நூல் ஒன்று - முதற்கனல்

 நூல் ஒன்று - முதற்கனல்


என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின்  சில தொன்மங்களையாவது கேட்டு வளரும்  பேறு பெற்றவன் நான். நுட்பமான  கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின்  முதல் நாவலான  முதற்கனல் முதல் முறை வாசிக்கும்  போது  எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய  வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள முடியாது. மானசாதேவி  என்ற நாகர் குலத்தலைவி தன் ஏழு வயது மகன் ஆஸ்திகனுக்கு சொல்லும்  கதைகள் என்னை ஏற்று உள்ளிழுத்துக்  கொண்டதற்கு சிறு வயதில்  கொள்ளுப்பாட்டியின் இழுவையும் ஏளனமும்  நிறைந்த குரலில் கேட்ட தொன்மங்களே காரணம்.


மானசாதேவிக்கும் ஜரத்காரு முனிவருக்கும் பிறந்த  ஏழு வயதான  ஆஸ்திகன்  குருஷேத்திர போர் முடிந்து இரு தலைமுறைகள்  கடந்த பின் அஸ்தினபுரி அரசனான ஜனமேஜயன் தீமைகளை அழிக்க எண்ணி நிகழ்த்தும்  சர்ப்பசத்ர வேள்வியை தடை செய்யும்  பொருட்டு எழுகிறான். காமமாகவும் அகங்காரமாகவும் மண்ணில்  பெருகும் நாகங்கள் அழிக்கப்படுவதை வைதிகனாகவும் நாகனாகவும் ஒருசேர நின்றெதிர்க்கிறான் நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன். தீர்ப்புரைக்க முதிர்ந்து பழுத்த வியாசனை சபைக்கு இழுக்கிறான் ஜனமேஜயன். தட்சப்பெரு நாகத்தை  "இவ்வுலகெங்கும் காமமும் அகங்காரமும் பெருகச் செய்வாயாக" என வாழ்த்தி அனுப்புகிறார் கிருஷ்ண துவைபாயன வியாசர். திகைத்து நிற்கும்  ஜனமேஜயனின் மனநிலையை எளிய மானுட நீதிகளை மட்டும் அறிந்து பிரபஞ்சத்தை ஆளும் பெரு நியதியை அதுவரை காணாத  எந்த மனதினாலும் உணர முடியும். நன்மை தீமை கடந்து எழும் பேரரறத்தை வலியுறுத்தும்  விதமாய் எழுகிறது வியாசனின் சொல் அவர் மாணவரான வைசம்பாயணரின் குரலில்  முதற்பகுதியான வேள்விமுகத்தில்.


முதற்கனலின்  இரண்டாவது  பகுதியான  பொற்கதவம் பேரரசி  சத்யவதியையும் பீஷ்மரையும் வியாசனையும் அறிமுகம்  செய்கிறது. திரை விலக்கப்பட்டு கூப்பிய  கைகளுடன்  அறிமுகம்  கொள்வது போல் நிகழ்வதில்லை  அவர்களுடனான நம் சந்திப்பு. மகாபாரத காலகட்டத்தில்  பாரதம் முழுக்க பரவியிருந்த சூதர்கள்  எனும் கதைப்பாடகர்கள்  வழியாகவே  நாம்  இன்று  அறியும்  பல தொன்மக் கதைகள்  சொல்லப்படுகின்றன. பொற்கதவம்  என்ற இரண்டாவது பகுதி  தொடங்குவதே சூதர்களின் அறிமுகத்துடன் தான். ஒவ்வொருவரின் உளநிலையும் அவர்களிடம் சொல்லப்படும்  சூதர் பாடல்களின் வழியாகவும் அல்லது  தொன்மங்களின் வழியாகவும்  விளங்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. காசி நாட்டு இளவரசிகளை கவர்ந்து வர சத்யவதி ஆணையிட்டதும் மனம் குழம்பும்  பீஷ்மர்  தீர்க்கசியாமர் என்ற விழியற்ற சூதரை அழைக்கிறார். சத்யவதிக்கு பராசர முனிவரில் பிறந்த வியாசனின் கதையை பாடுகிறார் தீர்க்கசியாமர். அப்பாடலின் வழியாகவே  தன் வழியை உணர்ந்து வியாசனை நோக்கிச் செல்கிறார் பீஷ்மர். வியாசர் குடியிருக்கும்  வேதவனத்தில் சித்ரகர்ணி என்ற கிழ சிம்மம் குடிலில்  கட்டியிருக்கும் பசுவினை வேட்டையாட நெருங்குகிறது. பெரும்பாலானவர்கள்  அறிந்திருக்கும் சிபி சக்ரவர்த்தி  புறாவிற்காக தன் உடலைக் கொடுத்த கதையை சொல்கிறார் வியாசர். ஆனால் மிகக் கூரிய நியாங்களை பேசும்  நவீனமாக ஒலிக்கிறது அக்கதை. மானுட  உணர்வு பிரபஞ்ச விதிகளுடன் போட்டியிட்டு பேருணர்வாவதை சொல்லிச் செல்கிறது. பீஷ்மர்  தெளிவடைந்து வெளியேறுகையில் சித்ரகர்ணி தன் வேட்டையை முடித்திருக்கிறது.


