பரிசுப்பொருள் - சிறுகதை
- Get link
- X
- Other Apps
பாண்டவையாற்றை குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது . மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கிய போது சாலையில் பரவலாக தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களை கூசச் செய்தது. புறங்கையை கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையை சரிபடுத்த முயன்றாள். கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக் கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட ஃபார்சூனர் காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையை பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முகம் திருப்தியைக்காட்ட அதற்கெனவே நின்றிருந்தது போல அந்த ஃபார்ச்சூனர் கடந்து சென்றது.
ஓரக்கண் சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளை காட்டியது. சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான். அவனும் அவளும் பிரபாகரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பிரபாகரன் சற்று மூத்தவன்.கனமான தன்னுடைய பயணப் பைகளை கைமாற்றி தோளுக்கு கொண்டு சென்று மீண்டும் கைக்கு மாற்றி சென்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து புன்னகைத்தபடி நெருங்கிக் சென்று "நா வேனா தூக்கிட்டு வரவா" என்றாள் மோனிகா . திடுக்கிட்டு திரும்பியவன் சில நொடிகள் அவள் யாரெனக் குழம்பி உறுதி செய்து கொண்டு புன்னகைத்தபடி வேண்டாம் என தலையசைத்தான்.சிவக்குமாரும் சென்னையில் தான் இருக்கிறான் என உறுதிபடுத்திக் கொண்டு"அப்போ பிரபாகரன உங்களுக்குத் தெரியும்ல?" என்றாள் சற்றே தயங்கியபடி.
கமலாபுரத்தில் இருந்து இறங்கும் சாலையோரம் உள்ள சிறிய மாதா வழிபாட்டிடத்திற்கு அவர்கள் வந்துவிட்டிருந்தனர்.
"ஸ்கூல்ல ஒன்னாதான படிச்சோம். அப்ப பாத்ததுதான். அதுக்கப்புறம் மீட் பண்ண சான்ஸ் கெடக்கல" என்றான்.
காலை வெயிலின் தன்மை மாறிக் கொண்டிருந்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட விரா மீன்களும் சாணிக் கெண்டைகளும் பக்கத்தில் இருந்த மீன் கடையில் குவிந்து கொண்டிருந்தன. சிவக்குமார் மெலிதாக மூக்கைச் சுளித்தான்.மோனிகா சங்கடத்துடன் சிரித்தாள். அவனுடன் தொடர்ந்து பேசுவது அநாவசியம் எனப்பட்டது. இருந்தும் பிரபாவைப் பற்றி வேறு யாரிடமும் கேட்க முடியாது.
"இல்ல...நீங்க வேளச்சேரில இருக்கீங்கன்னு சொன்னாங்க..." என இழுத்தவுடன் அதைச் சொன்னது யாரென கேட்டுவிடுவானோ என பயந்தாள். ஆனால் சிவக்குமார் அப்படி கேட்கக்கூடியவன் அல்ல என்பதும் அவளுக்குத் தெரியும். எவ்வளவு நெருங்கிச் சென்று எதைக் கேட்டாலும் அதை வேறொரு கோணத்தில் பார்க்கத் தெரியாதவன். பார்க்கத் தெரியாதவன் என்பது கூட சரி கிடையாது. அப்படி பார்ப்பதைத் தவிர்ப்பவன்.
"இல்ல ஒன் இயர் முன்னாடி அங்க இருந்தேன். இப்ப அடையார்ல" என்றான்.
எப்படி இவனால் தன்னை எப்படியும் அழைக்காமல் பேச முடிகிறது என அவளுக்கு வியப்பாக இருந்தது. இந்நேரம் கொஞ்சம் அறிமுகமான வேறொருவனெனில் இப்படி வழியக்க சென்று பேசுவதற்கு ஒரு "மா" அல்லது "மோனிகா" அல்லது "மோனி" என்று தான் அழைத்திருப்பான். அது கூசச் செய்யும் அனுபவம். பெயரை பெயராக மட்டும் சொல்லி அழைப்பதில் ஆண்களுக்கு என்னதான் சங்கடம் என பலமுறை யோசித்திருக்கிறாள். ஏன் ஒரு குழைவோ உரிமையோ பெயரைச் சொல்லும் போது வரவேண்டும்?
