தோரணை எனும் தோற்ற மயக்கம்
சிறு வயதில் ஆத்தா வீட்டிற்கோ ( திருவாரூர் உட்கிராமங்களில் பாட்டியை ஆத்தா என்று அழைப்பதே வழக்கம்) பெரியம்மா வீட்டிற்கோ செல்லும் போது ஒன்றை கவனித்திருக்கிறேன். வீட்டு வாசல் வரை மட்டுமே அம்மாவின் கை என்னைப் பற்றி இருக்கும். திண்ணையிலேயே மாமாவோ பெரியப்பாவோ என்னை இழுத்துக் கொள்வார்கள். அம்மா அவளுடைய உலகத்திற்குள் சென்று விடுவாள். உறவினர் வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. இருந்தும் அங்கு காணப்படும் பொதுவான ஒன்று வீட்டின் பின்புறம். ஆத்தாக்களும் பெரியம்மாள்களும் சின்னம்மாள்களும் கூடியிருக்கும் இடம் வீட்டின் பின்புறமே. நான்கைந்து வயதாகும் வரை ஆண் பிள்ளைகளுக்கு வீட்டின் குளிர்ந்த இருண்ட பின்புறம் என்பது இன்னொரு கருவறை. கூட்டுக் கருவறை. அதன்பின் அங்கு இடம் கிடையாது. பாட்டிகளின் அன்னைகளின் சிரிப்பொலிகள் மட்டும் இன்னும் செவிகளில் எஞ்சி நிற்கின்றன. சிறு வயதில் நண்பர்கள் பலரது இல்லங்களிலும் (பழமையானவை) இந்த “ இருண்ட பின்கட்டினை” காண முடிந்தது. தன் கணவனை அழைப்பதற்கு பின் கட்டிலிருந்து வரும் பிரத்யேக ஒலிகளைக் கேட்க முடியும். இது ஏன்? “தமிழ் பெண்ணின் இயல்பான நாணம்” என்பதெல்லாம் நம்பத் தலைப்படாத பதில். பழங்குடி சமூகங்களில் பலம் என்பது மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே. எண்ணிக்கையை பெருக்க அத்தியாவசியத் தேவை பெண். எனவே பெண் கவர்தல் அக்கால வலிமைப் பெருக்கத்தில் முக்கியமான செயல். பெண்ணைக் “காக்க” வேண்டிய அவசியம் அவ்வாறு ஏற்பட்டது. ஒரு வீட்டில் பெண் இருக்கிறாள் என்பதே தெரியாத அளவிற்கு “மூடி” மறைக்கப்பட்டது. அதற்கேற்றவாறே அந்த வீட்டின் அமைப்பும் இருக்கும். அந்த அவசியம் மெல்லத் தளர்ந்தாலும் பின் கட்டினை விட்டு வெளிவர சென்ற தலைமுறை வரை பெண்ணுக்கு ஒரு மனத்தடை இருந்தது. என் சகோதரிகளிடம் அது முழுமையாக நீங்கியது. இப்போது கட்டப்படும் வீடுகளிலும் அந்த “மறைவின்மை”யைக் காண முடியும். ஒரு பழக்கம் உக்கிரமாக பின்பற்றப்பட்டு அதற்கான தேவை குறையும் போது ஒரு குறியீடாக மாறும். இரு கரம் கூப்பி வணங்குவது பழங்காலத்தில் என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்பதை உணர்த்துவதற்கான ஒரு செயலாக இருந்திருக்கலாம்.
“அதிகாரமும் அழகுமுத்து சாரும்” கட்டுரையின் தொடர்ச்சியாக சிலவற்றை இங்கே குறிப்பிட வேண்டும் என்பதற்காக இந்த குறியீடு தொடர்புடைய உதாரணத்தைச் சொன்னேன். அதிகாரமும் அப்படிப்பட்ட குறியீடுகளால் நிலை நிறுத்தப்படுவதே. மன்னன் என்று சொன்னதும் அரியணையும் கிரீடமும் செங்கோலும் நினைவில் எழுகின்றன அல்லவா? அதே போன்று இன்றைய நவீன ஆட்சியதிகாரத்தில் சில குறியீடுகள் உள்ளன. கீழ்படிதல் , உடைகள், யார் முதலில் வணக்கம் சொல்வது, எந்த வார்த்தைகளைக் கொண்டு அழைப்பது ஆகியவற்றின் வழியாக அவை வெளிப்படச் செய்கின்றன. முந்தைய கட்டுரையில் நான் ஆட்சிப் பணி தேர்வுகளுக்கான முறையில் மாறுதல் கொண்டுவர வேண்டும் என்கிற ரீதியில் எழுதியிருப்பதாக நண்பன் நினைப்பதாகச் சொன்னான். ஆனால் அக்கட்டுரையின் நோக்கம் இளம் திறமையாளர்கள் “தோற்ற மயக்கங்களை” நோக்கித் தள்ளப்படுவதை எதிர்ப்பதே. இன்றைய உலகம் முதலாளித்துவ போக்குடையது. இதற்கென சில குறியீடுகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ள கால மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இருபது வருடங்களுக்கு முன் ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் கருணை மிக்கவராகவும் பெருந்தன்மை உடையவராகவும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் தாராளமயமாக்கல்(liberalisation) வருவதற்கு முந்தைய அக்காலகட்டத்தில் ஒரு ஆட்சியர் காணக்கூடிய “நாகரிகமான