சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷல் தனினோ(தமிழில் - வை.கிருஷ்ணமூர்த்தி)


ஆர்குட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் ஒரு சமூக வலைதளம். மின்னஞ்சலில் இன்றும் கோலோச்சும் ஜிமெயிலின் பகுதி. ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படையில் ஆர்குட்டைப் பற்றித் தெரிந்தவர்களின் வியப்பு நேரடியாக முகநூலையும் இன்னபிற சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறவர்கள் அடைகிற பரவசத்தை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு "தொடக்கம்" பற்றிய ஒரு கணிப்பு இருக்கிறது. ஆகவே இந்த தொடக்கத்தை அறிந்தவர்கள் எந்தவொரு சாதனையையும் "முன்னகர்தலாகவே" பார்ப்பார்கள். "முன்னுதாரணங்களற்ற" என்ற வார்த்தையை எப்போதும் சந்தேகத்துடனே அணுகுவார்கள். ஆனால் பெரும்பாலும் இத்தகையவர்கள் சோர்வூட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் பரவசத்துடன் எதைப்பகிர்ந்து கொள்ளச் சென்றாலும் அந்தப் பரவசத்தை குறைக்கும் வகையில் அதற்கு முன்னர் அதே மாதிரி நடந்த ஒரு சம்பவத்தை சொல்வார்கள். அதிலிருந்து இது எப்படி நடந்தது என்பதை விளக்குவார்கள். உண்மையில் இந்த பார்வையே சரியானது. ஏனெனில் நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று ஒரு "தலைப்புச் செய்தி" மனநிலையிலேயே இருக்கிறோம். எல்லா முன்னகர்தல்களையும் பரவசத்துடன் "முன்னுதாணரங்கள்" அற்றதாக விளக்கிவிடவே முயல்கிறோம். இந்த பரவச மனநிலை ஒருவித "நுகர்வுத்" தன்மை உடையது. ஆனால் ஏதோவொரு துறையில் நம்முடைய வாசிப்பு ஆழம் கொள்ளும் போது பெரும்பாலும் "அந்தகாலத்தின் இருட்டு vs இந்த காலத்தின் வெளிச்சம்" அல்லது "அந்தகாலத்தின் வெளிச்சம் vs இந்தகாலத்தின் இருட்டு" போன்ற மனநிலைகள் மறைந்து அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்று இருக்கும் "முன்னகர்தல்களை" காணும் பக்குவம் நமக்கு கைகூடுகிறது. இப்பக்குவம் ஒரு வகையான கால தரிசனம். ஓரளவு இலக்கிய வாசிப்பு உடையவர்கள் இந்த அனுபவத்தை அடைந்திருப்பார்கள். என் தோழி ஒருவர் டால்ஸ்டாயின் குடும்ப மகிழ்ச்சி என்ற குறுநாவலைப் படித்துவிட்டு "எப்படி இந்த கிழவர் நூறாண்டுகள் கழித்துப் பிறந்த என் வாழ்க்கையை அப்போதே எழுதி வைத்திருந்தார்" என்று கேட்டார். பெரிய பீடிகையாகி விட்டதோ?
சரி தொடரலாம்...
கடந்த காலம் குறித்த கண்டடைதல்களும் சமூகத்தில் இத்தகைய பரவச மனநிலையை உருவாக்குகின்றன. அந்த பரவசத்திற்கான அடிப்படை காரணம் நாம் அங்கிருந்து இங்கு வந்து "குதித்து இருக்கிறோம்" என்று எண்ணுவதே. இன்றும் "ராஜாக் கதைகள்" நமக்கு ஏன் வியப்பையும் பரவசத்தையும் தருகிறது? ஏனெனில் முடியாட்சியில் இருந்து ஜனநாயகத்துக்கு உலக சமூகங்கள் முன்னகர்ந்த நெடும் பாதையை அது கழித்து விட்டு சட்டென நமக்கு தொடர்பே இல்லாத காலத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் வரலாற்றை வாசிக்கும் ஒருவர் "அரசன்" என்ற கற்பிதம் நாம் எண்ணும் அளவுக்கு பரவசம் உடையது அல்ல என்ற உண்மையை அறிகிறார். அன்றைய அரசில் இருந்து இன்றைய அரசு வரையிலான ஒரு நேர்க்கோட்டினை இழுத்துப் பார்க்கிறார். அதுவும் ஒரு "முன்னகர்தல்" மட்டுமே என கண்டடைகிறார். ஆனால் பொதுச் சமூகம் அத்தகைய சோர்வேற்படுத்தும் நீண்ட வேலைகளை செய்து கொண்டிருக்காது. அது "முன்னகர்தல் காலத்தை" கழித்து விட்டு வரலாற்றுப் பெருமிதத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும்.  உலகில் எந்த நாடும் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவேளை ஜனநாயகம் களைய வேண்டிய ஒரு மனநிலையாக இருக்கலாம். ஆன்மீகமான தேடலுக்கும் தன் வரலாற்றை அறிவதற்கும் தொடர்புண்டு. ஆனால் அது இன்னும் தீவிரமான உணர்வுபூர்வமான தளம். அப்படி அச்சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பெருமிதங்களின் வழியாகவே அச்சமூகத்தின் அரசியல் பிரக்ஞைகள் உருவம் பெறுகின்றன. அப்பெருமிதங்களை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு ஆய்வும் பெரும் சலனங்களை அறிவியக்கத்தில் உருவாக்கும்.
பேகன் இன மக்கள் குறித்த எந்தவொரு ஆய்வும் கிறிஸ்தவத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும். தலித் சமூகம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கலாம். அதுபோலவே சரித்திர காலத்துக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிய ஒரு கற்பிதமான ஆரியர்-திராவிடர் என்பதை மிக வலுவாக கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த நூல். மேலும் தொலைந்து போன புராதன நதியை தேடிப்போகும் ஒரு சாகசப் பயணமும் இந்நூலில் உள்ளது. போதாதா என்ன? டான் பிரவுனிடம் சொல்லி ஒரு நாவலே எழுதச் சொல்லி விடலாம். ஆனால்...

