நான் ஏன் தலித்தும் அல்ல? - டி.தருமராஜ்
பேராசிரியர் டி.தருமராஜின் "நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேதநிலை" என்ற நூலை (கட்டுரை தொகுப்பு) மறு வாசிப்பு செய்தேன். முதல் முறை படித்த போது ஆசிரியர் பயன்படுத்தி இருந்த கலைச் சொற்களும் கட்டுரைகளின் நவீன வடிவமும் (புனைவில் எத்தகைய வடிவத்தையும் செறிக்கும் என் மனதிற்கு அபுனைவின் மரபான வடிவம் மட்டுமே ஏற்புடையதாக இருந்தது போல) பெரும் அயர்ச்சியையே தரத் தொடங்கின. ஆனால் மறுவாசிப்புக்குப் பிறகு ஒரு சிறந்த நூலை வாசித்த திருப்தியும் சிறந்த நூல்கள் மட்டுமே தரக்கூடிய உணர்வுச் சமநிலையும் அச்சமநிலை தாண்டி எழும் கொந்தளிப்பும் மனதில் எஞ்சியிருக்கிறது.
பொறுப்புத் துறப்பு என்று நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். யானை தடவும் குருடர்கள் கதையை இத்தனை வசீகரத்துடன் இதற்கு முன் கேட்டதில்லை. அதனுள் ஒரு வலியும் உள்ளோடுகிறது என்பதே அக்கதையை எப்போதும் நினைவில் நிறுத்துவதாய் மாற்றுகிறது.
"நான் ஏன் தலித்தும் அல்ல" என்ற கேள்வியை ஆதாரமாகக் கொண்டே முன்னுரை தொடங்குகிறது. எவ்விதத்திலும் மைய விவாதத்திற்கு தலித் பிரச்சினைகள் வரதாததற்கும் அவ்வடையாளம் தன்னை துன்புறுத்துவதற்குமான காரணங்களை சொல்கிறார். இலக்கியம் சமூகம் பண்பாடு அரசியல் என அனைத்திலும் அவ்வடையாளம் ஏற்படுத்தும் ஒவ்வாமையை உருவாக்கும் பதற்றத்தை தேர்ந்த மொழியில் விவரிக்கிறது "நான் ஏன் தலித்தும் அல்ல தலித் என்ற சாதியற்ற பேத நிலை" எனும் தலைப்பிடப்பட்ட முன்னுரை.
வாசித்து முடித்த பின் ஒவ்வொரு கட்டுரையுடனும் இம்முன்னுரையை சரியாகவே பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒருவகையில் இந்நூல் தான் நான் வாசிக்கும் முதல் கட்டுரைத் தொகுப்பு. இக்கட்டுரைகள் வேறு வேறு காரணங்களுக்காக வேறு வேறு காலங்களில் எழுதப்பட்டவை. இருந்தும் அவற்றுக்கு இடையே நான் ஏன் தலித்தும் அல்ல என்ற ஒவ்வாமையை உருவாக்கும் கேள்வி ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்கும் போது அக்கேள்வி உருவாக்கும் ஒவ்வாமை மறைந்து விடுகிறது என்பதையே இந்நூலின் வெற்றியாகவும் நூலாசிரியரின் வெற்றியாகவும் சற்றே உணர்ச்சிவசப்பட்டு சொல்வதென்றால் அறிவின் வெற்றியாகவும் சொல்ல முடியும். சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன.
தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் கொண்ட நூல்.
என் போதாமைகள்
தலித் அரசியலை முன்னெடுத்த தலைவர்கள் குறித்து எழுதப்பட்ட நூல்கள் சமகால தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு மற்றும் தலித் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்ட சில நூல்களைத் தவிர உண்மையில் தலித் என்ற அரசியல் அடையாளம் குறித்த அறிவு என்னிடம் இல்லை என்பதை முதல் கட்டுரையை வாசித்த போதே உணர்ந்து கொண்டேன். ஆனால் மேலும் ஆழமான நூல்களை வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டியாக அல்லாமல் இந்நூல் தன்னளவிலேயே ஆழமானதும் செறிவான விவாதப் புள்ளிகளை கொண்டிருப்பதும் இதன் தனிச்சிறப்பு என்றே கருதுகிறேன்.
