புனைவுகளிலிருந்து வெளியேறுதல் - தி.ஜானகிராமனின் மோக முள்
தத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா.
கலியுக முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பதையோ பிரபஞ்சமே அவனின் பெருநடனம் என்பதையோ இறுதித் தீர்ப்பு நாளில் நீரும் நெருப்பும் நிலமும் தம்மிடமுள்ள உயிர்களை தீர்ப்புக்கு ஒப்படைக்கும் என்பதையோ பொதுவுடமைச் சமூகம் அமைந்துவிட்டால் மானுட இனம் இன்றைய துன்பங்களில் இருந்து விடுபட்டு விடும் என்பதையோ வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவரும் தங்களுக்கான முழுமை நோக்காக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் பல நுண்மையான நோக்குகள் கடந்த இருநூறு ஆண்டுகளில் திரண்டு வந்திருக்கின்றன.
அப்படியெனில் இலக்கியம்? குறிப்பாக தத்துவத்தின் கலை வடிவம் என்றே வர்ணிக்கப்படும் நாவல் தனக்கென உருவாக்கிக் கொண்ட நோக்கு என்ன? யோசித்துப் பார்க்கையில் தத்துவத்தை மையமாகக் கொண்டு இலக்கியமும் அறிவியலும் இருவேறு திசைகளிலாக பிரிந்து பயணிப்பதைக் காண முடிகிறது. தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதன் புறவய விதிகளை பயன்படுத்தி மேலும் மேலும் புதிய உச்சங்களை அறிவியல் தொடுகிறது. பயன்பாட்டுத் தளம் நோக்கி நகருந்தோறும் அறிவியல் விதிகள் மேலும் இறுக்கம் கொள்கின்றன. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக நிறுவப்படுகின்றன. நிறுவப்பட்டாக வேண்டும் என்பதே எதார்த்தம். ஆனால் நாவல் தத்துவத்தை எதிர்திசையில் மோதுகிறது. தத்துவத்திடம் மேலும் மனிதத் தன்மையைக் கோருகிறது. ஏனெனில் தத்துவத்தினால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மரபையோ பண்பாட்டையோ நடைமுறைகளையோ நாவல் ஒரு விரிவான விவாதத்திற்குள் தன்னுடைய நீண்ட விவாதத்தன்மையால் உள்ளிழுத்து விடுகிறது. ஏன் அது அப்படி உள்ளிழுக்கும் தன்மை கொண்டிருக்கிறது எனில் அதை எழுதுபவன் தர்க்கத்தை விட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதே பதில். தர்க்கம் மேலும் மேலும் தெளிவினை திட்டவட்டத் தன்மையைக் கோருகிறது அடையவும் செய்கிறது. ஆனால் ஒரு நாவலாசிரியன் வரலாறோ மனித உறவுகளோ பண்பாடோ சமூக நடைமுறைகளோ எதை ஆராயப் புகுந்தாலும் திட்டமிட்டு வகுத்துவிட முடியாத "மனித உணர்வுகள்" எனும் பொதியை விரிக்கிறான். அதன் வழியாகவே அவன் அனைத்தையும் புரிந்து கொள்ள முயல்கிறான். ஒரு நாவலாசிரியன் மார்க்ஸிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையோ பிராய்டிய உளப்பகுப்பாவையோ தன்னுடைய ஆய்வுமுறையாகக் கொண்டால் கூட அவற்றின் முரண்களை இவனுடைய கற்பனை மோதும் போதுதான் ஒரு நவீன நாவல் பிறக்கிறது. இலக்கியத்தின் பணி அது மனித மனதுள் பயணிக்குந்தோறும் சமூகத்தில் ஏற்கனவே நிலவி வருகிறவற்றை மேலும் வலுப்படுத்துவது அதன் நோக்கம் அல்லாமல் ஆகிறது. கால மாற்றத்திற்கு ஏற்றார்போல புதிய வரையறைகளை உருவாக்கிக் கொள்கிறது.
