Friday, 10 March 2017

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் - 1

யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார். 


"தேவிடியா வாக்கு...அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க". என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது.

ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல.

இன்றைய இளைஞன் என்பவனின் அதிகப்டச கனவு ஒரு ஐரோப்பியனாகவோ அமெரிக்கனாகவோ தன்னை மாற்றிக் கொள்வது தான். ஒவ்வொருவரும் தன் வலுவுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு ஒரு "உயர் நாகரிகத்தை" அடைய முயன்றபடியே உள்ளனர். அது பெரும்பாலும் இன்னொன்றாக இங்கில்லாத மற்றொன்றாக தன்னை மாற்றிக் கொள்வதில் போய் முடிகிறது. முற்போக்கானவர்களாக மூட நம்பிக்கைக்கு எதிரானவர்களாக நாகரிகமானவர்களாக தன்னை எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும்  வெற்றிகரமாக ஒரு ஐரோப்பிய கருத்தியலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடியதற்கான பயணத்தில் இருப்பவர்களே. நம் நவீன சமூகம் நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வியால் உருவாக்கப்பட்டது. ஆகவே ஒரு சில குடும்ப பழக்கங்களைத் தாண்டி நவீன கல்வி கற்ற இரண்டு தலைமுறை மனிதர்களுக்கும் தேசம் குறித்த பார்வை  பொதுவானதாகவே இருக்கும். அவற்றின் சரி தவறுகள் மிக திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருக்கும்.

அப்படி திட்டவட்டமாக வகுக்கப்பட்டவற்றின் மேலேயே ஒரு இளைஞன் தன் வாழ்வினை அமைத்துக் கொள்கிறான். ஒழிக்கப்பட்ட பழக்கங்களையும் நடைமுறைகளையும் எந்தக் கண் கொண்டு அன்றைய பிரிட்டிஷ் நிர்வாகம் பார்த்ததோ அதே கண்கள் வழியாகவே இவ்விளைஞனும் தரிசிக்கிறான். ஆகவே தன்னுடைய "உயர் நாகரிக" அடையாளத்தை தக்க வைக்க அவன் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டு முந்தைய காலங்களின் நீதிகளை "தீங்கானவை" என ஒதுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் வரலாறு மேலு‌ம் துலக்கம் பெறும் போது மானுடவியல் இன வரைவியல் போன்ற துறைகளின் அறிவோடு வரலாற்றை அணுகும் போது விக்டோரிய ஒழுக்கவியலின் பிடி மெல்லத் தளரும் போது சமூகத்தை உற்று நோக்கும் ஒரு இளைஞன் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த கருப்பு வெள்ளை சித்திரங்களைக் களைந்து உண்மைக்கு அருகே செல்ல முடிகிறது. அங்கிருந்து நோக்குகையில் இந்திய சமூகம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை பிரிட்டிஷ் அரசு உருவாக்கிக் கொடுத்த அறிவடிப்படைகளைக் கொண்டு ஆராய முடிகிறது. வரலாற்றின் மீதான வெற்றுப் பெருமிதங்களை அல்லது வெறுப்புகளைக் கடந்து அதனை நெருங்கி ஆராயும் ஒரு மனநிலை உருவாகிறது. ஆய்வடிப்படையில் முடிவுகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற மனநிலை உருவாகும் போது புனைவுகளிலும் அது எதிர்பார்க்கப்படுகிறது. கறாரான புறவயமான தகவல்களைக் கொண்ட ஒரு பாவனையை புனைவு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகளாவிய கல்வியின் பரவலாக்கத்திற்குப் பின் புனைவுகளில் நாவல் வடிவம் பெரும் பாய்ச்சலை அடைந்திருக்கிறது. பெருங்கதையாடல் (grand narration) எனும் கதை சொல்லல் முறை இன்று அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கொற்றவை எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி யாமம் போன்றவை பெருங்கதையாடல்களைக் கொண்ட சிறந்த படைப்புகள். போரும் வாழ்வும் நாவலின் வழி டால்ஸ்டாய் பெருங்கதையாடலின் வெற்றியைத் தொடங்கி வைத்தார். நெப்போலியன் ரஷ்யாவின் மீது படையெடுப்பது ரஷ்யா திருப்பித் தாக்குவது என பதினைந்து வருடங்கள் நீளும் இரண்டாயிரத்து நானூறு பக்கங்களைக் கொண்ட பெரு நாவல் போரும் வாழ்வும். சந்தோஷத்தோடு மட்டுமே வாழத் தெரிந்த ஒரு  மிகச் சாமானிய பழங்குடி விவசாயி ஒருவனிலிருந்து ஜார் சக்ரவர்த்தி நெப்போலியன் என வரலாற்று மனிதர்கள் வரை அந்நாவல் விரிந்து பரவும். நான் வாசித்தவற்றில் அத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மற்றொரு முக்கியப் படைப்பு கேப்ரியல் கார்சியா மார்க்கேஸின் "தனிமையின் நூறு ஆண்டுகள்". ஸ்பெயினில் இருக்கும் மகோந்தா என்ற புனைவு நிலத்தின் நூறாண்டு வாழ்க்கையை அந்நிலத்தை கண்டறிந்தவரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் வம்ச வரலாறோடு இணைத்துச் சொல்லும் நாவல் அது. மகாபாரத மறு ஆக்க முயற்சியான ஜெயமோகனின் வெண்முரசு இதிகாச காலத்தின் இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் மறு கட்டுமானம் செய்யும் பெரு முயற்சி. தமிழில் வெகு நாட்கள் நீடிக்கப் போகும் பெருநாவலாக வெண்முரசு இருக்கும்.

