பெருஞ்சுழி 9

9
வெண்மை என்பது  நிறமல்ல. அது முழுமை.நிறைவு. வலிமை. ஆவல். முனைப்பு. வெற்றி. புகழ். தேக்கம். அழிவு. வெண்மையென்றாவதால் வாழ்கின்றன உயிர்கள்.
பெரும்  புல்வெளிகளால் சூழப்பட்ட அச்சிறு தேசம் அணுகிப் போரிட முடியாத இயற்கை அரண்களால் வளைக்கபட்டிருந்தது. குளிர் பரப்புகளுக்கு நடுவில்  நின்றிருந்த அத்தேசத்தின் காலம் விடியலின் புணர்ச்சி போல முனைப்பற்ற இன்பம்  கொண்டு  தேங்கித் ததும்பி நின்றது. புற்களால் முளைத்தன பசுக்கள். அசைபோடும் பசுக்கள்  போல துய்ப்பதன்றி வேறேதும்  அறிந்திருக்கவில்லை  வெண்குடிநாடு என்று அழைக்கப்பட்ட அப்புற்பரப்பின் மக்கள். ஓங்கிப் பேசினாலே அஞ்சினர். ஆணுடல்  பெண்ணுடலை தீண்டிக் கொண்டே இருந்தது. எப்போதும்  காமுற்றிருந்தனர் ஆண்கள். கனியக் காத்திருந்தனர் பெண்கள். பசு மெல்லும் ஒவ்வொரு  பசுமையும்  வெண்மையென அவர்கள்  கலன்களில் நிறைந்தது.
மட்கிய முதியவளும் மணம் வீசினாள். அவர்கள்  வியர்வையிலும் வெண்ணெய்  மணம்  எழுந்தது. பசுஞ்சாணமும் பசு நெய்யும்  மணத்துக் கிடந்தன  வீதிகள். விழுந்தே அறியாததால் விழுந்த பின் எழுகையில்  எழும் சுகம் அவர்கள்  அறியவில்லை. உயர்ந்தவை அனைத்திற்கும்  ஆழமும்  அதிகம். அவ்வாழத்தின் இருட்டு சரந்தகரின்  மனைவியரில் ஒருத்தியின்  வயிற்றில்  பிறந்தது. கருக்கொண்ட நாள் முதல்  உடலில்  ஒட்டி உறிஞ்சும்  அட்டையை தட்டுவது போல அடிவயிற்றை தட்டிக் கொண்டிருந்தாள். அருவருப்பு  புரளும்  முகத்துடன்  கால் விரித்து குறிவாயிலை  நோக்கினாள். குழந்தை  பிறந்த  தினம்  என்றுமில்லாத  ஒளியுடன்  விளங்கிய  அவள் முகம்  கண்ட ஒவ்வொருவரும்  காமுற்றனர். யாரும்  நோக்காத  ஒரு கணப்பொழுதில் அவள் வலக்கால் கட்டை விரலை  நாவால்  வருடினாள் மருத்துவச்சி. அதே நொடியில்  தன் மீது  படியும்  கூர் விழி நோக்கை அவள்  உணர்ந்தாள். கருமணியென மாவலியனின் விழிகள் அவளை நோக்கி நின்றன. அப்போது  பிறந்த தொட்டில் குழந்தையின்  விழி நோக்கென நினைக்க முடியவில்லை  அதனை. தன் இருளை திரட்டி  தனக்கு காண்பிக்கப் போகும்  கொடுந்தெய்வமென  மாவலியனை அவள் நினைத்தாள். அவள் முகத்தில்  ஒரு சுழிப்பு உருவானது. மாவலியனைக் கண்ட ஒவ்வொரு  விழியிலும்  அச்சுழிப்பு நிலைத்தது.
