பெருஞ்சுழி 1
பெருஞ்சுழி 1
“வெற்றி முழங்கட்டும்
எண்குடி வென்று மண்பகை கொன்று
விண் புகழ் நோக்கும் கோவே
வெற்றி முழங்கட்டும் உன் வெற்றி முழங்கட்டும்
விண் அதிரட்டும் முழக்கம் விண்ணை வெல்லட்டும்”
மாரதிரன் சபையில் எட்டு நாழிகை நேரம் இடைவிடாமல் பாடிய ஆதிரை இவ்வரிகளுடன் தன் கிணையை தாழ்த்தியபோது எழுந்தமைந்தது நிறைமாதத்தில் மேடிட்டிருந்த அவள் வயிறு. கூர்ந்த விழிகளுடன் உதட்டில் இடக்கை விரல்கள் பதித்து அவளை நோக்கிய மாரதிரன் தன் நரைவிழுந்த மீசையை நீவிக் கொள்வதை கவலையும் பதட்டமும் நிறைந்த விழிகளுடன் பார்த்திருந்தாள் அவன் அரசி மோதமதி. ஆதிரையை பார்த்தபோது அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. முதல்முறை கருத்தரித்திருக்கும் இளஞை. அவள் குரலுக்கும் பாடலின் உணர்வுக்கேற்ப முகம் கொள்ளும் பாவனைகளுக்கும் அவை கொண்ட முற்றமைதியே பிண்ணனி என்றானது. அவள் தன் இறுதி வரியை பாடி முடித்ததும் அன்னை மடியில் அனைத்தும் மறந்து குறுஞ்சிரிப்புடன் உறங்கும் குழந்தையென கிடந்த அவை தன்னை தன் பொறுப்புகளுக்குள் இழுத்துக் கொண்டு மீண்டும் அமையுமா இப்படியொரு கணமென ஏக்கத்துடன் எண்ணிக் கொண்டது. ஆனால் மாரதிரன் மிருகத்தை உணவென்று மட்டுமே பார்க்கத் தெரிந்தவன். சிம்ம வேட்டையெனில் அதனை உண்டு பார்த்தபின்னே கிளம்புவான். மிருகத்தின் சுவை மட்டுமே அவன் வேட்டை விசையைக் கூட்டும். மன்னனின் விழைவு மோதமதிக்கு சோர்வைக் கொடுத்தது. முதலமைச்சர் நிருவரனின் விழிகளை மாரதிரன் சந்தித்துவிட்டு எழுந்து உள்கூடம் அடைந்தான். அச்செய்தி ஆதிரையை வந்தடைந்தபோது மோதமதி அவள் முகத்தை சந்திக்கும் துணிவற்று அரியணையில் துவண்டு அமர்ந்திருந்தாள். நொடிக்கும் குறைவான கணம் அவளை நோக்கிய போது நேரே விழிகள் முட்டின. என்ன தெரிந்தது அவ்விழிகளில்? கோபமோ பயமோ தெரிந்திருந்தால் மோதமதி அவளை வெறுத்திருக்கலாம். ஆனால் ஆதிரையின் விழிகளில் இன்னும் சில நாழிகைகளில் நடைபெறப் போகும் கேவலத்தின் வலி தெரிந்தது. மோதமதி அவளை அப்படியே அள்ளிச் சேர்த்து கழுத்தறுத்து தானும் அப்படியே கழுத்தறுத்துக் கொண்டு இறக்க நினைத்தாள்.நடக்காது. அவள் ஆதிரையை நெருங்கியபோது ஒரு வார்த்தையை மட்டுமே கேட்டாள். “இன்றோ நாளையோ என் மகன் மண் அடைவான்” என்ற உறுதியான ஆதிரையின் குரல். மாரதிரன் மஞ்சத்தில் காத்திருந்தான்.
