Pages

Sunday 4 December 2016

அன்னா கரீனினா - வாசிப்பு

அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை "பெருக்கிக்" கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும். கரைந்த நிழல்கள் ஒரு படம் கை விடப்படுகிறது என்பதை ஒரு மையம் போல வைத்துக் கொண்டு அடையாளமற்ற பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை சுற்றி பயணிக்கும். இன்று நாவலை இன்று வரை ஒரு நாவலென்றே ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அது எந்த மையமும் இல்லாமல் சுழன்று செல்லும். அதுபோலவே டால்ஸ்டாயிடமும் அவர் படைப்புகளின் கால வரிசையைக் கொண்டு ஒரு "பரிணாம" வளர்ச்சியை காண முடிகிறது. அவர் சாயலை பிரதிபலிக்கும் போரும் வாழ்வும் நாவலின் பீயர் அன்னா கரீனினாவின் லெவின் புத்துயிர்ப்பு நாவலின் நெஹ்லூதவ் ஆகியோரிடம் அதனை காண முடிகிறது. பீயரை ஒரு கள்ளமற்ற பெருங்கோபம் கொண்ட மனிதனாக எளிதில் மனமிரங்கி விடுபவனாக சித்தரித்திருப்பார். லெவின் கறாரான பண்ணையார் லௌகீகன் அதே நேரம் அந்த வாழ்க்கையில் இருந்தே தன் மீட்சியை நோக்கிச் செல்பவன். ஆனால் நெஹ்லூதவ் முழுமையாக தன்னை சீரழித்துக் கொண்டவன். அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்பவன்.

பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்ப்பில் பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கும் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை வாசித்தேன். ஒழுக்க மதிப்பீடுகள் காலத்துக்கு காலம் மாறுபடுபவை. இந்த நாவலின் சுருக்கமான பதிப்பு 1947-ல் வெளிவந்த போது தமிழறிஞர் இரா.தேசிகன் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். மேலும் எஸ்.நாகராஜன் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையும் நாவலின் முன் இணைப்பாக இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. பல வருட கால இடைவெளிகளுக்கு இடையே எழுதப்பட்டுள்ள இந்த இரு கட்டுரைகளுமே அன்னா கரீனினாவை ஒழுக்கத்தை முன்னிறுத்தும் ஒரு நாவலாகவே பார்க்கின்றன. ஒரு புறம் வழி தவறிய அன்னா-விரான்ஸ்கி. மறுபுறம் ஒழுக்கத்துடன் வாழும் லெவின்-கிட்டி. ஒழுக்கம் தவறிய ஒரு பெண்ணை தூற்றாமல் டால்ஸ்டாய் கருணையுடன் அணுகி இருக்கிறார் என்கிற ரீதியிலேயே இந்த நாவல் நம் சூழலில் அணுகப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. ஒரு எளிமையான ஒழுக்க விதியை முன் வைக்க எழுநூறு பக்கங்களை கடந்து விரியும் ஒரு நாவல் எதற்கு?

