நூல் பத்து - பன்னிரு படைக்களம்




துரியோதனன் இந்திரபிரஸ்த நீர்மாளிகையில் தடுக்கி விழுந்து சிறுமை செய்யப்பட்டதாக உணர்வதில் தொடங்கி திரௌபதி துகிலுரியப்படுவது வரை நீளும் நாவல் பன்னிரு படைக்களம்.

வெண்முரசின் ஆறாவது நாவலான வெண்முகில் நகரம் வரை அவை எழுதி முடிக்கப்பட்ட பின்னரே நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆகவே முதல் வாசிப்பின் போதே அவை முழு நாவலாகவே இருந்தன. மறுவாசிப்பில் நாவலின் வடிவம் மேலும் துலங்கி அவற்றை தொகுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்திரநீலம் தொடங்கி இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் குருதிச்சாரல் வரை முதலில் தொடராக வாசிப்பதால் மறுவாசிப்பின் போதே நாவலாக அவை துலக்கம் பெறுகின்றன. வெண்முரசை மறுவாசிப்பு செய்து விட வேண்டும் என்று வீராப்பாக தொடங்கிய என் முயற்சிகள் இந்திரநீலத்தில் தொய்வடைந்ததற்கு இந்த "வடிவச் சிக்கல்" ஒரு காரணம் என இப்போது உணர்கிறேன். ஆனால் வாசிப்பின் வழி வெண்முரசே அச்சிக்கலை கலைந்திருப்பதை பன்னிரு படைக்கள மறுவாசிப்பின் போது உணர்ந்தேன். 
முதல்முறை வாசித்த போது (தொடராக) சற்றும் கைகூடாத வாசிப்பனுபவமும் மறுமுறை வாசிக்கத்தான் வேண்டுமா என்ற தயக்கத்தை தந்த நாவலுமான பன்னிரு படைக்களம் விரைவான மறுவாசிப்பின் போது மிக அழகாக துலங்கி வந்தது. அவ்வனுபவத்தை பகிர முடியுமா எனப் பார்க்கிறேன்.

பன்னிரெண்டு தமிழ் மாதங்களையும் பகுதிகளாகக் கொண்ட நாவல் பன்னிரு படைக்களம். வெண்முரசில் முதல்முறையாக ஒவ்வொரு அத்தியாயங்களுக்குள்ளும் உள் அத்தியாயங்கள் இந்த நாவலில் பிரிக்கப்பட்டுள்ளன. அசுரர்களின் கதை வழியே தொடங்கி ஜராசந்தன் சிசுபாலனின் எழுச்சி வீழ்ச்சிகளின் வளர்ந்து பாண்டவ கௌரவர்கள் பகடைக்களத்தில் கோர்ப்பத்தில் உச்சம் பெற்று துகிலுரிதலில் முடிகிறது. இந்த நாவலின் "வெண்முரசுத் தொடுகை" என்பது ஆண்-பெண் எனும் முரணின் உச்சத்தை தொன்மங்களில் தொடங்கி நடைமுறை வரை நகர்த்திக் கொண்டு வந்து தரிசிக்கச் செய்வதும் வேதம் முழுத்து வேதாந்தம் எழுவதைச் சுட்டுவதும் அசுரம் என்பதை ஒரு குணநலனாக வரையறை செய்து அதனை எங்கும் தாழ்த்தாமல் விளங்கிக் கொள்ளச் செய்வதுமே எனலாம்.

முன்பே சொன்னது போல பன்னிரு படைக்களத்தின் பகுதிகள் மாதங்களாக பகுக்கப்பட்டுள்ளன அதேநேரம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியையும் கொண்டுள்ளன. அசுரர்களின் கதைகளுடன் தொடங்குகிறது முதல் மாதமான சித்திரை. முதலசுரன் தவமிருந்து தன்னுடைய தத்தளிப்பால் விழியற்ற வீரனான ரம்பனையும் கால்களற்ற அறிஞனான கரம்பனையும் பெறுகிறான். இணைந்தே வளரும் ரம்பனும் கரம்பனும் தங்களை ரம்பகரம்பன் எனும் ஒருவனாகவே உணர்கின்றனர் என முதல் இருமையே இந்த நாவலுக்குள் இழுத்துச் சென்று விடுகிறது. மகிஷனை கொல்லும் அன்னையின் கதை வெண்முரசில் முன்னரே சொல்லப்பட்டுவிட்டது. பன்னிரு படைக்களத்தில் ரம்பகரம்பனின் மற்றொரு மைந்தனான ரக்தபீஜனின் கதை சொல்லப்படுகிறது. அவனும் அன்னையால் தான் கொல்லப்படுகிறான். குருதியும் முலைப்பாலும் சண்டையிடும் உச்ச தருணத்தில் அன்னையின் குரோதம் சண்டிகையாக எழுந்த விழும் குருதியில் இருந்து மற்றொருவனாக எழும் ரக்தபீஜனின் குருதியைக் குடிக்க முலைப்பால் வெண்மையில் குருதியேயின்றி அன்னை மடியில் இறந்து அடங்குகிறான் ரக்தபீஜன். 

