Pages

Friday 2 September 2016

நூல் ஆறு - வெண்முகில் நகரம்

நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்த சிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல் ஏங்காமல் அந்நாவலை படித்து முடித்து விட முடியாது. அத்தனை அணுக்கமானவள் என்பதாலேயே பெரு வாழ்வென எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் அந்நாவலில் நட்டாஷாவின் முடிவுகளும் குழப்பங்களும் வாசிப்பவர்களை பாதிக்கும். ஒரு நாடக அரங்கில் அனடோல் என்ற ஒழுக்கமற்ற பேரழகனிடம் நட்டாஷா மனமிழப்பதை மிக நுண்மையாக நாடகத்தின் காட்சி மாற்றங்களைக் கொண்டே சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். பரிதவிக்கச் செய்யும் அத்தியாயம் அது. ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கும். அதே தவிப்பினை பன்மடங்குத் தீவிரத்துடன் வெண்முகில் நகரத்தின் முதல் பத்தொன்பது அத்தியாயங்கள் அளித்தன.

பாண்டவர்களை திரௌபதி மணந்ததிலிருந்து அஸ்தினபுரி இரண்டாகப் பிரிவது வரையிலான நாவல் வெண்முகில் நகரம். அறத்துணைவியாகவும் இல்லத் துணைவியாகவும் திரௌபதியை பாண்டவர்கள் ஏற்பதற்கான நியாயங்களுடனும் உளம் காட்டும் ஆடியென ஒவ்வொரு பாண்டவனுடனும் திரௌபதி வெளிப்படுவதை சொல்கின்றன முதல் ஆறு பகுதிகள். சகதேவனுடனான அவள் நாட்கள் இடம்பெறும் அத்தியாயங்கள் ஒருவித தீவிரமான அமைதியின்மையை ஏற்படுத்தின. ஆனால் ஒரு தீவிரமான படைப்பினை  முதன்முறை வாசிக்கும்போது ஏற்படும் நிலையின்மையே அப்படைப்பை நெருங்க நம்மைத் தூண்டுகிறது என்பது என் எண்ணம். யுதிஷ்டிரனிடம் இணை அரசியென பீமனிடம் விளையாட்டுப் பெண்ணென அர்ஜுனனிடம் ஆணவம் சீண்டப்பட்டவளென நகுலனிடம் இணைத் தோழியென சகதேவனிடம் கனிந்தவளென அவள் தோற்றம் கொள்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு பாண்டவனிடமும் சொல்லப்படும் சூதர் கதைகளும் சமையர்கள் என்றழைக்கப்படும் இருபாலினத்தவர்களான ஒப்பணையாளர்கள் பாண்டவர்களுடன் உரையாடுவதும் முதல் ஆறு பகுதிகளை அடர்வு மிக்கதாகவும் அந்தரங்கமானதாகவும் மாற்றி விடுகின்றன.

மலைகளின் மடி எனத் தொடங்குகிறது ஏழாவது பகுதி. வெண்முரசின் முதல் ஐந்து நாவல்களை வாசித்தவர்கள் மகாபாரத காலகட்டத்தில் பாரதவர்ஷம் என்றழைக்கப்பட்ட இப்பெருநிலத்தின் வணிகம் கலை வாழ்வுமுறை குறித்து ஒரு சித்திரத்தை அடைந்திருக்க முடியும். வளம் மிக்க தென் நிலத்தையும் வணிகம் செழித்த கடல் நகரங்களையும் வெண்முரசு முன்னரே அறிமுகம் செய்திருக்கிறது. இமயமலைத் தொடரின் அடிவார நிலங்களின் அரசியலை அறிமுகம் செய்கிறது வெண்முகில் நகரம். பத்து நாடுகளாக பிரிந்து கிடக்கும் நாடுகளை ஒன்றிணைக்க நினைக்கிறார் மத்ர நாட்டின் அரசரான சல்லியர். மைய நிலத்தின் அரசியல் நிலைகள் மாறுவது விளிம்பினரை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை விரிவாகவே சொல்கிறது பத்து மலை நாடுகளில் ஒன்றான பால்ஹிகத்தின் இளவரசனான பூரிசிரவஸை அறிமுகம் செய்யும் அத்தியாயங்கள். கடுங்குளிர் கொண்ட பால்ஹிக நாட்டிலிருந்து அஸ்தினபுரியின் மைந்தனான பால்ஹிகர்களின் குல மூதாதை பால்ஹிகரை அழைக்க பாலை நிலமான சிபி நாடு செல்கிறான் பூரிசிரவஸ். நிலத்தின் தன்மை அதன் மக்களை பாதிக்கும் விதமும் வெண்முகில் நகரத்தில் விளக்கப்படுகிறது. பெருங்கனவுகள் கொண்டவனாக போர் வீரனாக தன் குடிமக்களின் குணங்களுக்கு வெளியே நிற்பவனாக பூரிசிரவஸ் அறிமுகமாகிறான். சிபி நாட்டின் தேவிகையிடமும் மத்ர நாட்டின் விஜயயையிடமும் அவன் மனம் கொள்ளும் நுட்பமான உணர்வுகளும் அதனுடன் இணைந்துள்ள அரசியலும் அன்புக்கும் அமைப்புக்குமான சிக்கலான உறவினை தெளிவிக்கின்றன. தொன்மமாகவே அறியப்பட்டு அத்தொன்மத் தன்மையுடனே வாழ்கிறார் பால்ஹிகர். பால்ஹிகரை தேடிச் செல்லும் பூரிசிரவஸ் மலையில் பிரேமையை மணக்கிறான். மலைக்குடியினர் குறித்து அறியாத என் போன்ற யாரும் அவ்வத்தியாயங்களை நெருடலுடனே கடந்து செல்ல முடியும். அன்பும் காதலும் உறுதியற்றதாகவே இருக்க இயலும். உறுதியின்மையே அவ்வுணர்வுகளை பேரழகு கொள்ளச் செய்கின்றன என்று வகுத்துக் கொண்டே மலையை விட்டிறங்க முடிகிறது. பத்து அரசுகளும் ஒன்றிணைந்து பூரிசிரவஸை துரியோதனனைப் பார்க்கத் தூதனுப்புகின்றன. பாண்டவர்கள் பாஞ்சாலத் தலைநகர் காம்பில்யத்திலேயே இருக்கின்றனர். கர்ணனும் துரியோதனனும் அவர்களை போரிட்டு வெல்ல நினைக்கின்றனர். பூரிசிரவஸ் துரியோதனனை அணுகும் கணத்தில் அவன் தன் மீது கொண்டிருக்கும் மதிப்பே வெளிப்படுகிறது. பூரிசிரவஸால் கர்ணன் மனம் குழம்பும் அத்தியாயம் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு தாக்கியும் கௌரவர்களும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் தோற்கின்றனர்.

துவாரகை மேற்கு கடற்கரையின் தவிர்க்க முடியாத பெருநகராக வளர்ந்து வருவதை சித்தரிக்கிறது வெண்முகில் நகரம். துவாரகையில் தொழும்பன் எனும் வாழ்நாள் அடிமையாகவும் சித்தமாகிறான் சாத்யகி என்ற யாதவ இளைஞன். தொழும்பக் குறி பெற்றவன் கிருஷ்ணனின் அணுக்கனாகிறான். நாவலில் பெரும்பகுதி கிருஷ்ணனின் சித்திரம் சாத்யகியின் விழி வழியே வருகிறது. வெண்முகில் நகரம் மறு வாசிப்பு செய்த அதே நேரத்தில் வெண்முரசின் பதினோறாவது நாவலான "சொல் வளர் காட்டிலும்" கிருஷ்ணன் அறிமுகமாகிறான். இரண்டையும் ஒரே நேரம் படித்தது கிருஷ்ணன் குறித்த பல புரிதல்களை அளித்தது. ஒவ்வொன்றையும் முற்றறிந்தவனாக எதையும் பொருட்படுத்தாதவனாக அனைத்தையும் பொருட்படுத்துபவனாக கிருஷ்ணன் விரிந்து கொண்டே செல்கிறான். காம்பில்யத்திலிருந்து அஸ்தினபுரியை தலைநகராகக் கொண்ட குரு நாட்டினை இரண்டாகப் பிரிப்பதற்கான தூதுடன் புறப்படுகிறான் கிருஷ்ணன். புறப்படுவதற்கு முன் திரௌபதியுடனான கிருஷ்ணனின் உரையாடல் கூர்மையானது. பெருங்கனவுகளை ஏந்தியவளாகவும் ஆணை மட்டுமே இடத் தெரிந்தவளாகவும் வெளிப்படுகிறாள் திரௌபதி.

கிருஷ்ணன் சாத்யகியுடன் அஸ்தினபுரி வருகிறான். ஒவ்வொருவரின் மன விழைவையும் கனவினையும் தெளிவாக உணர்கிறான். சகுனியின் அமைச்சரான கணிகரை அவன் சமாளிக்கும் இடமும் தன் முடிவினை நோக்கி மெல்ல மெல்ல அவையினை நகர்த்துவதும் பலராமரின் வெகுளித்தனமான சொற்களை துல்லியமாகப் பயன்படுத்துவதும் என அவன் மதிசூழ்கை திகைக்கச் செய்கிறது. திருதராஷ்டிர் காந்தாரி பீஷ்மர் என ஒவ்வொருவரையும் அவன் சந்திக்கிறான். ஒவ்வொருவருக்குமான வாய்ப்பாகவே அது தெரிகிறது. மனம் பிறழ்ந்த இளைய காந்தாரியான சம்படையுடனும் உரையாடுகிறான் கிருஷ்ணன். அவன் நகர் நீங்கியதும் அவள் இறக்கிறாள். விடுபடுதல் என்றே எண்ணச் செய்கிறது அவ்விறப்பு.