பெருங்கதையாடல்கள் ஏன் தேவைப்படுகின்றன? கவிதை நுண்மையைத் தேடும் வாசகர்களுக்கானது. அதன் வாசகப் பரப்பு சிறியதாகவும் தீவிரமானதாகவும மட்டுமே இருக்க முடியும். சிறுகதையை எவ்வளவு செறிவாகவும் விறுவிறுப்பாகவும் அமைத்தாலும் இறுதி திருப்பத்தில் தான் அது தன் உயிரை வைத்துள்ளது. மேலும் சிறுகதைகளை நிறைய வாசிக்கும் ஒரு வாசகன் சில ஆண்டுகளில் அந்த திருப்பத்தைக் கண்டறியக் கூடியவனாகி விடுகிறான். அதே நேரம் சிறுகதைக்கு புதுமையான கதைக்களங்கள் தேவைப்பட்டபடி இருக்கின்றன. மிக நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்தக் கூடியவர்களால் அதிலும் ஒரு முரணைக் கண்டறியக் கூடியவர்களால் மட்டுமே நிலைத்து நிற்கும் சிறுகதைகளை எழுத முடிகிறது. கவிதையைப் போல சிறந்த சிறுகதைகளும் வரும் காலங்களில் நுண்மை நோக்கியே நகரும் எனத் தோன்றுகிறது. ஆகவே வாசிப்பை கலை நுட்பத்தோடு அறிவுச் செயல்பாடாக தக்க வைக்க இன்றைய நவீன இளைஞனின் மொழியில் பேசி அவனை உள்ளிழுக்கும் வடிவமாக நான் நாவலைக் காண்கிறேன். தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இக்காலத்தில் ஒருவர் விரும்பாமல் இருந்தால் மட்டுமே தகவல்கள் செவிப்பறைகளை அறையாமல் இருக்கும். இவ்வளவு தகவல்களின் வழியாக சென்ற தலைமுறை மனிதர்களை விட விரிவான அவதானிப்புகளை இன்றைய இளைஞனால் நிகழ்த்த முடியும். அத்தகைய ஒருவனிடம் அவன் அறிந்தவற்றை ஒரு கோணத்தில் தொகுத்தளிக்கும் எளிய செயலில் தொடங்கி அக்காலகட்டத்தை நோக்கிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கும் நடுவாந்திர செயல்பாடுகளை நிகழ்த்தி அதைக்கடந்து நாவலுக்கே உரித்தான கால தரிசனத்தை அவனுள் நிகழ்த்துவது வரை ஒரு பெருங்கதையாடல் கொண்ட நாவல் பயணிக்கிறது.

ஆயிரத்து ஐம்பது பக்கங்களுடன் கெட்டி அட்டை கொண்ட ஒரு நாவலை இரண்டு வாரமாக நாற்பது கிலோமீட்டர் பேருந்து பயணத்தில் சுமந்து கொண்டே சென்று படிப்பதற்கான நியாயம் என்ன என்று என்னிடம் கேட்டால் மேற்கூறியதே என் பதில்.