மாறியிருக்கும் சூழலில் இந்நாவலின் பொறுத்தப்பாடுகள்  வேறு மாதிரியானவை என்றே எண்ணத் தோன்றுகிறது. சகோதரன் மனைவி டாலியுடன் சகோதரன் ஆப்லான்ஸ்கிக்கு ஏற்பட்ட ஒரு பிணக்கை சரி செய்தவற்காக பீட்டர்ஸ்பர்கில் இருந்து மாஸ்கோ வருகிறாள் அன்னா. ஒன்பது வயது மகனுக்கு தாய் அன்னா. டாலியின் சகோதரி கிட்டி யாரைமணம் புரிவது என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இள வயதில் இருந்து தன்னுடன் பழகிய லெவின் அல்லது ராணுவ அதிகாரி விரான்ஸ்கி என அவள் முன் இரு வாய்ப்புகள் உள்ளன. அவள் லெவினை மறுதலிக்கிறாள். விரான்ஸ்கியை தேர்ந்தெடுக்கலாம் எனும் எண்ணி இருக்கும் போது அன்னாவால் அவன்  ஈர்க்கப்பட்டு விடுகிறான். அன்னா விரான்ஸ்கியால் தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் அவள் கணவன் கரீனினை விட்டுப் பிரிகிறாள். காதல் வண்ணமிழக்கும் போது எதார்த்தம் வதைக்க அவள் இறந்து விடுகிறாள். லெவின் தன் ஆன்மீக மீட்சியை நோக்கிப் பயணிக்கும் அதே நேர‌ம் ஒரு மகிழ்ச்சியும் பொறுப்பும் உள்ள கணவனாகவும் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான் என்பதைச் சொல்லி நாவல் முடிகிறது. ஆனால் இது அன்னாவின் சீரழிவைச் சொல்லும் நாவலென என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டால்ஸ்டாயிடம் என் வாசிப்பில் நான் காணும் ஒரு அம்சம் அவருடைய புனைவுகளில் மிக முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்திவிடும் மாற்றங்களை சுருக்கமாக சொல்லிவிட்டு கடந்து விடுவார். உதாரணமாக மாஸ்லவாவை மீட்டுக் கொண்டு வர நெஹ்லூதவ் பாடுபடுவதாகவே புத்துயிர்ப்பின் கதையோட்டம் இருக்கும். ஆனால் மாஸ்லவாவின் வாழ்வின் மோசமான நாட்களை ஒரே அத்தியாயத்தில் மிக விரைவாகச் சொல்லி கடந்து விடுவார். அது போலவே விரான்ஸ்கி அன்னாவால் கவரப்படும் இடத்தில் வெளிப்படும் அடர்த்தியான மௌனம். பீட்டர்ஸ்பர்கில் இருந்து மஸ்கோவிற்கு விரான்ஸ்கியின் அம்மாவுடன் பேசியபடியே ரயில் நிலையம் வருகிறாள் அன்னா. கதாப்பாத்திரங்கள் குறித்து சொல்லும் ஒரு சில வார்த்தைகளின் வழியாகவே அவர்களைப் பற்றிய ஒரு மனச்சித்திரத்தை டால்ஸ்டாய் உருவாக்கி விடுகிறார். அன்னா பேசும் சில வார்த்தைகளே அவளுடைய மேன்மையான குணங்களை சொல்லி விடுகின்றன.

ரயில் நிலையத்தில் "என்னிடம் இருந்த எல்லா கதைகளையும் சொல்லி விட்டேன்" என விரான்ஸ்கியின் அம்மாவிடம் சொல்வதும் "உங்கள் அம்மா அவர் மகனைப் பற்றியும் நான் என் மகனைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தோம்" எனச் சொல்லும் இடங்களுமே பிறரிடமிருந்து அவளை வேறுபடுத்துகின்றன. அவள் டாலியை சமாதானப்படுத்துவதிலும் அவளுடைய மேன்மைகளே வெளிப்படுகின்றன. கிட்டியை முதன் முதலில் அன்னா சந்திக்கும் இடத்தை மிக நுண்மையாக சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். குழந்தைகள் அவளை சூழ்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். மனதளவில் அவளை அன்னை அன்னை என நினைவுறுத்திக் கொண்டே இருக்கின்றன குழந்தைகள். விரான்ஸ்கியைப் பற்றி பேச்சு திரும்பும் போது இயல்பாகவே ஒரு சம்பவத்தை தனக்கே உரியதென அன்னா எண்ணிக் கொள்கிறாள். கரீனின் உடைய தோற்றம் கிட்டிக்கு நினைவுக்கு வரும். குழந்தைகளை நோக்கி வரும் அன்னா தடுமாறி கீழே விழுந்து விடுவாள். இந்த ஒரு காட்சியில் அவள் உணரும் தடுமாற்றமே அவளை ரயிலில் விழ வைக்கிறது. அது அப்படியே முடியும் என்பது தீர்மானிக்கப்பட்டது போல.