பிரச்சாரம் அல்ல ஆய்வு

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஒரு வகையில் நான் வாசிக்கும் முதல் ஆய்வு நூல். அந்ந எண்ணத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தொடக்கம் முதலே மனதில் கொள்ள பரிந்துரைக்கிறேன். ஏனெனில் பொதுவாக சிந்து சமவெளி நாகரிகம் என்று அறியப்படும் சரித்திர காலத்து முந்தைய நாகரிகம் என்று சொல்லப்படுகிற ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகத்தை இதற்கு முன்பு இவ்வகையில் வெளிவந்த நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் நூல் இது. ஆனால் பொதுவாசகரை மனதில் கொண்டே எழுதியிருக்கிறார் மிஷைல் தனினோ(மெல்லிய அங்கதச் சுவையுடன்). அந்த சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார் வை.கிருஷ்ணமூர்த்தி. திராவிடம் என்ற குரலை இன்றும் அரசியல் முகமாகக் கொண்ட தமிழகத்தில் அந்த கற்பிதத்தையே கேள்விக்கு உட்படுத்தும் இந்த நூல் குறித்து எந்த விவாதங்களும் எழாதது ஒரு முரண் தான். அதற்கு இந்நூல் அளிக்கும் பொது வாசிப்புக்கான ஒரு மெல்லி தடையும் காரணம் என நினைக்கிறேன். ஆனால் அந்த தடையைக் கடந்து வாசிக்கும் இந்தியக்கல்வி கற்றவர்கள் அனைவருக்கும் இந்நூல் பரவசம் அளிப்பதாகவே இருக்கும்.

கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தனர் ஆரியர்(இன்றுவரை இந்த ஆரியர்கள் யார் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த தெளிவான முடிவுகள் இல்லை). சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த மக்களை அடித்து வீழ்த்தி விரட்டிவிட்டு மேய்ச்சல் இன மக்களான ஆரியர்கள் தங்கள் நாகரிகத்தை இந்தியாவில் நிறுவினர். அவர்களால் இயற்றப்பட்டதே வேதங்கள். இதுதான் பெரும்பாலும் நாம் அறிந்திருக்கும் இந்திய சித்திரம். அந்த ஆரியர்களால் விரட்டப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் திராவிடர்களே என்பது நம் தமிழகத் தரப்பு. இந்த தரப்புகளில் இருக்கும் பிரிவினைத் தன்மை உண்மைதானா என்ற கேள்வியை மீட்டெடுக்கிறது இந்நூல். அதற்கென அது எடுத்துக் கொண்ட ஆய்வுக்களம் இமயமலையில் இருந்து(குறிப்பாக ஷிவாலிக் குன்றுகள்) பாகிஸ்தானில் உள்ள கோலிஸ்தான் வரை நீளும் வட இந்தியாவின் நீண்ட பகுதியும் சப்தசிந்துவும் கங்கை யமுனை நதிகளும். இந்திய நாகரிகம் மொத்தமும் எங்கிருந்தோ வந்த ஆரியர்களால் கட்டமைக்கப்பட்டது என்று நிறுவப்பட்டிருக்கும் கற்பிதத்தை வலுவான ஆதாரங்கள் வழியாக கேள்விக்கு உட்படுத்துகிறது.