பூரிசிரவஸின் கனவுகள் சிதைகின்றன. தேவிகையை பீமன் சிறையெடுக்கிறான். தருமன் அவளை மணக்கிறான். விஜயை சகதேவனுக்கு மணமுடிக்கின்றனர். ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னிருக்கும் அரசியல் கணக்குகளால் வேகமெடுக்கிறது நாவல். பானுமதியை துரியோதனன் மணக்கிறான். அவள் தங்கை பலந்தரையை பீமன் மணக்கிறான். பானுமதியால் துரியோதனனின் அகத்தில் நிகழும் மாற்றங்கள் திருதராஷ்டிரரை நோக்கி அவனை நகர்த்துகின்றன. துரியோதனனிடம் திருதராஷ்டிரின் மூர்க்கமான வெளிப்பாடு பிழையீடென சுயவதையென முதலில் தோன்றினாலும் அச்செயலே நாவலை ஒருமையை நோக்கி நகர்த்துகிறது.

சேதிநாட்டு இளவரசியரை பீமனும் நகுலனும் மணக்கின்றனர். சாத்யகி பீமனின் மனைவியான பலந்தரையையும் சேதி நாட்டு இளவரசிகளையும் சந்திக்கும் இடத்தின் வழியாக திரௌபதி பேருருக் கொள்கிறாள். ஒரு விதத்தில் வெண்முகில் நகரத்தில் பேராளுமைகளுடன் மோதி தங்கள் எல்லைகளையும் வலிமைகளையும் வலுவின்மைகளையும் பிறர் கண்டு கொள்ளும் சித்திரங்கள் எழுந்தபடியே உள்ளன. குந்தியின் இடம் முக்கியத்துவமிழந்து திரௌபதி இயல்பாகவே மேலும் பெரிய ஆளுமையாக அங்கு நிறைகிறாள். திரௌபதியின் மண நிகழ்வு பூரிசிரவஸை சாத்யகியை இலக்குகளை நோக்கி நகர்த்துகிறது. அத்தனை பேராளுமைகளும் வெல்லப்பட தூற்றப்பட வெறுக்கப்பட காத்திருக்கிறார்கள். கிருஷ்ணனும் திரௌபதியும் அவ்வெறுப்பினை பொறாமையை சூழ்ச்சியை தத்தமது வழிகளில் எதிர்கொள்கின்றனர்.

துச்சளையையும் மணக்க முடியாமல் ஆகும் போது பானுமதி பூரிசிரவஸிடம் சொல்பவை கூரிய எதார்த்தங்கள். 
மக்களிடம் தமக்கு சாதகமான உளநிலையை உருவாக்க கௌரவர்கள் பக்கம் கணிகரும் கர்ணமும் பாண்டவர்கள் பக்கம் குந்தியும் முயல்கின்றனர். அனைத்தையும் ஒற்றை சமரசப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறான் கிருஷ்ணன். கௌரவ நூற்றுவர்களும் மணம் கொண்ட பின் திரௌபதி நகர் நுழைவதோடு முடிகிறது வெண்முகில் நகரம்.

வாசித்து முடித்ததும் மிக இறுக்கமான நாவல் என்ற எண்ணமே எழுந்தது. பாண்டவ கௌரவர்களின் பிறப்புடன் நிறைவடையும் மழைப்பாடலை விட இறுக்கமான நாவல் வெண்முகில் நகரம். பூரிசிரவஸ் சாத்யகி என இருவரின் பார்வையிலேயே நாவல் பெரும்பாலும் செல்கிறது. முன்னவனுக்கு வாள். பின்னவனுக்கு தழும்பு. பெரு விழைவுகளால் இயக்கப்படுகிறான் பூரிசிரவஸ். சிறுமை தீண்டாதவனாக தன்னை நிறுத்திக் கொள்ளும் துரியோதனுடன் இயல்பாகவே பொருந்தி விடுகிறான். கிருஷ்ணனுக்கு தன்னை முழுதாகவே அர்ப்பணிக்கிறான் சாத்யகி. விழைவினால் இயக்கப்பட்டு அத்தனை துயரையும் அடைந்தவனாக பூரிசிரவஸும் முழுதாக விடுபட்டவனாக சாத்யகியும் சந்தித்துக் கொள்கின்றனர்.கொந்தளிப்பான நாடகம் முடிந்து திரும்பும் நிறைவே மனதில் பரவுகிறது உடன் ஒரு மெல்லிய வலியும்.

No comments:

Post a Comment