காந்தி - தன்முழுமையின் செயல் வடிவம்

2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்து ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும் மாணவர்களுக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் தேவைப்பட்டதாலும் இந்த தற்காலிக ஏற்பாடு.  பொறியியல் படித்தவன் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் எடுப்பது ஒரு மெல்லிய ஏளனப்பார்வையையும் என் மீது படரவிட்டிருந்தது அப்போது. அடுத்த ஆண்டு நடைபெற இருந்த கேட் (Graduate Aptitude Test for Engineering என்பதன் சுருக்கம்) தேர்வுக்கு படித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாரும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் எப்போதும் மனதில் இருந்தது. பாடமெடுத்தது போக மற்ற நேரங்களில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் யாருடனும் அதிகமாக பேச்சு கொடுக்காமல் ஏதேனும் புத்தகத்தை எடுத்து தலைகவிழ்ந்தபடிக்கு அமர்ந்து கொள்வேன்.

காந்தியின் சுயசரிதை நூலான The story of my experiments with truth அப்படி தலைகுனிந்து கொள்வதற்கான ஒரு சாக்காக எனக்குத் தென்பட்டது. அந்த ஆசிரியர் அறையின் ஒரு மூலையில் அந்த நூலைக் கண்டிருந்தேன். ஓஎம்டி பள்ளியின் முன்னாள் தாளாளர் நூல்கள் வாங்கிச் சேர்ப்பதிலும் பேராளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் ஆர்வமுடையவர் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.  காந்தி என்ற ஆளுமை மீது அதுவரை எனக்கிருந்த சித்திரம் பெரும்பான்மை தமிழர்களைப் போன்றே ஒரு விருப்ப விலக்க அல்லாட்டம் மட்டுமே. குடும்பத்தின் திராவிட பின்னணியின் காரணமான மனவிலக்கமும் அன்று தேசியத்தின் மீதிருந்த நம்பிக்கையின் காரணமான விருப்பமும் காந்தியின் மீதிருந்தன எனக்கு. ஆனால் இவ்விரு சித்திரமுமே காந்தியை ரொம்பவும் தள்ளிநின்று பார்த்து உருவாக்கிக் கொண்டவை. காந்தி "அணுகப்படமுடியாதவர்" என்ற மலைப்பு ஒருபுறமும் அந்த வயதுக்கே உரிய பேராளுமைகளாக சித்தரிக்கப்பட்டவர்களின் மீதான சந்தேகம் மறுபுறமுமான அலைகழிப்புகளுடனேயே அந்த நவஜீவன் மலிவுவிலை பதிப்பு நூலினை வாசிக்கத் தொடங்கினேன்.

காந்தி "தன் தாத்தாவின் கைகளில் ஒன்று போர்பந்தருக்காக எப்போதும் வணக்கம் செலுத்துவதாக இருந்தது" என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பார். அதை வாசித்தபோது சிரிப்புதான் முதலில் வந்தது. அதுபோல "என் நோக்கம் கடவுளை நேருக்கு நேர் காண்பதே" என்று அவர் அறுதியிட்டு சொன்ன வரிகள் அவர்மீது ஏளனத்தையே ஏற்படுத்தின. ஆனால் நூலின் பக்கங்கள் போகப்போக அதுவரை எனக்கு நன்கு பரிச்சயமான எந்தவொரு மனிதரும் நெருங்கித்தொட இயலாத அளவுக்கான அபாயகரமான அருகாமையில் காந்தி என்னருகே வந்து நிற்கத் தொடங்கினார். சொகுசின்பாற்பட்ட என் நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகிறவராக என் சுய பிசகிற்கும் திறனறியாமைக்கும் நான் எவ்வாறெல்லாம் சூழலையும் பிறரையும் அரசியலையும் வரலாற்றையும் காரணம்காட்டி மனச்சமநிலை பேணிக்கொண்டு இருக்கிறேன் என்பதையும் காந்தியின் அந்நூல் எனக்கு எடுத்துக் காட்டியது. அதற்கு முன்பு மனதுக்கு முழுமையாக அணுக்கமானதாக மாறிய எந்நேரமும் உள்ளுக்குள் உருப்போட்டபடியே இருந்த வேறொரு நூலினை நான் வாசித்திருக்கவில்லை. ஆனால் காந்தியின் மொழி(நான் வாசித்தது ஆங்கிலத்தில். மூலம் குஜராத்தி என்பதையும் சொல்லிவிட வேண்டும்) ஆழ்ந்த சமநிலை கொண்டது. வாசகனை கொந்தளிப்படையச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் துளியும் அற்றது. ஆனால் ஒவ்வொரு கணமும் உண்மையின் முன் நிற்கிறோம் என்ற உணர்வையும் உண்மையை அப்பட்டமாக எவ்வடிவில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் மனதில் ஏற்படும் துணுக்குறலையும் அளித்தபடியே இருப்பது அந்த உரைநடை. மூன்று மாதங்கள் அந்த நூலுடனேயே பயணித்தேன்.( பயணித்தேன் என்பதை உருவகமாகச் சொல்லவில்லை. எங்கு சென்றாலும் என் தோள்பையில் The story of my experiments with truth இருந்தது). உண்மையில் காந்தி அந்த நூல் வழியாக ஒளிக்கான எந்த நம்பிக்கையையும் எனக்குள் விதைக்கவில்லை. வாழ்வை இறுகப் பற்றுவதற்கான உயவெண்ணெய் என் கைகளில் தடவி விடவில்லை. மாறாக ஒவ்வொரு கணமும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும் விழிப்புணர்வுடன் கடக்க வேண்டியது என்பதை எடுத்துக் காட்டினார். அந்த விழிப்புணர்வுடன் எந்நேரமும் என்னால் இருக்க இயலவில்லை எனினும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபடுவதை ஒரு லட்சியமாக காந்தி என்னுள் நிறுத்தியிருக்கிறார் என்றே இன்று உணர்கிறேன்.