"எனக்கு செவன் தர்ட்டிக்கு பஸ்" என அவளை சொல்லத் தூண்டினான்.
"நானும் அதுலதான் போகணும்" என்று சொல்லிவிட்டு மோனிகா நாக்கை கடித்துக் கொண்டாள்.
"பஸ்ல பேச முடியாது இப்பவே சொல்லுங்க" என்றான்.
தயங்கியபடியே "பிரபாகரனப் பாத்தா இத கொடுக்கணும்" என கைப்பையில் இருந்து வெல்வெட் உறையால் மூடப்பட்ட சற்று கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தாள். கைக்கு சற்றே பெரிதாக இருந்தது அது. அது என்னவென்று கூட அவன் கேட்கவில்லை.
அதை வாங்கியபடியே "அட்ரெஸ் தெரியுமா" என்றான்.
அவள் உதட்டை பிதுக்கினாள். அப்படி செய்திருக்கத் தேவையில்லை என ஒரு எண்ணம் குறுக்கே ஓடியது.
"அவன் நம்பர் என்ட்ட இருக்கு. நான் பேசிக்கிறேன்"என்று அவன் விலகத் தொடங்கினான். அவளுக்கு வெறிச்சென இருந்தது. சிவக்குமார் மேல் கோபம் வந்து அது தன்னிரக்கமாக மாறியது.
"எங்கூடவெல்லாம் பேசினா யாரும் தப்பாவெல்லாம் நெனக்கமாட்டாங்க" என்று சொன்னபோது அவள் குரல் பரிதாபமாக ஒலித்தது. சிவக்குமார் அறை வாங்கியவன் போல அதிர்ந்து போய் நின்றான். அந்த முகத்தோடு அவன் சிரித்தது அழுகை போல இருந்தது.
"இல்லல்ல அப்படி ஒன்னும் இல்ல. உங்களுக்கும் வேலை இருக்குமேன்னுதான்..." என முதன்முறையாக குரலில் குழைவு தெரிய இழுத்துப் பேசினான்.
மோனிகா மலர்ந்தாள். அவனும் இலகுவானான்.
"ஒரே க்ளாஸ்ல தான படிச்சோம். பின்ன எதுக்கு வாங்க போங்க" என சிரித்தாள்.
அவன் தத்தளித்து "ஆமால்ல சரி நீங்க சிவான்னே கூப்பிடுங்க" என்றான்.
"நீயும் மோனிகான்னே கூப்பிடு" என்றாள். ஆனா சிவக்குமார் அவளை அப்படி அழைக்கவில்லை. மோனிகாவிற்கு அந்த காலை திடீரென ஏனோ மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கத் தொடங்கி இருந்தது.
"தீபாவளிக்கு கூட மொத நாள் தான் ஊருக்கு வரணுமா?" என்றாள். சுற்றி இருப்பவர்கள் குறித்து அவளது பிரக்ஞை மறையவில்லை எனினும் இலகுவானது. அவர்கள் தன்னையோ அவனையோ தவறாக எண்ணமாட்டார்கள் என எண்ணிக் கொண்டாள். தவறாக எண்ணுவது என்றாள் என்ன? இப்படி பேசிக் கொண்டிருந்தாள் நாங்கள் இன்றிரவு யாருக்கும் தெரியாமல் ஒன்றாக படுத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் தானே? அந்த எண்ணத்தால் ஏற்படப் போகும் பாதிப்பென்ன? நாளை மணப் பேச்சுகள் நடக்கும் போது யார் யாருடன் யார் யாரெல்லாம் படுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிகழ்தகவு அலசப்படும்.
"அந்தப் பொண்ணு அவ்வளவு சரியில்லீங்க" என்ற சங்கட இளிப்புகள்.
"அந்த வீட்டுப் பையனா?" என்பது போன்ற இழுப்புகள்.
"அந்த வீடு வேணாமே" என்ற அறிவுரைகள்.
