும் அவன் கையாளத் தொடங்கிவிட்டான். அப்படி இருக்கும் போது மொழியில் செய்யப்பட்ட ஒரு அழகுப் பொருள் போன்றிருக்கும் மரபான நூல்களால் நீதிகளை போதிக்கும் அவற்றின் உத்தேசத்தால் அவனுடன் உரையாட முடியவில்லை. அவனுடைய தர்க்கமும் அறிவும் ஏற்றுக் கொள்ளாதவற்றுடன் அவன் உரையாட விழையவில்லை. இந்த சிக்கலை இலக்கியம் எதிர்கொண்ட போதுதான் நவீன இலக்கியம் பிறக்கிறது. இந்த சிக்கலை வெற்றிகரமாக எதிர்கொண்ட இன்னும் எதிர்கொள்ள காத்திருக்கும் ஒரு வடிவமே பெருநாவல். நாம் இன்று பேரிலக்கியவாதிகள் என்று கொண்டாடுகிறவர்கள் இந்த காலமாற்றத்தின் அனலை முன் வரிசையில் நின்று எதிர்கொண்டவர்கள்.
பெருநாவல்களின் நோக்கங்களாக இரண்டை வரையறுக்கலாம்.
ஒன்று அவை நவீன மனிதனின் தர்க்கத்துடன் மோதி விவாதித்து தங்களை நிலைநாட்டுகிறவை. மற்றொன்று மதிப்பீடுகள் என்று ஏற்கனவே சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறவற்றுடன் ஓயாமல் மோதிக் கொண்டிருப்பவை.
பேரிலக்கியத்தின் பாதை
முன்பே சொன்னது போல நவீன யுகத்தை மொழி சந்தித்த போதே நவீன இலக்கியம் பிறக்கிறது. அதுவரை இருந்த மதிப்பீடுகளை உருக்கி மறுவார்ப்பு செய்யும் வேலையை ஏற்றுக் கொண்ட படைப்புகள் மரபான சமூகங்களில் புழங்கிய மனிதனுக்கு அளித்திருக்கக்கூடிய ஒவ்வாமை புரிந்து கொள்ளக்கூடியது. காவியங்கள் உச்ச தருணங்களை மையப்படுத்துகிறவை. ஹெக்டரை போருக்கு அறைகூவும் அக்கிலஸ் எரிகுழியில் இறங்கவிருக்கும் சீதை ஒற்றை சிலம்புடன் நீதி கேட்கும் கண்ணகி என உணர்ச்சிகரமான உச்சத் தருணங்களை காவியங்கள் தங்கள் பண்புகளாக கொண்டிருந்தன. ஆனால் நவீன இலக்கியம் வேறு வகையாக வெளிப்பட்டது. நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருத்தி மற்றொரு ஆணழகனை நோக்கி காதல் கொள்வதை நுட்பமாக வர்ணிப்பதை "உச்சங்களை" (போரும் வாழ்வும்)விரும்பும் மனம் விரும்பாது என்றே எண்ணுகிறேன்.
பொதுவாக ஒட்டுமொத்தமாக எதிர் திசையில் திரும்ப வேண்டுமெனில் அதற்கான விசையும் அதிகமாக கொடுக்கப்பட்டாக வேண்டும். அதனால் தான் நவீன இலக்கியங்கள் தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நவீன இலக்கியத்தின் மிகச் சிறந்த (அல்லது உகந்த)வடிவமான நாவலும் மிகச் சிறந்த நாவல்களும் வெளிப்பட்டுவிட்டன.
அவ்வகை சிறந்த படைப்புகளில் சில படைப்புகள் பேரிலக்கியங்களாக மேலெழுந்திருக்கின்றன. இலக்கியம் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழல் சார்ந்தே எழுதப்படுகிறது. ஆனால் அதன் தேடல் எந்தளவிற்கு மானுடப் பொதுமை நோக்கி நகர்கிறதோ அந்த அளவு குறிப்பிட்ட அப்படைப்பு காலம் நிலம் போன்ற அளவுகளில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறது. ஒரேயொரு குடும்பத்தின் சிக்கலை மட்டும் சொல்லும் படைப்புகள் பேரிலக்கியங்களாக எழ முடியும். அதேநேரம் மிகப் பெரிய நில கால எல்லைகளை உள்ளடக்கும் படைப்புகளும் ஒட்டுமொத்த மானுடத்தையும் தழுவும் எதையும்  சொல்லவில்லையெனில் அவை தேங்கியழியவே செய்யும்.
பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற பெருநாவல் பேரிலக்கியமாக எழுவது இரண்டு காரணங்களால். அதன் கதை நிகழும் காலம் மூன்று வாரங்களைத் தாண்டாத போதும் கதை நிகழும் இடம் பீட்டர்ஸ்பர்கின் ஒடுங்கிய வீதிகள் மட்டுமே என்ற போதும் கிட்டத்தட்ட முழு நாவலுமே காலாதீதமான ஒன்று மட்டுமே விவாதிக்கப்படுகிறது என்ற தோரணையை ஏற்படுத்துவதால் தான்.
இரண்டு "மனித மனம்" என்ற அருவத்தை இவ்வளவு ஸ்தூலமான ஒன்றாக இன்று வரையிலும் கூட வேறெந்த படைப்பும் காட்ட முடியவில்லை என்பதாலும் தான்.
தனிமனதின் தீர்க்கமான வருகை
குற்றமும் தண்டனையும் நாவலுக்கு வடிவம் சார்ந்த ஒரு புறச் சட்டகத்தை கொடுக்க முனைந்தால் அது சிக்கலற்றதாக மிக மிக எளிமையான ஒன்றாகவே இருக்கும். ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞன் சுய உந்துதலால் இரண்டு கொலைகளை செய்து விடுகிறான். அக்கொலைகளால் அவன் வாழ்வு எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பதே நாவலின் உடல். நேர்க்கோட்டிலேயே கதையும் நகர்கிறது. ஆனால் கதையாடல் வாசகனுக்கு அளிக்கும் சவாலும் அவன் கண்டடைய வேண்டியவையும் வரிகளுக்கிடையில் ஒவ்வொரு பக்கத்திலும் புதைந்து கிடக்கின்றன.
தொடக்கம் முதலே அடகுக்கடைக்காரியான அல்யோனா இவானோவ்னாவை கொலை செய்யும் உந்துதல் ரஸ்கோல்னிகோவிடம் இருக்கிறது. அந்த உந்துதலை அவன் பெறும் விதம் சற்றே மாறுபட்டதாகத் தோன்றினாலும் மனித வாழ்க்கையை கட்டமைக்கும் மனித மனம் அத்தகைய முன்னறிவிக்க முடியாத முரண்களால் இயங்குகிறது என்பதை இப்படைப்பை வாசிக்கும் யாரும் உடனே கண்டு கொள்ள முடியும். பண நெருக்கடி அதிகரிக்கும் போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனான ரஸ்கோல்னிகோவ் தன்னுடைய பொருளொன்றை அடகு வைப்பதற்காக அல்யோனா இவானோவ்னாவிடம் செல்கிறான். திரும்பும் வழியில் அவளைப் பற்றி இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்க நேர்கிறது. தற்செயலான இச்சம்பவம் அவளைக் கொலை செய்வதற்கு அவனைத் தூண்டுகிறது.
முழுக்க முழுக்க மனித மனம் என்ற ஒன்றை மட்டும் பேசுபொருளாக்கி அதனுள் நடக்கும் விசித்திரங்களையே விவரித்துச் செல்கிறது இப்படைப்பு. ரஸ்கோல்னிகோவின் மனம் போலவே புறச்சூழலும் நெரிசல் மிகுந்ததாக குழப்பம் நிறைந்ததாக எரிச்சலூட்டுவதாக சித்தரிக்கப்படுகிறது. அவனுடைய மனநிலையும் உடல்நிலையும் இசைவு கொள்கின்றன. அடகுக்கடைக்காரியை கொலை செய்வதற்கு முன் ஒரு குதிரையை அதன் உரிமையாளன் அடித்துக் கொல்வதைப் போல அவன் காணும் கனவு குடிகார விடுதியில் அவன் சந்திக்கும் மர்மெலாதோவ் அவன் அன்னையிடம் இருந்து அவனுக்கு வரும் கடிதம் என ஒவ்வொன்றும் ஏதோவொரு விதத்தில் அச்செயலுடன் அவனை முடிச்சிட வைக்கிறது.