கலை ஒருவனுள் நிகழ்த்தும் அனுபவங்கள் அகவயமானவை. அனைத்தையும் திட்டவட்டமான வார்த்தைகளில் தொகுத்துச் சொல்லி விட முடியாது எனினும் சொல்லக்கூடியவை என சில உண்டு. அதன் வழியே ஒரு நூல் குறித்து உருவாகி வரும் பொது சித்திரத்தினை ஊக்குவிக்கும் விதமாகவோ எதிர்க்கும் விதமாகவோ ஒரு விவாதம் உருவாகி அந்த நூல் மேலும் பல திறப்புகளை அளிக்கலாம்.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் முடி அரசு , குடிமக்கள் என இரண்டு பாகங்களும் பத்து பகுதிகளும் நூற்றுபதினைந்து அத்தியாயங்களும் கொண்ட பெருநாவல். மதுரையை மையப்படுத்தி குற்ற பரம்பரையினர் என முத்திரை குத்தப்பட்ட பிறமலை கள்ளர்களின் வரலாற்றையும் மதுரை நிர்வாகத்தையும் கதைக்களமாய் கொண்ட படைப்பு.

மாலிக்கபூர் படை கொண்டு வருகையில் மதுரையின் காவல் வீரன் ஒருவன் கொல்லப்படுவதுடன் கதை தொடங்குகிறது. அவன் மனைவி சடச்சி. மாலிக்கபூரின் படையெடுப்பை அவள் காண்கிறாள். கருத்தரித்து இருக்கிறாள். குமார கம்பணனும் கங்காதேவியும் மதுரையைக் கைப்பற்ற வரும் போது சடச்சி அவர்களையும் காண்கிறாள். இரண்டு வரலாற்று மனிதர்களுக்கிடையே நெளிந்து செல்லும் சடச்சியின் வரலாறு நாவல் முழுக்க ஒரு குறியீட்டுத் தன்மையுடன் நீடிக்கிறது. சமணர்களின் மலையான அமணமலையில் சடச்சியின் குலம் பெருகுகிறது. அங்கு அமைக்கப்பட்ட புனைவு நிலமான தாதனூர் வழியே விரிகிறது மதுரையின் வரலாறு.முடி அரசு பாகத்தின் வரலாறும் பெருக்கெடுக்கத் தொடங்குகிறது.

இஸ்லாமியர்களிடம் மத மாற்றம் செய்யப்பட்டு கணக்கர்களாக இருந்த ஹரிஹரரும் புக்கரும் எழுச்சி பெற்ற பின்பு நாயக்க குலங்கள் ஒன்றிணைந்து இன்றைய தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கின்றன. கொல்லவாருகள் பலிஜர்கள் வடுகர்கள் என பல பிரிவுகள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக இணைந்து தென் இந்தியா முழுவதையும் கைப்பற்றும் வெற்றிச் சித்திரமும் அதன் வழியே கங்காதேவியும் குமார கம்பணனும் மதுரையை கைப்பற்றுவதன் சித்திரமும் மதுரா விஜயமாக விரிகின்றன. அதன்பின் மதுரையை மையமாகக் கொண்ட பாளையப்பட்டுகளும் அவற்றின் நிர்வாக முறையுமாக நாவல் விரிந்து செல்கிறது. கிருஷ்ண தேவராயரின் தலைமை காப்பாளனாக இருக்கும் விஸ்வநாத நாயக்கன் தன்னை சுதந்திரமாக அறிவித்துக் கொண்ட அவனது தந்தையிடம் இருந்து மதுரையை மீட்கப் புறப்படுகிறான். மதுரையை மீட்ட பின் விஸ்வநாதனே மதுரையின் பொறுப்பை ஏற்கிறான். மதுரை நகரின் விரிவாக்கமும் கோட்டை கட்டுதலும் என அசுர வேகத்தில் பயணிக்கிறது நாவல். சாளுவ கட்டாரி சந்திரஹாசம் எனும் நினைவுச் சின்னங்களும் அவை கண்டெடுக்கப்படும் விதமும் கவித்துவம் மிக்கவை.