வேதங்கள் இயற்றப்பட்டது முதல் இந்தியாவின் சரித்திர காலம்(ஒரு வகையில் இரும்பு காலம்) தொடங்குகிறது. இக்காலம் இன்றிலிருந்து நான்காயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்கு முந்தைய வெண்கல காலத்தைச் சேர்ந்ததான சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவாக்கத்தில் இருந்து அதன் வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவற்றை ஒரு புராதன(புராண?) நதியினை மீள் கண்டுபிடிப்பு செய்வதன் வழியாக விளக்க முயல்கிறது இந்நூல்.

காணாமல் போன சரஸ்வதி

மூன்று பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதி காணமல் போன சரஸ்வதி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய பல்வேறு காரணங்களை முன்னிட்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளுடன் தொடங்குகிறது இப்பகுதி. பாலைவனப் பகுதியான கக்கர் படுகையில் கிடைக்கும் நல்ல குடிநீர் ஏற்கனவே கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கிணறுகள் ஆகியவற்றை அவற்றின் வழியே பயணித்தவர்கள் பதிவு செய்கிறார்கள். அதன்வழியே மெல்ல மறைந்த நதியான சரஸ்வதி தரிசனம் தரத் தொடங்குகிறது.
கிழக்கில் இமயமலையின் ஷிவாலிக் குன்றுகளில் இருந்து மேற்காகப் பாய்ந்து (ஹரியானா,ராஜஸ்தான் வழியாக) போயிருந்த கக்கர் என்ற நதியும் இந்திய எல்லையைத்தாண்டி நீளும் அப்படுகையின் பாகிஸ்தான் தொடர்ச்சியான ஹக்ரா நதியும் ஆய்வு செய்யப்படுவதை இப்பகுதி விளக்குகிறது. கன்னிங்ஹாம் மாக்ஸ் முல்லர் போன்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் இருந்து ஒல்தாம் ஜேம்ஸ்டாட் என அவ்வளவாக அறியப்படாத எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது இந்நூல். முன்னரே சொல்லி இருப்பது போல இதுவொரு ஆய்வுநூல்(ஆனால் பொதுவாசிப்புத்தன்மை கொண்டது) என்பதால் இத்தகைய மேற்கோள்கள் தவிர்க்க முடியாதவை. 

சட்லெஜ் சிந்து என பல்வேறு நதிகளுடன் ஒப்பிடுவதன் வழியாகவும் கக்கர் ஹக்ராவிற்கு அருகில் வசிக்கும் மக்களிடம் சொல்லப்படும் செவிவழிக்கதைகளை ஆராய்வதன் வழியாகவும் இன்றும் கக்கருக்கு தெற்காக ஓடும் சிறு நதியான சர்சுதி என்பதை ஆராய்வதன் வழியாகவும் மகாபாரதம் சித்தரிக்கும் நிலங்களை ஆராய்வதன் வழியாகவும் மகாபாரதத்திற்கும் முந்தைய பிரதிகளான( ஆரியர்களால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும்) வேதங்களின் மேற்கோள்கள் வழியாகவும் கக்கர்-ஹக்ரா என்று அறியப்படும் நதிகள் ஹரப்பா காலத்தில் பெருநதியாகப் பாய்ந்த சரஸ்வதி தான் என்று நிறுவுகிறது இப்பகுதி. குஜராத்தின் கட்ச் ராண்(Rann of kutch) பகுதியின் சதுப்புகள் உட்பட பல்வேறு தடயங்கள் வழியாக ஆராய்ச்சி தொடர்கிறது. நதி வறண்டு போனதற்கான காரணங்களையும் இப்பகுதி ஊகிக்கிறது. நிலநடுக்கம் சட்லெஜ் நதியின் திசை மாற்றம் என நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. எப்படியாயினும் வேதங்களில் சொல்லப்பட்டது போல ஹராப்பா காலகட்டத்தில் இந்நதி நற்சிந்தனைகளை எழுப்புகிறவளாக கரைபுரண்ட ஓடினாள் என்பதை இப்பகுதியை வாசித்து முடிக்கும் போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவின் முதல் நாகரிகம்