உண்மையில் கதைகள் நமக்குள் நிகழ்த்துவதென்ன என்ற பெருவினாவில் முட்ட வைக்கின்றன இத்தொன்மங்கள். காலத்தில் மெல்ல பின் சென்ற எண்ணங்கள் மனம் எனும் தொல்பொருளாக நம்முள் இருந்து கொண்டே இருக்கின்றன. படிமங்களான அவை தொன்மங்கள் வாயிலாகவே வெளிப்படுகின்றன. வெண்முரசின் எவ்வொரு தொன்மும் வலிந்து திணிக்கப்பட்டதாகவோ வெண்முரசுக்கே உரிய கோணம் வெளிப்படாததாகவோ இருப்பதில்லை.மூன்றில் ஒன்றென பன்னிரு படைக்களத்தின் அத்தியாயங்களை நிறைத்துள்ள அசுரர்கள் குறித்த தொன்மங்களும் அவ்வகையினதே. ரக்தபீஜனை அஞ்சி குழந்தையாய் மாறிவிட்ட இந்திரன் அன்னையிடம் அடைக்கலம் கோரி அழுகிறான். அது தாங்கமாட்டாமல் இந்திரனை சமாதானம் செய்ய படைக்களம் கொண்டு எழும் அன்னை ரக்தபீஜனிடமும் தன்னை அன்னையென்றே உணர்கிறாள். 

வெண்முரசின் மூன்றாவது நாவலான வண்ணக்கடலில் இருந்தே அசுரர்கள் குறித்த சித்திரமும் அவர்களின் பெருவிழைவும் பெருங்கருணையும் சினமும் ஆற்றலும் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. பன்னிரு படைக்களத்தில் அத்தனை அசுரர்களும் அன்னையின் கனிவின் முன் தருக்கி எழும் கூசி நிற்கும் சினந்து எரியும் தன்மையுடன் வருகின்றனர்.

சற்றே பின் சென்று தொடக்க நிலை சமூகங்களைப் பற்றி சிந்திக்கையில் அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாத குணமாக பெண்ணிடம் தாய்மை எஞ்சி நிற்கிறது. உண்மையில் ஒரு சமூக உருவாக்கம் என்பது உறவுகளை வரையறுப்பதே. உறவுகளை வரையறுப்பது என்பது உணர்வுகளை வரையறுப்பது தான். மனித சமூகத்தின் அத்தனை தொடக்க நிலை நியதிகளும் காடுகளின் நியதிகளில் இருந்து சற்றே மாறுபட்டதாக உள்ளன. அந்த நியதிகள் கூர்கொண்டு எழும் போதே மேலும் பெரிய சமூகங்களை கட்டுவதற்கானதாக மாறுகின்றன. அவை உணர்வுகளின் மீது மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அங்கு நாகரிகம் என்பது தனிமனித உரிமையை மேலும் பேணுவதாக மாறுகிறது. வலுத்த ஆண் மிருகத்தை தேர்ந்தெடுக்கும் பெண் மிருகம் என்ற நிலை மாறி நாகரிகம் என்ற புதிய அளவீடுகளால் மனித உறவுகள் கட்டப்படுகின்றன. ஆண்-பெண் உறவின் பரஸ்பர அன்பும் வெறுப்பும் இங்கு தொடங்கி விடுகிறது. தொடர்ந்து வெல்ல வெல்லப்பட இருவரும் முயன்றபடியே உள்ளனர். இங்கு பெண்ணுக்கு முதன்மையை அளிப்பது அவளது தாய்மை. உடல் என்ற தொல் அளவீட்டைத்தாண்டி தன் ஆணைத் தேர்ந்தெடுக்க பெண் தன் அகம் உணர்த்தும் அளவீடுகளை கைக்கொள்ளத் தொடங்குகிறாள். அங்கிருந்தே அவள் அகத்தை காத்துக் கொள்வதற்கான இடர்கள் ஆணிடமிருந்து தொடங்கி விடுகின்றன. தாய்மை என்ற அடையாளமும் ஆணைத் துன்புறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக கனிவும் காமமும் பிரிக்க முடியாத ஒன்றின் இரு முகங்களாகவே உள்ளன. இதுவும் என்றுமுள ஒரு சிக்கலே. இவ்வளவையும் இணைத்தே நான் பன்னிரு படைக்களத்தின் தொன்மங்களைப் புரிந்து கொள்கிறேன். இத்தொன்மங்கள் வலுவான அடித்தளத்தை அமைக்க அஸ்தினபுரிக்கு திரும்புகிறது நாவல். 

