பெருஞ்சுழி 10
மாவலியன் அரியணை அமரவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நிலம் அவன் வெல்வதற்காக காத்து நின்றது. தன் நிலம் நோக்கி மாவலியன் வருகிறான் என்று அறிந்ததுமே மன்னர் பலர் மணிமுடியை அரியணையில் வைத்து நகரொழிந்தனர்.
முமனகம் என்ற சிற்றரசின் தவைவன் “மாவலியனை மண்ணில் சாய்ப்பேன். என் உயிர் இவ்வுடல் நீங்காமல் அவன் என் நிலம் நுழைய அனுமதியேன்” என வஞ்சினம் உரைத்தான். முமனகத்தின் மன்னன் அனங்கன் பேரழகன்.
மாவலியன் அவனினும் இளையவன். அனங்கனின் வஞ்சினம் மாவலியனை எட்டியது. முமனகம் வீழ்ந்தது. மாவலியன் அனங்கனைக் கொல்லவில்லை. அவன் கண் முன்னே அவன் ஆறு புதல்வர்களின் தலையும் வெட்டப்பட்டு அவை வளையீட்டியில் கோர்க்கப்பட்டு அனங்கனுக்கு மாலையெனப் போடப்பட்டது. வெறித்த விழிகளோடு பித்தேறி நிற்கும் அனங்கனை புழுக்கள் மண்டிய அவன் புதல்வரின் சிரங்களுடன் நகர்வலம் அனுப்பினான் மாவலியன். அக்காட்சி கொடுத்த அதிர்ச்சி எதிர்க்க முடியாதவனாய் அவனை உருப்பெறச் செய்தது. அவன் விவாதிப்பதில்லை. ஆணைகள் மட்டுமே அவன் வாயுதிறும்.
சகேரீதம் முமனகத்தினும் படை வல்லமை மிகுந்த அரசு. திவலகன் என்றவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அந்நாடு மாவலியனின் கனவுகளுக்கு எல்லையென குறுக்கே நின்றது. எழுந்த சிம்மத்தின் ஆற்றல் அறிந்த ஆடுகள் என திவலகனனை நோக்கி பல சிறு குடிகள் தங்களை ஒப்புக் கொடுத்து ஒன்றிணைந்தன. இறந்த புழுவினை இழுக்கும் எறும்புகள் என நாளும் சகேரீதத்தை நோக்கி அரசர்களும் சிறுகுடித் தலைவர்களும் ஊர்ந்து நெருங்கினர். வல்லமை பெருகப் பெருக திவலகன் முறுக்கேறினான். கூட்டரசுகளின் செல்வமும் படையும் கொடுத்த ஊக்கத்தில் கைப்பற்றப்பட்டிருந்த முமனகத்தின் வடக்குப் பகுதியை போரிட்டு வென்றான் திவலகன். மாவலியன் எவ்வெதிர்ப்பும் காண்பிக்கவில்லை.
சகேரீதம் முமனகத்தினும் படை வல்லமை மிகுந்த அரசு. திவலகன் என்றவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அந்நாடு மாவலியனின் கனவுகளுக்கு எல்லையென குறுக்கே நின்றது. எழுந்த சிம்மத்தின் ஆற்றல் அறிந்த ஆடுகள் என திவலகனனை நோக்கி பல சிறு குடிகள் தங்களை ஒப்புக் கொடுத்து ஒன்றிணைந்தன. இறந்த புழுவினை இழுக்கும் எறும்புகள் என நாளும் சகேரீதத்தை நோக்கி அரசர்களும் சிறுகுடித் தலைவர்களும் ஊர்ந்து நெருங்கினர். வல்லமை பெருகப் பெருக திவலகன் முறுக்கேறினான். கூட்டரசுகளின் செல்வமும் படையும் கொடுத்த ஊக்கத்தில் கைப்பற்றப்பட்டிருந்த முமனகத்தின் வடக்குப் பகுதியை போரிட்டு வென்றான் திவலகன். மாவலியன் எவ்வெதிர்ப்பும் காண்பிக்கவில்லை.