அன்பிற்காக அன்றி அச்சத்தினால்  அணைத்துக்  கொண்டு உறங்கினர் ஆணும் பெண்ணும். அப்பெயர்  சித்தத்தில்  இருக்கும்  வரை அவர்கள்  புணர முடியவில்லை. சொல்லாமல்  விடுவது இல்லாமல்  ஆவதை அவர்கள்  உணர்ந்தனர். அவன் தாயும் பற்கள்  முளைத்தவன்று அவனை நீங்கினாள். இல்லாதவனாகவே ஆகிவிட்டான் மாவலியன். ஆறு குதிரைகள்  பூட்டி தேரோட்டப் பந்தயங்கள்  நிகழ்ந்தன. பண்ணிரெண்டு  குதிரைகள்  பூட்டி யாரும்  அறியாமல்  விளையாடிக் கொண்டிருந்தான் மாவலியன்.
எந்நேரமும்  எதிலும்  நிறைவு  கொள்ளாமல் அவன் ததும்பிக் கொண்டே  இருந்தான்.  உயிரென அழகென அன்பென எதையும்  அவன்  அறியவில்லை.  வலுவும்  வலுவின்மையுமே அவன் சிந்தையை  நிறைத்திருந்தன. தன்னைக்  கடந்த  ஒருவனை  அவன் வெறுத்தான்.  அவனை  வெல்லும்வரை அவனாகவே  மாறித்  திரிந்தான்.  பயன் நுகர்வதே அவன்  வாழ்வென்றானது. மனிதர்கள்  வெறும்  உற்பத்தி  கருவிகள். மிருகங்கள்  வெறும்  உணவுக்  கூறுகள்.  மலர் வனங்களை  அவன் தன் அரண்மனையில்  அனுமதிக்கவில்லை.  இசையும்  நாட்டியமும்  என்னவென்றே  அவன் அறியவில்லை.  விழைந்து பெண் கூடல்  அவன் வாழ்வில்  நிகழ்ந்ததில்லை. அவன் பசி மட்டுமே  கொண்டவன்  ருசி அவனுக்கு  பொருட்டல்ல. அறுபது  நாழிகைகளில்  ஆறு  நாழிகைகளே உறங்கினான். இறைவனும் நெருங்க  முடியாக் கொடுந்தனிமையில்  தன்னை  ஆழ்த்திக் கொண்டான்.  எவ்வறமும் எவ்வுணர்வும்  அவனை அலைகழிக்கவில்லை. புகழ்பாடி பொருள்  சேர்த்தனர்  அறிதவர்கள் .  அப்பொய் புகழில் மயங்கி  அடிமைகளின்  குருதி  பிழிந்து  அள்ளிக்  கொடுத்தார் சரந்தகர் .  காமத்தின்  புது  உச்சங்கள் காண்பது  பற்றியே  அவைகளில்  பெரிதும்  விவாதிக்கப்பட்டது. வீரம்  நிறைந்தவர்கள் அந்த  அவை நுழைய  வெட்கினர். மாவலியன்  தன் குறும்படை  கொண்டு  தகப்பனின்  அரண்மனை  நுழைந்தான். “என்ன  மைந்தா! இது அவை. இங்கெதற்கு ஆயுதம்  தரித்து  நுழைந்தாய்” என்று  அவன்  ஆற்றல்  புரியாமல்  ஏளனத்தோடு கேட்டார்  வெண்குடிநாட்டின் தலைவர் சரந்தகர்.