மழையற்று நோய் கொள்கிறது நகர். நகரம் நோய்மையுறும்தோரும் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த துரியோதனன் வஞ்சம் கொள்கிறான். நகரம் நோய்மை நீங்கும் போது அவன் நோயில் படுக்கிறான். நோய்மை என்பதே ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது. மழைப்பாடல் போலவே இந்த நாவலிலும் துல்லியமான பருவ விவரணைகள் நாவலின் உணர்வு நிலையுடன் இணைந்தே இயங்குகின்றன. 

கிருஷ்ணனின் வழிகாட்டுதலில் தருமன் ராஜசூய வேள்வி நிகழ்த்த முடிவெடுக்கிறார். ராஜசூயத்தின் வழியாக அன்றைய தொன்மையான ஷத்ரிய குலங்களின் முதன்மை அவற்றுக்கு இடையேயான அரசியல் ராஜசூயம் வேட்பதின் நோக்கம் விதிமுறை என அனைத்தையும் விளக்கியபடியே நகர்கிறது நாவல். தருமனின் இந்திரபிரஸ்தத்துக்கு வலுவான எதிரியாக இருப்பது அஸ்தினபுரியும் மகதமுமே. மகதத்தின் ஜராசந்தனின் பாத்திர உருவகம் வெண்முரசு மட்டுமே உருவாக்கி அளிக்கக்கூடிய தீர்மானம் உடையது. அறம் நீதி என எதையும் எளிய நிலையில் வைத்து விளங்கிக் கொள்ள மறுக்கிறான் ஜராசந்தன். இரு அன்னையரின் வயிற்றில் உதித்து ஜரையால் ஓருடலாக்கப்பட்டவன் என்பது மீண்டும் கடந்து வந்த தொன்ம வெளிக்குள் நம்மை கடத்துகிறது. மகதத்தை காட்டாளனாக வந்து உரிமைகோரி பிரஹத்ரதரின் பிற மைந்தரை மெல்ல வென்று கொல்வது அவனுக்கும் பிரஹத்ரதரின் அமைச்சர் பத்மருக்கும் இடையேயான இறுக்கமான அரசியலாடல்கள் தீங்கினை நடுக்கமின்றி இழைக்கக்கூடியவனை மக்கள் ஏற்பதற்கான நியாயங்கள் என நகர்கின்றன இவ்வத்தியாயங்கள்.