சமூகத்தின் மையத்தில் தகிக்க வேண்டிய விவாதங்கள் எந்தவித கவனிப்பும் இன்றி சம்பிரதாயமான முத்திரை குத்தல்களுடன் எவ்வாறு புறமொதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரும் வகையிலும் விவாதங்களை உருவாக்கும் கேள்விகளையும் சூழல்களையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது. இது தலித்துகளுக்கான "விழிப்பு உணர்வு" நூல். மற்ற சாதிகளுக்கான எச்சரிக்கை நூலும் அல்ல. சூழியல் பெண்ணியம் என்று நடக்கும் மேம்பட்ட சமூக உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகளில் ஒன்றான தலித்தியம் குறித்து இதுவரை சமூகத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றின் நிகர மதிப்பினை எடுத்து வைக்கும் நூல். துரதிர்ஷ்டவசமாக அதுவொரு எதிர்மறை சித்திரத்தையே வழங்குகிறது. ஏனெனில் நிகர மதிப்பு எதிர்மறையானதாகவே இருக்கிறது. சுருக்கமாக தலித் விவாதத்தை ஒவ்வாமைகளற்றதாக மாற்றி ஒரு ஆரோக்கியமான விவாத களத்தையும் செயற்களத்தையும் உருவாக்குவதை இந்நூலின் அடிப்படையாகச் சொல்லலாம்.
கட்டுரைகள்
உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் என்ற தலித் இளைஞரின் கொலைக்கான பதற்றத்துடன் தொடங்குகிறது முதல் கட்டுரை. தமிழ் கிராமங்கள் குறித்தும் அதன் மரபான சாதி அடுக்குமுறைகள் குறித்தும் விவரித்துச் செல்லும் கட்டுரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் தலித் பலியாள் திராவிட பலியாள் என பல தளங்களை தொட்டுத் திறக்கிறது. தலித் பலியாளை ஆசிரியர் விவரிக்கும் இடம் ஒரு கசப்பான அங்கதத்தை வாசிக்கும் மனக்கொந்தளிப்பை தருகிறது. இடைச்சாதியினரிடம் சாதியப் படுகொலைகள் குறித்த குற்றவுணர்வு இல்லாமல் ஆகிக் கொண்டிருப்பது "துடியான" தெய்வங்களின் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளைக் கொண்டு விளக்குவது அதிர்ந்து நிற்கச் செய்கிறது. கட்டுரையின் இறுதியில் பல்வேறு சமூக இயக்கங்கள் சாதிக்க முடியாததை காதல் சாதிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
மாட்டுக்கறி பிரச்சினை குறித்த அங்கதத்துடன் தொடங்குகிறது இரண்டாவது கட்டுரை . ஜே.என்.யுவில் மாட்டுக்கறி உண்ணப்பட்டதில் தொடங்கி கல்வி நிலையங்கள் அளிக்கும் போலியான லட்சிய சமூக தோற்றத்தை கேள்விக்கு உள்ளாக்கி இந்திய சமையலறை மாட்டுக்கறியை அனுமதிக்காததை மிகப்பெரிய கலாச்சார சிக்கலாக்காமல் புனிதத்தன்மையை ஏற்றாமல் அது சமைக்கப்படுவதில்லை என்ற எளிய உண்மையை நிறுவுகிறது. ஆனால் சமையலறைக்கு வெளியே இந்திய சமூகம் மாட்டுக்கறியை அனுமதிக்கிறது அது வெறும் விடலைத்தனம் என்கிற கூற்றுடன் சமூக மாற்றத்திற்கான அத்தனை குரல்களையும் இந்தியப் பொது சமூகம் வெறும் விடலைத்தனமாகவே கருதுகிறதோ என்ற கேள்வி ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது.