2013ல் நடந்த கேட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோற்றேன். இருபத்தோரு வயதுவரை எத்தேர்விலும் தோற்றதில்லை. சந்தித்த முதல் தோல்வி அந்த கேட் தேர்வுதான். ஒருவேளை காந்தியை வாசிக்காமல் விட்டிருந்தால் அங்கே நான் உடைந்து போயிருக்கவே வாய்ப்பதிகம். வேறுபல மனச்சள்ளைகளும் அந்நேரம் என்னை அலைகழித்துக் கொண்டிருந்தாலும் இத்தோல்வியை ஏற்றுக் கொள்ளும்படியானதாக அதற்கான காரணங்களை ஆராயச் செய்ததாக மாற்றியதில் காந்திக்கு பங்குண்டு. அதன்பிறகு பொறியியலில் மனம் செல்லவில்லை. விவேகானந்தரின் கீதை நூலை வாசிக்கத் தொடங்கினேன். காந்திக்கென்றே என் சுயபுராணத்தை சொல்ல வேண்டியதாயிற்று. இனி காந்திக்கே திரும்பி விடுகிறேன்...


நான் சொல்லியது போன்ற காந்தியால் "ஈர்க்கப்பட்ட" ஒரு அனுபவத்தை என் நண்பர்களில் சிலர் என்னிடமும் சொல்லி இருக்கின்றனர். காந்தியின் சுயசரிதை நூலை வாசித்தபின் கடந்த இந்த ஆறு வருடங்களில் காந்தி  காந்திய செயல்பாடுகள் காந்தியின் ஏற்பு மறுப்பு குறித்து அறிய நேர்ந்தவற்றின் அடிப்படையில் அவரை எனக்காக தொகுத்து புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே காந்தி குறித்த விவாதங்கள் வரலாற்று தரவுகள் அவரது செயல்களுக்கான நியாயப்படுத்தல்கள் எதையும் நான் செய்ய முயலவில்லை. தரிசன ரீதியாக காந்தி எனக்கு எப்படி பொருள்படுகிறார் என்று புரிந்து கொள்ளவே முயல்கிறேன். 

