மின்னற்கணம் - சிறுகதை
செவியை அடைக்கும் கனத்த மௌனத்தில் கீறல் விழுந்தது போல ஒருவர் அடிவயிற்றிலிருந்து குமட்டுவதும் எரிச்சல் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு குழந்தை அழுவதும் கேட்டன. மாதாவிற்கும் குழந்தை ஏசுவுக்கும் கத்தரிப்பூ நிறப் பொன் சரிகை பட்டுடுத்தி பிரபலமான "நமச்சிவாய நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா" பாடல் மெட்டில் "தேவன் துதி" பாடியபடியே காவி உடுத்திய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சத்தமாக பேசிக்கொண்டு வேளாங்கண்ணிக்கு ஒரு சிறிய தேரை உருட்டியபடி சென்று கொண்டிருந்தனர். உச்ச விரைவில் சென்று கொண்டிருந்த பேருந்து நின்றபோது உடனோடிய மனம் நிற்காமல் அதே வேகத்தில் முறுக்கிக் கொண்டிருந்தது. வியர்வை நாற்றத்தை நாசி பழகவும் மௌனத்தை செவி ஏற்கவும் சற்று நேரம் எடுத்துக் கொண்டது. வெகு நேரம் அமர்ந்திருந்ததால் கால்கள் எழ மறுத்தன. சாப்பிட்ட உடனே பேருந்தில் ஏறியிருந்ததால் குலுக்கலில் அடிவயிறு கலங்கியிருந்தது. ஒரு வித ஒவ்வாமை உடலில் தோன்றி பெருகியபடியே சென்றது. அவிழ்த்தக் கூந்தல் முகத்தில் வந்து விழும்படி பெண்ணொருத்தி தன்னுடைய பயணப் பெட்டியை எடுத்தாள். அவள் உடலில் இருந்து எழுந்த வாசனை அருவருப்பூட்டியது. ஏதோ நினைத்தவளாய் மீண்டும் பெட்டியை வைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.
ஒரு நொடி என்னை நோக்கித் திரும்பியவள் நான் திரும்பப் போவது தெரிந்ததும் தலை திருப்பிக் கொண்டாள். எப்படி அறிகிறார்கள்? சூழல் பிரக்ஞை முழுவதுமாகவே அற்றுப் போனது. எப்படி அறிகிறார்கள்? ஆயிரக்கணக்கான ஒரு நொடிகளை சந்தித்தாயிற்று. என்ன தான் சொல்கிறது அந்த ஒரு கணம்? கனம். தாளவே முடியாதது. பெருங்கடலொன்று ஒரே அலையாக மாறி ஒரு கணத்தில் அறையும் கனம். உள்ளுக்குள் ஊற்றெடுத்த அனைத்தையும் வன்மம் என ஒற்றை வார்த்தையில் தொகுக்க துணுக்குற்றேன். வஞ்சம் பொறாமை பேரன்பு பெருங்கோபம் என வார்த்தைகளை எளிமையாக தொகுத்து விடமுடிகிறது. அக்காவின் மகளை விட எனக்கு நெருக்கமான இன்னொருவர் கிடையாது. ஆனால் அவள் வளர்ந்த பிறகு முதன்முறையாக பார்த்தபோது எழுந்தது ஒரு வெறுப்பு தான். எனக்குப் பிடிக்காத ஏதோவொன்று எப்போதுமே அவளிடம் உண்டு. முதலில் நேரடித்தன்மை என்றே அதை எண்ணியிருந்தேன். சற்றும் நாசூக்கில்லாமல் நேரடியாக எல்லாவற்றையும் கொட்டும் குணம். பின்பு இயல்பினாலேயே அவளிடம் வெளிப்படும் பெருமையுணர்வும் பாசாங்குமென அதனை சற்று தீவிரப்படுத்திக் கொண்டேன். அதுவும் போதாமலானபோது எத்தகைய மீறலையும் நிகழ்த்திவிடும் ஒரு பெருந்தீங்கின் வடிவாக அவளை கற்பனை செய்து கொண்டேன். என் கற்பனை பெருகப் பெருக அவளை மேலும் மேலும் நெருங்கினேன். அத்தகைய நெருக்கத்தை அவள் வேறு யாரிடமும் உணர்ந்திருக்க முடியாது. அவள் என்னை விலகவே முடியாது. நாட்கள் செல்லச் செல்ல அவளை நானும் விலக முடியாது என்ற நிலையை அடைந்தேன். இன்றுவரை எனக்கும் அவளுக்கும் இடையே இன்னொருவர் வந்தது கிடையாது. வரும் நினைப்பு கூட யாருக்கும் இருக்க முடியாது. "கங்காரு குட்டி கணக்கா ஜூலியா உங்கிட்ட ஒட்டிகிட்டா போல" என சித்தப்பா சொன்னபோது எனக்கு வியப்பே ஏற்பட்டது.