ஒவ்வொருவரின் ஊழும் முன்னேற வகுக்கப்பட்டுவிட்டதாகவே விரிகின்றன சூதர்களின்  சொற்கள். காசி நாட்டு இளவரசிகளான அம்பையும் அம்பிகையும் அம்பாலிகையும் கேட்பது தட்சனுக்கும் சிவனுக்கும்  இடையே நின்று தவிக்கும்  தாட்சாயிணியின் கதையை. எரி புகுந்து விண்ணடைந்து கணவனை அடைகிறாள் தாட்சாயிணி என்பதிலிருந்தே அந்த இளவரசியரின் ஊழ் நகரும்  திசை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. தான்  வடித்தெடுத்த சால்வ மன்னனை அடைய முடியாமல்  பீஷ்மரால் சிறையெடுக்கப்பட்ட பின் அவரிடம்  மீண்டு சால்வனை அடைகிறாள் அம்பை. அவள் வரைந்த  சித்திரம்  அழிந்து வெறும்  அரசாளனாக நின்று பேசுகிறான் சால்வன். தன் பிறந்த நாடான காசிக்கு செல்கிறாள். அத்தேசமும் அவளை மறுக்கிறது. சுவர்ணை சோபை விருஷ்டி என்ற தேவதைகளின் வழியாக அம்பை தன் காதலை பீஷ்மரிடம் கண்டு கொள்ளும்  கணம் சிலிர்க்க வைக்கிறது. அனைத்தடையாளங்களையும் இழந்து கன்னியெனவும் அன்னையெனவும் பீஷ்மர்  முன் அவர் நிற்கும்  கணங்களும் தன் பேரன்பு புறக்கணிக்கப்பட்டதும் கொற்றவையென எழும் சீற்றமும்  பெரும்  அகச்சலனங்களை ஏற்படுத்தி அச்சலனம் தணியாததாகவே மனதில்  எஞ்சுகிறது.