மகாபாரதமோ பைபிளோ பழங்குடிச் சமூகங்களை வெற்றிகரமாக நிலப்பிரபுத்துவத்துக்குள்ளும் மன்னராட்சிக்குள்ளும் செலுத்தின என்பதை மறுத்துவிட முடியாது. அவ்வகையில் நவீன இலக்கியம் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய மனநிலைகளில் இருந்து விலகி ஒரு முதலாளித்துவ அல்லது ஜனநாயக சமூகத்திற்குள் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய பிரக்ஞைகளை கட்டமைக்கும் பணியையே செய்கிறது. ஆகவே முன்பே சொன்னது போல வாழ்வு குறித்து பண்பாடு அல்லது பண்பாட்டுக்கு அடித்தளமான தத்துவங்கள் உருவாக்கி வைத்த பிரக்ஞையை அது தன் முழு விசையுடன் தாக்குகிறது. நவீன இலக்கியப் படைப்புகள் வாசிக்கப்படும் போது ஏற்படும் நிலைகுலைவு நம் பிரக்ஞையை அல்லது நனவிலியை அது கலைக்க முயல்வதால் நிகழ்வதே. ஒரு வகையில் அறத்தை வலியுறுத்தும் பழைய பாணி படைப்புகள் கூட அத்தகைய "கலைத்தலை" நிகழ்த்தவே முயல்கின்றன. ஆனால் அவற்றை மிகுந்த பாதுகாப்பான ஒரு வட்டத்துக்குள் நின்றபடிதான் அவை செய்கின்றன. அதேநேரம் நவீனத் தன்மை கொண்ட ஒரு படைப்புகள் நம்பத் தகுந்த களத்தை அமைப்பதன் வாயிலாக அரண்கள் இன்றி தங்களைத் திறந்து முன்வைக்கின்றன. மிகப்பெரும் படைப்புகள் சமகாலப் பிரக்ஞை மட்டுமே கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போவதற்கு காரணம் அவற்றின் "உடனடித் தீர்வுகளை" முன்வைக்கும் தன்மை இல்லாமைதானோ என்று தோன்றுகிறது. சமகாலப் பிரக்ஞை என்பது ஒரு வகையில் தத்துவத்தில் இருந்து வெகுதூரம் தள்ளி எளிமையான தர்க்கங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுவான ஒரு மனப்பாங்கு. அதேநேரம் ஒரு படைப்பு சொல்ல உத்தேசிக்கும் ஒன்று தத்துவத்துடன் மிக நெருக்கமாக நின்று சமர் புரிந்து கொண்டிருக்கிறது. அதை உள்வாங்க அப்படைப்பு உத்தேசிக்கும் மனநிலை நோக்கி வாசகன் செல்ல வேண்டியிருக்கிறது. மிக நெருக்கமாக ஒரு படைப்பினை வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வகைப் புரிதல்களே பின்னாட்களில் எழும் சமூக விவாதங்களை இலக்கியத்தை முக்கியமானத் தரப்பாக மாற்றி அமைக்கிறன்றன. மனநிலைகளைக் கட்டமைக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் வைத்தே தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை நான் புரிந்து கொள்கிறேன். தமிழில் நாவலின் வடிவம் குறித்த பிரக்ஞையை முழுமையாக்கியதில் க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. க.நா.சு விமர்சனங்கள் வழியே நாவலுக்கான வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தை உருவாக்கினார். சுராவும் அமியும் தங்கள் படைப்புகள் வழியே வடிவப் பிரக்ஞையை கூர்மைப்படுத்தினர். ஜெ அதை மேலும் செம்மையாக்கினார். நாவல் வடிவம் குறித்த விவாதத்தின் நீட்சியாக ஜெயமோகன் எழுதிய "நாவல் கோட்பாடு" என்ற நூல் நாவலின் வடிவம் குறித்த வரையறையை முன்வைக்கிறது. தி.ஜானகிராமன் இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளில் முதன்மையானவர். மேலும் மோகமுள் தொடர்கதை வடிவத்திலேயே எழுதப்பட்டது. புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதை மரபு உச்சம் தொட்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்பு மோகமுள். இத்தகைய தடைகளைக் கடந்தும் தமிழில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாக மோகமுள்ளை நிறுத்துவது அதன் வாழ்க்கை நோக்கும் கலையும் மனித மனமும் பின்னி முயங்கும் புள்ளிகளை தொட்டெடுப்பதுதான்.