மொத்த சித்ததையும் விழிகளில் குவித்து அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். பயம் வெறுப்பு என மனம் சிதறிக் கூவிய அனைத்தையும்
வன்மம் என்ற ஒற்றை வார்த்தையில் நிலைக்கவிட்டேன். நிச்சயம் அது தியானம். தியானமேதான். எவ்வளவு தெளிவாய் இருக்கிறது! என் எதிரே இருப்பவளை தன் இடக்கையால் கன்னத்தால் எண்ணத்தால் பார்வையின்மையால் என்னை பார்த்துக் கொண்டிருப்பவளை நான் வெறுக்கிறேன்! தேவனே!இவ்வளவு தெளிவை நான் ஏன் இத்தனை நாள் அடையவில்லை! உணடெழும் நெருப்பென என்னுள் எழும் வெறுப்பைக் கண்டு மலரென சுருங்குகிறாள். மலர் தான். மலரே தான்! நெருப்பு மலரை பொருளிழக்கச் செய்கிறது. மலர்வு மென்மை வண்ணம் என மலரின் எதுவும் நெருப்புக்குத் தேவையில்லை. மரங்களுடன் மட்டுமே நெருப்பு போராடுகிறது மரங்களை மட்டுமே நெடுநேரம் புணர்கிறது. மலர் நெருப்பின் தாகத்திற்கான அவமதிப்பு. நீ மலர். என் வெம்மையைத் தாளும் தகுதி கூட உனக்கில்லை. அவள் தேகம் சிலிர்க்கிறது. உதடுகள் ஓரமாக வளைகின்றன. திரும்ப விரும்பும் கழுத்துக்கு கட்டைளையிடுகிறாள். உணர்வுகளை பெரு மூச்சென வெளிப்படுத்துகிறாள். உணர்வுகளைக் காண முடியுமா என்ன? முடியும். பெரு மூச்சென கண்ணீரென எச்சிலென குருதியென வியர்வையென விந்தென. அவள் உள்ளெழுந்தது படபடப்பு. மறைக்க நினைக்காதே. மறைக்க மறைக்க தோற்பாய். என்ன செய்து கொண்டிருக்கிறேன். அவளை வதைக்கிறேன். தன் குருதி சுவைக்கும் நாயென. என் வஞ்சத்தை எப்படி காண்பிப்பது. ஒரு சிரிப்பு. தோழி நீ அதை எதிர்பார்க்கிறாய் என்பதாலேயே நான் அளிக்கப்போவதில்லை. ஆனால் உன் ஒருத்திக்கு மட்டும் நான் இதைச் செய்வது நியாயமா? எனக்கு மட்டும் நீங்கள் அளித்தது நியாயமா? அளிக்க விரும்பாமையை மட்டுமே எனக்களித்தீர்கள் எனலாமா? தெரியவில்லை ஆனால் இக்கணம் உன்னை இப்படி பார்த்திருப்பது எனக்கு உவகையை அளிக்கிறது. பெருந்தீங்கின் உவகையை உணர்கிறேன். நான் உவகையை உணர்ந்த கணமே வாட்கள் உரசிக் கொள்ளும் ஒலியுடன் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. மெலிதாக எழுந்த பதற்றம் மெல்லியதென்பதாலேயே வலிமையுடன் ஆக்ரமிக்கத் தொடங்கியது. ஊதி வாய் இறுகப்பற்றப்பட்டிருந்த பலூன் என என் பிடி இறுகிய போது அவள் மேலெழுவது தெரிந்தது. தவித்து என் படைகலன்களை திரட்டத் தொடங்கினேன். கண்களை அவளில் நிலைக்க விட முடியவில்லை. மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகர்ந்தாள். அந்நேரம் மாற்றமின்மையை