இந்திய வரலாறு தொடர்ந்து மதுரையை பாதிக்கிறது. கிருஷ்ண தேவராயர் இறந்த பின் விஸ்வநாதன் மதுரையை சுதந்திரப்படுத்திக் கொள்கிறார்.  அதன் பிறகு அவர் மகன் கிருஷ்ணன் ஆட்சி பொறுப்பேற்கிறார். திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூரின் கழுவன் கொத்து மதுரை மன்னனின் அரண்மனையில் கன்னம் வைத்து பொருளைத் தூக்குகிறது. திகைத்துப் போகிறது அரண்மனை. மூன்று சவுக்கடிகளுடன் மதுரையை காக்கும் உரிமை தாதனூருக்கு போகிறது. மொண்டிக் கொம்பு , ஜல்லிக்கட்டில் சாடி மறையும் சிறுவனும் முதியவனும் என ஒரு தனித்த வரலாற்று அடையாளங்களோடு மதுரையின் மைய நில வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்து வளர்கிறது தாதனூரின் வரலாறு.

திருமலை நாயக்கர் சொக்கநாதன் மங்கம்மாள் ரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் விஜயரங்க சொக்கநாதன் மீனாட்சி என சிறந்தவர்களும் சோடை போனவர்களுமாக மதுரை வரலாறு விரிந்து பரவுகிறது. தஞ்சை கோட்டையை முற்றுகையிட்டு வென்று தஞ்சை இளவரசியை சொக்கநாதன் இழக்கும் இடம் பொருளின்மையின் உட்ச வறட்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது. கணவன் மகன் பேரன் என மூன்று தலைமுறை ஆண்களை சரிகட்டி பேரனால் சிறையிடப்பட்டு இறக்கிறாள் மங்கம்மாள். விஜயரங்க சொக்க நாதனின் மனைவியான மீனாட்சி அரசுப் பொறுப்பேற்று மராட்டியர்களின் சூழ்ச்சியால் கசந்து நஞ்சுண்டு உயிர் துறக்கிறாள்.

நாயக்கர்களின் படையெடுப்புகளில் தாதனூர் கள்ளர்களும் பங்கேற்கின்றனர். மராட்டியர்களின் வழியே மதுரை நிர்வாகம் ஆங்கிலேயரை நோக்கிச் செல்கிறது. பாளையப்பட்டுகள் ஒடுக்கப்பட்டு ஜமீன்தாரி முறையை பிரிட்டிஷ் அரசு அறிமுகம் செய்கிறது. கட்டபொம்மு ஊமைத்துரை என போராடி மடியும் பாளையக்கார வீரர்களை வேண்டிய தகவல்களுடன் நாவல் விரித்தெடுக்கிறது. பெரும் வீரத்துடனும் பெருமிதத்துடனும் போரிட்ட பாளையக்காரர்கள் மகளின் திருமணத்திற்கு பென்ஷன் கேட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதுவதை ஜீரணிக்க நேரம் எடுக்கிறது. நாவல் முழுக்கவே இப்போக்கினை காண முடியும். இயல்பாக ஒழுகும் நடையின் வழி அடித்துச் செல்லப்படும் வரலாறு பிரமித்து நிற்க வைக்கிறது. இணையாகவே வளர்கிறது தாதனூரின் வரலாறும். மாயாண்டி சின்னானின் நட்பு கண்ணீரோடு களப்பலிக்காக சின்னானை அனுப்புவது  வலிமை இழந்து வரும் பாளையப்பட்டுகளின் அற்பத்தனங்கள் என ஒரு மாற்றத்தை சித்தரிக்கிறது நாவல். மதுரை ஆட்சியர் ப்ளாக்பர்ன் நகர் விரிவாக்கத்துக்கென கோட்டையை இடிக்கிறார். கனத்த அத்தியாங்களாகவே இவை நகர்கின்றன.

கோட்டை இடிவது மதுரைக்கான செய்தியாகிறது. அதுவரை இருந்த நியாயங்களும் நம்பிக்கைகளும் தங்களை மாற்றி அமைத்து விரித்தெடுப்பதற்கென அகவயமான கோட்டைகளும் இடிந்து விழுகின்றன. ஏக்கப் பெருமூச்சினை எழுப்ப வைத்தபடி முடி அரசு பாகம் முடிவுற்று குடிமக்கள் பாகம் தொடங்குகிறது.

No comments:

Post a Comment