அவன் நிலையழிந்திருப்பதை உணர்ந்த மாவலியத்தின் தளபதி அனிந்தர் "முமனகத்தை சில நாட்களில் கைப்பற்றி விடலாம். உங்கள் அனுமதி மட்டுமே வேண்டும்" என்றார். கைகளை பிசைந்து கொண்டே பீடத்தில் அமர்ந்திருந்த மாவலியன் "இல்லை அனிந்தா! இந்நேரத்தில் போரிட்டால் நாம் அழிவோம். திவலகருடன் நான் சமாதானம் கொள்ள விழைகிறேன். அவரின் கோரிக்கைகள் என்னவென்று கேள்" என்றான். அனிந்தருக்கு திவலகனின் கோரிக்கைகள் தெரியும். மாவலியம் என்றான வெண்குடி நாட்டின் பசுக்களும் பெண்களும். யாரும் எதிர்பார்த்திராத இன்னொரு கோரிக்கையும் வைத்தான் திவலகன். நட்பரசுகளுக்கே அது அதிகம் எனப்பட்டது "மாவலியன் என் தாள் பணிந்து மன்னிப்பு கோரிச் செல்ல வேண்டும்" என்றான். மாவலியனும் அவ்வாறு செய்து மாவலியம் மீண்டான். நாட்கள் செல்லச் செல்ல மாவலியன் மீதிருந்த மக்களின் மதிப்பும் பயமும் நீங்கியது. மாவலியன் குறித்து இளிவரல் பேச்சுகள் பெருகின. அனிந்தருக்கு மட்டுமே மாவலியனின் நிலைப்பாடு புரிந்தது.
சில மாதங்கள் கடந்தன. தன்னை சந்திக்க வருமாறு மாவலியன் அனிந்தரை அழைத்திருந்தான்."புறப்படலாம் அனிந்தா" என்றான் மாவலியன். அவனே தொடரட்டும் என அனிந்தர் காத்திருந்தார். "திவலகன் திறன் படைத்த வேட்டை நாய். ஆனால் மாமிசத் துண்டுகளில் மகிழ்வு கொண்டுவிடும் எளிய மனம் கொண்டவன். அவனுக்கு நான் அளித்தது அது தான் என அறியாமல் இன்பத்தில் மூழ்கிச் சத்திழந்துவிட்டான் மூடன். நம் படை நகரட்டும். எண் திசைகளிலும் சகேரீதமும் அதன் கூட்டரசுகளும் சூழப்படட்டும். எதிர்க்கும் ஒவ்வொருவனையும் கொன்ற பிறகே நம் படை முன்னேற வேண்டும் . கால் அறுந்தோ கண்ணிழந்தோ கரங்கள் வெட்டப்பட்டோ ஒருவனும் எஞ்சக் கூடாது. இவ்வாணை மட்டும் எங்கும் நின்றாக வேண்டும். உயிர் பறிக்காமல் ஒருவனும் விடப்படக் கூடாது." அதே அமைதியுடன் மாவலியன் சொல்லிக் கொண்டிருந்தான். "இன்னும் ஒரு நாழிகையில் மாவலியத்தின் கிழக்கெல்லையில் நம் படைகள் புறப்பட்டாக வேண்டும். பருங்கம் என்ற நதியில் மேற்கில் இருக்கும் அத்தனை வீரர்களையும் ஓடத்தில் ஏற்றுங்கள். நதிகளின் கரைகளில் சறுகடர்ந்த மரங்களே அதிகம். கொள்ளுமளவு ஓடங்களில் இழுப்பை எண்ணெய் பீப்பாய்களை ஏற்றுங்கள். எறிபொறி அமைத்து பீப்பாய்கள் கரையோரக் காடுகளில் சென்று தைக்குமாறு வீசுங்கள். எரியம்புகள் எய்து காடுகளை கொளுத்துங்கள். வன மிருகங்கள் நமக்கு முன் சகேரீதத்தை சூழும்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அனிந்தர் "அரண்மனை பாதுகாப்புக்கு?" என்றார்.