துரியோதனன் தருமன் ராஜசூயம் நிகழ்த்துவதை எதிர்க்க எண்ணுகிறான். கிருஷ்ணனின் காய் நகர்த்தல் வேறு வகையில் நகர்கிறது. குறுநில மன்னனான புண்டரீக வாசுதேவனை நோக்கி படையெடுப்பதன் வழியாக கௌரவர்களை குழப்புகிறான். சகுனியின் வஞ்சம் அஸ்தினபுரி மகதத்தை துணைக்காமல் செய்கிறது. உண்மையில் ஆழ்மனம் எடுத்துவிட்ட முடிவுகளுக்கு சரியான விளக்கங்களை உருவாக்கும் வேலையைத் தான் அறிவு செய்கிறதா என எண்ணச் செய்கின்றன  இந்த நாவலில் நடக்கும் அரசியலாடல்கள். பாரதவர்ஷத்தின் பேரரசனாக தருமன் முடிசூடுவதற்கென நிகழ்த்தப்படும் ராஜசூயத்திற்கு என பாரதவர்ஷம் முழுவதும் நயம்பட பேசி மிரட்டி உறவு சொல்லி சொல் பெறுகின்றனர் பாண்டவர்கள்.
மகதம் எந்நிலையிலும் அதற்கு ஒப்பப்போவதில்லை என்ற நிலையில் பீமனையும் அர்ஜுனனையும் அழைத்துக் கொண்டு மகதம் சென்று ஜராசந்தனை பீமனுடன் தனிப்போருக்கு அறைகூவுகிறான் கிருஷ்ணன். போருக்கு முதல்நால் நால் வேதத்தையும் நாக வேதத்தையும் வேதாந்தத்தையும் முதற்கொண்டு ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடைபெறும் உரையாடல் உணர்வெழுச்சி கொள்ளச் செய்வது. உண்மையில் வெண்முரசில் வேதத்திற்கும் வேதமுழுமைக்குமான சிக்கல் உச்சம் கொள்வது கருத்தியல் ரீதியாக குருஷேத்திர போர் நடைபெறக்காரணம் என்ற தொனி ஏற்படத் தொடங்குவது இந்த நாவலில் இருந்துதான். நாகவேதம் மாகேந்திரம் மகாநாராயணம் என ஒரு பரிணாம வளர்ச்சி வெண்முரசில் உண்டு. ஜராசந்தன் நாக வேதத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் மகாநாராயணத்துக்கு அருகிலும் நிற்கின்றனர். பீமன் ஜராசந்தனை கொல்லும் அத்தியாயம் உலகின் எந்த சோக காவிய நிகழ்வுக்கும் இணையான தருணம்.

இந்திரபிரஸ்தத்திற்கு எதிராக எழ நினைக்கும் சிந்துநாட்டின் ஜெயத்ரதன் விதர்ப்பத்தின் ருக்மி சேதிநாட்டின் சிசுபாலன் என அனைவரையும் மகதனின் இறப்பு நிலையழியச் செய்கிறது. சிசுபாலன் ஜராசந்தனுக்காக பழிவாங்க ஜெயத்ரதன் துரியோதனன் ருக்மி என ஒவ்வொருவராக உதவி கோருகிறான். ஒவ்வொருவரையும் ஒரு காரணம் தடுக்கிறது. கன்யாகுப்ஜத்தில் பீஷ்மரை சந்தித்து ராஜசூய வேள்விக்கென குந்தி ஒப்புதல் பெறுவதற்கு முன் கௌசிகனெனும் மன்னனாக வளரும் விஸ்வாமித்திரரின் கதை சொல்லப்படுகிறது. காம ஒருப்பு என்பது உண்மையில் அதன்முன் தோற்று விழுவதா என்ற கேள்வியுடன் இணைந்தே குந்தி பீஷ்மரை சந்திக்கிறாள். பீஷ்மர் தருமனின் ராஜசூயத்துக்கு ஒப்புதல் வழங்குகிறார். சிசுபாலன் மெல்ல மெல்ல நிலைமீறும் தருணங்களை அவன் மூத்த மனைவியான யாதவ அரசிக்கும் ஷத்ரிய இளைய அரசிக்குமான முரண் சிசுபாலனின் அவன் தாயின் வழியே துலங்கி வருகிறது. கனிவின்மையால் எங்கும் பொருந்த முடியாதவனாக தன்னுள் இழிவினை உணர்கிறவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான் சிசுபாலன். அவனது சொல்மீறலால் இந்திரபிரஸ்த்தின் அவையில் கிருஷ்ணனால் கொல்லப்படுகிறான். 

அவனது இறப்பு துரியோதனனை நிலையழியச் செய்கிறது. திரௌபதியால் ஏற்கனவே அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தவன்னமே இருக்கின்றனர் கர்ணனும் துரியோதனனும். அவர்கள் உருகி இணையும் தருணம் ஒன்று வருகிறது. போர் ஒன்றே ஒரே தீர்வென நிற்கும் நிலையில் வேறு வழியேயின்றி கணிகரின் வழிகாட்டுதலால் பன்னிரு படைக்களம் அமைக்கப்படுகிறது. தர்மன் தோற்று வீழ்ந்து திரௌபதி துகிலுரியப்பட சபைக்கு இழுத்து வரப்படும் உச்ச தருணத்துடன் பீமனின் அர்ஜுனனின் வஞ்சினங்களுடன் பன்னிரு படைக்களம் நிறைவுறுகிறது.

