நூல் ஏழு - இந்திரநீலம்

வெண்முரசு நாவல் வரிசையில் முதல் ஆறு நாவல்களும் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னரே முதல் முறை வாசித்தேன். காண்டவம் எனப்பெயரிட்டு தொடங்கப்பட்ட நாவல் பாதியில் கைவிடப்பட்டது. ஒரு வகையான விளக்க முடியாத இழப்புணர்வை அந்நேரம் உணர்ந்தேன். திரௌபதி நாகர்கள் குறித்து அறியும் வகையில் காண்டவம் தொடங்கும். காண்டவ வனம் நாகர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு இந்திரப்பிரஸ்தம் அமைக்கப்படும் சித்திரம் பின்னர் கர்ணனை மையப்படுத்தி வெளிவந்த ஒன்பதாவது நாவலான வெய்யோனில் முழுமையடைந்திருக்கும்.
இந்திரநீலம் தொடங்கியது முதலே உடன் பயணித்தது முதல் ஆறு நாவல்களில் இருந்து இந்திரநீலத்தை வேறுபடுத்தியது. இந்திரநீலம் மையக் கதையோட்டத்திலிருந்து பல இடங்களில் விலகியும் சில இடங்களில் நெருங்கியும் பயணிக்கும் நாவல். கிருஷ்ணன் எட்டு தேவியரை மணம் கொள்ளும் சித்திரத்தின் வழியாக கிருஷ்ணனின் பேராளுமையும் அதனுடன் மோதியும் பணிந்தும் பகைத்தும் விலகியும் பிற ஆளுமைகள் தங்கள் எல்லைகளை நிறுவிக் கொள்ளும் விதமும் இந்நாவலில்  வெளிப்படுகிறது. பெரும்பான்மையானவர் அறிந்திருக்கும் விஸ்வாமித்திரர் மேனகைக் கதையை ஆட்டனும் விறலியும் நடிக்கப் பார்த்திருக்கிறான் திரௌபதியின் உடன் பிறந்தவனான திருஷ்டத்யும்னன். அன்றிரவு விறலியான சுஂப்ரைக்கும் அவனுக்கும் நிகழும் உரையாடலும் அவள் மேல் திருஷ்டத்யும்னன் கொள்ளும் காதலும் அவளின் முழுமையான அர்ப்பணிப்பும் நாவல் முடியும் வரை இணைத்துப் பார்க்கக் கூடியதாக நீள்கின்றன.

போரினால் உடலில் ஏற்பட்ட குறைபாடுகளுடன் இருக்கும் திருஷ்டத்யும்னன் திரௌபதியின் ஆணையின்படி இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்கான பொருள் கோருவதற்காக துவாரகை புறப்படுகிறான்.முந்தைய நாவலான வெண்முகில் நகரத்திலேயே துவாரகை அறிமுகம் கொண்டிருந்தாலும் அந்நகரிலேயே வாழும் உணர்வளிக்கிறது இந்திரநீலம். விழவும் களியாட்டுகளும் என முகம் காட்டி நின்றாலும் முழுமையான காவலுக்குள்ளும் இருக்கிறது அந்நகர். மேற்கு கடல் வழியாகவும் சூழ்ந்த நிலம் வழியாகவும் இந்திய நிலங்களுடன் தொடர்பு கொண்டிருந்த கிரேக்கர்களும் அரேபியர்களும் ஆப்பிரிக்கர்களும்  உலவும் பெரும் வணிக நகராக உருக் கொள்கிறது துவாரகை. அவர்களின் கலையும் கட்டிட அமைப்பும் ஊடு கலந்து துவாரகை ஒரு நவீன நகராகவே தெரிகிறது. துவாரகை குறித்த வரலாற்றறிவு உடையவர்கள் மேலு‌ம் நுண்மையாக ரசிக்கக்கூடியதாக இந்திரநீலம் இருக்குமென நம்புகிறேன்.

தயக்கமும் குழப்பமுமாக நகர் நுழையும் திருஷ்டத்யும்னன் சாத்யகியுடன் கொள்ளும் நட்பின் வழியாகவும் கட்டற்ற அந்நகர் ஒரு வீரனுக்கு அளிக்கும் உத்வேகத்தினாலும் விடுபடுகிறான். நகர் முழுக்க இளைய யாதவரான கிருஷ்ணனின் கதையையே பாடியலைகின்றனர் சூதர். நாடக அரங்குகளில் அவர் இளமையே நடிக்கப்படுகிறது.