மிக எளிய விவரணைகளுடன் தொடங்கும் அத்தியாயங்கள் அவ்வெளிமையில் இருந்து விலகாமல் பிரம்மாண்டமாக விரிந்து மனதை ஆக்கிரமிக்கின்றன. அல்யோனாவை கொலை செய்யும் வரை ரஸ்கோல்னிகோவின் மனம் நிகழ்த்தும் நுண்மையான நாடகங்கள் அதிர்ச்சியூட்டும் கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அவன் அம்மாவிடமிருந்து வரும் நீண்ட கடிதம் அளிக்கும் ஆறுதலும் அதை உடைத்துப் பொருள் கொள்வதில் அவன் காட்டும் தீவிரமும் அவனுடைய கூர்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன. ரஸ்கோல்னிகோவின் தங்கை துனியாவிற்கு சற்றே வயது முதிர்ந்த ஒரு செல்வந்தனுடன் நிச்சயம் நடைபெறுகிறது. அவன் அம்மா அதை எழுதியிருக்கும் விதத்தில் இருந்தே அவனை ஊகித்து விடுகிறான் ரஸ்கோல்னிகோவ். அவன் மனம் போடும் அத்தனை வேடங்களையும் தாண்டி அல்யோனா இவனோவ்னாவை கொலை செய்யச் செல்கிறான். அந்த பயணத்தை விவரிக்கும் இடத்தில் நாவலின் உச்சங்களில் ஒன்று வெளிப்படுகிறது. செய்ய வேண்டும் என்று தீர்மானித்தப் பிறகு தன்னால் இதை செய்ய முடியுமா என அவன் தயங்கிக் குழம்பும் இடங்களில் உண்மையில் வாசகனை தன் மனதையே தரிசிக்கச் செய்துவிடுகிறது இப்படைப்பு. எதிர்பாராத விதமாக அடகுக்கடைக்காரியின் சகோதரி  லிஸாவெதாவையும் ரஸ்கோல்னிகோவ் கொலை செய்ய நேர்கிறது.
வறுமை சுகாதாரமின்மை நோய் மனக்குழப்பம் என எந்நேரமும் கொந்தளிக்கும் மனநிலையிலேயே ரஸ்கோல்னிகோவ் இருக்கிறான். அந்த நொய்மையான மனநிலையோடு இக்கொலைக் குற்றத்தை ஏற்பதும் மறுப்பதற்குமான அகமும் புறமுமான சதுரங்கமே இந்த நாவல். அறிவுக்கூர்மையும் கருணையும் ஒருங்கே இணைந்த நோயுற்ற இளைஞன் இச்சிக்கலை எதிர்கொள்வதை வைத்து "குற்றம்" என்று சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் ஒன்றை மோதுகிறார் தஸ்தெய்வ்ஸ்கி. நாவலின் பக்கங்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தந்த வண்ணமே உள்ளன. டால்ஸ்டாயின் படைப்புகள் விரிவான விவரணைகளை அளிப்பதன் வழியாக மனதில் ஒருவித "சோர்வினை" உருவாக்கும். அவர் படைப்புகள் ஒரு கிழட்டு யானையைப் போல காலம் கிடப்பதைக் காட்டுபவை. அதன் வழியே பயணித்து டால்ஸ்டாய் தொடும் இடங்கள் கவித்துவமும் திகைப்பும் ஒருங்கே கொண்டவை. ஒரு சமூக மனம் திகைத்து நிற்கும் பல இடங்களை டால்ஸ்டாயின் படைப்புகளில் காண முடியும். உதாரணத்திற்கு அன்னா விரான்ஸ்கியின் குழந்தையை ஈனும் சமயத்தில் கரீனினுக்கு அக்குழந்தையின் மீது எழும் அன்பை விளக்க முடியாமல் டால்ஸ்டாய் திகைத்து நிற்பார். தஸ்தயெவ்ஸ்கியின் புனைவுலகு தொடங்குவதே அத்திகைப்பில் இருந்து தான். மனித மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் இருளையும் மகத்துவத்தையும் (பாற்கடல் கடையும் தொன்மம் நினைவுக்கு வருகிறது) துலாவிச் சென்றபடியே உள்ளது இந்த நாவல். இந்த நாவலின் நாயகன் மனம் தான். தன்னுடைய அப்பட்டமான இச்சைகளை தன்னலமின்மையை நேர்மையை தந்திரத்தை மனிதன் எனும் ஊடகத்தில் ஏற்றி நடித்தபடியே இருக்கின்றன மனங்கள். அதன் மையமென நிற்கிறான் ரஸ்கோல்னிகோவ்.