“உங்கள்  மணிமுடியை  என் தலை சூட்டி  இந்த  அவை நிறைத்திருக்கும் வீணர்களுடன்  இக்கணமே நீங்கள்  விலகினால்  என் படை  குருதி பார்க்க  வேண்டிய  அவசியம்  இருக்காது” என்றான்  குரலில்  உணர்ச்சியென ஏதுமின்றி. முதலில்  எண்ணிச்  சொல்லப்பட்ட அச்சொற்களின் ஆணவம்  நிறைந்த  கட்டளை போரே கண்டிராத  சரந்தகரை அச்சம்  கொள்ளச் செய்தது. ஆனால்  இருநூறு  வீரர்களோடு தன்னை  இரண்டாயிரம்  வீரர்கள்  கொண்ட  அரண்மனையை எதிர்க்க  நினைக்கும்  பதினேழு  வயது சிறுவன்  அவ்வார்த்தைகளை  சொன்னான்  என்பதை  சரந்தகரால் பொறுக்க முடியவில்லை. “சிறுவனே ! நீ என் மைந்தன் என்ற நினைவு  எனக்கிருப்பதால் இன்னும்  உயிரோடு நிற்கிறாய். ஆனால்  நீ என் எந்த  மனைவிக்கு  பிறந்தவனென்று நினைவிலில்லை.  உன்  வார்த்தைகளுக்காக என் கால் தொட்டு வணங்கி  ஓடிவிடு.  இல்லையெனில்  உன்னையும்  உன்னை  ஈன்றவளையும் அம்மணமாக்கி  அரண்மனை  தூண்களில்  கட்டிவிடுவேன்” என்று  மாவலியனை  அவமதிக்கும்  பொருட்டு சொன்ன  வார்த்தைகள் அவனை ஒன்றும் செய்யவில்லை.  அவன் சிறு வயதில்  கண்டிருந்த அவையினர் அவன் தயாராகிவிட்டதை ஊகித்திருந்தனர். பெருமூச்சுடன்  தலை தாழ்த்தினர். அவர்கள்  மாவலியனுக்காக வருந்துவதாக சரந்தகர்  எண்ணினார். 
ஓங்கி  கருத்த வில்லென  நீண்ட  அவன் உடலில்  சில அசைவுகள்  நிகழ்ந்தன.  கோபமுற்ற சரந்தகர்  “இவனை  அம்மணமாக்கி இழுத்துச்  சென்று  இவன் தாய்  முன் நிறுத்தி  அவளையும்  அவ்வாறே  இழுத்து வாருங்கள்” என்று  ஆணையிட்டார். மாவலியனின்  ஆடை நுனியை தீண்டுவதற்கு  முன்பே  ஒரு வீரன்  அவனால்  அறைபட்டு தரையில்  விழுந்து  சில  நொடிகள் உடல் துடித்து  பின் இறந்தான். ஒரு நொடி  அதிர்ந்த  சரந்தகர்  அரண்மனை  காவல்  வீரர்கள்  அனைவரையும்  அவை  நோக்கி  அழைக்கும்  வெண்கல முரசினை முழக்க கைகாட்டினார்.அவ்வொலியில் உந்தப்பட்டு  மாவலியனின்  வீரர்களும்  அவை நுழைந்தனர். மாவலியன்  இடைவாளினை உருவி சுழற்றி  எறிந்தான்  . வீரன் ஒருவனின்  தலை பறித்த  அவ்வாள் சரந்தகரின் காலடியில்  அத்தலையுடன்  விழுந்தது. மாவலியன்  தன்  மேலாடையில்  பூண்டிருந்த  அவன் உடல் நீளத்திற்கான  இரு வாட்களை உருவினான்.
முதலில்  அவ்வாட்களை அவன் கரங்கள்  இயக்கின. அவன் விரைவு  கூடிக்கூடி வந்தது.  வாளும் கரமும் ஒன்றென்றாகி பின்  அவற்றை  தாங்கும்  உடலும் அதனுடன்  ஒன்றானது போல்  போர்புரிந்தான். அழகிய  நடனமென அவன்  உடலோடு அவ்வாள்  இணைந்தாடியது.  அவன்  சூழ்ந்து  தாக்கியவர்கள்  விழுந்து  கொண்டே  இருந்தனர்.  உடலும்  இல்லாமலாகி உயிர்  பறிக்கும்  ஒரு இயக்கம்  என அவன் மாறி விட்டிருந்தான். மண்ணிலிருந்து  விண்ணடையும் செம்மழையென அவனை சூழ்ந்து  தாக்கியவர்களின் குருதி  தெளித்தது.