சாத்யகியுடன் இளைய யாதவர் சத்யபாமாவை மணம் கொண்ட நாடகத்தை பார்க்க அமர்கிறான் திருஷ்டத்யும்னன். பல குலங்களாக பிரிந்த் கிடக்கும் யாதவர்களில் அந்தக குலத்தைச் சேர்ந்தவள் சத்யபாமா. அவள் குலத்தின் அடையாளமாக அவர் தந்தை சத்ராஜித்திடம் இருக்கிறது சியமந்தகம் எனும் மணி. காம குரோத மோகங்களைக் கடந்து விழியிழந்த அந்தக குல மூதாதை ஒருவர் அடைந்த இந்திரநீலக் கல்லான சியமந்தக மணியினூடாக இளைய யாதவர் நிகழ்த்தும் ஆடலாக விரிகிறது இந்திரநீலம். விடியலின் இளமழையாக கிருஷ்ணனை உணர்கிறாள் பாமா. துவாரகையின் பேரரசியாக இளைய யாதவரின் நெஞ்சமர்ந்தவளாக தன்னை உணரும் பாமா சியமந்தகத்தை மையமாகக் கொண்டு நடக்கும் பூசல்களால் அவரைப் பிரிய நேர்கிறது. ஒளிரும் மணியான சியமந்தகம் ஒவ்வொருவரின் மனதினுள் எழும் இருளுடன் உரையாடுவதாகவே உருவகப்படுத்தப்படுகிறது. அனைத்துப் பெருமைகளையும் துறந்தவளாக தனித்திருக்கும் போதும் இளைய யாதவனை தன் கொழுநனாகவே உணர்கிறாள் பாமா. சேதி நாட்டரசன் சிசுபாலன் சத்யபாமாவை மணங்கொள்ள வருகையில் ஏழன்னையராக அவன் முன் எழும் சித்திரம் கூர்மையானது. சியமந்தகத்தை அணிந்து வனம் புகும் சத்ராஜித்தின் இளைய தமையன் பிரசேனர் உயிரிழக்கிறார். ஜாம்பவ மூத்தவரை வென்று ஜாம்பவதியை மணப்பதற்கு சொல்லளித்து  தொலைந்த சியமந்தகத்துடன் மீண்டு பாமாவின் கரம் பற்றுகிறார் இளைய யாதவர்.

அர்ப்பணித்தலின் வழியாக அறிய முடியாதவர்கள் பொறாமையின் வழியாகவும் வஞ்சத்தின் வழியாகவும் அவனை அறிகின்றனர். திருஷ்டத்யும்னன் நகர் நுழைந்த சில தினங்களில் அர்ஜுனனுடன் துவாரகை நீங்குகிறார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் பாமாவையும் அதன்பின் ஜாம்பவதியையும் சந்திக்கும் அத்தியாயங்கள் இருவருக்கும் இடையேயான இனிய வேற்றுமையை சுட்டி நிற்கின்றன. இளைய யாதவர் மேல் வஞ்சம் கொண்டு சத்யபாமாவின் தகப்பனும் களிந்தகத்தின் மன்னனுமான சத்ராஜித்தின் தலை கொய்து சியமந்தகத்தை களவாடுகிறான் கிருஷ்ணவபுஸ் என்ற சிற்றரசின் மன்னனான சததன்வா. சியமந்தகத்தை மீட்பதற்காக அக்ரூரரும் துவாரகையின் படைத்தலைவனான கிருதவர்மனும் கிருஷ்ணவபுஸை அடைகின்றனர். அவர்களையும் வெல்கிறது அம்மணி. சததன்வாவைக் கொன்று மணியுடன் மீள்கிறார் இளைய யாதவர். அக்ரூரரின் எல்லையை அவருக்கு உணர்த்துவதோடு கிருதவர்மனை நகர் நீங்கச் செய்கிறார் இளைய யாதவர்.