கொப்பளித்தெழும் புனைவுகள்
முன்பே சொன்னது போல நாவலின் நிகழ்வுகள் அனைத்தையுமே ரஸ்கோல்னிகோவின் மனதுடன் பொருத்திப் பார்க்க முடியும் என்பதால் நாவலில் நடைபெறும் மிக நீண்ட உரையாடல்கள் அனைத்தும் அவனால் நிகழ்த்தப்படுகிறவையாக அவனுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. உதாரணமாக மது விடுதியில் தற்செயலாக அவன் சந்திக்கும் மர்மெலாதோவ் உணர்ச்சிப் பெருக்கில் அவனிடம் சொல்கிற விஷயங்கள் பின்னாட்களில் மிகுந்த தாக்கத்தை அவனிடம் உருவாக்குகின்றன. உண்மையான அனுதாபம் என்பது பெரும்பாலும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும் மனதின் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையே என்பது என் அனுமானம். சோனியா தன்னை விபச்சாரியாக மாற்றிக் கொண்டதை மர்மெலாதோவ் ரஸ்கோல்னிகோவிடம் விவரிக்கும் இடங்களில் தோன்றுவது அத்தகைய ஆற்றாமையே. அவன் போல ரஸ்கோல்னிகோவிடம் அதன்பின் பல உரையாடல்கள் நிகழ்கின்றன கொலைக்கு முன்னும் பின்னும். அவையனைத்தும் ஒரு பொது வாசகனுக்கு சலிப்பினை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் அவ்வுரையாடல்களின் "அபத்தப் புனைவு"த் தன்மையை கண்டு கொள்ளும் வாசகன் அவற்றுடன் விளையாடத் தொடங்கி விடுவான். தோற்றுப் போனவர்கள் தங்களை நிரூபிக்க காத்திருப்பவர்கள் தான் இப்படித்தான் எனச் சொல்கிறவர்கள் மீண்டும் மீண்டும் ரஸ்கோல்னிகோவிடம் உரையாட வருகிறார்கள்.
எதிர் இருப்பவனின் மனதில் நன்மதிப்பை மட்டுமே பெற விழையும் லூசின் மனதினை ஆழச்சுரண்டி உண்மையை வரவழைக்கும் போர்பிரி தந்திரமாக ரஸ்கோல்னிகோவை அணுகும் ஸ்விட்ரிகைலோவ் என நாவல் முழுக்க நீளும் நீண்ட உரையாடல்கள் உண்மையில் வாசகனை மிகச் சிக்கலான ஒரு விளையாட்டுக்குள் அழைக்கின்றன. சோனியா குற்றம் சாட்டப்படுதல்  காதரீனா இவனோவ்னாவின் பரிதாபமான முடிவு  என மனதில் ஆழமான பரிவைத் தூண்டும் சம்பவங்களை எழுதிச் செல்வதில் தஸ்தயெவ்ஸ்கி இன்னும் கூட விஞ்சப்படவில்லை.
அபத்தத்தின் உச்சங்கள்
விபச்சாரிகள் குறித்து எழுதுவதில் நம்மூரில் எழுத்தாளர்களுக்கு ஒரு தனிப்பட்ட கவர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஜே.ஜே சில குறிப்புகளில் முல்லைக்கல் மாதவன் நாயரை முன்னிறுத்தி இப்பண்பை ஆழமாக கேலி செய்திருப்பார் சுந்தர ராமசாமி. ஆனால் குற்றமும் தண்டனையும் வழியாக நவீன இலக்கியம் கண்டறிந்த மிகச்சிறந்த பாத்திரமான சோனியா ஒரு விபச்சாரியாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் அவள் அப்படி மாறும் சூழலை சொல்லும் விதமும் அதன் பிறகான அவளுடைய நடத்தைகளும் உண்மையான பரிவும் அக்கறையும் நிறைந்தவை. சோனியா எங்கும் இழிவான சித்தரிப்புகளுக்குள் செலுத்தப்படவில்லை. அவள் தன் இழிவை உணர்ந்தவளாக பயந்தவளாக விலகியே இருக்கிறாள். தன் செயலை உட்சபட்ச தர்க்கங்கள் வழியாக நியாயம் செய்யும் ரஸ்கோல்னிகோவுக்கு வலுவான மாற்றாக முன்னிற்கிறாள் சோனியா.
அவனைப் பற்றிய உண்மைகள் வெளிப்பட வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு முறையும் தடுமாறிக் குழம்புகிறான் ரஸ்கோல்னிகோவ். லூசினுடனான அவன் சகோதரி துனியாவின் திருமணம் தடைபடுகிறது. போர்பிரி பெத்ரோவிச் என்ற விசாரணை அதிகாரி அவன் தான் கொலைகாரன் என்று உறுதியாக தெரிந்தபின்னும் ஆதாரங்கள் இல்லாமல் அவனைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். ஸ்விட்ரிகைலோவால் அவனுக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் விலகிச் செல்கிறது. இந்த நாவலில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்துமே ஒரு வகையான "மனத்துருவல்" வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன. காலம் நீண்டதாகவும் குறுகியதாகவும் சூழல் மகிழ்வானதாகவும் துன்பம் நிறைந்ததாகவும் தோற்றம் கொள்வது மனதை முன்னிறுத்தியே என்பதை இப்படைப்பின் பல பக்கங்கள் நிறுவுகின்றன. சோனியாவின் தந்தை மர்மெலாதோவின் இறுதிச் சடங்கிற்கு அவளின் சிறு தங்கையான போலென்காவிடம் பணத்தை கொடுத்து அச்சிறுமியின் அன்பு நிறைந்த முத்தத்தை ரஸ்கோல்னிகோவ் பெற்றுக் கொள்ளும் தருணம் அவன் சஞ்சலங்கள் நீங்கியவனாக தன்னை உணர்கிறான். கொலை செய்து விட்டு அவன் வீட்டிற்கு திரும்பி இருக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது. அச்சமயம் கொலை விசாரணைக்காக தான் அழைக்கப்படவில்லை என்பதை அவன் உணரும் தருணம் அச்சூழலை லாவகமாக கையாண்டு விடுகிறான். சமெடோவ் போர்பிரி என ஒவ்வொருவரையும் தன் குழப்பங்களோடும் சஞ்சலங்களோடும் அவன் எதிர்கொண்டாலும் எச்சூழ்நிலையிலும் அவனுடைய புத்திசாலித்தனம் அவனை கைவிடுவதில்லை. ஆனால் சோனியாவின் கள்ளமற்ற நேர்மையின் முன் அவன் மண்டியிடுகிறான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நவீன இலக்கியத்தின் இந்த உச்ச தருணத்தை ஒத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் உண்மை . கள்ளமற்ற தூய்மையான விபச்சாரியின் பாதங்களை புத்திசாலித்தனம் நிறைந்த கொலைகாரன் முத்தமிடும் தருணம் அளிக்கும் மனவெழுச்சியே நவீன இலக்கியத்தின் தனிமனித கரிசனத்திற்கான சான்று.
வெல்லும் அறம்
ஒரு வகையில் ஆயிரம் பக்கங்கள் விரியும் இந்த மொத்த நாவலுமே குற்றத்தை ஒரு புத்திசாலி இளைஞனின் மனதின் வழியாக விசாரணை செய்வது நிறுவ நினைப்பது பழமையான ஒன்றைத்தான். செய்த குற்றத்திற்கான தண்டனையை தானாக உடன்பட்டு ஏற்றுக் கொண்டு வருந்துதல். ரஸ்கோல்னிகோவிற்கு இறுதிவரை தப்பிச் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. இருந்தும் அவன் சரணடைந்து தண்டனையை ஏற்கிறான். தண்டனையை ஏற்பதோடு நாவல் முடிந்தாலும் அவன் மனம் அக்குற்றத்தை ஒத்துக் கொள்ளும் கணம் சோனியாவின் கால்களில் மீண்டும் விழுகிறான். லாசரஸின் உயிர்த்தெழுதலை வாசிக்கத் தொடங்குகிறான்.
மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள்
ஒரு குற்றவாளி மனம் வருந்தி தன் குற்றத்தை ஒத்துக் கொள்வது இவ்வளவு நீளமாக சொல்லப்பட வேண்டுமா? என்றொரு கேள்வி எழலாம். ஆனால் நெருக்கடிகளில் மட்டுமே மனித மனம் தன்னுடைய பலத்தையோ எல்லையையோ கண்டு கொள்ள முடிகிறது. ரஸ்கோல்னிகோவ் சந்திப்பது அத்தகைய நெருக்கடியைத்தான். மனித மனம் எதிர்கொள்ளும் அத்தகைய நெருக்கடிகள் உலகப் பொதுவானவை. தஸ்தயெவ்ஸ்கியின் வர்ணணைகளில் கூட நாம் பீட்டர்ஸ்பர்கை காண்பதில்லை. இடுங்கலான இருட்டான பாதைகளை கட்டமைக்கிறார். அதிகமான "வட்டாரத்தன்மையை" ஊட்டாமல் பொதுவான சித்தரிப்புகள் வழியாகவே நம்மை உள்ளிழுத்து விடுகிறார். அதன்பின் அங்கு நடக்கும் மன விசாரணைகள் எக்காலத்துக்கும் எந்த நிலத்துக்கும் பொருந்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அதன் வழியாக ஒவ்வொரு வாசகனும் கண்டடைவது தன்னையே. நாவலின் இந்த தன்மைதான் நூற்றைம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் வாசிக்கத் தக்கதாக இப்படைப்பை வைத்திருப்பதோடு இதனையொரு செவ்விலக்கியமாகவும் நிறுத்துகிறது.
தனிப்பட்ட முறையில் என் எழுத்திலும் மனதை துருவிச் செல்லும் இக்கூறுகளை என்னால் அடையாளம் காண முடிகிறது. அது தனிப்பட்ட முறையில் ஒரு மூதாதையை கண்டு கொண்ட பரவசத்தை அளிக்கிறது.
செவ்விலக்கியத்தின் பண்புகளில் ஒன்றாக பின்னாட்களில் வரவிருக்கும் எழுத்து முறைக்கு முன்னொடியாக அமைவதைச் சொல்லலாம். அதனினும் முக்கியமாக அப்படி அமைந்து ஒரு எழுத்து முறை உருவாகி வந்த பின்னரும் கூட அதற்கு தொடர்பே இல்லாத வெவ்வேறு எழுத்து முறைகளை உருவாக்கும் தன்மை அப்படைப்பில் இருக்க வேண்டும்.
அவ்வகையில் நவீன உளவியல் ஆய்வுகள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட பேசப்பட்டுவிட்ட இன்றைய நிலையிலும் ஒரு இலக்கிய வாசகன் மட்டுமே கண்டடையக்கூடிய நுட்பங்கள் மண்டிக் கிடப்பதாக இப்படைப்பு இருப்பதே இன்றும் ஒரு முன்னோடிப் படைப்பாக இதனை நிறுத்துகிறது.
மனித மனம் எனும் இருட்சுரங்கத்தை கண்முன் நிறுத்தி ஆராயும் அதன் முடிவற்ற வண்ணங்களை வாசகனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அவனுடைய தர்க்கத்துடன் தொடர்ந்து மோதும் இவ்வகைப் படைப்புகளே சமூகத்தின் நியாய உணர்ச்சியை தர்க்கம் வென்று விடாமல் தடுக்கின்றன.


மூலத்தின் விரைவான ஓட்டம் குன்றாமல் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் எம்.ஏ.சுசீலா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.
வெளியீடு: நற்றிணை பதிப்பகம் விலை: ₹.990


Comments

  1. முதன்முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன் நண்பரே
    இனி தொடர்வேன்

    ReplyDelete
  2. நன்று சுரேஷ்! பரந்துபட்ட பார்வையும், எழுத்தின் நுண்மையான உயிரோட்டங்களையும்
    கண்டறிந்து பகிர்ந்திருப்பது நன்று!

    ReplyDelete
  3. மரபார்ந்த சமூகத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு இக்கொலையுணர்வு எழுந்திருக்குமா? அறவுணர்வு மிகுந்த அச்சமூகங்களில் அதற்கு வாய்ப்பில்லை என்று கருதும்போது நவீனத்தின் மேல் ஒரு வெறுப்பு அல்லது அயர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் அந்த நவீனம் தான் நவீன இலக்கியத்தின் தேவையை கோருகிறது, மரபார்ந்த அறத்தை புரிந்து கொள்வதற்கு எனும் போது சற்று ஆச்சரியமாகவும் உள்ளது. இவ்வகையான முரண்களே மனித வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

    உங்களுடைய அவதானிப்பை மிகச் செறிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    நன்றி
    முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024