முழு நாவலும் எல்லா தருணங்களும் உணர்வுகள் கூர் கொண்டிருக்கும் உச்ச நிலையிலேயே பயணிக்கின்றன. எல்லா வாய்ப்புகளும் அலசப்பட்டு எதுவுமே எஞ்சாதபோது வேறு வாய்ப்பே இன்றியே இந்த நாவலின் ஒவ்வொரு தருணமும் அமைகிறது. உதாரணமாக துரியோதனன் படைப்புறப்பாட்டுக்கு ஆணையிடும் சமயம் விதுரரின் மனைவி சுருதை இறக்கிறார். ஒருவேளை அவர் இறக்கவில்லை எனில் விதுரர் அப்புறப்பாட்டை தடுத்திருக்க கூடுமோ எனும் வாய்ப்பு. விப்ரர் இறப்பு திருதராஷ்டிரரை சூதுக்கு ஒப்பச் செய்வது தம்பியருக்கு இணையான ஆற்றல் கொண்டவனாக தன்னை காண்பிக்க நினைத்து தருமன் சூதில் பணயங்களை வைப்பது திரௌபதியின் மீதான கர்ணனின் மாறாக்காதல் துரியோதனனின் நட்பால் அது இருவருள்ளும் வஞ்சமென இறங்குவது என எத்தருணமும் உச்சங்களின்றி வேறெதிலும் நிற்பதில்லை.

அரசியல் ரீதியாக துரியோதனனின் படைப்புறப்பாடு ஜராசந்தன் மற்றும் சிசுபாலனின் கொலைகளின் காரணமாகவே நிகழ்கிறது. அதற்கு மாற்றாகவே நிகரிப்போரான சூதுக்களம் அமைகிறது. உண்மையில் துகிலுரிதல் நிகழ்வு மகாபாரத மூலத்தில் கிடையாது. ஆனால் நம் மரபிலக்கியங்களில் உச்ச தருணங்களில் ஒன்று அது. சீதையின் எரிபுகுதலும் கண்ணகியின் நகர் எரிப்பும் பிற உச்சங்கள். பன்னிரு படைக்களம் இந்த அக இயக்கத்தையே கணக்கில் கொள்கிறது. வெல்ல முடியாத நிமிர்வு கொண்டவளாகவே திரௌபதி வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறாள். அவளை அச்சபைக்கு இழுக்கும் வரை துரியனின் கர்ணணின் ஆணவம் நேர்நிலையென்றே பொருள் கொள்கிறது. அவர்கள் எல்லை மீறுவது அச்சம்பவத்தில் தான். அதிலும் திரௌபதி இறுதிவரை அந்த நிமிர்வை விட்டுக் கொடுக்காத புள்ளியில் நாவலின் அத்தனை முரண்களும் உச்சம் கொள்கின்றன. துரியோதனன் அன்னையின் முன் தோற்பவனாகவே நாவல் முடிகிறது. மற்றொரு அசுரனின் இறப்பாகவே பன்னிரு படைக்களத்தை வாசிக்க முடிகிறது. அசுரம் என இந்த நாவல் சுட்டும் உளநிலை எங்கும் எழக்கூடியதே. அதை விலக்கி முன் செல்கிறவர்களால் மட்டுமே மானுடம் பயன்பெறுகிறது எனக் கொள்ளலாம்.


பீஷ்மரின் சொற்களில் எழும் குடி அறங்கள் பின்சென்று தனிமனிதனுக்கான அறம் முனை கொள்வதாக பன்னிரு படைக்களம் முடிகிறது. நாவல் முழுக்க எண்ணற்ற உச்ச உணர்வுத் தருணங்கள். சிறு சிறு பாத்திரங்கள் கூட கொள்ளும் நுட்பமான அக மாறுதல்கள் என கொந்தளிப்புடனே வாசிக்கச் செய்கிறது பன்னிரு படைக்களம். காமத்தையும் தாய்மையையும் ஆண்மனம் விளங்கிக் கொள்வதன் நுட்பமான ஊடுபாவுகளை ஒரு சரடாகவும் காட்டின் நியதிகள் மனித சமூகம் இன்னும் பெரிதாக திரளும் போது கொள்ளும் மாற்றங்களை மற்றொரு சரடாகவும் எடுத்துக் கொண்டு பன்னிரு படைக்களத்தை வாசிக்கலாம்.

ஓவியம்: ஷண்முகவேல்

Comments

  1. மற்றுமொரு அற்புதமான மதிப்புரை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024