கும்பகோணத்தின் தெருப்புழுதியில் பாபு ஒதுங்கி நிற்பதுடன் நாவல் தொடங்குகிறது. இயல்பிலேயே மென்மையான மனம் படைத்தவனாக இருக்கிறான் பாபு. சங்கீதத்தின் மீது ஈடுபாடு உள்ளவனாக பெண்ணை வழிபடும் ஒருவனின் நண்பனாக அப்பாவையும் குடும்பத்தையும் விரும்புகிறவனாக இருக்கிறான். ஒரு பிராமணப் பண்ணையாரின் நிலபுலன்களை கவனித்துக் கொள்ளும் வேலை பார்க்கிறார் அவன் அப்பா. அந்தப் பண்ணையாரின் இரண்டாவது மனைவி பார்வதி ஒரு மராத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். நந்தமங்கலம் எனும் கிராமத்தில் முதல் குடும்பமும் கும்பகோணத்தில் இரண்டாவது குடும்பமும் இருக்கிறது. பார்வதியின் மகள் யமுனா. பாபு அப்பா வழியாக இந்தக் குடும்பத்துடன் நட்புடன் இருக்கிறான். சக்தி உபாசகரான அவன் அப்பா பாபுவுக்கும் அந்த வழியையே காட்டுகிறார். அழகும் நிமிர்வும் வாய்ந்தவளான யமுனாவே பாபுவின் மனதில் தேவியாக விளங்குகிறாள். கலப்பு மணம் காரணமாகவும் இரண்டாவது மனைவியின் மகள் என்பதாலும் யமுனாவின் சுய விருப்பத்தினாலும் அவளுக்கு மணமாவது தட்டிக் கொண்டே செல்கிறது. பாபு யமுனாவை விட பத்து வயது இளையவன். யமுனா மீதான அவனது ஈர்ப்பு பெரும் மோகமாக மலர்கிறது. சங்கீதத்திலும் அவனது நாட்டம் பெருகுகிறது. இளமைக்கே உரிய கொந்தளிப்பான பல தருணங்களை பாபு கடக்கிறான். யமுனாவின் அப்பா இறந்துவிடவே அவளது குடும்பம் நொடிக்கிறது. இளமையைக் கடந்தும் மணமாகாமல் நிர்கதியாய் யமுனா சென்னையில் வேலைபார்க்கும் பாபுவிடம் வந்து நிற்கிறாள். அதன்பிறகான உணர்வுப் போராட்டங்களையும் அதற்கான தீர்வினை ஒரு நடைமுறைத் தளத்திலும் சொல்லி நிறைவுபெறுகிறது இந்த நாவல்.
கரவுகளும் சிடுக்குகளும் இல்லாமல் மிக இயல்பாக ஒழுகிச் செல்கிறது நாவல். ஆனால் சிடுக்காவது நாவலின் பிரதான அம்சம். மிக சிக்கலான தருணங்களைக்கூட எளிமையான வார்த்தைகளில் தருணத்தின் தீவிரம் குன்றாமல் சொல்லி விடுகிறார் தி.ஜா. நாவல் முழுக்கவே ஒவ்வொரு பக்கத்திலும் தி.ஜாவின் இந்த ஆகிருதி பிரம்மிக்க வைக்கிறது. பாபு குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வயோதிகக் கணவனும் அவருடைய இளமையான மனைவியும் குடியேறுகின்றனர். பகலில் அவளைப் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லும் கணவனை நினைத்து பாபு பொறுமும் இடம் ஒரு "லட்சியவாதியின்" அறச்சீற்றமாக அல்லாமல் அவள் அழகிற்காகவும் துக்கப்படுகிறவனாகவே சித்தரிக்கப்படுகிறது. சமூக மதிப்பீடுகளுக்கும் அழகு நோக்கிய ஈர்ப்புக்கும் இடையே தத்தளிக்கும் இளம் மனதின் சிக்கலை தேர்ந்த வார்த்தைகளில் சித்தரித்துச் செல்கிறார். அதேபோல் அவள் பாபுவை ஈர்க்க நினைப்பதும் அதனால் அவன் அடையும் ஆழமான குற்றவுணர்ச்சி அதிலிருந்து மீண்டு வருதல் பின் அவனையே நினைத்து அவள் தற்கொலை செய்து கொள்ளுதல் என ஆழமான பாதிப்பினை உருவாக்கும் அத்தியாங்களை எளிமையான வார்த்தைகளைக் கொண்டே தீவிரமாக கட்டமைத்து விடுகிறார் தி.ஜா.