மெட்ராஸ் திரைப்படம் குறித்த மூன்றாவது கட்டுரையை படித்த பிறகாவது படத்தின் கதையை திருப்பிச் சொல்லும் விமர்சகர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்ளும் அரைவேக்காடுகள்(இல்லை அரைகூட அதிகம். அரைக்கால்வேக்காடுகள்) திருந்த வேண்டும். அத்திரைப்படத்தின் கலை,காளி,அன்பு என்ற மூன்று கதாப்பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டே ஆசிரியர் கட்டமைக்கும் உலகம் சினிமா எனும் வலிமையான கலைப்படைப்பை எவ்வளவு அசட்டையுடன் நான் அணுகி வந்திருக்கிறேன் என்பதை உணர்த்தியது. பெரும்பாலும் நம் சினிமாக்கள் வெறும் அசட்டை தனத்திற்கு தீனி போடுபவை தான். ஆனால் மெட்ராஸ் திரைப்படத்தைக் கொண்டு இக்கட்டுரை தொட்டுச் செல்லும் உலகு மேலும் விரிந்தது. திரைக்கு வெளியேயும் அது உருவாக்கிய அதிர்வுகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது இக்கட்டுரை. நம் சூழலில் எழுதப்படும் பெரும்பாலான குப்பை விமர்சனங்களை வாசிக்கும் தீவிரமற்ற மனநிலையோடு வாசித்து கடந்து செல்ல முடியாத கட்டுரை.
நாட்டார் ஆய்வாளர் அ.கா.பெருமாள் கைசிக நாடகம் மீட்டெடுக்கப்பட்டது குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிர்வினைபோல் நாளாவது கட்டுரை அமைந்துள்ளது. திருக்குறுங்குடி வடிவழகிய நம்பி கோவிலில் நடக்கும் கைசிக நாடகத்தின் மையக்கதையை எடுத்துக் கொண்டு சில சாதாரண கட்டுடைத்தல்கள் வழியே ஒரு தீவிரமான சித்திரத்தை உருவாக்குகிறது இக்கட்டுரை. மிகவும் முற்போக்கான எச்சமூகமும் மரபான பெருமைகளை கொண்டாடுவதில் கூச்சமோ விலக்கமோ கொள்வதில்லை என்பதை பிராமணர்கள் அதிசிரத்தையுடன் (சிலிக்கன் வேல்லியில் இருப்பவர்கள் உட்பட) அந்நாடகத்தை கொண்டாடுவதைக் கொண்டு ஒருபுறம் விலக்கியபடியே மறுபுறம் நம்பாடுவான் என்ற பாடகனை வேறொரு பரிணாமத்தில் மறுகட்டமைப்பு செய்கிறது இக்கட்டுரை.
அடுத்தபடியாக கைசிக நாடகத்துக்கு நேர்மாறான நயினார் நோம்பினை விளக்குகிறது ஐந்தாவது கட்டுரை. மீட்டெடுக்கப்பட்டு வலுவாக நீடிக்கக்கூடிய ஒரு புராணத்தை சொல்லிய உடனே அழிந்து போகப் போகிற ஒரு சடங்கினை சொல்வது அயர்ச்சியை அளிக்கிறது. கதைபடித்தல் எனும் நிகழ்வின் வழியாக நடந்தேறும் நயினார் நோம்பினை நம்பிக்கை இல்லாமல் தான் வாசிக்க முடிகிறது. பெரிய எழுத்து புத்தகங்கள் என்று சொல்லப்படுபவற்றைக் கொண்டு கதை படிக்கும் பழக்கம் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நீடிப்பதாக அதனை நல்ல கதை (திருவிழா போன்ற நிகழ்வுகளில் படிக்கப்படுவது) கெட்டகதை (துக்க வீடுகளில் வாசிக்கப்படக்கூடியது) என்று பிரித்து விலக்குகிறது இக்கட்டுரை. முழுக்கவே ஒரு ஆய்வுக்கட்டுரையின் தோரணை கொண்ட இக்கட்டுரையில் ஏதொவொரு வெறுமையை மட்டுமே உணர முடிகிறது. ஒருவேளை அதை உணர வைப்பதே ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.