அதைப்பற்றிய கவலைகள் தனக்கில்லை என எண்ணிக் கொண்டாள்.அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பக்கத்தில் மோனிகாவின் எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சிவக்குமாரின் முகம் மெல்லிய குழப்பத்தை அடைவது தெரிந்தது. தன் முகம் அச்சுறுத்தும் வகையில் சிவப்பதே அதற்கு காரணமென உணர்ந்தாள். இறுக்கமானவற்றை யோசிக்கும் போது தன் முகம் ஏன் இப்படி சிவக்கிறது என நினைத்தாள். ஆனால் அந்நேரம் தன் முகம் நிச்சயம் அழகாகவே இருக்கும் என மோனிகாவிற்கு ஒரு தீவிரமான நம்பிக்கை இருந்தது.
"ஹல்லோ" என அவள் முகத்துக்கு நேரே கையை அசைத்தான் சிவக்குமார். கடைத்தெரு திரளத் தொடங்கியிருந்தது. ஆண்கள் கூடுமிடத்தின் வழக்கமான கெட்டவார்த்தைகள் காதில் விழத் தொடங்கின. அவற்றை அவன் ரசிக்கிறானா என்று கவனித்து இல்லையென்றுணர்ந்து ஒரு திருப்தியை அடைந்தாள் மோனிகா.
என்ன உடை அணிந்திருக்கிறோம் என்ற தன்னுணர்வு வந்த கணமே ஒரு திடுக்கிடல் எழுந்தது அவளிடம். அவள் கருப்பு நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் இவனைப் பார்க்க நேர்ந்த போதும் இந்த உடையை அணிந்திருந்த எண்ணம்தான் அவளை திடுக்கிட வைத்தது. அதை அவன் நினைவில் வைத்திருக்க மாட்டான் என்ற ஆசுவாசமும் எப்படி நினைவில் நிறுத்தாமல் இருக்கலாம் என்ற கோபமும் ஒருங்கே எழுந்தன.
மோனிகா தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆரம்பநிலை செவிலி. பணிக்குச் செல்லும் போது பெரும்பாலும் இரண்டு மூன்று சுடிதார்களைத்தான் மாற்றி மாற்றி அணிந்து கொள்வாள். ஒரு நாளைக்கு நான்கிலிருந்து எட்டுவரை அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் அவள் பணிபுரியும் ஃப்ளோருக்கு கொண்டுவரப்படுவார்கள். அவர்களுடைய உடற்சமநிலையை இரவு முழுவதும் கவனிப்பது இவளது பணி. பெண்களெனில் பெரும்பாலும் சிக்கலில்லை. சில பணக்கார அக்காக்கள் மட்டும் குறை சொல்லித் திட்டும். காப்பீட்டுத் திட்டத்தில் உதவிபெற்று அறுவைசிகிச்சை செய்து கொள்கிறவர்கள் தெய்வத்தின் முன் என மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியர் முன்னும் அஞ்சி நிற்பார்கள்.
அவளது சிக்கல் நோயாளியின் உடன் வரும் ஆண்கள் தான். நோயாளியை தூக்கிப் படுக்க வைக்க எழுந்து நடக்க வைக்க என இணைந்து உதவும் போது பல முறை ஆண்களின் கை அவளைத் தடவியிருக்கிறது. அந்தத் தடவல் படுத்திருக்கும் நோயாளிக்கும் சூழ்ந்திருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட தெரியாத அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக செய்யப்படும். மருத்துவமனைக்கு அணிந்து செல்லும் உடைகளை தீட்டுத்துணி போல வீட்டுக்கு வெளியே துவைத்து காயப்போடுவாள்.
"அத உள்ளப் போட்டா என்னவாம்" என பலமுறை அம்மா கேட்டிருக்கிறாள்.
ஒருமுறை எரிச்சலுடன் "நீ செத்த பெறவு உம்முகூர்த்த பொடவைய உந்தங்கச்சிவோ சுத்திப்பாளுவளா? நெருப்புல தான போடுவீங்க" என ஆங்காரமாக கேட்டுவிட்டாள். சம்மந்தம் இல்லாதது போலத் தோன்றினாலும் மோனிகாவின் அப்பாவை அது எங்கோ தைத்தது. அன்று அவள் அப்பா அதிகமாக குடித்துவிட்டு வந்தார். கட்டிலில் படுத்திருந்த அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு மெல்ல விசும்பியபடியே இருந்தார். அவளுக்கு எரிச்சலும் அழுகையும் கலந்து வந்தன.