வெறுத்தேன். கருணை அன்பு சமத்துவம் என நடிக்கும் அத்தனை பசப்புகளையும் வெறுத்தேன். அந்நொடி அப்படி மட்டும் தான் நகர முடியும். நான் வெல்ல முடியாது. வெல்லவே முடியாது. கீழ்மை எல்லைகளைத் தீண்டாமல் என் போன்றதொரு உயிர் இங்கு வாழ முடியாது. தலை திருப்பினால் ஆயிரம் சமாதானங்கள் சொல்ல வெறி கொண்டு காத்திருக்கிறது அறிவுலகு. எப்போதும் அழுது ஆர்ப்பரித்து அன்னையின் கருணையில் அடங்கும் கைக்குழந்தையென இவ்வுலகிடம் சரணடைகிறேன். இதற்கு நான் அளிக்கக்கூடியது ஒரு திகைப்பினை மட்டுமே. என் படைக்கலங்களை நீர்த்துப் போகச் செய்தபின் அன்னையென நெருங்கி நடிக்கிறது ஒன்று. அதென்ன அன்னையென நடிப்பது. அன்னையென்பதே பெரு நடிப்பு தானே. உலகின் மிகக் கீழான சுயநலமிக்க நடிகை அன்னை. அந்த குற்றவுணர்வை மறைக்கவே அத்தனை சமூகங்களும் அன்னையை உயர்த்துகின்றனவா? தன் பிறப்புறுப்பில் குறி நுழைக்காதவனிடம் அதன் வழியே தலை எட்டிப்பார்க்காத மற்றோர் உயிரிடம் அவளால் ஆழ்ந்த அன்பு கொள்ள முடியும் என்பது உண்மையானால் நான் ஒத்துக் கொள்கிறேன். ஒருவேளை அப்படித்தானா? என் குற்றுடல் கருநிறம் தெற்றுப்பல் குச்சிக்கைகள் தளர்ந்த கால்கள் இவை தான் என்னை அப்படி எண்ணச் செய்கின்றனவா?
என் தகுதி உயர்ந்தும் என் படுக்கை விலையுணர்ந்தும் என் கழிவறை வசதி மிக்கதாக இருந்தும் நான் செல்லும் வாகனத்தின் அளவு பெரிதாகியும் என்னை நான் என உணர்வது இவ்வுடலுடன் தான். இதனை மறைக்கவே படிப்பு பணம் தகுதி என அனைத்தையும் அள்ளி அள்ளி போட்டு மூடிக் கொள்கிறேன். ஆனால் இப்பார்வை! ஒரு நொடியில் என்னை அவிழ்த்தெரிந்து அம்மணமாக்குகிறது. குறுகி ஒடுங்கி உட்செலுத்தி விடுகிறது. அமர்ந்தபடி மட்டுமே நான் ஆணையிடுகிறேன் பத்தடி தூரத்திலேயே அனைவரையும் அணுகிறேன். காரணம் என் உடல். உலகின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு நாற்காலியாகவே இருக்க வேண்டும். அமர்ந்திருக்கும் போது என்னிடம் சமநிலை கூடுகிறது. என் கோணல் உடலும் குறுகிய கால்களும் வெளிப்பார்வைக்குத் தெரியாதவாறு என் முன்னே நீளமான மேசை கிடக்கிறது. எதிர் இருப்பவர் விழியை கவனிக்காதவாறு என்னால் உத்தரவிட முடிகிறது. அவர்களிடம் எழும் நடுக்கத்தை நினைத்து எனக்குள்ளொரு மிருகம் நா சுழற்றி மகிழ்வதை அவர்கள் அறியாதவாறு பார்த்துக் கொள்கிறது நாற்காலி. ஆனால் புறப்படப் போகும் இப்பேருந்தில் நான் அடையாளங்கள் இன்றி அமர்ந்திருக்கிறேன்.