தன்னம்பிக்கை” மிகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று அவர்கள் சந்திக்கும் அத்தகைய “நாகரிகமான தன்னம்பிக்கை” மிகுந்தவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு குறைவாக இருந்திருக்கும். விரும்பியவற்றை பெறுவதற்கான வாய்ப்புகளும் வாங்கும் சக்தியும் மக்களிடம் பெருகியிருக்கும் இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆட்சியர் தன்னை விட உயர்ந்த நோக்கும் திறனும் உடையவரை தன் அதிகார எல்லைக்கு கீழாகவே பல சமயம் சந்திக்க நேரிடும். எப்போதும் உறபத்தி திறனுக்கும் கற்பனைக்கும் முன் முதலில் அடிபடுவது ஆணவமே. ஆட்சிப் பணிக்கான பயிற்சியில் மாற்றம் கொண்டு வரச் சொல்லுமளவுக்கு அப்பயிற்சி குறித்து என் எண்ணம் தெளிவாகவில்லை. ஒரு நுண்மையான வேறுபாட்டினை உணர்த்தவே விழைகிறேன். தோரணை. என் சகோதரிகளும் முந்தைய தலைமுறையைப் பின்பற்றி இருளுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் இன்றைய சமூகத்துக்கு பொருத்தமற்றவர்களாக போயிருப்பார்கள். அது போலவே நம்முடைய நிர்வாகத்தினரும் பழைய “குறியீடுகளை” நம்பும் படி செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். அவர்கள் சிக்கலான இந்திய சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளும் வாய்ப்பற்றவர்கள். இது வெற்று குற்றச்சாட்டல்ல.
ஓய்வு பெற்ற செயலர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் போன்றோரின் எழுத்துக்களை வாசிப்பவன் என்பதால் நிர்வாகத்தினரிடம் உருவாகி இருக்கும் மேட்டிமை மனநிலையை என்னால் உள்வாங்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நாம் பணியாற்றும் அல்லது ஆர்வம் கொண்டிருக்கும் துறையோடு ஒரு எந்திரத் தனமான இசைவு உருவாகிவிடும். உதாரணமாக பாரதி புதுமைப்பித்தன் அசோகமித்திரன் ஜெயமோகன் போன்ற பெயர்களை கேட்டால் என் தலை அப்பக்கம் திரும்பிவிடும். நிர்வாகத்தில் மேட்டிமை என்பது அப்படிப்பட்ட எந்திரத் தனமான இசைவு தான். ஏனெனில் பிரிட்டிஷார் இந்தியாவை விஞ்ஞானப்பூர்வமாக உறிஞ்சிய போது உருவாக்கப்பட்ட அமைப்பு நம் பொது பணியாளர் தேர்வாணையம். அதன் அன்றைய நோக்கம் அரசுக்கு வருமானம் வரும் வழிகளை மட்டும் கூர்ந்து கவனிப்பது. இடையூறுகள் ஏற்பட்டால் அடக்குவது. இந்த முறையிலிருந்து நாம் வெகு தூரம் முன்னேறி வந்து விட்டாலும் “வருமானம் வரும் வழிகளுக்கு” முக்கியத்துவம் அளிப்பது மட்டும் குறையவில்லை. ஏனெனில் நம் அதிகாரம் மேட்டிமை வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவது. எப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய மனநிலையே இல்லாத ஒரு ஆங்கிலேயர் எளிமையாக “கலெக்டர்” ஆகி விட முடியுமோ அதே போன்றே இந்திய மனநிலை இல்லாத ஒரு இந்தியர் இன்றும் ஆகி விட முடியும். அவரைப் “போன்ற” இந்தியரைத் தவிர அனைவரும் “திருத்தப்பட வேண்டியவர்கள்”என்ற எண்ணம் அமைந்து விடும். இதையே நான் மேட்டிமை என்கிறேன்.
மேட்டிமை வலிமையின்மையின் பழமையின் குறியீடு. அத்தோரணைகளை நீக்க வேண்டுவது நிர்வாக ரீதியில் எவ்வகையில் முக்கியம்? வெளித் தோற்றத்திற்கு நிர்வாகத்தால் மக்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தெரிந்தாலும் அரசியல் வாதிகளின் வழியாக மக்களும் நிர்வாகத்தை கட்டுப்படுத்துகின்றனர். ஆகவே மக்களின் உளநிலையை புரிந்து கொள்ள முயற்சிப்பது ஒற்றைப் படைத் தன்மை இல்லாத கூர்மையான தீர்வுகளுக்கு இட்டுச் செல்லும். குறியீட்டு மனநிலைகளை உதறுவது அதற்கான பயிற்சியின் வழியே சாத்தியம். ஒரு ஆட்சியாளன் கூரிய வாள் நுனியாக தன்னைத் தீட்டிக் கொள்ளலாம் ஆனால் அந்நுனி உடலின் புற்றுக் கட்டிகளை மட்டுமே இரக்கமில்லாமல் வெட்ட வேண்டும். நுண்மையின்மையால் உடல் முழுக்க வெட்டப்பட்டு குருதி வழிகிறது.
Comments
Post a Comment