"ஆணெனப் பிறந்த எவனும் மாவலியத்தில் இருக்க வேண்டாம். நடக்க முடிந்த சிறுவர்கள் உட்பட அனைவரையும் நிரையில் இணையுங்கள். தேர்ந்த வீரர்களின் நிரை தனியெனவும் இவர்கள் நிரை தனியெனவும் அமையட்டும்." என எவ்வுணர்ச்சியும் இன்றி கூறினான் மாவலியன். துணைத் தளபதி அமதிரன் கோபமுற்றவனாய் எழுந்து "இதற்கு நான் ஒப்ப முடியாது. மன்னன் மக்களின் ஆணை பெற்று ஆள்பவன். தன் ஆணவத்திற்கென அவர்களை பலியிட அவனுக்கு உரிமை இல்லை. என் உயிர் கொடுத்..." என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாவலியன் அலட்சியத்துடன் விட்டெறிந்த வாள் அவன் தலையில் பாதியை வெட்டி நின்றது. இறுதிச் சொல் சில நொடிகள் இதழில் ஒட்டியிருக்க அமதிரனின் உடல் தரையில் விழுந்தது . மாவலியன் தொடர்ந்தார். "நம் படைக்கலங்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்படட்டும். ஒன்றும் குருதி பார்க்காமல் உள்ளறைத் திரும்பக் கூடாது. புறப்படு அனிந்தா! இன்றிரவே சகேரீதத்தை முற்றழித்தாக வேண்டும். உன்னை திவலகனின் அரண்மனையில் சந்திக்கிறேன்" என்று உள்ளறை சென்றான்.
சில நொடிகள் திகைத்து நின்ற அனிந்தர் அவசரமாக விடுக்கப்பட்ட அந்த ஆணைகளின் கூர்மையையும் துரிதத்தையும் எண்ணினார். கூர்மை தான் மாவலியனின் பலம் என எண்ணினார். ஒற்றர்கள் அறிந்திருக்கவே முடியாத பெருந்திட்டம். செயல்படப் போகும் நொடி வரை அவன் ஒருவனே அறிந்த சித்திரம். எண்ணும் போது இன்னும் விரிந்தது அவன் உருவம். எண்ணத்தை கலைத்துவிட்டு இறங்கி நடந்தார் அனிந்தர். தன் மனம் அணுவளவும் விரும்பாத ஆணைகளை சித்தம் செறிவான சொற்களில் வெளியிட்டுக் கொண்டிருப்பதை அவரே எண்ணி வியந்தார். வெறுப்பும் வெறியும் கொண்டு பெரும்புயலென சகேரீதத்தை சூழ்ந்தனர் மாவலிய வீரர்கள். அனிந்தர் உயிர் எஞ்சாது வீழ்த்த வேண்டும் என மாவலியன் ஆணையிட்டது முதலில் தவறென எண்ணினார். ஆனால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த கணம் கண்டவன் என ஒவ்வொரு வீரனும் ஊறித் திளைத்தான் அக்கொலை வெறியாட்டில். இறப்பவனின் ஓலமும் கெஞ்சலும் அருவருப்பும் இரக்கமும் கொள்ளச் செய்ய அதுவே இன்பம் என்றாவதை அனிந்தர் கண்டார். எதிர் நின்ற சகேரீதத்தின் வீரர்கள் அஞ்சிப் பதுங்கினர். கால் பற்றி மன்றாடினர். ஒருவனும் மிஞ்சவில்லை. மாவலியன் தன் துணைவீரர்கள் நூற்றுவருடன் விரைவுப் புரவிகளில் சகேரீதம் நுழைந்தான். வாளின் வேகத்தில் கதை சுழற்றினர் வீரர்கள் ஒவ்வொருவரும். கல்பட்ட நீரென எதிர் வந்தவர்களின் சினங்கள் கலங்கித் தெரித்தன. ஒற்றைப் பெருவிசையென பெரும்புயலென பேரலையென பேரிடி என நூற்றுவர் கடந்து சென்ற இடமெங்கும் தலை தெரித்து மடிந்து கிடந்தனர் சகேரீதத்தின் பெரு வீரர்கள்.
அனிந்தரின் படை நிரையில் ஓசைகள் அவிந்து வந்தன. இறப்பவர்களின் வலி முனகல்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. உயிருக்கு மன்றாடி ஊளையிட்டு மடிபவர்களின் ஓலங்கள் சில சமயம் உச்சமென கேட்டுக் கொண்டிருந்தன. பற்றி ஏற சருகுகள் இல்லாத நெருப்பென மாவலியத்தின் வீரர்கள் சடசடத்து வெறித்து நின்றனர். கொல்லப்படுவதற்கு வீரர்கள் குறைந்த போதே அவர்கள் நிகழ்த்தியவற்றை அவர்கள் கண்டனர். புழுக்கள் போல குருதியில் நெளிந்தனர் இறப்பவர்கள். தாயொருத்தி இறந்து கொண்டிருக்கும் தன் கணவனை மார்போடு அணைத்து தன் மகவிற்கு முலையூட்டிக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட கணம் தலையறுத்து மண்ணில் விழ நினைத்தான் மாவலியத்தின் வீரன் ஒருவன். இன்னொன்றும் அவனை இயக்குவதை அனிந்தர் கண்டார். இன்னொன்று வென்றது. முலையூட்டியவள் மகவினை இழுத்து வீசிவிட்டு அவள் ஆடைகளை அவிழ்த்தெறிந்து அவள் கணவன் உடல் மேல் அவளைக் கிடத்திப் புணர்ந்தான் அவ்வீரன்.வெறித்துத் திகைத்த விழிகளுடன் கிடந்தாள் அப்பெண். அனிந்தர் அவனைத் தடுக்க ஓரடி முன்னெடுத்து வைத்தார். பின்னர் "இல்லை" என தலையசைத்துக் கொண்டு தன் புரவியை திருப்பித் தட்டிவிட்டார்.