"பஸ் வந்துட்டு சிவா" என கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி பேசிக் கொண்டிருந்தவள் கண்களை மட்டும் மேற்காக காட்டினாள். வருகிறதா அசைகிறதா என்றறிய முடியாதபடி "ஆர்.எம்.எஸ் கிராமத்து ரதம்" வந்து கொண்டிருந்தது. அப்பேருந்தைப் பார்த்ததும் மோனிகா மீண்டும் குன்றிப் போனாள்.
கமலாபுரத்திலும் கொரடாச்சேரியிலும் டூவீலர் ஷோரூம்கள் நிறைய திறந்துவிட்ட பிறகு அந்த பேருந்தின் பயன் குறைந்துவிட்டது. டியூவில் வண்டி வாங்க முடியாதவர்களே அப்பேருந்தில் பயணித்தனர். அவளும் ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டுமென பணம் சேர்ப்பாள். வீட்டு செலவுகளில் எப்படியோ கரைந்துவிடும். இழுத்துப்பிடித்து பத்தாயிரம் சேர்ந்த போது பிரபாகரனின் தம்பி அவன் அம்மாவுக்கு ஒரு அறுவைசிகிச்சை என்று வந்து அழுதான். தலையில் அடித்துக் கொண்டு பணத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் பிரபாகரன் சொல்லித்தான் வந்திருப்பான் என அவளுக்குத் தெரியும். பிரபாகரனுக்கும் அவன் வீட்டுக்கும் தொடர்பு விட்டுப்போய் ஆறாண்டுகள் ஆகின்றன. அதற்கு நான்கு மாதங்கள் முன்பிருந்து தான் அவளை அவன் காதலிக்கத் தொடங்கியிருந்தான்.
ஒருவேளை காதல் அப்படித்தான் முகிழ்க்கும் போல. அவளது பள்ளிநாட்களில் ஒரு மழையிரவில் ஆட்டோவில் இருவரும் ஒன்றாக வர நேர்ந்தது. மழை பெய்ததால் ஷட்டர் இழுத்துவிடப்பட்டிருந்தது வசதியாக போயிருக்காவிடில் தன் உடல் மணம் பிரபாகரனை கிளர்த்தி இருக்காது என அவனை நினைக்கும் போதெல்லாம் எண்ணிக் கொள்வாள். அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டான். அம்முத்தம் அவளை தனக்குத்தானே முக்கியமானவளாக உணர்ந்து கொள்ளச் செய்தது. அதன் பிறகு பிற ஆண்களின் பார்வையில் இருக்கும் கள்ளத்தனத்தை அவளால் தெளிவாகவே உணர முடிந்தது. அந்த கள்ளத்தனம் மட்டுமே ஆணின் ஆளுமையில் சேர்க்கும் அழகினை மெல்ல ரசிக்கத் தொடங்கினாள். அதேநேரம் தான் ஒருவனை காதலிப்பதால் அப்படி ரசிப்பதை எண்ணி குற்றவுணர்வும் அடைந்தாள். பிரபாகரன் அவளைப் பார்ப்பதை தவிர்த்தே வந்தான். அம்மாவின் கனிவுடன் அவனை எப்போதும் நோக்கி நிற்பவளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோடு அவள் உடல் மணமும் இணைந்தே நினைவில் எழுந்தது. அந்த மணத்திற்கு தொடர்பே இல்லாதது போன்ற அவளது விழிகளும் இணைந்து நினைவில் எழுந்து அவனைத் துன்புறுத்தின.
இந்தக் குழப்பங்களுடன் ஒருமுறை அவளிடம் போய் அழுதபோது ஆதூரத்துடன் அவனை அணைத்துக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்து அவனைத் தேற்றினாள். அப்போது ஏனோ தன்னை விட இரண்டு வயது மூத்தவனான பிரபாகரன் குழந்தையாகத் தோன்றினான். மறுநாள் அவளிடம் சொல்லாமல் அவன் சென்னைக்கு புறப்பட்டிருந்தான்.