வரலாற்றின் தலைசிறந்த ஆளுமைகள் யாரும் தன்னுடைய செயற்களத்தில் இருந்து முற்றாக தன்னை துண்டித்துக் கொண்டு தான் எதை உண்மை என நம்புகிறோமோ அதை அப்படியே மக்கள் மத்தியில் செயல்படுத்த நினைத்தவர்களாக இருந்ததில்லை. தன்னுடைய சுய லட்சியங்களை மேன்மையான நம்பிக்கைகளை சமூகத்தின் செயல்திட்டமாக மாற்ற நினைக்கும் எந்தவொரு தலைவராலும் பேராளவிலான வன்முறையே நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கண்கூடாகவேத் தெரிகிறது. அதேநேரம் மக்களுடன் புழங்கி மக்களை புரிந்து கொண்டு அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மடிந்து விடுகிறவர்களால் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களின் செயற்களத்தில் இருந்த மக்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்குமானாலும் எவ்விதமான சமூக மாற்றங்களையும் அவர்களால் ஏற்படுத்தியிருக்க இயலாது. இவ்விரு சிக்கல்களுக்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அறிவுஜீவித்தன்மை. முன்னவர்கள் தங்கள் செயற்களத்தில் அல்லது சமூகத்தில் நிலவும் கீழ்மைகளுக்கு தீர்வுகளை "வெளியில்" இருந்து கொண்டு வருகிறவர்களாக இருப்பார்கள். தாங்கள் நம்பும் சூத்திரத்தை வெற்றிகரமாக சமூகத்துக்குள் செலுத்திவிட்டால் அமைப்பு ரீதியான மாற்றம் நடைபெற்று சமூகம் உய்வடைந்துவிடும் என்று நம்புகிறார்கள். இவர்களது சூத்திரத்தால் அச்சமூக மக்கள் கொள்ளும் ஒவ்வாமைகளையும் மக்களிடம் உருவாகும் எதிர்ப்புகளையும் இத்தகையவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. பின்னவர்கள் ஒவ்வொரு கணமும் அவர்களது செயற்களத்துக்கு வெளியே இருந்து அவர்கள் களத்தை வந்தறையும் விசைகள் குறித்த பிரக்ஞை அற்றவர்களாக இருப்பார்கள். முன்னவர்களிடம் தென்படும் அறிவுஜீவித்தன்மையும் பின்னவர்களிடம் தென்படாத அறிவுஜீவித்தன்மையும் இவ்விரு தரப்புகளாலும் உண்மையான மாற்றங்களை விளைவிக்க இயலாததற்கு காரணமாகிறது. இவ்விடத்தில்தான் காந்தி பொருள்படுகிறார் என்று நான் எண்ணுகிறேன். காந்தி மக்களை ஒரே சமயம் புரிந்து கொள்கிறவராகவும் கண்காணிக்கிறவராகவும் இருந்தார். இந்த தனித்துவமே காந்தியை அவர் வாழ்ந்த நூற்றாண்டை கடந்தும் அரசியல் ரீதியாகவும் தத்துவரீதியாகவும் பொருள்படுகிறவராக மாற்றியிருக்கிறது.