வியாச பாரதம் "ஜெய" என்ற பெயரில்  எழுதப்பட்ட  ஆயிரம்  பக்கங்களுக்கு  அதிகம்  சென்றுவிடாத ஒரு காவியமே. பின்னாட்களில்  அது பல்வேறு  காலகட்டங்களில்  விரித்தெடுக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர்  ஜராசந்தன் அர்ஜுனன்  பீமன் என வலுவானவர்களே விரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பெண்ணைக் கூடினால்  இறந்து விடுபவனாக உடல் நலம்  குன்றி பிறக்கும்  சத்யவதியில் சாந்தனுவிற்கு பிறந்த இரண்டாம்  மைந்தன்  விசித்திர வீரியன் அவன் அத்தனை  குறைகளுடனும் பெரும்  ஆளுமையாகவே சித்தரிக்கப்படுகிறான். கட்டளைகளை மட்டுமே  வீசும்  அவன் அன்னை சத்தியவதியை அவன் எதிர் கொள்ளும்  விதமே அவன் ஆளுமையை சொல்லி விடுகிறது. நெஞ்சக்கனல் அணையாது வராஹியாகித் திரியும்  அம்பாதேவியிடம் சிரம் பணிந்து பீஷ்மரிடம்  நின்று ததும்புகிறான். தீர்க்கசியாமர் கங்காதேவியில் சாந்தனுவிற்கு பிறக்கும்  பீஷ்மனின் கதையை விசித்திர  வீரியனிடம்  சொல்கிறார்.   /மாபெரும் வல்லமைகளில் இருந்தே மாபெரும் தீமை பிறக்க முடியும்/ என்றறிகிறான். சூதர்கள்  சொல்லும்  கதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன நாகர்கள் சொல்லும் கதைகள். சங்குகர்ணன் விசித்திர  வீரியனிடம் சொல்லும்  கதை அத்தகையது. காசி நாட்டு இளவரசிகளின் அன்னையான புராவதி துறவு பூண்டு அன்னையாகி நிற்கும்  மகளைக் கண்டு இறக்கிறாள். விசித்திர  வீரியனிடம்  அம்பிகை காதல்  கொள்ளும்  தருணங்கள் ஒளிமிக்கவை. விடியலின்  பொன்னொளி என அக்காதல் மிகக்குறைந்த காலம்  நீடிப்பதே அதை மேலு‌ம்  ஒளிகொள்ளச்  செய்கிறது. சத்யவான் சாவித்திரியின் கதையை அம்பிகை விசித்திர  வீரியனிடம்  சொல்லும்  தருணங்கள்  அவள் பதைப்பினை நம்முள்ளும் உணர வைக்கின்றன. சாவித்ரியின் சௌப நாட்டிலேயே அம்பையை புறக்கணித்த சால்வனும் பிறக்க நேர்ந்து அந்நாட்டு  சூதர்கள்  சால்வனின் வீழ்ச்சியை பீஷ்மரிடம்  சொல்லும்  போது விசித்திர  வீரியன்  இறந்துவிடுகிறான்.


தன் துயர் மறைத்து அரசியலுக்காக அம்பிகையையும் அம்பாலிகையையும் பராசரில் தனக்கு பிறந்த மகனாக  வியாசன் கூடட்டும் என பீஷ்மரிடம்  பணிக்கிறாள் சத்யவதி. வேதவனத்தில்  சித்ரகர்ணியை குஹ்யஜாதை எனும் கழுதைப்புலி தன் குட்டிகளுடன்  உண்பதை பார்த்து நிற்கும்  வியாசர் அதற்கு  ஒப்புக் கொண்டது சொல்லப்படுகிறது. வியாசர் அஸ்தினபுரி  வரும்  போது திறந்து கொள்கிறது சத்யவதியின் மனம். தந்தையின்  ஆணைக்கேற்ப தாய் ரேணுகையை கொன்ற பரசுராமரின் கதை அறிந்ததே எனினும்  சத்யவதியின் தோழி சியாமையின் வழியாக அவளிடம்  கூறப்படும்  அத்தொன்மம் பல தளங்களை சுட்டி நிற்கிறது.


இரு இளவரசியருடன் சூதப்பெண் சிவயையும் கூடிய  பின் தன் மகனான  சுகனை தேடி பயணிக்கிறார் வியாசர். தென்னகத்தின்  பெருங்கவிஞனான பெருஞ்சாத்தனை சந்திக்கிறார். /நீங்கள்  சிரஞ்சீவியாக இருந்து உங்கள்  உயிர் முளைத்த வனத்தின்  வாழ்வனைத்தையும் காணுங்கள்/ என அவரை உந்துகிறான் சுகன்.