"ஆர்.எம்.எஸ் கிராமத்து ரதம்" சாத்தியமான அத்தனை குண்டு குழிகளிலும் இறங்கி ஆடி ஆடி மெதுவாகச் சென்ற போதும் எதிர்காற்று இரவெல்லாம் கண்விழித்து எண்ணெய் காய்ந்த மோனிகாவின் கேசத்தை பறக்கச் செய்து கொண்டிருந்தது. ஒரு செல்லச் சொல் போல விழிகளுக்கு கீழே ஒரு முடிக்கற்றை தொங்கிக் கிடந்தது. இடக்கையின் நடுவிரல் மற்றும் மோதிர விரலால் அச்சொல்லை கோதி தலைக்கேற்றி சட்டென சிவக்குமாரை நோக்கித் திரும்பினாள். கண்களில் அதிர்ச்சி மின்ன தொண்டைக்குழி ஏறியிறங்க அவன் தலை குனிந்து கொண்டான். மோனிகா ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு புன்னகைத்தாள். தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வது முதன்முறை என்ற எண்ணம் அவன் மீதான ஏளனத்தையும் தாண்டி மலர்வினை ஏற்படுத்தியது.
பிரபாகரன் சென்னை ஓடிப்போய் இரண்டாண்டுகள் கழித்து திரும்பி வந்தான். உடல் நன்றாக ஊறியிருந்தது. முகத்தில் எப்போதும் இருக்கும் பதற்றம் மறைந்து அலட்சியம் குடியேறியிருந்தது. மோனிகாவை நம்பிக்கையுடன் பார்க்க அவனால் முடிந்தது. அவளும் டி.எம்.எல்.டி படித்துவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தாள். முதலில் அவன் ஊருக்கு ஏன் வந்தான் என்று தான் அவளுக்குத் தோன்றியது. ஆனால் தன்னிடம் அழுதபடியே விடைபெற்று போனவனை நினைத்தபோது அவன் மீது அவளுக்கு கனிவு பிறந்தது. மோனிகாவை அப்போதும் நிமிர்ந்து பார்ப்பதை அவன் தவிர்த்தே வந்தான். ஊருக்கு வந்திருந்த போதும் தன் வீட்டில் அவன் தங்குவதில்லை. ஊர் எல்லையில் இருந்த சங்க கொட்டகையிலும் நண்பர்கள் வீட்டிலுமாக படுத்துக் கொள்வான். அவனைப் பார்க்க வேண்டும் என மன உந்த மோனிகா சங்க கொட்டகைக்குச் சென்றாள்.
அவளைப் பார்த்ததும் முதலில் அவன் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடியது. எப்படி நடந்தது என்று அறிய முடியாமல் கண்ணீர் அழுகை என்று சென்ற அச்சந்திப்பு புணர்வில் முடிந்தது. பிரபாகரன் தான் ரொம்பவும் அழுதான். அவனைத் தேற்றிவிட்டுத் திரும்புகையில் மோனிகா சங்க கொட்டகைக்கு செல்வதற்கான முந்தைய நிமிடங்களை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை திரும்பி நடந்தால் அங்கு நடந்து வந்து கொண்டிருக்கும் தன்னை கண்டுவிட முடியுமோ என்ற பிரம்மை தட்டியது. அவனைப் பார்க்கச் சென்றது முதல் அங்கிருந்து புறப்பட்டது வரையிலான நேரத்தை மட்டும் அவள் நினைவில் நிறுத்த விழையவில்லை. அச்செயல் அபத்தமாகத் தெரிந்தது. கற்பனை செய்தது போலவோ படங்களில் கண்டது போலவோ அது இருக்கவில்லை. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று கூட நம்பிவிட முடியும் என்று தோன்றிய போது அவள் சிரிக்கத் தொடங்கினாள். ஆனால் சட்டென பிரபாகரன் முகம் நினைவில் வந்து காலில் ஏதோ மிதிபட்டது போல அவள் முகம் மாறியது.