இளைய யாதவரின் முதல் அரசியான ருக்மிணியை அவர் மணந்ததை சொல்லும் அத்தியாயங்கள் அதன்பின் விரிகின்றன. ஜாம்பவதிக்கு இளநீல முகிலாக சத்யபாமைக்கு விடியலின் மென்மழையாக தோற்றமளிக்கும் காதல் விதர்ப்ப நாட்டின் இளவரசி ருக்மிணிக்கு வரதா எனும் நதியாகிறது. அந்நதியின் வழியே அன்னத்தையும் அன்னத்தின் வழியே அவனையும் கண்டடைகிறாள். ருக்மிணியின் மூத்த தமையன் ருக்மியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது விதர்ப்பத்தின் அரண்மனை. சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கு ருக்மிணியை மணமுடிக்க நினைக்கிறான் ருக்மி. இளைய யாதவருக்கு செய்தி செல்லவே ஆடியின் இறுதி நாளில் அவளை கவர்கிறார். ருக்மிணி சியமந்தகத்தை தான் சூடி ஷத்ரியர் அவையில் அமர வேண்டுமென்று திருஷ்டத்யும்னனிடம் பணிக்கிறாள். அவன் சத்யபாமாவை சந்திப்பதற்கு முன் மத்ர நாட்டரசரான சல்யரின் மகளை மணக்க திருஷ்டத்யும்னனை வேண்டி ஓலையனுப்புகிறார் அவன் தந்தை துருபதன். அதே நேரம் இளைய யாதவரின் மற்றொரு துணைவியான  உத்தரமத்ர நாட்டின் இளவரசி லட்சுமணை அவனை சந்திக்க விழைகிறாள். வீணையில் தன் முழுமையைக் கண்டு கொள்ளும் பிருஹத்சேனரின் மகளாய்ப் பிறந்த லட்சுமணை இளைய யாதவரின் கரம் பற்றியதை சாத்யகி திருஷ்டத்யும்னனிடம் சொல்கிறாள். லட்சுமணையுடன் அணுகி இருக்கும் பத்ரை தங்களுக்கும் சியமந்தகத்தில் உரிமையுண்டு என திருஷ்டத்யும்னனிடம் உரைக்கிறாள். இளைய யாதவரை அவள் மணந்ததை சுருக்கமாக திருஷ்டத்யும்னனிடம் கூறுகிறாள்.

தேர்ந்த சொற்களினூடாக சத்யபாமாவின் அந்தக குலத்தின்  சியமந்தக மணியை அனைத்து அரசியருக்கும் பொதுவானதாக ஆக்குகிறான் திருஷ்டத்யும்னன். சியமந்தகத்துடன் சதுக்க பூதத்தின் முன் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் நிகழ்த்தும் உரையாடல் மனதின் மிக நுண்ணிய தளங்களை தொட்டுத் தீண்டுகிறது. சியமந்தகத்தை சாத்யகியிடம் கொடுத்து கரடி குலத்து இளவரசியான ஜாம்பவதியிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் திருஷ்டத்யும்னன். மறுநாள் அக்ரூரரை அவன் சந்திக்கும் போது கோசலையின் இளவரசியான நக்னஜித்தியை இமயத்தின் ஏழு வலுவான களிற்றுக் காளைகளை அடக்கி இளைய யாதவர் மணந்ததை அவனிடம் சொல்கிறார். கோசலத்தினரால் மற்றொரு ராமன் எனவே கொள்ளப்படுகிறான் கிருஷ்ணன். "அவன் நானே" என கிருஷ்ணன் சொல்வது உள எழுச்சி கொள்ளச் செய்கிறது. சாத்யகியையும் ஆட்கொள்கிறது சியமந்தகம். துவாரகைக்கு அப்பால் விரிந்திருக்கும் பாலையில் சாத்யகியை கண்டடைகிறான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகியுடன் திருஷ்டத்யும்னன் மீளும் அத்தியாயத்தில் இருந்து நாவல் திடீரென வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. இளைய யாதவரை சந்திப்பதற்கு முன் அவர்கள் மனம் கொள்ளும் வேடங்களும் கழிவுணர்ச்சிகளும் சென்று தொடும் மகத்தான உச்சங்களும் என அலைபாய்கிறது. அவந்தியின் இளவரசியான மித்ரவிந்தையை இளைய யாதவர் கரம் பற்றியதை ஒரு சூதன் சொல்லில் கேட்கின்றனர் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும். துரியோதனருக்கு அவளை மணமுடிக்க நினைக்கின்றனர் அவளின் சகோதரர்களான விந்தரும் அனுவிந்தரும். குழலிசையே கேட்டிராத மித்ரவிந்தை வண்டு துளைத்த மூங்கிலில் வளி நுழையும் இசை கேட்டு குழலின் மீது காதல் கொண்டு குழலோனை எண்ணிக் கரைகிறாள்.

