எஞ்சும் சொற்கள் - கடிதங்கள்
அன்புள்ள சுரேஷ் பிரதீப் ..நீங்கள் எழுதிய எஞ்சும் சொற்கள் சிறுகதையைப் படித்தேன்.எழுத வேண்டுமா என நினைத்தேன் ஆனால் கதையின் கரு எழுதுவது முக்கியம் என உணர்த்தியது .ஒரு நுண்மை இலையோடல் கதை முழுக்கவே விரவி இருப்பதைப் போன்றதொரு உணர்வு.அது சரியாகவும் இருக்கலாம் வெளிப்படை தான் இலக்கிய தரத்தின் அளவுகோல் எந்த அளவிற்கு அதில் உண்மை கையாளப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் வீரியம் வெளிப்படும்.பொதுவாகவே தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் பெரும்பணிகள் யாவும் துப்புரவு,மலம் அள்ளுதல் தான்.படித்த தலைமுறை இதில் அடங்காது அவனை படிக்க வைத்த தலைமுறை அடங்கும் .ஆதிதிராவிடர் நலத்துறை என்பது அவர்களுக்கான ஒரு துறை அவர்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் அல்லது கொண்டுசெல்லும் ஒரு அமைப்பு.ஆனால் அதிகாரத்தின் முன்பு அந்த துறையும் அடங்கியே இருக்கிறது.சாதாரண ஜாதி சான்றிதழ் கூட மேற்பார்வையின் கீழ் நடைபெறும் அவலம். சாக்கடையை பார்த்து குமட்டல் வந்தது பற்றிய வர்ணனை வருகிறது இந்த இடம்தான் படைப்பியல் ரீதியாக ஒருவனை 'எழுத்தாளன்'என மதிப்பீடு செய்வது.காரணம் எஸ்.சி வீதிகளும் வீடுகளும் பெரும்பாலும் சாக்கடை கழிவுநீர்கள் சூழ்ந்தே இருக்கும் பெரும்பாலும்.இல்லை என சொல்லிவிட முடியாது.ஆனால் அந்த வாசம் கூட அறியாத ஒருவன் அதே ஜாதியில் இருக்கிறனா என்றால் இருக்கிறான்.அந்த இருக்கிறான் தான் இந்த கதையில் வருபவன்.கலெக்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள் .தாழ்ந்த ஜாதியை சேர்ந்த யாராவது [படித்தவர்கள்] அவர்களை சந்திக்க சென்றால் 'நீயெல்லாம் நாலு பேருக்கு உதாரணமா இருக்கணும் ..அதுக்கு என்ன பண்ணப் போற ' என்றதும் சிறிய மௌனம் உண்டாகும் உடனே 'பெரிய பதவிக்கு வரணும்யா எத்தன நாளிக்கு பீய அள்ளப்போற ' என பதில் வரும். சிகையை கட்டாத பெண்,மருத்துவ மாணவன் ,நீங்கள், இவர்கள் யாவும் ஒன்றையே பிரதிபலிக்கிறார்கள் .அதாவது அதவாது மேல்தட்டில் இருக்கும் எஸ்.சிகள் எதோ இந்த ஜாதியில் பிறந்துவிட்டோமே என அனுதினமும் எண்ணுகிறவர்கள் அல்லது அதற்காக நடிப்பவர்கள்.' நீங்கல்லாம் பன்னி மேய்க்கத்தாண்டா லாயக்கி ' என்றவரி ஒட்டமொத்தமாக அந்த ஜாதியை இன்றைய நவீன உலகும் அந்த படியிலே வைத்துப் பார்க்கிறது என்பதை சொல்கிறது.எனக்கு கதை நன்றாகவே புரிந்தது. மனித மனங்களின் நுட்பமும் அதில் அடங்கியிருக்கிறது. 'இடைநாழி' 'ஸ்தூலமாக' போன்ற வார்த்தைகளை தவிர்த்து எளிய வார்த்தையாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது.காரணம் வாசகன் இதற்கு அர்த்தம் தெரியாமல் கோலம் போடக்கூடாது.வட்டப்பொட்டு ,கண்ணாடி என போன்ற வர்ணனைகள் திரும்ப சில இடங்களில் வருவதால் சிறிய தொய்வு.மற்றபடி நல்ல கதை .முகநூலிலே பதியலாம் என இருந்தேன் ஆனால் இந்த முறை எழுத்தாளனை மேலும் உத்வேகப்படுத்தும் .வாழ்த்துகள் -
ஷங்கர் சதா
அன்புள்ள சுரேஷ்,
இன்று ஜெ தளத்தில் உங்கள் கடிதம் பார்த்தேன்.