அடுத்த வருடம் இன்னும் மெருகேறியவனாக அவன் ஊருக்கு வந்தான். இம்முறை அவளுடன் இருப்பதற்கான சந்தர்ப்பங்களை மிகத் தெளிவாக அவனே உருவாக்கினான். அதை உறுக்கமாக உண்மையானதாக அவன் புனைவது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. தெரிந்தே அவனை ஏற்றுக் கொண்டாள். அதன்பிறகு பிரபாகரன் அடிக்கடி ஊருக்கு வரத் தொடங்கினான். இப்போது அவளை எடுத்து உடுத்திக் கொள்ளும் கழற்றி எறியும் உடைபோல பயன்படுத்தத் தொடங்கியிருந்தான். அவளும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள்.
அடிக்கடி உடற்சோர்வு ஏற்படத் தொடங்கியது. புணர்வின் போதும் சிறுநீர் கழிக்கும் போதும் வலி அதிகரிக்கத் தொடங்கியது. உதிரப் போக்கும் முன்னைவிட பெருகியது. ஆனால் அவள் வீடோ அவள் பணிபுரியும் மருத்துவமனையோ அதை ஒரு சந்தேகமாகக் கூட அறிந்திருக்கவில்லை. அது அவள் துயரை மேலும் பெருக்கியது. எல்லோர் மீதும் எரிச்சல் கொள்ளச் செய்தது. ஏன் யாரும் தன்னை பொருட்படுத்துவதேயில்லை என்று எண்ணி பிரபாகரனுடன் மேலும் ஆவேசமாக இணைந்து கொண்டாள். எப்படி தன்னைக் கையாண்டாலும் அவன் ஒருவனே தன்னை பொருட்படுத்துகிறவனாக இருக்கிறான் என எண்ணினாள். அவன் கற்பனைகளுக்கு தன் உடலில் இடமளிக்கத் தொடங்கினாள். உடற்சோர்வு எந்நேரமும் தசைகளை வலுவிழக்கச் செய்யும் அளவுக்கு பெருகியபோது தான் அவளுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. தலைமை மருத்துவரிடம் அவள் சென்ற போது அவர் அதை உறுதிபடுத்தினார்.
மோனிகாவிற்கு பி.ஐ டி பாதிப்பு இருந்தது. சற்று முற்றிய நிலை என அவளை பரிசோதித்த அவளது தலைமை மருத்துவர் கண்டறிந்தார்.
"பிட்சஸ்" என அந்த பெண் மருத்துவர் வாய்க்குள் முனகினார். மோனிகா அலறியழுதபடி அவரின் காலில் போய் விழுந்தாள்.
ஊர் நெருங்கியபோது பட்டாசு சத்தம் காதை துளைக்கத் தொடங்கியிருந்தது. சிவக்குமார் இப்போது நன்றாக ஊரை வேடிக்கை பார்த்தபடிவந்தான். அவனை திரும்பி பார்க்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தியபடியே மோனிகா ஜன்னல் பக்கம் திரும்பினாள்.
தனக்கு பி.ஐ.டி இருப்பதை மோனிகா சொன்னவன்று பிரபாகரன் எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் அவனே அழைத்தான்.
"நெட்ல பாத்தேன். அது பரவுமா?" என்றான். மோனிகா இணைப்பைத் துண்டித்தாள்.
முற்றிய நிலை என்பதால் கருப்பையை எடுக்க வேண்டியிருந்தது. காம்ப் எனச் சொல்லி அந்த பெண் மருத்துவர் மோனிகாவை திருச்சிக்கு கூட்டிச் சென்றிருந்தாள். சென்ற அன்றே அறுவைசிகிச்சை நடந்தது. கருப்பை பார்மலினில் போடப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாதம் கழித்து வேறு நோய்த் தொற்றுகள் ஏதுமில்லை என்ற தகவலுடன் உடலைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய பயணப் பையில் வெறுப்புடன் சிரித்தபடியே அந்த பெண் மருத்துவர் தன்னிடம் அளித்த தனது கருப்பையை ஒரு வெல்வெட் உரையை வாங்கி போட்டு மூடி கொண்டு வந்தாள்.
சிவக்குமார் எழப்போனான்.
அவன் அப்படி செய்யமாட்டான் எனத் தெரிந்தும் அழுகையை கட்டுப்படுத்திக் தயங்கியபடியே மோனிகா அவனிடம் சொன்னாள்.
"அந்த பார்சல தயவுசெஞ்சு திறந்துடாத சிவா."
பிப்ரவரி 2018
நன்றி: காலச்சுவடு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment