பெருஞ்சுழி 40

சவில்யத்தில்  பெருங்கோட்டைகள் எழுப்பப்பட்டன. மூன்று தேசங்கள் வந்து  தொடும்  எல்லையிலும் படை நிரைகள் வலுப்படுத்தப்பட்டன. எந்நேரமும்  சவில்யத்தின்  படை எழலாம்  என அஞ்சிக் காத்திருந்தன திருமீடமும் ஆநிலவாயிலும். சவில்யத்தினும் பெரிய நாடு என்பதாலும்  வன்தோளனின் மீதான  பயத்தினாலும் திருமீடமும்  ஆநிலவாயிலும்  சுனதபாங்கத்திடம் நல்லுறவு கொண்டன. வன்தோளன்  விரும்பினால் சவில்யத்தின்  மீது படை கொண்டு  செல்லவும்  சித்தமாக  இருந்தன இரு தேசங்களும். ஆனால்  மக்களின் எண்ணம்  வேறாக  இருந்தது.  பெரு வணிகர்கள்  பலர்  கடலோர  தேசமான  சவில்யத்தை நோக்கி தினம் தினம்  வந்தனர். நில வழியாக சவில்யம்  நோக்கிச் செல்பவர்களும்  பெருகினர். ஆழிமாநாடு  முழுவதிலிருந்தும்  ஆழியில்  கலக்கும்  ஆறுகளென வணிகர்களும்  மக்களும்  சவில்யம்  நோக்கி வந்தவண்ணமிருந்தனர். ஆழி முகப்பென ஆயின சுனதபாங்கமும்  திருமீடமும்  ஆநிலவாயிலும்.
அத்தேசங்களிலும் வணிகம்  பெருகியது. வணிகம்  பெருகியதால் பூசல் குறைந்தது. சுனதபாங்கத்துடன் கூட்டுறவு கொண்டதால் மூன்று நாடுகளின்  எல்லைப் பூசல்களும்  முடிவுக்கு வந்தன. எதிர்பாராமல்  வந்துகுவியும் செல்வம்  மக்களை  களி வெறி கொள்ள வைத்தது. கண்ணீர்  மல்க  வைத்தது. வெறியின்  உச்சத்தை கருணையென ஏற்று நடிக்க  கடவுள் என ஒன்று வேண்டுமென  உணர்ந்தனர். மகிழ்ச்சியின்  ஊற்றுக் கண் தேடிய போது அவர்கள்  முன் நின்றிருந்தாள் ஆதிரை. அமைந்ததா அமைக்கப்பட்டதா எனத் தெரியாமல்  குழம்பினர் மூன்று  தேசங்களின் சூழ்மதியாளர்களும். சுனதனின்  கதைகளும் ஆதிரையின் கதைகளும் மன்றுகள் தோறும்  பாடப்பட்டன. பெருமையிழந்த துயரவர்கள்  தங்களை மீட்டு நிலைகொள்ளத் தொடங்கினர். சுனதபாங்கத்தின்  மையத்தில்  சுனதன்  எரியூட்டப்பட்ட குன்றில் கூட்டம் கூட்டமாய் குவிந்தனர் கண்ணீர் விட்டனர் கருநிலவு நாளில்  பாறைகளில்  தலை மோதி குருதிக் கொடை அளித்தனர். தோளில்  வில்லும்  வலக்கையில்  வேலும் இடக்கையில்  நூலும்  கொண்ட சுனதனின்  சிற்பங்கள்  வடிக்கப்பட்டன. அப்பெயர்  நோக்கிக் குவிந்தனர். வன்தோளன் தாய் அகல்யை  சுனதபாங்கத்தின்  பூர்வ  குடிகளில் ஒன்றில்  பிறந்தவள் என்பதால்  வன்தோளன்  சுனதனின்  மறுபிறப்பென பாடினர் சுனதபாங்கத்தின்  பாணர்கள். அவன் மாவலியனின்  மறு வடிவு என்றனர் மற்ற தேச பாணர்கள். பேரன்னை ஆதிரையின்  சுனத சாசனம்  அறிஞர்  மன்றுகளில் விவாதிக்கப்பட்டது.
