ஸ்பைடர்மேனும் அமேசிங் ஸ்பைடர்மேனும்
பத்து வயதில் ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை சைக்கிளில் கடப்பது எனக்கு எண்ண முடியாததொரு கிளர்ச்சியை அளித்திருந்தது. அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியது. அமர்ந்து செல்வதே கிளர வைத்திருந்தது. அதிலும் பயண நோக்கம் ஸ்பைடர் படம் பார்க்கச் செல்வது. வழக்கமாக பயணிக்கும் கொரடாச்சேரி-கமலாபுரம் சாலை வழியாக இல்லாமல் பாண்டவை ஆற்றின் மறுகரையில் உள்ள ஆலத்தாங்குடி வழியாக அத்திக்கடை சென்று அங்கிருந்து லெட்சுமாங்குடியில் இருக்கும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம். அண்ணனுடைய தோழர்கள் சிலரும் படத்துக்கு வந்திருந்தனர். பார்த்து முடித்து திரும்பி வருகையில் எப்படியெல்லாம் சிலந்தி மனிதனைப் போல் நடித்துப் பார்ப்பது என்ற கற்பனையிலேயே மூழ்கி இருந்தேன். அவ்வயதில் அத்தகைய பல கற்பனைகள் எனக்கிருந்தன. நண்பர்களுடன் டைம் மிஷினில் ஏறிப் பறப்பது சக்திமானை சந்திப்பது வளைந்த இரும்புக் கம்பியை துப்பாக்கியாக எடுத்துக் கொண்டு தீவிரவாதிகளை அழிக்க இந்திய ராணுவத்துக்கு துணை நிற்பது இப்படி பல. செம்மண் சாலையின் கப்பிக் கற்களில் எங்கள் சைக்கிள்கள் தடதடத்து வரும் போது "தம்பி எப்டி ஸ்பைடர் மேன் ஆவலாம்னு யோசிக்கிறானா?" என ரமேஷ்குமார் அண்ணன் என்னை கேட்டார். நான் சிரித்தேன்.
கோடை விடுமுறை என்பதால் அண்ணன் ஆங்கில திரைப்பட சேனல்களை பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தான். சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஸ்பைடர் மேன். சாந்தி தியேட்டரில் பார்த்த அதே முதல் பாகம். இறுதிக் காட்சியை மட்டும் பார்க்க முடிந்தது. மக்களா காதலியா என்று முடிவெடுக்க வரும் போது இரண்டையும் காப்பாற்றுகிறார் ஸ்பைடர் மேன். அந்த படம் முடிந்த உடனேயே இன்னொரு ஆங்கில சேனலில் தி அமேசிங் ஸ்பைடர் மேன். அப்படத்தையும் ஏற்கனவே பார்த்திருந்தேன்(எம்மா ஸ்டோனுக்காக மட்டும்). உண்மையில் முதல் முறை பார்த்த போது காதல் காட்சிகள் நீங்கலாக ஒரு உற்சாகமற்ற திரைப்படமாகவே தி அமேசிங் ஸ்பைடர் மேன் இருந்தது. ஆனால் இம்முறை அப்படம் பல விஷயங்களை தொட்டுணர வைத்தது.
கற்பனையும் நிகருண்மையும்
இலக்கியம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விவாதிக்கத் தொடங்கிய ஒன்றின் சாயலை இவ்விரு திரைப்படங்களை கொண்டு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. கற்பனாவாதம் நவீனத்துவம் என சொல்லப்பட்ட இருவகை இலக்கிய போக்குகளை இவ்விரு திரைப்படங்களும் சித்தரிக்கின்றன.
சிறந்த கலைஞர்களைக் கொண்டு அதிக பொருட்செலவில் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அதே சாயலில் மறு உருவாக்கம் செய்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியுடன் தி அமேசிங் ஸ்பைடர்மேனை அணுக முடியும்.
மிகுகற்பனை எப்போது உருவாகிறது? நம்மால் புரிந்து கொள்ள முடியாத பிரம்மாண்டம் என ஏதேனும் நம் தலை மீது எழுகையில் அதை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாத மனம் அது குறித்த கற்பனைகளை பெருக்கிக் கொள்கிறது. ஜனநாயக காலகட்டம் உலகில் தொடங்கி கல்வி பரவலாகும் வரை மக்களின் மிகக் கவர்ச்சிகரமான கற்பனை என்பது அரசன் குறித்ததாகவே இருந்திருக்கிறது. அரசன் தன்னை அதிமானுடனாக மக்களின் மீட்பனாக அவர்களுக்கு அருள் புரிபவனாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அன்றைய அரசாங்கத்தை நிலைநாட்டுவதற்காக இருந்திருக்கும். ஆனால் அரசு என்பது மக்கள் சேர்ந்து கட்டமைக்கும் ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமே என்ற எண்ணம் வலுப்பெறுகையில் அரசன் குறித்த கற்பனைகள் தகர்ந்து போகின்றன. அந்த கற்பனை தகர்ந்த இடத்தில் தான் அதிமானுடர்கள்(super heroes) தங்கள் இருப்பை நிறுவினார்கள். ஆனால் அவர்களின் குண இயல்புகள் மத்தியகாலம் வரை அரசனுக்கு சொல்லப்பட்ட குண இயல்புகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கவில்லை. மக்களுக்காக போராடுதல் "ஆபத்தான" எதிரிகளை ஒழித்துக் கட்டுதல் தன் சுயநலன்களை தியாகம் செய்தல் என இந்த அதிமானுடர்களும் ஒருவகையான "ஜனநாயக அரசர்களாகவே" இருந்தனர். ஆனால் சமூகத்தை கட்டமைத்த கருத்தாக்கங்கள் சமூகத்தை இன்னும் தீவிரமாக ஊடுருவும் போது இத்தகைய மிகுகற்பனை நாயகர்களின் மீதான நம்பகத் தன்மை குறையத் தொடங்குகிறது.
