ஒளிர்நிழல் - மாற்றங்களின் மோதல்

ஒளிர்நிழலின் முதல் வாசகராகிய திருமதி.மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அந்நாவல் குறித்து எழுதிய பதிவு

இந்நாவல் முதலில் ஒரு சிந்தித்தலை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கதைசொல்லி ஆரம்பிப்பதுபோலவோ நாவலாடலின் இடங்களையோ மாந்தர்களையோ வர்ணிப்பதுவோ இல்லாமல் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கிறது அந்த ஆரம்பநிலை சிந்தனைகள். அப்பொழுதே மனம் ஒருங்கிவிட்டது. இந்நாவலின்மூலம் அப்படி என்னதான் சொல்லவருகிறார் என எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது. அனுமதிக்கப்படுபவை எனவும் அனுமதிக்கப்படாதவை எனவும் கூறப்படுவது காலச்சக்கரத்தின் கைகளில் உள்ளது என புரியவரும்போது கூறப்படும் ஒவ்வொரு வரியிலும் தெளிவாக அது உணர்த்தப்படுவதை உணர்ந்தேன்.
ஆனால் அதே தெளிவான வார்த்தைகளில் இந்த காலச்சக்கரத்தை தெரிந்துகொள்கிறவன் தன்னை சமரசம் செய்துகொள்ள முடியாமல் இறுதியில் இறப்பை நோக்கியே உந்தப்படுகிறான் என்பதை வாசித்தபோது முதலில் அதிர்ச்சியே வெளிப்பட்டது. ஆனால் ஆழமாக யோசித்துப்பார்த்தால் அதுதான் உண்மை எனப் புரிந்துகொள்ளமுடிகிறது. இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாமாந்தரிலும் காலமாற்றத்துடன் கூடிய சிந்தனைகளை வாசித்துக்கொண்டு வருகையிலும் அந்த உண்மை புலப்பட்டுக்கொண்டே வருகிறது. ஒருபக்கத்திலிருந்து பார்க்கும்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு கருத்தும் எனக்குள் சீண்டலை முதலில் நிகழ்த்திவிடுகின்றன. ஏனெனில் எவையெல்லாம் அனுமதிக்கப்படாதவை என நான் நினைத்துக்கொண்டிருந்தேனோ அவையெல்லாம்  எனக்கு முன் வாழ்ந்திருந்த மூதாதையர்களால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என தெரியவரும்போது அதிர்ச்சியையே அளித்தன. அதுபோல என் பழங் காலப்பார்வையானது இப்போதுள்ள இளம் இளைஞர்களின் பார்வையில் வேறு கோணங்களைத் தருகின்றன.
நான் தாய்மை தந்தைமை குடும்பம் உறவு இவற்றுக்கிடையில் பேரம் என்ற வார்த்தையை உபயோகித்துப் பழக்கமில்லை. அப்படி எதுவும் நான் இதுவரை படித்ததில் எவரும் சொல்லவுமில்லை. ஒருவேளை மகத்தான உலகளாவிய எழுத்தாளர்களை நான் அதிகம் வாசிக்கவில்லை போலும். ஏனெனில் இந்த புதிய சிந்தனையில் நான் தவறைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு வெளிப்புற பாவனைதான் என்றும் கால சுழற்சியையும் மனித மனம் மாறிக்கொண்டிருக்கும் வேகத்தையும் பார்த்து உள்ளூற இதை நான் ஒத்துக்கொள்கிறேன் எனவுமே நினைத்தேன்.