"உங்களை ஒரு தடவை பாக்கணும் போலிருக்கு. என்ன செய்வேன்?" என்பது தங்கம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பாபுவுக்கு விட்டுச் சென்ற கடிதத்தின் இறுதிவரி. ஆனால் தங்கம்மாள் தன்னை நெருங்கும் போதுதான் பாபுவுக்கு யமுனாவின் மீதான பற்றின் ஆழம் கொள்கிறது. என்ன செய்வதென்று புரியமால் அவளை நோக்கி ஓடி அழுகிறான். அதேநேரம் தான் இசையிலும் அவன் ஆர்வம் தீவிரமடைகிறது. ரங்கண்ணா எதிர்பார்க்கும் "தூய" கலைஞனாக தன்னை மாற்றிக் கொள்வதற்காக பாபு தன் அழகுணர்வுக்கு எதிராக போராடிக் கொண்டே இருக்கிறான். நாவல் முழுக்கவே அழகுணர்வுக்கும் (aesthetic sense) இச்சைக்குமான போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய மரபுக் கதைகளின் மறு ஆக்கமாக கூட இதை எடுத்துக் கொள்ள முடியும். தியான நிலை கைகூடி வரும்போது மோகத்தால் அலைகழிக்கப்படும் யோகி போல இசையை நோக்கி பாபு நகருந்தோறும் அவனுடைய உணர்வுகளால் மேலும் தீவிரமாக பாதிக்கப்படுகிறான்.
மோகமுள் நாவலை வாசிப்பதற்கு என்னையறியாமலேயே எனக்குள் இருந்த தடை அதுவொரு இசைக்கலைஞனை கொண்டிருக்கும் நாவல் என்பதுதான். ஆனால் இப்போது யோசிக்கையில் அவ்வெண்ணம் புன்னகையைத்தான் வரவழைக்கிறது.இசை பற்றிய ரங்கண்ணாவின் அதன் பின் பாபுவின் உரையாடல்களைத் தவிர பெரும்பாலும் ஒற்றைவரி கேள்வி பதில்களைப் போலவே நாவல் பாத்திரங்கள் பேசிக் கொள்கின்றனர். ஆனால் நோக்கம் சரியாக நிறைவேறிவிடுகிறது. இசை பற்றி இந்த நாவலில் இடம் பெற்றிருக்கும் விவாதங்கள் அனைத்தையும் (பாபுவிடம் அவன் குருவான ரங்கண்ணா சொல்கிறவை பாபுவுக்கும் பாலூர் ராமுவுக்கும் நடைபெறும் விவாதங்கள் மராத்திய இசைக்கலைஞர்கள் சொல்கிறவை) கலையில் ஈடுபாடு கொண்டவர்கள் தங்களது துறைக்கும் பொருத்திக் கொள்ளக்கூடிய பொதுவான கூற்றுகள் என்றே தோன்றுகிறது.
மனதின் மெல்லிய பகுதிகளைத் தீண்டும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் வாசிக்கும் எல்லோருமே தங்களது "ரகசிய" நினைவுகளை மீட்டி பரவசப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பை இந்த நாவல் அளிக்கவே செய்கிறது. உதாரணமாக யமுனாவின் பாத்திர வார்ப்பு. நிமிர்வும் அழகும் தைரியமும் கம்பீரமும் கொண்ட பெண்ணாகவும் அவள் இருந்தாலும் எதிர்காலம் குறித்த பிரக்ஞையே இல்லாதவளாக அவள் சித்தரிக்கப்படுவது கொஞ்சம் "பழைய" அம்சமே. அது யமுனாவின் "தேவி" தன்மைக்கு வலுவூட்டினாலும் கூட பின்னாட்களில் அவள் எடுக்கும் முற்போக்கானா முடிவுகளுடன் பொறுந்துவதில்லை. செவ்வியல் தன்மை கொண்டதாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு படைப்பு தன்னுடைய மென்மையால் நீடித்தாக வேண்டிய அவசியமில்லை என்பதையே சொல்ல வருகிறேன். அத்தகைய வாசிப்பு அப்படைப்பை பின்னிக்கு இழுப்பதே. இளமையின் காமத்தின் வேறுபட்ட வண்ணங்கள் வழியே பயணித்தாலும் நாவல் செல்லும் இடம் மேன்மை நோக்கியதாக உள்ளது. போலியான கனவுகள் அல்லது லட்சியத்தின் வழியில் இல்லாமல் நடைமுறை தளத்தில் தன்னை நிறுவிக் கொள்வதே இன்றைய நாளில் மோகமுள்ளை முன்னோடிப் படைப்பாக நிறுத்துகிறது.