காத்தவராயனும் காளியம்மனும் காக்கவில்லை என என் குடும்பம் ஆட்டிடையனிடம் அடைக்கலமானது. எங்கிருந்து எடுத்தது அவ்விழி இத்தனை பரிவினை. நண்பன் ஒருவரிடம் கேட்ட போது சிலுவையில் அறையப்பட்டு குருதியில் நனைந்த தேவதச்சனின் முகத்தை ஒற்றி எடுத்த ஒரு துணியை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டது அவ்வோவியம் என்றான். இன்னொரு நண்பர் மரபியல் அடிப்படையில் சுருண்ட முடியும் பருத்த உதடுகளும் கொண்ட ஒரு புகைப்படத்தைக்காட்டி இப்படித்தான் இருந்திருப்பான் என்றார். நான் நோக்கியது அவ்விழியை மட்டுமே. சினம் கொண்டு பற்றி எரியச் செய்யும் விழிகள். அதன் கருணைக்காவே ஆயிரம் முறை சிலுவையில் அறையலாம் அவனை. அவனைக் கொன்றது அதிகாரமோ வஞ்சகமோ அல்ல. பரிவு. பரிவுகாட்ட எஞ்சியிருந்ததா அவனிடம் நேரம்? அப்பரிவினை தாங்கிக் கொள்ள என்னால் இயலவில்லை. அவன் சுமந்ததையும் வீசி எறிந்தேன். என் குறித்து ஒரு சொல் பரிவோடு எழுந்தால் சொன்னவரை சொற்களால் கிழித்தெறிந்தேன். என்னை விலகியவர்கள் அத்தனை பேரும் எனக்காக இரங்கியவர்கள். அதன்பின் அவர்கள் யாருக்காகவும் இரங்க முடியாதபடி செய்தேன்.
ஆனால் இன்று பரிவினை எதிர்பார்க்கிறதா என் மனம்? என் சூம்பிய கைகால்கள் அறுந்து விழுந்தால் இடுங்கிய கண்கள் பார்வையற்றுப் போனால் என் மீது பிறருக்கு பரிவேற்படுமா? நிச்சயம் ஏற்படாது. நான் இறக்க வேண்டும். இறந்த பின் உணர முடியுமா என் மீது பொழியும் பரிவினை. இல்லை நானல்ல என் அம்மாவும் அப்பாவும் இறக்க வேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே என் உடல் பதறத் தொடங்கியது. இதுவரை அப்படி யோசித்ததில்லை. கூடத்தில் இரு உடல்களும் கிடக்கின்றன. கதறியபடியே ஓடிச்சென்று அப்பாவின் காலைக்கட்டிக் கொண்டு இல்லை மார்பில் மோதிக் கொண்டு அழுகிறேன். அதே அழுகிய இறைச்சியுடன் மது கலந்த மணம் குமட்டலை ஏற்படுத்துகிறது. அம்மாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தலை குனிந்து இறுக்கி முத்தமிடுகிறேன். எண்ணைப் பிசுக்குடன் மட்கிய சேலை கலந்த நாற்றம். அதை கற்பனை செய்ததுமே அவ்வெண்ணம் வலுவிழந்து விட்டது. அந்நேரம் பிறர் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அலுவலகத்தில் வெளிப்படும் அதே நிமிர்வுடன் ஒரு பணியென நினைத்து இறப்பினைக் கையாண்டால் என் மனம் அமைதியுறும். அது