தலைப்பைப் போலவே வாசிப்பதற்கும் பரவசத்தைக் கொடுக்கும் பாகம் இது. ஒரு புராதன நகரத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்க்கும் பரவசத்தை அளிக்கிறது இப்பகுதி. நாடு முழுவதும் விரைவாக ராணுவங்களை அனுப்புவதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசு நீளமான இருப்புப்பாதைகளை அமைத்தது. பஞ்சாப் பகுதியில் இருப்புப்பாதை அஸ்திவாரம் அமைப்பதற்கு எண்ணற்ற செங்கற்கள் தேவைப்பட்டன. ஹரப்பா நாகரிகம் உலகுக்கு தெரிய வருவதற்கு முன்பே அக்காலத்தில் பயன்பட்ட எண்ணற்ற செங்கற்கள் ரயில்பாதையின் அஸ்திவாரம் அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன என்பதை பின்னாட்களில் கன்னிங்ஹாம் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் என ஹராப்பா கிராமத்தையும் அதைச்சூழ்ந்த பல்வேறு பகுதிகளையும் தொடர்ந்து ஆராய்கின்றனர். ஒரு பிரம்மாண்டமான நதிக்கரை நாகரிகத்தை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். சீரான குடியிருப்புகள் குளியல் அறைகள் (சில இடங்களில் டைல்ஸ் கூட பதிக்கப்பட்டுள்ளது!) உபயோகப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் கிணறுகள் ஆலயங்கள் என தோண்டத் தோண்ட மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு மாபெரும் நாகரிகம் கண் முன்னே எழுந்து வருகிறது. அதற்கு முன்னரே கண்டறியப்பட்டிருந்த மெசபடோமியா போன்ற நாகரிகங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது இந்த சிந்து நதிக்கரை நாகரிகம். பெரும்பாலும் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நகரங்களின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருக்கவில்லை. இன்றளவும் தொடரும் பல்வேறு இந்திய குணங்கள் வரலாற்று முந்தைய காலத்திலேயே இந்தியர்களிடம் இருந்தது என்பது கொஞ்சம் அதிகப்படியான ஊகம் என்றாலும் வேறு வகையில் விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை அந்த மர்ம மனிதர்கள் விட்டுச் செல்லவில்லை. ஆனால் மெசபடோமியா ஆக்ஸஸ் பாக்டீரியா போன்ற அக்காலகட்டத்தின் பிற நகரங்களில் ஹராப்பா முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுடைய குறிப்புகளில் மெலுஹா என  குறிப்பிடப்படும் இடம் ஹரப்பா தான் என்றொரு கருத்தும் உண்டு. (இதை அடிப்படையாகக் கொண்டு அமீஷ் திருபாதி என்பவர் சிவபுராணங்களை இணைத்து மூன்று தொகுதிகள் கொண்ட ஒரு நெடுங்கதை எழுதி இருக்கிறார். இந்தியாவில் அது போன்ற நூல்களே அதிகம் விற்கும் போல.)

ஒரு அரசன் அனைத்தையும் கட்டி ஆண்டதற்கான தடயமோ போர்கள் நடந்ததற்கான தடயமோ சிந்து-சரஸ்வதி நதிக்கரைகளில் காணப்படவில்லை. பொதுவாக நம் பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். ஹராப்பா மொஹஞ்சதாரோ என்ற இரு நகரங்கள் சிந்து நதிக்கரையில் இருந்தன என்பது. ஆனால் அவற்றை நாம் படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்த நாட்களுக்குப் பல வருடங்களுக்கு முன்பே லோத்தல், காலிபங்கன், தோலவிரா, பனவாலி எனப் பல நகரங்கள் கண்டறியப்பட்டுவிட்டன. மூன்றாயிரத்துக்கும் அதிகமான அகழ்வாய்விடங்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன.