திராவிட சிந்தனையாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூலின் மதிப்புக் கட்டுரை ஆறாவதாக இடம் பெற்றிருக்கிறது. பிராமணர் - பிராமணரல்லாதோர் எனும் முரணை விளங்கிக் கொள்வதில் இருக்கும் சிக்கல்களையும் நடைமுறையில் புழக்கத்தில் இல்லாத "பிராமணரல்லாதோர்" என்ற சொல்லின் பயன்பாட்டையும் மிகத் துல்லியமாக விளக்குகிறது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய நூலினை பகுதிகளாக பிரித்து அவர் ஆய்வுமுறையின் சிக்கல்களையும் எல்லைகளையும் மிக கவனமாக விளக்குகிறார். தேசிய உருவாக்கத்திற்கான தேவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர்களுக்கு எழுந்தது ஏன் என்ற கேள்வியின் வழியாக "பிராமணரல்லாதோர்" என்ற அடையாளத்தை உடைக்கிறது இக்கட்டுரை. தலித்துகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதில் திராவிடக் கொள்கைகளின் பங்கையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை எத்தன்மையுடையது?, இருபதாண்டுகள் ஆகியும் அது தனித்து வெளிப்படாமல் போனதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்கிறது ஏழாவது கட்டுரை. அர்ஜுன் தாங்ளேவை முன் வைத்து மராட்டியத்தில் நிகழ்ந்த தலித் இலக்கிய முயற்சிகளையும் அதனுடன் இணைந்தே நிகழ்ந்த அரசியல் செயல்பாடுகளையும் விளக்கியபடியே வரும் கட்டுரை தமிழில் தலித் என்ற அரசியல் அடையாளம் எப்படி அபத்தமாக கையாளப்பட்டது என்பதையும் எடுத்துரைக்கிறது. அது விரிந்து பரவாமைக்கான காரணங்களையும் அதன் செல் திசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளையும் விட்டுச் செல்கிறது. தனிப்பட்ட வாழ்வியல் அபத்தங்களைத் தாண்டி பெருஞ்சமூகமாக சித்தரிக்கப்பட தலித் வாழ்வில் நிறையவே எஞ்சியுள்ளது என்ற நடைமுறை சார்ந்த எண்ணத்தை இக்கட்டுரை ஆழமாக விதைக்கிறது. தன் வாழ்க்கையை எழுத வரும் ஒவ்வொரு தலித் படைப்பாளியையும் வரலாற்றையும் இணைத்து சிந்திக்கச் சொல்கிறது.
பூமணியின் அஞ்ஞாடி நாவலை ஒரு பனுவலாக வாசித்து பல திறப்புகளை அளிப்பதாக உள்ளது அடுத்த கட்டுரை அமைந்துள்ளது. மானிடவியல் ஆய்வறிக்கை எனும் அறிவியலையும் நாவல் எனும் இலக்கிய வகைமையையும் நெருக்கிக் கொண்டு வரும் முயற்சி இக்கட்டுரையில் தெரிகிறது. இனவரைவியல் ஆய்வுகள் படைப்பில் பயன்படுத்துவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது. அஞ்ஞாடியின் முக்கிய பாத்திரங்களான ஆண்டி எனும் குடும்பர் சாதியை (சாதிப் படிநிலையில் சற்றே உயர்ந்தவர்கள்) சேர்ந்தவனுக்கும் மாரி என்ற வண்ணான் சாதியினனுக்குமான நட்பை அதன் சிக்கல்களை வேறு வேறு தளங்களில் எதிர்கொள்ளும் ஆண்டி மாரி ஆகியோரின் தன்னிலைகளை படைப்பு விளக்குவதாக ஆசிரியர் கணிக்கிறார். விடலை - குடும்பன் என்ற எதிர் நிலைகளைக் கொண்டு காட்டு உணவு - வீட்டு உணவு , கருத்து உற்பத்தி - உணவு உற்பத்தி, தவறான உறவு - முறைப்படுத்தப்பட்ட உணவு என பல எதிர்நிலைகளை விளக்கிச் செல்கிறார். மரபான ஒடுக்குமுறைகளையும் தாண்டி பல நுண் ஒடுக்கு முறைகளை ஆண்டி மாரி நட்பினைக் கொண்டு திறக்கிறது. அதனோடு கிராமம் குறித்த ஏக்கங்களை ஐரோப்பிய சமூகம் உருவாக்கிக் கொண்டதில் இருக்கும் நியாயங்களையும் நம் சமூகம் உருவாக்கிக் கொண்டதில் இருக்கும் மோசடிகளையும் விளக்குகிறது.