குஹா "இந்த நூற்றாண்டு அறிவுஜீவிகளை நம்பியிருக்கிறது" என தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். உண்மையில் அறிவுஜீவித்தன்மை எது என தீர்மானிப்பதில் காந்தியின் பங்கு இன்றியமையாதது. சமூகத்தின் மீது விலகலான பார்வை கொண்டு அதன் குறைகளின் மீது ஒவ்வாமை கொண்டு விலகி நின்று தீர்வு சொல்வது இந்த நூற்றாண்டின் அறிவுஜீவித்தன்மையாக இருக்காது. அதன் அசைவியக்கங்களை சமூக செயல்பாடுகள் வழியாக புரிந்து கொண்டு தன்னையும் சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்கிறவர்கள் அதேநேரம் அதன்மீது விமர்சனமும் கொண்டவர்களாலேயே தீர்க்கமான வன்முறையற்ற மாற்ற முன்வைக்க முடியும் என்ற கூற்றுக்கான விளக்கமாக காந்தி வாழ்ந்து சென்றிருக்கிறார். காந்தியின் ஆச்சரியம் ஏற்படுத்தும் வெற்றிகள், சஞ்சலங்கள் ,தோல்விகள் என அனைத்தையும் அவருக்கும் இந்தியாவுக்கும் கடவுளை நேருக்கு நேர் காணவிழைந்த அவரது லட்சியத்துக்குமான தொடர்பிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இன்று நாம் அனைத்தையும் பகுத்துச் சிந்திக்கிறோம் (compartmentalised thinking). உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் மனிதர்களின் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு நிறுவனம் ஒரு தொழிற்சாலையின் ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் ஒரு முகவர் என பல்வேறு பகுப்புகளின் தொகுப்பாகவே செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  எந்தவொரு பிரச்சினையையும் நுட்பத்துடன் பகுத்துப் பகுத்து கையாள நம்மால் இயல்கிறது. இந்த பகுப்புகள் முழுமையானவையாகவே இருக்கின்றன. ஆகவே முழுமை என்ற ஒன்றில்லை வாழ்வின் வெவ்வேறு பகுப்புகளை தொகுப்பு பார்க்க நினைப்பது ஒரு விழைவு மட்டுமே. அப்படியொரு "தொகுப்பு" செவ்விலக்கிய படைப்புகளில் பழங்கோவில்களில் மட்டுமே சாத்தியமானது. அன்றாட வாழ்வில் நாம் கற்பனை செய்யும் "முழுமை" என்றொரு நிலை என்று நம்மால் எளிதாக வாதிட முடிகிறது. ஆனால் வரலாற்றில் எக்காலகட்டத்திலும் முழுமை கற்பனை செய்யப்படாமல் இருந்ததில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. ஒரு வரலாற்றுகாலம் கடந்த பிறகு அதன் சாதக பாதகங்களை ஆய்ந்து அந்த முழுமை வரலாற்றை எழுதுகிறவர்களால் பின்னர் கற்பனை செய்யப்படுகிறதே அன்றி எந்தவொரு வரலாறும் "நிகழும்" காலத்தில் முழுமைக்கான ஏக்கத்தை தன்னுள் கொண்டிருப்பதில்லை என்று எதிர்வாதம் வைப்பவர்கள் சொல்வார்கள். இந்த எதிர்வாதத்துக்கு முழுமையாக எதிரானவராக காந்தி நின்றிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அதாவது இந்திய சுதந்திர வரலாற்றின் உருவாக்க காலகட்டத்திலேயே மக்களிடம் முழுமையுணர்வை ஊட்ட முடியும் என்ற நம்பிக்கையை காந்தி விதைத்து அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்.  முன்பு சொன்னதுபோல தன்னையும் தன் வழியாக தன் செயற்களமான சமூகத்தையும் "முழுமை" செய்வதன் வழியாகவே காந்தியின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.



காந்தி இயல்பிலேயே முழுமையை நோக்கிச் செல்கிறவராக இருந்தார். "அவருடைய வாழ்வே ஒரு பரிசோதனைக்களம்" என்று பிறர் சொல்வதும் "என் வாழ்க்கையே நான் முன்வைக்கும் செய்தி" என்று அவரே சொல்வதும் முழுமைக்கான இந்த பயணத்தையே என்று நான் எண்ணுகிறேன். உண்மையில் இச்சிந்தனை காந்திக்கு "வெளியில்" இருந்து கிடைக்கவில்லை. முழுமைக்கான கற்பனை என்பது நம்முடைய தத்துவங்களின் வழியாக ஒரு இந்தியத்தன்மை என்றும் நாம் அறிவோம். வேதாந்தம் தம்மம் என இந்தியாவின் உச்ச தரிசனங்கள் எதுவுமே வாழ்க்கையை நன்மைக்கும் தீமைக்குமான போராக சித்தரிக்கவில்லை. முழுமையின்மையின் தவிப்பும் முழுமை நோக்கிய பயணமும் முழுமையை உணர்வதால் தோன்றும் விடுதலையுமே நம் மரபில் மீட்சிக்கான வழியாக சொல்லப்படுகிறது. சாத்தானுடனான போரில் கடவுளுக்கு துணையாக நிற்க வேண்டிய கட்டாயத்தை இந்திய மரபு இந்தியர்களுக்கு வழங்கவில்லை.