நான் முன்னரே நினைத்தேன்,முக நூலில் அதிக நேரம்
செலவிடுகிறீர்கள் என்று .ஒரு எழுத்தாளருக்கு ஒவ்வொரு
நிமிடமும் முக்கியம்.உங்கள் நட்பும்,நிர்பந்தங்களும்
நான் அறியாதவை என்பதால் அது பற்றி சொல்வது நாகரிகம்
இல்லையென விட்டு விட்டேன்.அறிவார்ந்த விவாதங்கள்
f b ல் மிகக்குறைவுதான்.1000 நண்பர்களில் 100 வாசகர்கள்
அமைந்தால் அமோக வெற்றி.வேறு வழியும் இல்லை.
நான் அறவே FB பார்ப்பதில்லை.சுரெஷ்,மேரி க்ரிஸ்டி,போகன்
சங்கர் மட்டும் பார்ப்பேன்.
எஞ்சும் சொற்கள் இரண்டாம் முறையாக படித்தேன்.
ஆட்சியரக விவரிப்பு துல்லியமாக,மிகுந்த நம்பகத் தன்மையுடன் இருந்தது.பல ஆண்டுகள் வாரம் மூன்று முறையாவது சென்று கொண்டிருந்த இடம்.அதன் விவரிப்பு சிறிது ஏக்கத்தையும், சிறிது விடுதலை உணர்வையும் தந்தது.அந்த அகலமான, சுத்தமான இடைநாழி!
அணு அனுவாக ரசித்து கண்ணாடியை உடைத்தீர்கள்.
பெல் இரட்டையர்,அலுவலராக விரும்பும் இன்னும் உலர்ந்து
விடாத பெண்,எனக்கு கதை பிடித்திருந்தது-கடைசி பகுதியைத் தவிர.
ஒரு வருமான வரித்துறை ஊழியர் கண்ட இடத்தில்
தரையில் படுப்பது,ஒரு மாவட்ட ஆட்சியர் என்னதான் தன்
சாதியை சேர்ந்தவர் என்றாலும்,நீங்களெல்லாம் பன்னி
மேய்க்கத் தாண்டா லாயக்கு என்று சொல்வதும் நம்பகமே
இல்லாத பகுதிகள்.ஒரு ஆட்சியர் அந்த சொற்களை சொல்லி
யிருக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறேன். நான் அறிந்த
ஒரு தலித் உயர் அதிகாரி, நான் அறிந்த அனைவரிலும்
நேர்மையிலும்,கண்ணியத்திலும், திறமையிலும், நாகரிகத்திலும் இணையற்றவர்.
கடைசி வரி இன்னும் மோசம். கதை சொல்லியின் பரம்பரையில் யாரும் பன்னி மேய்த்ததில்லை என்பதில் என்ன நிம்மதி? என்ன உசத்தி? மேய்த்திருந்தால் அவர் அப்படி பேசியது சரியாகி விடுமோ? ஒவ்வொரு சாதியும் தான் எவ்வளவு கீழ் நிலையினராக கருதப் பட்டாலும் ,தனக்கும் கீழ் உள்ள சாதியை கேவலப் படுத்த தயங்குவதில்லை என்பது
வியப்பாக உள்ளது. பன்னி மேய்க்கும் பரம்பரையின் வலியையும்,நியாயத்தையும் உணர வேறு கதை சொல்லியின் வேறு கதை படிக்க வேண்டுமோ?
வீதிகள் படித்து வெகு நாளாயிற்று.மீண்டும் படித்த பின்
எழுதுகிறேன்.வாழ்த்துக்கள்!
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
Comments
Post a Comment