மாதொருபாகன் சர்ச்சையை முன் வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை நூலினை எதிர்ப்பவர்களை கண்டிப்பதோடு நின்று விடவில்லை. மேலும் சென்று திருவிழாக்களில் நடைபெறும் தலைகீழாக்கங்களையும் அத்தலைகீழாக்கங்களை கண்டடைவதில் இருக்கும் வெற்றுப் பரவசத்தையும் அதனை புனைவாக மாற்றுவதில் இருக்கும் பொறுப்பின்மையையும் கண்டிக்கிறார். எப்படியாயினும் பிரதியை எரிப்பதோ கிழிப்பதோ அல்ல அதற்கான எதிர் பிரதியை உருவாக்குவது மட்டுமே அறிவார்ந்த செயல்பாடாக இருக்க முடியும் என்பதை நிறுவுகிறார் ஆசிரியர்.
ஒப்பீட்டளவில் இக்கட்டுரைத் தொகுப்பின் பெரிய மற்றும் கடினமான கட்டுரை இறுதிக் கட்டுரையான "போலச் செய்தலும் திரும்பச் செய்தலுமே." இந்நூல் ஆதாரப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருக்கும் பெருஞ்சமூகம் vs தலித் என்பதை எப்படி புரிந்து கொள்வது என்று அதிக நுட்பத்துடன் விளக்குகிறது இக்கட்டுரை. எண்டாவூர் என்ற கிராமத்தில் ஆய்வு செய்த மிஷல் போமா என்ற பிரெஞ்சு மானிடவியலாளர் "தலித்துகள் தங்கள் மேல்நிலையில் உள்ளவர்களை நகலெடுக்கிறார்கள். அவர்களைப் போல ஆக முயல்கின்றனர். ஆகவே அவர்களைப் போலச் செய்கிறார்கள்" என்ற முடிவுக்கு வருகிறார். அவருடைய ஆய்வு முறைகளை கேள்விக்கு உட்படுத்தும் ரொபேர் தாழியேல் எனும் மற்றொரு மானிடவியலாளர் இந்த முடிவினை மறுக்கிறார். பறையர்களை ஆய்வு செய்யும் அவர் "என் தம்பி பாப்பான்(பிராமணன்)" என்கிற ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் தொன்மங்களை ஆய்வு செய்து "தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தலித்துகள் ஒருபோதும் ஏற்கவில்லை" என்ற முடிவுக்கு வருகிறார். தூய்மையற்றவர்களாக சித்தரிக்கப்பட்ட பறையர்கள் குறித்த தொன்மத்தை தலைகீழாக்கி பிராமணர்களை அப்படி சித்தரித்ததை அயோத்திதாசர் பிராமணர்களுக்கு திரும்பச் செய்தார் என ஆசிரியர் விளக்குகிறார். மேலும் சாதியப் படிநிலைக்குள் நுழைய முடியாத பறையர்களுக்கும் கீழிறிங்க வாய்ப்பே இல்லாத பிராமணர்களுக்குமான எதிர் நிலைகளை சித்தரிப்பது மேலும் பல திறப்புகளை அளிக்கிறது. அதோடு மறவர் சாதியினருக்கு பள்ளர்கள் குருபூஜை வழியாக திரும்பச் செய்ததையும் பேசுகிறது இக்கட்டுரை. போலச் செய்தலில் உள்ள தீவிரமின்மையையும் அங்கதத்தையும் திரும்பச் செய்தலில் இருக்கும் தீவிரத்தில் இருந்து பிரித்து நிறுத்துகிறது இக்கட்டுரை.
இக்கட்டுரைகளை வாசித்து முடிக்கும் போது இந்நூலின் நோக்கம் நிறைவேறும் என்றே படுகிறது. ஏனெனில் இந்நூலின் சவால்தன்மை காரணமாகவே இது மறுக்க முடியாத வாசிப்பினை கோருகிறது.
Comments
Post a Comment