நடக்கப்போவதில்லை. மார்பு கிழிபட கதறி அழுது மயங்கி விழுந்தால் எனக்கென சிலர் "உச்" கொட்டுவார்கள். அதுவும் நடக்கப்போவதில்லை. பிறர் எண்ணி வெறுக்கவும் ஏளனம் செய்யவும் வாய்ப்பளிக்கவும் ஏதோவொரு அசைவு என்னிடம் வெளிப்படும். என்னிடம் எல்லாச் செயலிலும் வெளிப்படும் தயக்கம் அவர்கள் இறப்பிலும் வெளிப்படும். ஏன் இருவரும் ஒரே நேரத்தில் இறக்க வேண்டுமென எண்ணிக் கொள்கிறேன். அல்லது ஏற்கனவே இறந்து விட்டார்களா? அவர்களை காணத்தான் சென்று கொண்டிருக்கிறேனா?
பேருந்து புறப்பட்டு விட்டது. எத்தனை யோசித்தும் வீட்டிற்கு ஏன் செல்கிறேன் என்ற காரணம் மண்டையில உதிக்கவேயில்லை. என் விழிகள் பிணைத்திருந்த அந்தப் பெண்ணும் இயல்படைந்து விட்டாள். ஏன்? என் வலியை உணர்ந்து விட்டாளா? என் பெற்றோரின் இறப்பை அவள் அறிந்து விட்டாளா? அவர்கள் உண்மையில் இறந்து விட்டனரா?
பார்த்த முதற்கணமே அது எனக்குத் தெரிந்திருந்தது. அதை மறைக்கவே இத்தனையுமா? அவள் அழகி. பொறாமை கடந்த ஒன்றை உள்ளுக்குள் எழுப்பும் அழகி. முழுமையாக நிறைந்திருந்தால். ஆனால் அவளுக்கு திருமணமாகி இருந்தது. அதை எப்படியோ முன்னரே உணர்ந்திருந்தேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ள அஞ்சியே இத்தனை சொற்களையும் அள்ளிப்போட்டு மூடினேனா? மிருகத் தனமாக அவள் புணர்வில் இயங்குவதை கற்பனை செய்து பார்த்தேன். உடலை உலுக்கிக் கொள்ளும் வெறுப்பும் பொறாமையும் என்னுள் எழுந்தது. அவள் இறங்கப் போகிறாள் என்பதும் அவளை எதிர்கொள்ள அவளைப் புணர்ந்தவன் காத்திருக்கிறான் என்பதையும் என் சித்தம் முன்னரே எப்படி கண்டு கொண்டதென வியந்தேன்.
பேருந்து நின்றது. அவளுக்கு முன்பே அவனை நான் கண்டு கொண்டேன். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவினை மட்டும் நான் சற்று பரபரப்புடன் எதிர்கொண்டேன். அதே பரபரப்பை அப்போது உணர்ந்தேன். அவள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் பின்பக்கத்தில் நான் விழி நாட்டியிருந்தேன். அவர்களுக்கு குறுக்காக இறங்கி ஓடி என் பெற்றோர் இறந்து விட்டனர் எனச் சொல்லி அவளை கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல் இருந்தது. அவள் விழிகளை சந்தித்தவனின் விழிகள் இயல்பாக என்னை வந்து தொட்டுச் சென்றன. மின்னல் தீண்டிய கணமென அவன் விழிகளில் பேரழகியென மின்னி அணைந்தேன்.
Comments
Post a Comment