சிந்து சமவெளி காலகட்டத்தையே முற்காலம், முழுவளர்ச்சி அடைந்த காலம், பிற்காலம் எனப் பிரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலகட்டத்தில் இருக்கும் அகழ்வாய்விடம் மற்றொன்றிலும் இருக்கலாம் என்பதால் இந்த "மூவாயிரத்துக்கும் மேற்பட்ட" என்பது சற்றே அதிகமாக இருக்கலாம். ஆனால் கண்டெடுக்கப்பட்ட பல அகழ்வாய்வு இடங்கள் சரஸ்வதி(அல்லது கக்கர்-ஹக்ரா) நதிப்படுகையை ஒட்டியே அமைந்துள்ளன. முழு வளர்ச்சி கட்டத்திலேயே சரஸ்வதி வறளத் தொடங்கி இருக்கிறது. பிற்கால ஹரப்பா காலத்தில் மேலும் கிழக்காக நகர்ந்து சட்லெஜை நோக்கிச் செல்கின்றன குடியிருப்புகள்.
இதன் வழியாக சரஸ்வதி நதி வறண்டு போனதே சிந்து சமவெளி நாகரிகம்(அல்லது சிந்து - சரஸ்வதி நாகரிகம்) கைவிடப்பட்டதற்கான பிரதான காரணம் என்ற முடிவினை நோக்கி இப்பகுதி நம்மை உந்துகிறது.
மேலும் நதி கைவிடப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருப்பினும் இன்று பரவசத்துடன் அதனை ஆராய்ந்து கொண்டிருப்பினும் ஒரு நதி வறண்டு குடிபெயர்தல் என்பது அத்தனை எளிமையாக நடக்கக்கூடிய ஒன்றல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களைத் தேடி ஒரு துன்பம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டிருப்பார்கள். இக்காலத்திலும் அது எப்போதும் நடக்கவே வாய்ப்பிருக்கிறது. வற்றாத ஜீவநதி என்ற பதத்தை சற்றே அச்சத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்தும் எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.

சரஸ்வதியிலிருந்து கங்கை வரை

சிந்து சமவெளி நாகரிகத்தை முற்றழித்த ஆரியர்கள் கங்கைக்கரையில் தமது பாரம்பரியத்தை நிறுவினர் என்ற கூற்றின் உண்மைத்தன்மையை ஆழமான கேள்விகளுக்கு உட்படுத்தும் இப்பகுதி சிந்து-சரஸ்வதி நாகரிகத்துக்கும் கங்கைச் சமவெளி நாகரித்துக்குமான பண்பாட்டுத் தொடர்ச்சியை விளக்க முயல்கிறது. ஹராப்பா காலகட்டம் என்பது இன்றிலிருந்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வருகிறது( ஆசிரியர் கி.மு மற்றும் கி.பி என்ற கால அளவுக்கு பதிலாக பொது யுகத்துக்கு முன் மற்றும் பொது யுகம் என்ற அளவுகளை பயன்படுத்துகிறார். பொ.யு.மு என்பது கி.முவை விட இருநூறு ஆண்டுகள் கூடுதல்.) அந்த காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்தே கங்கை நதிக்கரையில் குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடைவெளிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வறண்ட சரஸ்வதியின் மணற்குன்றுகளை தொடர்ந்து ஆய்வு செய்ய முடிகிறது. ஒரு விரிந்த நிலப்பரப்பிலும் அந்த ஆய்வு நடந்திருக்கிறது. ஆனால் கங்கைச் சமவெளியின் பெரும்பாலான வேதகால நகரங்கள் இன்றைய கான்கிரீட் கட்டடங்களுக்கு அடியிலேயே உறைகின்றன. ஆகவே மிக்குறைந்த இடங்களிலேயே கங்கைச் சமவெளியில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.
இந்த குறைந்த நிலப்பரப்பிலும் கூட பல்வேறு பண்பாட்டு தொடர்ச்சிகள் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நகர அமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜியோமிதி அளவுகள் சதுரங்கம் பகடை போன்ற விளையாட்டுப் பொருட்கள் படகு கட்டும் முறை என பல ஒற்றுமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் முத்திரைகளை கங்கைச் சமவெளி முத்திரைகளுடன் ஒப்பிட்டு ஆராயும் போதும் ஆச்சரியப்படும் வகையில் பல ஒத்துப் போகின்றன. இருந்தும் இங்கிருக்கும் ஒரு பெரிய சிக்கல் சிந்து மக்களின் மொழி தான். அதை இன்றளவும் புரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சிகள் நடக்கின்றன. சிந்து மக்களின் மொழிப்புதிர் அவிழ்க்கப்படும் வரை இரு நாகரிகங்களுக்கு இடையேயான தொடர்பில் பெரும்பகுதி மர்மமாகவே நீடிக்கும் என்ற சோர்வேற்படுத்தும் செய்தியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் தொடர்ச்சியாக எழுத்து வடிவத்தை மாற்றிக் கொள்ளும் மொழிகளை புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தாலும் பெரிய மாற்றங்களுக்கு உட்படாத கடவுள் உருவங்ளும்(வினாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிக்ஸ்பேக் வைத்துப் பார்க்கும் அசட்டுத்தனங்களை தவிர்த்து விடலாம்) சிந்து மக்களின் மதமும் கங்கைச் சமவெளியோடு ஒத்துப் போகிறது. பசுபதி சிவன் பெண் தெய்வம்  அனைத்துமே பின்னர் கண்டெடுக்கப்பட்ட கங்கை நாகரிகத்தில் தொடர்ச்சியைக் கொண்டுள்ளன.