சவில்யத்தின்  அரச சபையிலும் சுனத சாசனம்  குறித்து விவாதம் நடந்தது. அச்சமயம் ஆதிரையும்  கணபாரரும்  கடல் வழி தேசங்களில் பயணம்  மேற்கொண்டிருந்தனர்.
"சுனத சாசனம்  குறித்து விவாதித்து அதன் கூறுகளை  ஆய்ந்து பதியவே சவில்யம் இப்பேரவையை ஒருக்கியுள்ளது. சான்றோர் சொல் எழலாம்" என்றமர்ந்தான் அவை அறிவிப்போன்.
ஆழிமாநாட்டின்  தொல்நூல்கள் அனைத்தையும்  ஆய்ந்துணர்ந்து பரப்பும்  நிமங்க மரபின்  முதல்  மாணவர் சகந்தர்  அவை அமர்ந்திருந்தார். மாரதிரனின் முதலமைச்சர்  நிருவரனின்  தோழர் அவர். வானியல் ஆயும் தனித்ய மரபினரும் மருத்துவ நிபுணர்களும் போர் மரபினரும்  நுண்கலை மாந்தர்களும் அமர்ந்து நிறைந்தது சவில்யத்தின்  அவை. எட்டு மாதங்கள்  அந்த அவை அமைவதற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்தன. சவில்யத்தின்  தலைநக‌ர் புகிந்தம் எனும்  நகராயிருந்தது. ஆதிரை தலை நகரை கடலோர  பெரு நகரான கூர்மதத்திற்கு மாற்றினாள். புகிந்தத்தில் இருந்த அரண்மனை  சுனத  சாசனம் குறித்த விவாதத்திற்காக மாற்றியமைக்கப்பட்டது.
"அறிவிலும் வீரத்திலும் கலைகளிலும் சிறந்தவர்கள்  கூடிய  அவை என்பதாலேயே அவை நுழைபவர்கள் அத்தனை பேரும்  தருக்கியேபடியே எழுவார்கள். அவர்கள்  ஆணவம்  அடிபட்டு ஓடுடைத்த கருவென அறிவு மட்டுமே இங்கு வழிய வேண்டும்" என்பது கணபாரரின்  கட்டளையாய் இருந்தது. உறங்கிய அரக்கன்  நிமிர்ந்தெழுவது போல புகிந்தத்தின் அரண்மனை  விரிந்தது. வரையப்பட்ட ஓவியங்களின் கூர்மை காண்பவர்களை நடுக்குறச் செய்தது. முத்தமிடுகிறான் ஒருவன். வெட்கி முகம்  கவிழ்கிறாள் ஒருத்தி. அவனை நோக்கும்  போது  அவனாயினர்
அவளை நோக்கும்  போது  அவளாயினர். அவர்களை அமர்ந்த மரக்கிளை  நோக்கும்  போது அக்கிளையாயினர். அத்தனையும்  அமைந்தது ஒரு சிறு தூணின்  சிறு வளைவில்  என்றபோது சிறுத்துப் போயினர். சாதாரண  உரையாடல்களில் கூட பொருளற்ற வார்த்தை  எழுந்துவிடலாகாது என நுண்மை கொண்டனர். அவை தொடங்குவதற்கு சில நாழிகைக்கு முன் சகந்தரிடம் தனித்ய குலத்தின் ஆசிரியரென நிகம்பர் "இங்கு எழுந்து நிற்கும்  பிரம்மாண்டத்தின் முன் அத்தனை  பேரும்  தங்களை  சிறியவர்களாக உணர்கின்றனர். ஆனால்  உங்கள்  முகம்  மட்டும்  அச்சம் கொண்டதாய் இருப்பதேன் சகந்தரே" என்றார்.
சலிப்புடன்  புன்னகைத்த சகந்தர் "அறியேன். இதை அமைத்தவர்களின் நோக்கம் எதுவெனினும்  அறிவும்  ஆணவமும்  முற்றினால் முற்றழிவே நிகழு‌ம்  என எண்ணியிருக்கமாட்டார்கள். நான்  அதை மட்டுமே எண்ணுகிறேன்  நிகம்பரே. பேரழிவை மட்டுமே  என் மனம்  கற்பனிக்கிறது" என்றார்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024