தன் சகோதரி சுபத்திரையுடன் ஒரே இரவில் அவந்தியை அடைந்து மித்ரவிந்தையை அடைகிறார் இளைய யாதவர். குசலன் எனும் களிமகனிடம் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் கேட்கும் வேதாந்தம் இயல்பாகவே வெண்முரசில் கீதை நிகழப் போகும் அத்தியாயங்களை எண்ணி ஏங்க வைக்கிறது. குருதி சிந்தும் களத்தில் உரைக்கப்படும் கீதைக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். சியமந்தகத்தை பெற்றுக் கொண்டு சாத்யகியை தண்டிக்கும்படி திருஷ்டத்யும்னனிடம் அரசாணை வருகிறது. அதை மறுத்து இளைய யாதவர் முன் சென்று நின்கின்றனர் இருவரும். "நதியின் ஊற்றுமுகம் அதன் மையம்" எனும் அறிதலை இன்றும் முழுதாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதனுடன் காளிந்தியை மணந்ததை எட்டு அரசியரும் சூழ்ந்திருக்க திருஷ்டத்யும்னனிடமும் சாத்யகியிடமும் கூறுகிறார் இளைய யாதவர். சியமந்தகம் தேவியர் ஒவ்வொருவர் கையிலும் ஒரு நிறம் பெற காளிந்தியின் கையில் கூழாங்கல்லென நிறமிழக்கிறது. அர்ப்பணிப்பின் வழியே விழைவினை கடந்து செல்லும் அறிதலுடன் சுபத்திரையின் கரங்கள் வழியை மீண்டும் ஆழத்துக்கே செல்கிறது சியமந்தகம்.

கிருஷ்ணன் எட்டு இளவரசியரை மணந்ததற்கு வலுவான அரசியல் காரணங்கள் உண்டு. நாவலினூடாகவே அவை சொல்லவும்படுகின்றன. பெருமை இழந்த ஷத்ரிய குலங்களிலிருந்தும் மைய அரசியலை நோக்கி நகரும் பிற குலங்களிலிருந்தும் இளைய யாதவர் மணம் கொள்கிறார். யாதவர்களின் வலுவான மற்றொரு தரப்பான அந்தக குலத்திலிருந்தும் மணம் புரிகிறார். அஷ்டலட்சுமிகளாக இளைய யாதவரின் எட்டு தேவியரும் உருவகிக்கப்படுகின்றனர். வலுவான நோக்கங்களையும் தெளிவான மௌனங்களையும் பிண்ணனியாகக் கொண்டிருந்தாலும் இந்திரநீலத்தின் அழகியலே முதன்மையாக மனதில் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு மணமும் சொல்லப்படும் சொற்களின் மொழியும் உணர்வும் வேறு வேறு. நாடகத்தின் வழியே சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் காணும் சத்யபாமாவின் மனதையும் காவியத்தின் வழியே திருஷ்டத்யும்னன் வாசிக்கும் ருக்மிணியின் காதலையும் ஒப்பிட்டால் வியப்பேற்படுகிறது. முன்னது மகத்தான உச்சங்களும் சாகசங்களும் துயரங்களும்  நிறைந்தது. பின்னது செறிவான மொழியும் நிதானமான நடையும் கொண்டது.  பாமாவின் செவிலித்தாயான மஹதியும் ருக்மிணியின் செவிலியான அமிதையும் கொள்ளும் உணர்வுகள் வழியாகவே பாமாருக்மிணியை அறிய முடிகிறது. இளைய யாதவரும் தன்னை வெளிக்காட்டாமல் எதிர் நிற்பவருக்கு ஏற்றவாறே உருவம் கொள்கிறார்.

சியமந்தகம் இளைய யாதவர் எனும் ஆளுமையுடன் மோதி தன் எல்லைகளை ஒவ்வொருவரும் உணரும் களமாகவே காட்சி தருகிறது. அகம் நிறைந்த காதலால் திருஷ்டத்யும்னன் அதனிடமிருந்து விலகி நிற்பதாகவே கொள்கிறேன்.

எல்லா பக்கங்களிலும் விரிந்து பரவி சிதறி வழியும் நாவலான பின் தொடரும் நிழலின் குரலை இறுதியாக ஏசு கிறிஸ்து வந்து முடித்து வைப்பார். அதைப்போலவே இந்திரநீலத்தை இளையயாதவர் முடித்து வைப்பதாக எண்ணிக் கொள்கிறேன்.

Comments

  1. Your tamil is more difficult than english for ordinary people I think

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024