திவலகனின் அரண்மனை ஓலங்களால் நிரம்பியிருந்தது. திவலகனையும் நட்பரசர்களையும் தப்பிக்கச் செய்ய சகேரீதத்தின் தளபதி சுபனன் தலைமையில் ஆயிரம் தேர்ந்த வீரர்கள் நிறைவகுத்தனர். எறும்பு வரிசையை கலைக்கும் பெரு விரலென மாவலியனும் நூற்றுவர்களும் ஆயிரவர் படையை சிதறடித்தனர். அம்புகளும் நெருங்க முடியாத வேகத்தில் சரியான இடைவெளியில் நூற்றுவர்கள் கதை சுழற்றியவாறே திவலகன் தப்பிச் செல்லவிருந்த சுரங்கத்தை நெருங்கினர். மாவலியனின் காலடிச் சத்தம் கேட்டதுமே அதிர்ந்த திவலகன் "என் இறையே" என இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு கண்ணீர் வழிய மாவலியனை நோக்கி ஓடி வந்தான். கூப்பிய கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெறிந்தான் மாவலியன். திவலகன் திகைத்து நின்றிருக்கவே கணுக்கால் வரை கால்களை வெட்டினான். அது போன்றே அத்தனை நட்பரசர்களும் வெட்டப்பட்டனர். அதன்பின் அவர்களை மாவலியன் திரும்பி நோக்கவில்லை. எஞ்சிய கரங்களையும் கால்களையும் இழுத்துக் கொண்டு முனகியவாறே அவ்வரசர்கள் ஊர்ந்தனர். அரண்மனையின் பந்த ஒளிகளைத் தாண்டி இருளுக்குள் அவர்கள் ஊர்ந்தனர். வலியை அவமானத்தை பெருந்துக்கத்தை இருள் மட்டுமே ஆற்றுப்படுத்த முடிகிறது.
அனிந்தர் தனக்குப் பின்னே மாளிகைகளிலிருந்து பெண்கள் தூக்கியெறியப்படும் ஓசைகளை கேட்டார். பெண்ணெனத் தென்பட்ட ஒருவரையும் அவர்கள் விடவில்லை. தொடக்கத்தில் ஓலங்களும் அழுகைகளும் வசைகளும் கேட்டன. பின்னர் முனகல்கள் ஆகி அவ்வோசை சிரிப்பொலிகளாக இளிவரல்களாக ஏளனங்களாக முத்தங்களாக அணைப்புகளாக கண்ணீராக சீர் மூச்சாக குறட்டை ஒலிகளாக மாறுவதை அனிந்தர் கேட்டார். மானுடம் என்பதை கடந்து அல்லது மறந்து புணர்ந்தபின் உறங்கும் வன மிருங்களாக அவர்கள் கிடந்தனர். குருதியிழிந்த இறந்த உடல்களுக்கு நடுவே புணர்ந்து இறுகிக் கிடந்தன உயிருள்ள உடல்கள். உயிரற்றவர்கள் மட்டுமே ஆடையோடிருந்தனர். அனிந்தர் விண் நோக்கி தலை உயர்த்தினார். என்றும் போல் அன்றும் விண்மீன்கள் சிரித்துக் கொண்டிருந்தன. பாணன் பெருமூச்சுவிட்டான். சுனதனைத் தவிர துயரவர்கள் அனைவரும் அதிர்ந்து அமர்ந்திருந்தனர். அவன் விழிகளில் மட்டும் விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன.
Comments
Post a Comment