இந்தியா காந்திக்கு முன்னும் முழுமையை கற்பனை செய்திருக்கிறது. மேற்கு மரபின் மீது ஒவ்வாமை கொண்ட ஆரம்பகால காந்தியும் அத்தகைய பழமையான இந்திய முழுமையையே உன்னதம் என எண்ணுகிறார். சாதி குறித்த காந்தியின் ஆரம்பகால பார்வைகூட பெரும்பாலும் பழமையுடன் ஒத்துப் போவதாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவை சுற்றி அவர் மேற்கொண்ட பயணங்கள் அவர் எண்ணங்களை மாற்றத் தொடங்குகின்றன. புரட்சிகர சிந்தனையாளர்கள் போல உடனடியாக எதிர்நிலை எடுத்து "ஜாதியை அழிக்க வேண்டும்" என்று நடைமுறைக்கு ஒவ்வாத அபத்தங்களை பேசாமல் அதேநேரம் இந்திய ஜாதி முறையை அப்படியே ஏற்றும் கொள்ளாமல் ஜாதிகளுக்கு இடையேயான மணம் சிறிய ஜாதிகள் ஒன்றிணைவது போன்ற நடைமுறை செயல்பாடுகளையே தீர்வுகளாக முன்வைக்கிறார். அதாவது காந்தியால் எந்தவொரு சமூக சிக்கலுக்கும் சார்பெடுக்காத மத்திய தன்மை ஒரு நடைமுறை தீர்வினை முன் வைக்க முடிகிறது. முன்பு சொன்னதுபோல சமூக இயக்கத்தை கணக்கிலெடுக்காத புரட்சிகர சிந்தனையாளனுக்கும் கண்மூடித்தனமான செயல்பாட்டாளனுக்கும் இடையே காந்தி வந்து நிற்கும் புள்ளி இதுதான். மிகச்சிக்கலான புள்ளி இது. காந்தி ஒரேநேரம் சமூகத்தின் அங்கமாகவும் அதில் மாற்றங்கள் விளைவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராகவும் தோன்றுகிறார். இதற்கான தீர்வாக காந்தி காண்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான இடைவெளியை குறைப்பது. "தனிமனிதன்" என்ற கருத்துருவத்தின் உருவாக்கமே நவீனமயமானது மனிதன் தன்னை சமூகத்தில் ஒருவனாக உணர்வது பழமையானது என நவீனத்துவர்கள் வாதிடலாம். ஆனால் காந்திய வழியிலான "உணர்தல்" என்பது சார்ந்திருக்கும் சமூகத்தை விமர்சனங்களற்று ஏற்றுக்கொண்டு அது கொடுக்கும் சாதக பாதகங்களை அனுபவித்து கடந்து போவதல்ல. சமூகத்தின் மீதான விமர்சனப்பார்வையுடன் அதில் தன்னை ஒருவனாக உணர்ந்து சமூகம் தன்னை பாதிக்க அனுமதிப்பதன் வழியாக தன் ஆளுமை சமூகத்தை பாதிக்க வைப்பது. காந்தியின் நடைமுறையாகவும் தரிசனமாகவும் நான் காண்பது இதையே. அவர் தன்னுடைய செயல்வெளியை ஒரு "உயிர்" போலவே கருதிக் கொள்கிறார். காந்தியின் பார்வை விரியும்போது அவரது செயல்வெளி இந்திய மக்களின் சுதந்திரம் என்பதில் இருந்து மானுட மீட்பு என்ற எல்லைக்கு நகர்கிறது. காந்தியின் நடைமுறை தரிசனமாவதும் இதுவரையிலான இந்திய மரபில் அவர் தன்னை இணைத்துக் கொள்வதும் அவர் உலகிற்கு அளித்த கொடையாக நான் எண்ணுவதும் விழிப்புற்ற சுயத்தின் வழியே மீட்பினை முழுமையை நோக்கிச் செல்வதற்கான இந்த எத்தனத்தையே. அதில் காந்தி வெற்றி பெற்றாரா இல்லையா என்பது விவாதத்துக்கு உரியதே. காந்தியின் இறுதிநாட்களில் பிரிவினையின் போது நிகழ்ந்த படுகொலைகளோ ஏன் பிரிவினையோ கூட அவருக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அத்தகைய ஒவ்வாத செயல்களுக்கும் காந்தி தன்னையே காரணமாக எண்ணுகிறார். தன்னுடைய வலிமை போதுமானதாக இல்லாததும் மக்கள் தன்மீது நம்பிக்கை இழந்ததுமே தேசப்பிரிவினைக்கும் வன்முறைக்கும் காரணம் என எண்ணுகிறார். காந்தியத்தின் மிக முக்கிய பண்பாக நான் கருதுவது பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் இந்த தன்மையையே. தன் எதிர் தரப்பின் பிசகினை பலகீனத்தை கூட தன்னுடையதாக எண்ணிக்கொள்ளும் மனப்பாங்கு. அப்படியெனில் காந்தியத்தை பின்பற்றினால் மீட்பு சாத்தியமா? அதற்கு எவ்வுறுதியையும் காந்தி அளிக்கவில்லை என்பதே அவரே இந்த நூற்றாண்டுக்கான மனிதராக்குகிறது. பொதுவாக ஒரு கொள்கையின்படி நடக்க எத்தனிப்போர் பயனை எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் தவறானது கிடையாது. ஆனால் அப்பயனுக்கான உத்திரவாதத்தை காந்தி அளிக்கவில்லை. தன்முழுமைக்கான பயணமாக மட்டுமே காந்தியை பின்பற்றுவதை பரிந்துரைக்க முடியும். அங்கும் காந்தி மத்தியிலேயே நிற்பார். கொள்கையுறுதி கொண்டவர்களுக்கு மீட்பு சாத்தியமென்றோ சாத்தியமில்லை என்றோ காந்தியத்தால் சொல்ல இயலாது. கொள்கையுறுதி கொண்ட ஒரு மனிதனின் அதிகபட்ச சாத்தியத்தை காந்தி தன் வாழ்வை களமாக்கி நமக்கு காண்பித்திருக்கிறார்.