ஒரு வாக்கியத்தைக்கூட சாதாரணமாக வாசித்து என்னால் கடக்கமுடியவில்லை. இறைமைக்கு ஒரு புதிய நெறியைக் கண்டேன். கொல்ல முடிந்தும் கொல்லாமலிருப்பது. அருமையான கோணம். அடுத்த கோணம் இறைவனின் இருப்பு வேதாந்த தத்துவத்தில் சொல்லப்படுவது. தனித்தனியாக தத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என தேடிப்படிப்பதிலிருந்து அறிந்துகொள்வதை இந்த ஔிர்நிழல் நாவலிலேயே அறிந்துகொள்ளமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தலைமுறை தலைமுறையாக வரும் உறவுகள், மகன் போன்ற உறவு முறை கொண்டவன் தாயிடம் கொள்ளும் உறவு, தந்தை தன் மகளிடம் காணும் உறவு, ஒருவனுக்கு ஒருத்தி என பாவனை கொண்ட இச்சமூகத்தில் கணவனைத்தாண்டி மனைவிக்கு உள்ள உறவு, காதலித்தவனே கணவனாக வேண்டும் என போராட்ட பாவனையுள்ள இந்நிலையில் காதலி வேறு ஒருவனை மணப்பது, ஒருவன் அடுத்தவருக்கு தெரியாமல் எவ்வளவு எவ்வளவு வேண்டுமானாலும் அறம்பிழைக்கலாம், தெரியாதவரைக்கும் தன்னை உத்தமன் என காட்டிக்கொள்வது, தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடவாய்ப்புண்டு என்ற நிலை வரும்போது கொலைவரை சென்று தன் தவறுக்கான சாட்சியே இல்லாமல் செய்துவிடுவது இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதனதன் இயல்பான போக்கில் சித்தரிப்பதன் மூலம் மனித மனதின் நுட்பம் விரித்தெடுக்கப்படுகிறது.
இதுவரை தத்துவம், பண்பாடு, வரலாற்றில் விளக்கம் தரமுற்பட்டவர் இந்நாவலில் அரசியலையும் அறத்தையும் சொல்லத் தவறவில்லை.
முதலில் நிகழும் துக்க சம்பவத்தில் குடும்ப அரசியல் ஒன்று காண்பிக்கப்படுகிறது. ஆனால் அதை சாதாரணமாக கடக்க முடியவில்லை. ஒருவரின் இறப்பு தனக்கு ஏதும் செய்யாமல் போய்விட்டாலொழிய அல்லது தனக்கு ஏதும் பாதிப்பைத் தராவிட்டால்தவிர அந்த அளவு துன்பம் தராது என்ற கருத்து. யோசித்துப்பார்த்தால் அது உணமைதான். யார்யாரோ எங்கெங்கோ சாகிறார்கள் ஏன் அவ்வளவு தூரம் நம் உறவினர்களிலோ நமக்கு தெரிந்தவர்களேயானாலும் இறந்துவிட்டால் அது நம்மை உலுக்கி எடுக்கும் துயரை நமக்கு அளிப்பதில்லை. ஒரு இறப்பிலும் அங்கு சுயநலமே இருக்கிறது. இதை சற்றும் சுற்றிவளைக்காமல் நேருக்கு நேராக என்னை நோக்கிக் கேட்ட கேள்வியாக அது
இருந்தது. அதிலிருந்தே சற்று நேரம் மீளமுடியவில்லை.
அடுத்து வரும் உளவியல் அரசியல் இன்னும் ஆழமாக உள்ளது. அதில் தன்னையே விமர்சித்துக்கொள்வது. அதனினூடாக வாசிப்பவர் தன்னை அடையாளம் கண்டுகொள்ளுமாறு கொண்டுசெல்வது. தன்னை விமர்சித்துக்கொள்வதில் அனைத்துமே அடங்கும். தன்னை வதைத்துக்கொள்வது, அடுத்தவரை வதைப்பது, தான் நிம்மதியடைவதாக எண்ணிக்கொள்வது, அடுத்தவரின் சந்தோஷத்திற்காகத்தான் இவற்றை செய்கிறோம் என மழுப்பலான தேறுதலை தனக்குத்தானே அளித்துக்கொள்வது.
இவை உளம்சார்ந்த அரசியல் என்றால் புறம் சார்ந்த அரசியலை தலித் சமூகத்தை முன்னிருத்தி சொல்லப்பட்டிருக்கும் குடியிருக்கும் இடத்திலிருந்து பதவியில் அமர்ந்திருக்கும் இடம் வரை நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டலாம். காந்திக்கு முன் காந்திக்கு பின்  இந்தியாவில் தலித்தினத்தவர் யார் எவ்வாறு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் அவர்களின் இன்றைய நிலைமை என்ன என கூர்ந்து ஆய்ந்து வரும் சித்திரம் இந்நாவலில் சொல்லப்படுகிறது. இது என்னை முதலில் நீ இந்திய வரலாற்றை அறிந்துகொள். சாதியைத் தெரிந்துகொள் என்ற சீண்டலையும் அதன்வழியே அவற்றைத் தேடித்
தெரிந்துகொள்ளவேண்டும் என்ற உத்வேகத்தையும் கிளப்பியிருக்கிறது.