விரான்ஸ்கியை நடன அரங்கில் அன்னா கவர்வதை கிட்டி தான் பார்த்து நிற்கிறாள். ஏமாற்றப்பட்டவளாக கையறு நிலையில் எதுவுமே ஆற்ற முடியாதவளாய் தனித்து நின்று நோயுருபவளை மீட்பதற்காக டால்ஸ்டாய் அவளை ஜெர்மனிக்கு அனுப்பி விடுகிறார். கிட்டதட்ட அதே மனநிலையில் இருக்கும் லெவினை அவன் கிராமத்திற்கு. லெவினின் அறிமுகமும் போரும் வாழ்வும் நாவலில் பீயரின் அறிமுகம் போலவே இருக்கிறது. மூடிய அறையில் அனுமதி இன்றி கதவைத் திறந்து கொண்டு நுழைகிறான். தன் அண்ணனுடைய நிலைக்காக வருந்துகிறான். ஆப்லான்ஸ்கியுடன் வேட்டைக்குச் செல்கிறான். கடுமையான உழைப்பின் வழியாக தன்னை மறைக்க முயல்கிறான். அன்னா மீண்டும் பீட்டர்ஸ்பர்கிற்கு திரும்பும் போது பனிப்புயல் நடுவே விரான்ஸ்கியை சந்திக்கிறாள். மனதில் எழும் சஞ்சலங்களுக்கு பனியை டால்ஸ்டாய் படிமம் ஆக்குவதை புத்துயிர்ப்பு நாவலிலும் காண முடியும். ஒருவேளை பனியை இரக்கமற்ற பேரழகாக எண்ணலாம். நெஹ்லூதவ் மாஸ்லவாவை நோக்கி நகரும் அந்த சூழலிலும் பனி ஆறு உருகுவதே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அன்னா விரான்ஸ்கியை நோக்கி உந்தப்பட்டு அவனால் கருத்தரிக்கிறாள்.

லெவின் கிட்டியின் வாழ்வில் ஆன்மீக ரீதியாக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் லெவின் கிட்டியை இழந்ததை மறப்பதற்காகவே அவ்வளவு போராடுகிறான் என்று கிண்டல் செய்வதைப் போலவே மீண்டும் கிட்டியை சந்திக்கும் போது அவனுக்கு ஒவ்வொன்றும் தித்திப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே நேரம் கிட்டி விரான்ஸ்கியை பொருட்படுத்துவதில்லை. கிட்டியை லெவின் மீண்டும் சந்திக்கும் கணங்கள் அவளிடம் எழுத்தின் மூலம் காதலை வெளிப்படுத்துவது தூங்காத இரவு கடந்து அவளை சந்திக்கச் செல்வது என கவித்துவ உச்சங்களை தொட்டிருக்கும் அத்தியாயங்களைக் கடந்து அன்னாவை வெறுக்கும் கரீனின் அவள் குழந்தை பேற்றின் போது அவள் முன் கலங்கி நிற்கும் அத்தியாயம் என இருவேறு தளங்களில் பயணிக்கும் நாவல்.

கரீனினை விவாகரத்து செய்வதற்குத் தயங்கியபடியே விரான்ஸ்கி மூலம் தனக்குப் பிறந்த மகளோடு  அவரைப் பிரிகிறாள் அன்னா. விரான்ஸ்கியும் தனக்கு கிடைக்கவிருந்த உயர்பதவிகளைத் துறந்து அன்னாவோடு பீட்டர்ஸ்பர்கை விட்டு வெளியேறுகிறான். லௌகீகத்தின் அத்தனை குளறுபடிகளோடும் அழகோடும் கிட்டியை மணந்து கொண்டு லெவின் வாழ்க்கையைத் தொடர்கிறான். பீட்டர்ஸ்பர்கில் அவமானப்படுத்தப்பட்டவளாக அன்னா விரான்ஸ்கியுடன் கிராமத்துக்கு திரும்புகிறாள்.

கிட்டியின் சகோதரி டாலி கிட்டியின் பேறு காலத்தில் அவளுடன் தங்கி இருந்த பிறகு  அன்னாவை கிராமத்தில் சந்திக்க வரும் இடம் நுண்மையானது. அன்னாவையும் பகட்டாக அங்கு அவள் வாழும் வாழ்வையும் டாலியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அன்னாவை இழந்து விட்டதாக அவள் உணர்கிறாள். விரான்ஸ்கியைத் தவிர தனக்கு யாரும் இல்லை என்ற நிதர்சனத்தை சுற்றிச் சுற்றி எதிர் கொள்கிறாள் அன்னா. எந்நேரமும் அவனை தன்னிடம் ஈர்த்து வைக்க முயல்கிறாள்.