ஐம்பதாயிரம் பக்கங்கள் நீளும் எழுத்து. ஐம்பது வருடங்களுக்கு மேலான தன்னலம் கருதாத பொதுவாழ்க்கை, உலகின் மிகப்பெரிய மக்கள் குழுவை நம்பிக்கை வாய்ந்ததாக மாற்றிக்காட்டிய அருஞ்செயல் என அத்தனைக்கு பின்னும் இருந்தது காந்தியின் தன்முழுமைக்கான தேடல் மட்டுமே. காந்தி கடவுளை தரிசித்தாரா இல்லையா என நம்மால் சொல்ல இயலாது. ஆனால் அதற்கான பயணத்தை மிக வெற்றிகரமாக காந்தி மேற்கொண்டிருக்கிறார். யூதர்களுக்கானவராக இருந்த இறைவனை உலக மக்கள் யாவருக்குமானவராக கிறிஸ்து மாற்றினார் என என் நண்பனொருவன் அடிக்கடி சொல்வான். நான் காந்தி குறித்து இப்படிச் சொல்வேன். ஞானிகளுக்கும் யோகிகளுக்குமான தன்முழுமைக்கான தேடல் சமூகத்துடன் ஒத்திசைந்து அதன் மகிழ்வுகளையும் துயர்களையும் ஏற்று வாழ்வதன் வழியாக ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமே என காந்தி சொல்கிறார். காந்தி தன்முழுமையின் செயல் வடிவம்.

Comments

  1. அருமையான கட்டுரை.ஒருவர் தனது முழுமையை நேக்கிய பயணத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்து அகவயமாக மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்வது என்பது எளிது.ஆனால் ஒருவர் தனி மனித, சமூக, அரசியல், ஆன்மீகம் என அனைத்து தளங்களிலும் தனது செயல்பபாடுகள் அல்லது மவுனம் மூலமாக தனது வாழ்கை பயணம் 'தன் முழுமையை' அடைவதற்கான வழிமுறையாக அமைத்து கொள்வதென்பது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அவரது வாழ்கையே அவரது செய்தி எனக்கூறுவதை விட அதனை மானுடத்திற்கான அறைகூவல் எனக் கொள்ளலாம்- சம்பத், பட்டுக்கோட்டை.

    ReplyDelete
  2. டூப்ளிகேட் காந்திகள் அலப்பறைகளையே கேட்டுக் கேட்டுப் புளித்திருந்த நேரம், இங்கே ஒரிஜினல் காந்தியைப் பற்றி விரிவாகப் படிக்க முடிந்தது மிகவம் ஆறுதலாகவும் அவசியமாகவும் இருந்தது!

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை.The story of my experiments with truth இதுவரை வாசிக்க நேரம் அமையவில்லை.இந்த கட்டுரை அந்த நேரத்தை அமைத்துக்கொள்ள தூண்டுகிறது.சில வருடங்களுக்கு முன்னால் வாசித்த எஸ்ராவின் ஒரு சிறுகதை தான் எனக்குள் இருந்த காந்தியின் பிம்பத்தை நொறுக்கி வேறொறு கோனத்தில் அனுக வைத்தது.அதற்கு பிறகான ஜெயமோகனஜெயமோகன்களின் அறிமுகம் மேலும் காந்தியை நெருங்கித்தள்ளியது.காந்தியை பற்றி படித்து தீரவேண்டும் என்று உள்ளே தீராது எரிந்துகொண்டிருக்கிறது.இந்த கட்டுரைக்காக நன்றி ப்ரதீப்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024