ஒருவனை  ஒருமுறைக்கு  மேல்  அவன் வாள்  தீண்டவில்லை. வாள்பட்டால் அறுந்து  உடலை  செயலிழக்கச் செய்யும் நரம்பு  முடுச்சுகளை கூர்மையாகத்  தாக்கினான்.  அமானுட விசையொன்றுடன் போரிடுவதுபோல்  சரந்தகரின்  வீரர்கள்  திகைத்தனர்.  அவனுடைய  இருவாள் சுழற்சி  உருவாக்கிய  அரணை முதலில் அவர்கள்   வாள்  நெருங்க  முடியாமலானது. பின் அவர்கள் விழியும்  அச்சுழற்சியை அறியவில்லை.  பின் அவர்களின்  சுவாசமும்  தீண்ட  முடியாத தனிமையில்  அவன் சுழன்று  கொண்டிருந்தான்.  மாவலியனின்  வீரர்களும்  ஒருவன்  அறுவனை நிகர்க்கும்  திறம்  பெற்றிருந்தனர். சுழலென அவன் சென்ற  இடமெல்லாம்  வீரர்கள்  வீழ்ந்தனர்.  நான்கு நாழிகைக்குள் போர்  முடிந்தது. அச்சிறிய அரண்மனையின்  சிற்றறை ஒன்றில்  அதிர்ந்து  போய் ஒளிந்திருந்த  சரந்தகரை  மாவலியன் உச்சித்  தலைமயிர்  பற்றி  அரண்மனை  உப்பரிகைக்கு  இழுத்துச்  சென்றான்  . மாவலியனின் இடக்கையில் மணிமுடி  இருந்தது. கூப்பிய  கரங்களோடு மக்கள்  பார்க்கும் படி நின்று  சரந்தகரிடம் “இம்மணிமுடியை  நீங்களே  மக்கள்  முன்  எனக்கு  சூட்டினால் உங்களுடைய  பிற மனைவியரும் பிள்ளைகளும்  வதைபடுவதை  பார்க்க  வேண்டியிராது” என்று  சொன்னான். நடுங்கும்  கரங்களுடன்  அவனுக்கு  முடி சூட்டினார்  சரந்தகர். “வெண்குடிநாட்டின்  வேந்தன்  வாழ்க” என்றொரு குரல்  எழுந்தது.
அதற்குள் மாவலியனின்  இடிகுரல் அதனை  தடுத்தது. “ நிறுத்துங்கள்! வெண்குடிநாடு  என்ற பெயர்  இனி உங்கள்  சிந்தையிலும் இருக்கக்  கூடாது.  இனி இந்நாடு  மாவலியம் என்றே  அழைக்கப்படும்.  என்னைக்  கடந்தவொன்றை இனி யாரும்  சிந்திக்கத்  தேவையில்லை” என்றான்.   உணர்ச்சிகள்  அவிந்து எளிமையான  சரந்தகர்  ஒரு நீள்  மூச்சு விட்டார்  .சரந்தகர்  தான் மிகவும் சோர்ந்திருப்பதாகவும் அச்சோர்வினை போக்க இள மங்கை ஒருத்தியைப் புணர வேண்டும் எனவும் எண்ணினார். மக்களை பார்த்தவாறு  நின்றிருந்தார் சரந்தகர். திரும்பி அரியணை நோக்கி நடந்த மாவலியன் திரும்பி நோக்காது  வாளினால் சரந்தகரின் தலையைக் கிள்ளி உப்பரிகைக்கு  வெளியே எறிந்தான். முதுகிற்குப் பின்னே முண்டத்தின் கழுத்தில்  குருதி கொப்பளிக்க  அவன் அரியணை நோக்கி  நடந்தான். 

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024