இன்றைய காலத்தில் வேற்றுலக வாசிகளும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இலுமினாட்டிகள் போன்ற ரகசிய அமைப்புகளும் அத்தகைய கற்பனையை நம்முள் பெருக்குகின்றன. அது குறித்த கதைகளை உருவாக்கி பரவசப்பட்டுக் கொள்கிறோம்.
ஸ்பைடர்மேன் சித்தரிப்பது இத்தகைய மிகுகற்பனைகளின் காலத்தை. தி அமேசிங் ஸ்பைடர்மேன் சித்தரிப்பது யதார்த்தத்தில் தடுமாற்றங்களும் பலகீனங்களும் புத்திசாலித்தனமும் கொண்ட இளைஞனின் பார்வையிலான ஒரு காலத்தை.
இருவகை கதையோட்டங்கள்
முதல் பார்வைக்கு இரு திரைப்படங்களும் ஒரே வகையான கதையை சொல்வதாகவே தோன்றும். ஆனால் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் ஈர்க்கக்கூடியவை. முதலில் ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வரும் நாயகன் பள்ளியில் படிக்கும் பதின்ம வயதினன் என்பதே நம்பச் சிரமமானதாக இருக்கும். அந்த நாயகியும் அப்படியே. ஏனெனில் இளைஞனுக்கே உரிய பதற்றமோ துடிப்போ அவனிடம் இருக்காது. சற்றே தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒரு இளைஞன் தனக்கான விசேஷ சக்தி கிடைத்ததும் என்ன செய்கிறான் என்பதைக் கொண்ட இவ்விரு திரைப்படங்களில் ஒரு இளைஞனை சித்தரிப்பது யார் எனச் சொல்லி விட முடியும். முன்னவன் விரைவாக பேருந்தைப் பிடிக்கிறான். கப் அண்ட் சாசர்கள் கீழே விழுந்து நொறுங்காமல் பிடிக்கிறான். ஆனால் பின்னவன் சற்று குள்ளமாக இருப்பதால் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து அதைச் செய்த கூடைப்பந்தாட்டக்காரனை வம்புக்கு இழுத்து மண்ணை கவ்வ வைக்கிறான்.
அது போலவே மக்களுக்காக அவர்களை களத்தில் இறங்க வைக்கும் முக்கிய சம்பவம் ஸ்பைடர்மேனின் மாமா கொல்லப்படுவது. இரண்டு படங்களிலும் ஒரு திருடனால் தான் அவர் கொல்லப்படுகிறார். ஆனால் முதல் திரைப்படத்தில் அந்த திருட்டினை தடுக்காமல் இருக்க மட்டுமே செய்கிறான்(நம்மைப் போலவே) நாயகன். ஆனால் இரண்டாவது படத்தில் திருடனிடமிருந்து ஒரு குளிர்பானத்தையும் வாங்கிச் செல்கிறான் நாயகன். அவனுக்கு திருட்டிலோ சமூக மதிப்பீடுகள் மீறப்படுவதிலோ எந்த அக்கறையும் இல்லை. ஆனால் விருப்பமான ஒருவரின் மரணம் அவனை பொட்டில் அறைகிறது.
முதல் திரைப்படத்தில் தன்னெழுச்சியாக உருவாகிவரும் ஒரு வில்லனை எதிர்க்கிறார் ஸ்பைடர்மேன். தன்னுடைய அடையாளம் தன் காதலிக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். மக்களை காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறான். மக்களும் அரசும் அவனை போற்றுகின்றன. இத்தனையும் செய்வது ஒரு பதின்ம வயதுப் பையன்!!