இதில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு குடும்பபேரம் ஒன்று சொல்லப்படுகிறது. தாய் தந்தை குடும்பம் மகள் மகன் உறவு இவைகள் நவீன சமுதாயத்திற்கு ஒவ்வாதவைகளாக இவ்வுறவுகளை இணைத்துக்கொண்டிருக்கும் அன்பு காதல் பாசம் நேசம் வீரம் இவைகள் பேரத்திற்குள் அடங்குபவையாக புதிய பார்வை ஒன்று திறக்கப்படுகிறது. அப்படியா! என அதிர்ச்சியலைகளை உண்டாக்கி அமைதியடைகையில் அப்படி இருந்தால் ஒருவேளை நானும் சுதந்திரமாக கட்டுப்பாடற்று நினைப்பதை செய்யலாமல்லவா என்ற எதிர்பார்ப்போடு அமைந்தது.

இந்நாவலில் இத்தனை அரசியலுக்கும் இடையில் அறம் இழைந்தோடுவதுதான் சிறப்பு. ஆனால் அந்த நல்ல மனிதர்கள் தம் வெம்மையான இருப்பை மனசாட்சியின் தண்டனையாக உயிரோடு இருக்கும் கதாமாந்தர்களுக்கு தந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். இதை வாசிப்பவர்களும் ஆத்மார்த்தமாக உணரமுடியும்.
இந்நாவலின் இன்னொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால் இதை நீ எப்படி புரிந்துகொண்டு படித்துவிடுகிறாய் என நான் பார்க்கிறேன் என ஆசிரியர் வாசகனுக்கு விடுக்கும் சவால்தான். முதலில் தலைமுறைகளை உறவுமுறைகளை புரிந்துகொள்ளவேண்டும். அதற்கே எனக்கு இருமுறை வாசிப்பு தேவைப்பட்டது. உள்ளே  பொழியும் தத்துவம் மற்றும் இனிமையான கவிதை மழைகளில் நனைந்து மகிழ மூன்றாம் வாசிப்பு. இறுதியாக என் பார்வைக்கோணங்களிலிருந்து எனக்குத் தெரிந்ததை நான் அறிந்து கொண்டதை எழுத நான்காம் முறை. அப்படியும் நாவல் எழுதப்பட்டிருக்கும் முறை இறப்பிற்கு முன் இறப்பிற்கு பின் என இறந்தவன் நாவலுக்குள் இறந்தானா நாவலுக்கு வெளியே இறந்தானா இன்னமும் நாவல் முற்றுப்பெற்றுவிட்டதா அல்லது அந்நியன் மீண்டும் சிங்கம் மீண்டும் காஞ்சனா மீ்ண்டும் பாகுபலி மீண்டும் என்பதுபோல ஔிர்நிழல் மீ்ண்டுமாக ஒன்று இருக்குமோ என்று புன்னகைக்க வைக்குமாறு முடித்தமையில் என் உளம் எழுச்சிகொண்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024