இன்றைய பாரம்பரிய இந்திய விவசாயி ஒருவரால் சிந்து நாகரிகத்தை எந்த சிரமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். சரஸ்வதியின் வாக்குமூலம் என்ற கடைசிப்பகுதியில் சரஸ்வதி என்ற ஒரு நதி இல்லை என வாதிடும் ஆய்வாளர்களுக்கு ஆசிரியர் பதில் சொல்கிறார். மறுக்க முடியாதவை என்று சொல்லப்படும் வாதங்களுடன் விவாதிக்கிறார். ரொமிலா தாப்பர் இர்பான் ஹபீப் போன்ற புகழ்பெற்ற வரலாற்று அறிஞர்கள் இந்த புராதன நதி குறித்த உண்மையை ஏற்க மறுகின்றனர். இருந்தும் அவர்களுக்கான பதிலையும் சரஸ்வதியின் வாயிலாகவே சொல்கிறார் ஆசிரியர்.

இந்நூலில் முடிவுகள் நோக்கிச் செல்வதற்காக சில எளிமைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் ஆரியர்-திராவிடர் என்ற எளிமைப்படுத்தலை விட அது மேம்பட்டதாகவே இருக்கும். சில தாவல்களும் நிச்சயமாக இருக்கும். இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள தரவுகள் ஆய்வுத் தகவல்கள் உள்ளூர் மக்களின் நம்பிக்கை என ஒன்று விடாமல் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தாலும் உண்மை தூரத்தில் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஆனால் இத்தகைய பார்வை புதிது. இதில் இருக்கும் நேர்மறைத் தன்மை நம்பிக்கையூட்டுவது. தன்னுடைய வாழ்நாள் பணியான ஒன்றைத் திரட்டி நம்முன் வைத்திருக்கிறார் ஆசிரியர் என்பது குறிப்புதவி நூல்களின்(Reference books) பெயர் பட்டியலே நாற்பது பக்கங்களைத் தாண்டிச் செல்வதில் இருந்து தெரிகிறது. அதே நேரம் அவருடைய நேரடிக்கள ஆய்வுகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

ஒரு பொதுவாசகனுக்கு இத்தகைய சந்தேகம் வரலாம். ஐந்தாயிரம் வருடத்துக்கு முன்பிருந்தவர்கள் ஆரியராய் இருந்தால் என்ன திராவிடராய் இருந்தால் என்ன என்று? இது சரியென்று கூடத் தோன்றி விடும். ஆனால் தமிழகத்தின் ஐம்பதாண்டு கால அரசியலை இந்த வாதம் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்திருக்கிறது. ஒரு சமூகத்தின் பொதுக் கருத்தியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்கான அறைகூவல் இந்த நூலில் உள்ளது. சமீபத்தில் எழுந்திருக்கும் ஆட்சி மொழி சிக்கல் வரை(கொஞ்சம் அதிகப்படியாய் போகிறதோ) இந்த கருத்தியல்களை பொறுத்திப் பார்க்க முடியும் என்பது என் துணிபு.

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கென இத்தகைய அறிஞர்கள் வாழ்நாளை அர்ப்பணித்து ஆய்வுகளை நடத்துவதில்லை எனினும் மிக ஆழமான ஆய்வுகள் அவற்றுக்கே உரிய வகையில் பிரச்சாரங்களுக்கு அவசியமின்றி சமூகத்தில் எல்லா தளங்களிலும் ஆழமான பாதிப்பை நிகழ்த்தவே செய்யும்.
சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷைல் தனினோ(தமிழில் - வை.கிருஷ்ணமூர்த்தி)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை:350

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024