ஆனால் தி அமேசிங் ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் நாயகன் கொடுத்த ஒரு சூத்திரத்தைக் கொண்டு தான் அந்த பேராசிரியர் தன்னை அதிபயங்கர வில்லனாக மாற்றிக் கொள்கிறார். நாயகனும் தன்னுடைய திறனைக் கொண்டே காதலியை வளைத்துப் பிடிக்கிறான். அவளிடமிருந்து தன்னை மறைக்க அவன் விரும்பவில்லை. தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து என்பதால் மட்டுமே அந்த வில்லனை எதிர்க்கிறானே ஒழிய "மக்களுக்காக" போன்ற பாவனைகள் அவனிடம் இல்லை.
ஸ்பைடர்மேன் "ஒற்றை ஆளாக" அனைத்தையும் எதிர்கொள்கிறான். மக்களை காப்பாற்றிய பிறகு காதலியைப் பிரிந்து மக்களுக்காக சேவை செய்ய சென்று விடுகிறான் ஸ்பைடர்மேன்.
ஆனால் இறுதிக்காட்சியில் ஒரு காலில் அடிபட்டு நொண்டி நொண்டி ஓடுகிறான் இரண்டாமானவன். கிரேன் ஆபரேட்டர்களின் துணையுடன் தாவித் தாவி வில்லனை நெருங்குகிறான். மக்களை காப்பதற்கான மாற்று மருந்தை நாயகி தான் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கிறாள். நாயகியின் அப்பாவையும் பலி கொடுத்து தான் வில்லனை நெருங்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவனே மாடியில் இருந்து விழுந்து இறந்து போகும் ஒரு நிலை வரும் போது அவனையே "திருந்திய வில்லன்"தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
இறுதியில் இருவருக்குமே காதல் கைகூடவில்லை. முன்னவனுக்கு கடமையுணர்வால். பின்னவனுக்கு காதலியின் அப்பா வாங்கிக் கொண்ட சத்தியத்தால். ஆனால் முன்னவன் அதை ஒரு தீவிரமான சோகமான மாற்றி முன் வைக்கிறான். பின்னவனிடம் குழப்பமே நிறைந்திருக்கிறது. முதல் திரைப்படம் காதலியின் கண்ணீருடன் நிறைவுற தி அமேசிங் ஸ்பைடர்மேன் மேன் அவளின் மென் நகைப்புடன் நிறைவுகிறது.
லட்சியவாதங்களை இறுகப் பற்றியிருந்த ஒரு காலகட்டம் முடிந்து சுயம் குறித்த அறிதல்களை முன் வைக்கும் ஒரு காலகட்டம் எழுவதை இவ்விரு திரைப்படங்களுக்கான இடைவெளி சித்தரிக்கிறது. அப்படியெனில் லட்சியவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் அப்படி இல்லை என்று சொல்வதாகத் தோன்றுகிறது. தன்னுடைய பயத்தால் நிகழ்ந்த பெற்றோரின் மரணம் பொட்டில் அறைய சுயத்தை தேடிச் செல்லும் புரூஸ் வெய்ன் கண்டடையும் லட்சியவாதம் வேறு வகையானதாக இருக்கிறது. இன்றைய காலத்திற்கானதாக இருக்கிறது. அது குறித்து தனியே எழுத வேண்டும்.
நூல்களில் பொதியப்பட்டு அமைப்புகளாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு லட்சியவாதத்தின் காலம் முடிந்து சுயத்தால் அடையக்கூடிய லட்சியங்களை கொண்டதாக சமூகம் மாறுகிறதா? அல்லது வழக்கம் போல் இதுவும் என் விருப்ப கற்பனையா?
This comment has been removed by the author.
ReplyDeleteஸ்பைடர் மேன், மெட்டமார்பஸஸின் வணிக மற்றும் முற்றிலும் பாஸிட்டிவ் ஸ்பின் எனத் தோன்றும். சரியான தமிழ் வார்த்தைகள் அகப்படவில்லை. மன்னிக்கவும்.தவிர, தமிழ் படுத்தும் போது, வாக்கியங்களில் ஒலி மற்றும் த்வனி மாறி விடுகிறது. எனவே, எளிமைக்காக மட்டுமே இது. பரப்பியல் சினிமாக்களை பற்றி மதிப்பரைகள் மிகவும் குறைவே. நன்றாக இருக்கிறது. ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் - வீடு திரும்பிய சிலந்திக் குமரன், ஐயர்ன் மேன் உதவியுடன். நன்றாக இருக்கிறது. முக்கிய கூறுகள். குரல் கூட உடையாத சிறுவன். வயதைடைதல் தடையாக இருக்க அவன் பெருமதிப்பு கொண்டவரே உதவுகிறார். நேர்த்தியாக எழுதப்பட்ட வில்லன். அவனே ஸ்பைடர் மேன் என உணர்ந்து உதவும் ஆருயிர்த் தோழன். சாஹஸம் நிறைந்து இருப்பினும் இளங்குமரர்களின் பதட்டம், கூரிய சிந்தனை, நகைச்சுவை நிரம்பிய நல்ல வணிக திரைப்படம். உங்கள் ஸ்பைடர் மேன் விமரிசன வரிசையில் மூன்றாவது படமாகலாம் ��
ReplyDelete