ஆதிரை அக்கணத்தை நினைவிலிருந்து துரத்த நினைப்பது போல் இருந்தது. பித்தழெச் செய்யும் பேரழகிதான். எனினும் அவள் பிறப்பிக்கப் போகும் மகவிற்கென்றேனும் மாரதிரன் கருணை காட்டியிருக்கலாம் என்றென்னியபடியே சோர்வளிக்கும் அலுவல்களில் மூழ்கினார் முதலமைச்சர் நிருவரன். மஞ்சள் நீரில் முழுவுடலும் ஒற்றி எடுக்கப்பட்டது. மென்சிவப்பு ஆடை மட்டும் அணிவிக்கப்பட்டிருக்க மாரதிரன் மஞ்சத்தில் ஆதிரை நுழையும் முன்னே அவ்வாடையை கிழித்தெறிந்து பின்னந்தலை பிடித்து மஞ்சத்தில் அவளை தள்ளினான். அவளுள் விசும்பலோ அழுகையோ எழாதது இன்னும் கோபம் கொடுக்கவே அவள் குழல் பிடித்திழுத்து முகத்தில் உமிழ்ந்தான். அவளிடம் மாறுபாடில்லை. நிலைகுலைய வைக்காமல் எப்பெண்ணையும் அவன் புணர்ந்ததில்லை. ஆதிரையின் அழுத்தம் குறையவில்லை. முகத்திலிருந்து முலை நோக்கி வழிந்த எச்சிலையும் துடைக்காமல் குனிந்து நின்றிருந்தாள். மாரதிரன் தன்னிலையழிந்து அவள் தலையை வெட்ட வாள் ஓங்குவதற்கும் நள்ளிரவு அறிவிக்கும் பறை முழங்கவும் சரியாய் இருந்தது. ஆனால் அவ்வொலி வழக்கமான ஒலியிலிருந்து மாறுபட்டிருக்கவே மன்னனை எச்சரிக்க மோதமதியும் நிருவரனும் ஓடிவர மாரதிரன் தலை முற்றத்தில் வந்து விழுந்தது. பொருளற்று மாரதிரன் உடல் துடிக்க ஆடை திருத்தி சீர்நடை வைத்து வெளிவந்தாள் ஆதிரை. நடையும் முகமும் மாறியிருக்க அவள் வருவதையும் மாரதிரன் தலை தனியே உருளும் நிலையையும் நிருவரன் பொருத்திப் பார்க்க எடுத்துக் கொண்ட கணம் ஆதிரைக்கு போதுமானதாக இருந்தது. மோதமதி பார்த்திருக்க நடனத்தின் லாவக அசைவென எழுந்த ஆதிரையின் கைவாள் நிருவரனின் தலையை உடல் அகற்றியது.
“என்னை அரசவைக்குத் தூக்கிச் செல்” என மோதமதியின் கழுத்தில் கைவாள் பதித்தாள்.கணவனோ அமைச்சனோ மோதமதியின் சித்தத்தில் எழவில்லை. தன் உயிர் காத்துக் கொள்ள ஆதிரையை தூக்கிக் கொண்டாள். அரண்மனையை சூழ்ந்திருந்த அரசப்பெருவீதி உருக்குலைந்தது. மக்களின் ஓலம் அரண்மனை நுழையவில்லை. ஆனால் திரைச்சீலைகளும் மரச்சட்டகங்களும் எரிவதால் எழுந்த கடுமணம் மோதமதியின் நாசி நுழைகையில் அவள் ஆதிரையை தூக்கியவண்ணம் மைய மண்டபம் நுழைந்தாள். அரண்மனைக் காவலர்களை வீழ்த்தியபடியே கணபாரன் தன் படையுடன் உள் நுழைந்தான். பிறப்பு வாயிலில் ஆதிரைக்கு குருதி வழியத் தொடங்கியது. “என்னை அரியணையில் அமரச் செய்” என்று மோதமதியைப் பணித்தாள். முழு உடலும் வியர்வை வழிய நீண்டு இருந்த அந்த அரியணையின் உச்சியில் அமர்ந்து கால் விரித்தாள். ஆதிரையின் அலறல் கேட்டு அங்கு வந்த சேடிப் பெண்கள் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டனர். அரண்மனைக் காவலர்கள் முழுதும் ஒன்று திரண்டு கணபாரனின் படையை எதிர்த்தனர். அவர்களின் ஒரே நோக்கமானாள் ஆதிரை. தேர்ந்த வீரர்களுக்கிடையே நடந்த போராகையால் ஒவ்வொருவனும் தன் ஒவ்வொரு அசைவையும் உயிர் பறிக்கும் ஆயுதமாக்கினான். வெண்பளிங்கில் ஒளிர்ந்த அரசவை கொழுத்து வழியும் குருதியில் வழுக்கிச் சிவந்தது. மாரதிரனின் வீரன் ஒருவன் எறிந்த ஈட்டி ஆதிரையின் தொடையில் பதிந்தது. வலியில் முணகித் துவண்டிருந்தவள் தொடை வழியும் குருதியினால் கோபமுற்று அவ்வீட்டியை பிடுங்கி எறிந்தவனின் தலை பிளந்தாள். போர் உக்கிரம் குறைந்து வலி மிகுந்ததானது. சேற்றில் புரளும் மீன்களென ஒவ்வொருவரும் குருதியில் புரண்டு உயிர்விட்டனர். வெறி கூடிய ஆதிரை விழி சிவந்து சிரிக்க வீழ்ந்தவர்கள் ஓலம் உச்சம் தொட அரியணையில் அழுதபடி விழுந்தான் ஆதிரையின் மைந்தன்.
ஆதிரைமைந்தன் அரியணைப்பிறப்பு அபாரம்!
ReplyDeleteஆதிரைமைந்தன் அரியணைப்பிறப்பு அபாரம்!
ReplyDelete