வியாசரின் பயணத்துக்குப் பிறகு சிகண்டினியை சிகண்டியாகக் காணும்  அம்பையின் பயணம்  தொடங்குகிறது. பன்றியின் மூர்க்கத்துடனும் பசியுடனும் வளர்கிறாள் சிகண்டினி. படகோட்டியான நிருதனிடம் விடைபெற்று சிதையேறுகிறாள் அம்பை. அனைத்து உக்கிரங்களும் அடங்கி / என் சிதைச்சாம்பலைக் கொண்டு நீங்களும் உங்கள்  குலமும் உங்கள்  சிறு தங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள்  குலத்தில்  நான் என்றென்றும்  பிறந்து கொண்டிருப்பேன்/ என அம்பை நிருதனிடம்  சொல்லும்  போது நெஞ்சு விம்மி விடுகிறது. ஸ்தூனகர்ணனை எண்ணித் தவம் புரிந்து பெண்ணென்று இல்லாமல்  ஆகிறாள் சிகண்டினி.  ஒற்றை நோக்கம் கொண்ட கர்மயோகியென எழுகிறான்  சிகண்டி. தனுர்வேதத்தை பயிற்றுவிக்கும்  அக்னிவேசர் சிகண்டிக்கு விடைகொடுக்கையில் நிகழும்  உரையாடல் ஆழம் கொண்டது. அழகிய  கிராமம்  ஒன்றில்  உர்வரை என்ற இளம்பெண்  பீஷ்மரை மணக்க எண்ணுகிறாள். சிகண்டியும் அவளும்  ஒரே நேரத்தில்  கண்ட கனவுகள்  அவளை சீற்றம்  தணிந்து பீஷ்மரை காக்க எண்ணும்  அம்பையென எண்ணச் செய்கிறது.


முற்றறிவதே பீஷ்மரைக் கொல்லும்  வழியெனக் கண்டு அவரை களத்தில்  எதிர்த்த பீஷ்மரின் சிறிய தந்தையான பால்ஹிகரை சந்திக்க சிபி நாடு சென்று மீள்கிறான் சிகண்டி.  அம்பையால் அரண்மனை  நீங்குகிறார் பீஷ்மர். சிகண்டி பீஷ்மரிடம்  யாரென்று  அறியாமல்  பீஷ்மரைக் கொல்ல  தனுர்வேதம் கற்பிக்குமாறு வேண்டுகிறான். ஈனாத தாயென அம்பையை உணர்ந்தவன் அவளுள்  வஞ்சத்தை ஏற்றிய பீஷ்மரை தன் தந்தையென கண்டு கொள்வதோடு முதற்கனல்  நிறைவுறுகிறது.


பெண்களின்  கண்ணீர்  என்றே விரிகிறது  முதற்கனல். முதியவர்களை மட்டுமறிந்த சத்யவதி முது வயதில் "அனகி" என தன் விளையாட்டு பொம்மையின் பெயர் சொல்லி உயிர்விடும் சுனந்தை "பாண்டுரன்" என்ற பளிங்குபாவையை மறக்காத அம்பாலிகை வழியின்றி வியாசரிடம் கரு ஏற்கும்  சிவை என அத்தனை  பெண்களின் கோபமும்  பிரதிபலிக்கும்  களம். அனைத்திற்கும்  மேலாக  சிதை நெருப்பென எரியும்  அம்பை. பாண்டவ கௌரவர்களின் தந்தைகளான பாண்டுவும் திருதராஷ்டிரனும் பிறப்பதோடு நிறைவடைந்தாலும் தன்னளவில்  தனித்தே நிற்கிறது  முதற்கனல். ஒரு கணத்தில்  நாகர்களின் வஞ்சமாக மீண்டும்  மீண்டும்  எதிரொலிப்பது பெண்ணின்  வஞ்சமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 


நிகழு‌ம்  ஒவ்வொரு  தருணத்தையும் முந்தைய  தருணத்தோடு பொறுத்திப் பார்க்க முடிகிறது. அண்ணனை பிரிந்த பால்ஹிகன் சாந்தனுவிற்கு அளிக்கும்  சாபம் சாந்தனுவின் பெயரர் பிறப்பிலும் எதிரொலிக்கிறது. ஆண்டுகள் பல கடந்த பின்னும்  பால்ஹிகர் ஒளியை பார்க்காமல்  இருப்பது அவர் அண்ணன்  தேவாபியின் நினைவினால்.  யயாதியாக பீஷ்மர் தன்னைக் காணும் தருணமும் அப்படிப்பட்டதே.


ஆஸ்திகன் தன் குடிலடையும் போது நாகர்களுக்கும் ஷத்ரியர்களுக்குமான போராகவும் முதற்கனல்  தெரிகிறது.


வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய  சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்  கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல்  நான்காயிரம்  ஆண்டுகளாக நீடித்து வரும்  காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும் கூர்மையுடனும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு விதத்தில்  முதற்கனல்  வெண்முரசின்  ராஜபாட்டை.


(2017ல் எழுதிய கட்டுரை)

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024