அதன் இடைவெளிகள் வழியாக நுட்பமான வாசிப்பினைக் கோரும் திகைத்து நிற்கச் செய்யும் பல பகுதிகள் நாவலில் உள்ளன. யமுனா பாபுவுடனான உறவிற்கு மறுநாள் "இதற்குத்தானா" என்று கேட்பதை மிகப்பெரிய திகைப்பின் பொருளின்மையின் கணமாக இப்போது வாசிக்க முடியவில்லை. ஏனெனில் நாவல் அந்த இடம் நோக்கிச் செல்வதை எந்த வாசகனும் ஊகித்திருப்பான். அந்த உச்சம் கூட ஒரு தேர்ந்த வாசகனை அதிரச் செய்யுமே தவிர கடக்க முடியாததாக இருக்காது. மாறாக பாபுவின் மனம் இசை நாட்டத்தாலும் தங்கம்மாள் தன்னால் இறந்தாள் என்ற குற்றவுணர்வாலும் யமுனாவின் மீதான தவிர்க்க முடியாத மோகத்தாலும் ஒரே நேரம் தவிப்பதை முறையே ஞானத்தேடல் சமூகப் பிரக்ஞை அழகுணர்வு என்று தத்தளிக்கும் மனதின் உச்சமாக வாசிக்கலாம். தி.ஜாவும் கு.ப.ரா அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாக "லட்சிய" பெண்மணி தாகம் கொண்டிருப்பது யமுனாவின் சித்தரிப்பில் காண முடிகிறது. ஆனால் யமுனாவின் பாத்திர வார்ப்பும் அவளது ஆளுமையும் அக்குறையை ஈடுகட்டிவிடுகின்றன.
பாபுவுடனான உறவுக்குப் பிறகு யமுனா அவனுக்கு எழுதும் கடிதமும் அதற்கு பிறகு அவன் தன் லட்சியத்தை நோக்கி மேலும் உந்தப்படுவதும் யமுனாவின் அதன்பிறகான நடவடிக்கைகளும் நம்பிக்கை தருவதாகவே உள்ளன. ரங்கண்ணா இறக்கும் தருவாயில் அவனைப் பாடச் சொல்வது ராஜத்தின் பிரிவு சென்னையில் என எத்தனையோ தருணங்களை இணைத்து வாசிக்கும்படியான நெகிழ்வினை கொண்டிருப்பது மோகமுள்ளை நாவல் தரத்திற்கு உயர்த்துகிறது. ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் கைவிடப்பட்டவளை உரிமை கொள்ளத் துடிக்கும் உந்துதல் என எளிய கோட்பாடுகளை போட்டுப்பார்க்க இந்த நாவல் அனுமதிப்பதில்லை. அதையும் தாண்டி ஆழமான தளங்களுக்குச் செல்லும் போது மட்டுமே அர்த்தம் தருவதாக அமைந்துள்ளது இப்படைப்பு.
தொடக்க அத்தியாயங்களில் ராஜமும் பாபுவும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். வாழ்வு குறித்து நமக்கு அளிக்கப்பட்டுள்ள புனைவுகளை ஒரு எல்லைக்கு மேல் அப்படி பேசித்தான் நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. புனைவில் இருந்து பாபு வெளியேறியாக வேண்டிய காலத்தில் தான் நாவல் தொடங்குகிறது. குடும்பம் காதல் நட்பு என ஏதோவொரு அழகான புனைவிலிருந்து வெளியேறிய அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கவே செய்யும். பாபுவும் அப்படித்தான் வெளியேறுகிறான். அவனது வெளியேற்றத்தை கொந்தளிப்பு நிறைந்ததாக மேன்மைக்கான தேடல் நிறைந்ததாக அன்பால் ஈடுசெய்யப்பட்டதாக காட்டியிருப்பதே மோகமுள்ளை தூக்கி நிறுத்தும் அம்சம் எனத் தோன்றுகிறது. யமுனாவின் வழியாக அவன் இன்னொரு புனைவு நோக்கிச் செலுத்தப்படுகிறான். ஆனால் அப்புனைவு மேலும் உறுதிமிக்கதாக இருக்கிறது. சவால் நிறைந்ததாக ஞானத்திற்கான உத்திரவாதம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதுவும் புனைவுதான். அதிலிருந்து வெளியேறுவதற்கு அவனுக்கு மேலும் இரக்கமின்மையும் தைரியமும் தேவைப்பட்டிருக்கும்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் விலை: ₹.600
அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல் நண்பரே
ReplyDeleteநன்றி