கொற்றவை ஒரு மீள் வாசிப்பு
மனிதன் என்றும் தனித்தவன் கிடையாது. பனிப்பாலங்களின் உள்ளோடும் பேராழியென அவன் ஆழ் நினைவுகளில் அவன் மூதாதையரின் கடந்த காலம் உறைந்துள்ளது. சிவப்பு ஏன் இன்றும் நம் சித்தத்தை கவர்கிறது? உயிருக்காக உணவுக்காக மண்ணிற்காக அதிகாரத்திற்காக குருதி சிந்தாத ஒரு இனமும் உலகில் இல்லை. ஆதி மிருகமாக குருதியில் திளைத்தெழுந்த அம்மூதாதை உள்ளுறைந்த நம் நினைவில் வாழ்வதாலேயே இன பேதமின்றி உலகின் அனைத்து சமூகங்களும் செந்நிறத்தால் தூண்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு தொல் அடையாளமே மொழியும். நம் மொழியை நினைத்தும் அதனை அறிந்த என்னை நினைத்தும் அந்தரங்கமாக மிக அந்தரங்கமாக பெருமை கொண்ட கணங்கள் எனக்கு சில உண்டு. எனினும் அவை உணர்வினால் தூண்டப்பட்ட கணங்களாகவே இருக்கும்.
அக்கணங்களை பிற்போக்கானதாக அறிவற்றதாக எண்ணி பின்னர் விலக்கியிருக்கிறேன். ஆனால் "ஆம் என் மொழி தமிழ். அதற்காக உள்ளபடியே நான் பெருமையும் கர்வமும் கொண்டு கண்ணீர் உகுக்கிறேன்" என்று என்னை எண்ண வைத்து நம் மரபில் ஊறிய ஒருமைக்கும் அறத்திற்குமான அறைகூவலை எடுத்துணர்த்திய படைப்பு "கொற்றவை".
உலகின் உயர்தள தத்துவ சிந்தனைகள் அனைத்துடனும் உரையாடக் கூடிய ஒரு உன்னதத் தமிழ் படைப்பு ஜெயமோகனின் கொற்றவை. சிலப்பதிகாரத்தின் மறு ஆக்கமாக பொதுவாக கூறப்பட்டாலும் அதனையும் கடந்து கொற்றவை தொட்டெடுக்கும் தரிசனங்கள் எக்காலத்திற்குமான அறத்தினை வலியுறுத்துபவை. நம் ஐந்து நிலத்தையும் வலம் வந்து பேரரறத்தாளாக வாழ்வில் நிறைவுறும் ஒருத்தியின் பயணம். இருமுறை வாசித்த பின்பே விம்மும் மனத்தினை கட்டுப்படுத்தி அப்படைப்பை தொகுத்துக் கொள்ள முடிந்தது. கொற்றவை என் வாசிப்பனுபவம்
கொற்றவை ஒரு மீள் வாசிப்பு
Comments
Post a Comment