ஒரு புறம் அன்னா மறுபுறம் லெவின் என்றே கதை பின்னப்பட்டிருக்கிறது. அன்னா லெவினை சந்திக்கும் இடத்தில் அவளை சந்திப்பது டால்ஸ்டாய் தான். என்னைப் பொறுத்தவரை நாவலின் உச்ச தருணம் அது தான். அதுவரை லெவின் மானுட உணர்வுகள் மிகுந்தவனாக நேர்மையானவனாக உருவகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருப்பான். அன்னா சந்திக்கும் கணத்தில் அவன் மனம் சற்றே சறுக்கும். அதனை நேரடியாக கிட்டியிடம் ஒத்துக் கொள்வதன் வழியாக மட்டுமே அவன் மீள்கிறான். கரீனினுக்கு அன்னா எவ்வளவு தேவை என்பது அன்னாவை பிரிந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட நிலையை ஆப்லான்ஸ்கி காண்பதில் இருந்தே சொல்லப்பட்டு விடுகிறது.

அன்னாவின் மனக்குழப்பங்கள் உச்சத்தைத் தொட அவள் டாலியை சந்திக்க வருகிறாள். ஒருவேளை அந்த சத்திப்பின் போது கிட்டி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் அவள் ஆணவம் சற்றுத் தளர்ந்திருக்கலாம். கிட்டியும் அன்னாவும் சந்திப்பதில் தொடங்கி அவர்கள் சந்திப்பிலேயே முடிகிறது அன்னா கரீனினா. நிறைவானவளாக கிட்டியை கண்ட பிறகு அன்னா தெருவில் காணும் ஒவ்வொன்றையும் வெறுப்புடன் காண்பது நடுக்குறச் செய்கிறது. இரவில் பனிப்புயலில் ரயில் நிலையத்தில் விரான்ஸ்கியை காணும் அன்னா அசுத்தமான ஐஸ்கிரீமை உச்சி வெயிலில் வாங்கித் திண்ணும் சிறுவர்களை வெறுப்புடன் பார்கிறாள். அவள் மனதில் சுழன்றடித்த அந்தரங்கமான குளிர் வெட்ட வெளியில் அசுத்தமாகி விட்டதாக அவள் எண்ணுகிறாளா?

ரயில் சக்கரங்களுக்கு நடுவே பாய்ந்து உயிரை விடுகிறாள் அன்னா. அதன்பிறகு லெவின் தன் ஆன்மீக மீட்சியை அடைவதுடனும் விரான்ஸ்கி ராணுவ சேவைக்கு திரும்புவதுடனும் முடிகிறது  அன்னா கரீனினா.

டால்ஸ்டாய் தன்னுடைய பாத்திரங்களை நகரங்களுக்கு வெளியே அனுப்பிக் கொண்டே இருக்கிறார். கிட்டி நகரத்தை தாண்டிச் செல்வதன் வழியாகவே வாழ்வில் ஏற்பட்ட தொய்வை போக்கிக் கொள்கிறாள். அன்னாவும் விரான்ஸ்கியிடம் கிராமத்திற்கு திரும்புவதையே வற்புறுத்துகிறாள். லெவினாலும் மாஸ்கோவை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னாவின் கனவில் கையில் சுத்தியலுடன் ஒரு கிராமத்து விவசாயி வந்த வண்ணமே இருக்கிறாள்.

லெவினை அமைதியிழக்கச் செய்யும் வெஸ்லோவ்ஸ்கி காதலை வெளிப்படுத்தத் தயங்கி  தங்கள் மனதை மறைத்துக் கொள்ளும் கோஸ்னிஷேவும் வாரென்காவும் என சிதறித் தெறிக்கும் பாத்திரங்கள். ஆனால் போரும் வாழ்வும் போல ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே மூச்சடைக்க வைக்காமல் இந்நாவல் ஒரு கதைத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது.

புத்தகத்தின் இடையிடையே 1935- ஆம் ஆண்டு வெளியான அன்னா கரீனினா திரைப்படத்தின் ஸ்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது அநாவசியம் என்றே தோன்றுகிறது. கற்பனையில் உருவாகி வரும் அன்னா கரீனின் கிட்டி விரான்ஸ்கி என்ற உருவங்களைத் தொந்தரவு செய்கின்றன அந்த ஸ்டில்கள். அதனைத் தவிர்த்து விட்டுப் பார்க்கும் போது மிக உயிர்ப்பான மொழிபெயர்ப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment