அன்புள்ள அப்பா
அப்பா நான் யாழினி.
நல்லா இருக்கீங்களா? இப்படி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்னோ அது என்னைப் பற்றிய தன்னிலை விளக்கமாக இருக்குமென்றோ நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நம் எண்ணங்கள் இளமை முதலே வேறுபட்டதில்லை என்று தான் நான் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் பல சமயங்களில் நான் உங்களுக்கு ஜால்ரா அடித்திருப்பதை இப்போது அவமானத்துடன் எண்ணிக் கொள்கிறேன். சில சமயம் நீங்களும் எனக்கு அடித்திருக்கிறீர்கள் என்றெண்ணி ஆசுவாசம் கொள்கிறேன். அறிந்த நாள் முதல் அஞ்சிய என் அம்மா என் விருப்பங்களுக்கு எப்போதும் முட்டுக்கட்டை போடும் என் அம்மா என் காதலோடு சேர்த்தே என்னையும் ஏற்றுக் கொண்டாள். அப்பா இனி ஒருமுறை கூட உங்களை நான் பார்க்கவே போவதில்லை என்று எண்ணி என் மனம் ஒரு கசப்பான நிறைவை அடைகிறது. ஆனால் அம்மாவை பார்க்க முடியாது என்பதை என்னால் தாங்கமுடியலப்பா. நான் அவள் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உனக்கு என்ன குழம்பு வெச்சு ஆக்கிப்போடலாம்னு தான் அவ யோசிச்சிட்டு இருப்பா இப்பவும். ஆனா எனக்கே தெரியாமல் அவளுடைய மதிப்பீடுகளை எனக்குள் அம்மா ஊற்றிவிட்டிருக்கிறாள். உங்களை மனதளவில் முழுமையாக விலகிவிட்டதால் இப்படி ஒரு கடிதத்தை என்னால் எழுத முடிகிறது. நான் உங்களுடைய விந்துத்துளி என்பது என் மீது உங்களுக்கு எந்தவித முற்றுரிமையும் வழங்கிவிடுவதில்லை. அப்பா எனக்கு கை நடுங்குகிறது. இப்படி பேச வச்சிட்டியேப்பா என்ன?
அது என்ன மூர்க்கம்ப்பா அது?
எவ்வளவு அழகான குடும்பத்தை வாழ்க்கையை எனக்கு எல்லோரும் சேர்ந்து கொடுத்தீங்க. எவ்வளவு சந்தோஷமா அன்போட இருந்தீங்க எல்லோரும் என்னோட. இவ்வளவு நெருக்கமும் பரிவும் யாருக்குமே கொடுத்து வைத்திருக்காது என்று தான் நம்பினேன். நவீனத்திற்குள்ளும் என்னை நுழைய விட்டு என்னுடைய பெரிய குடும்பம் மரபிலும் காலூன்றி நிற்க என்னை அனுமதித்திருக்கிறது என இறுமாந்திருந்தேன். ஒவ்வொரு பண்டிகைக்கும் கல்லூரியிலும் பின்னர் அலுவலகத்திலும் கெஞ்சி கூத்தாடி விடுப்பு பெற்று இடுப்பொடிய தூக்கம் கெட்டு வேலை செய்வதும் ஒவ்வொரு உறவாக அறிமுகம் செய்து கொண்டும் அன்போடு தழுவிக் கொண்டும் கிடந்தது அனைத்தும் இன்று அபத்தமாக தெரிகிறது.
நான் வீட்டில் உண்ட உணவிலிருந்த பரிவு. நினைத்தாலே கண்ணீர் தான் வருகிறது. அண்ணிகளுக்கு அசைவம் பிடிக்காது. ஆனால் எனக்காக மூக்கை பொத்திக் கொண்டு அவர்கள் சமைப்பதே எவ்வளவு ருசியாக இருக்கும். அண்ணன்கள். அவர்களுக்கு என் மீதிருந்த அன்பு இப்போது என்னுடலை கூசிச் சிறுக்க வைக்கிறது.
ராமச்சந்திரன் அண்ணன் என்னை "தேவிடியா முண்ட" என்றான். மிக ஆழமான அவமான உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு மிக ஆழமான நிம்மதி. அவன் விரும்பும் ஒருவனை நான் மணம் முடித்திருந்தால் நிச்சயம் என் மீதான அவன் அதிகாரம் தளர்ந்திருக்காது. அவன் என் மீது காட்டிய அத்தனை அன்பும் என்னை தேவிடியாளாக எண்ணியதால் தான். தன்னுடன் நெருக்கமாக பழகும் பெண்ணை தேவிடியா என்று எண்ணாத ஆணே ஒருவேளை இங்கில்லையோ? அப்பா ஒரு வருடம் முன்பு வரை நீ அமர்ந்திருக்கும் சோபாவின் கைப்பிடியில் உன்னை உரசிக் கொண்டு அமர்ந்து தான் பேசுவேன். நீயும் என்னைப் பார்த்து புன்னகைப்பாய். அதன் அர்த்தம் "தேவிடியா முண்ட" என்பது தானா?
புண்படுகிறாயா அப்பா? அவன் அப்படி சொன்னபோது அதை மறுக்கும் படி ஒரு முகக்குறி கூட எழவில்லையே உன்னில். உண்மையில் அது உன் மனதில் இருந்த சொல். எல்லா தகப்பனும் தன் மகளை ஒருமுறையேனும் சொல்ல விழைவானோ தேவிடியா முண்ட என.
ரவி எந்த விதத்தில் தாழ்ந்து விட்டான்? அவனுடைய பயத்தைக் கண்டு நான் புன்னகைத்தேன். ஒரு வருடமாக என்னோடு நெருங்கிப் பழகியவன். அவன் அளித்த ஒரு முத்தம் கூட என்னைத் தேவிடியாளாக உணரச் செய்யவில்லை. நம்மில் ஒருவன் என்றே அவனை எண்ணினேன். அவனிடம் நான் நிறைய பேசியதே உன்னைப் பற்றித்தான். ஒருவேளை அவன் உன்னைப் போல இல்லாமல் இருந்ததே அவனை நோக்கி என்னை ஈர்த்ததோ என்னவோ. என்னைக் கண்ட அத்தனை ஆண் விழிகளும் உன்னை சற்று குறைவாக பிரதிபலிப்பவை. கம்பீர அலட்சியமோ பச்சையான இச்சையோ மிளிரும் விழிகள். "போங்கடா மயிராண்டிகளா" என்று அவர்களை விலக்கிவிட்டேன். ஆனால் ரவி என்னை நோக்கி புன்னகைத்தான். மிக இயல்பாக நானொரு பொருட்டே அல்ல என்பதைப் போல். மணமுடித்து மூன்று மாதம் ஆகிறது. இன்றுவரை அவன் என்னை கொஞ்சியதில்லை. கெஞ்சியதில்லை. அவனை முதன்முறை பார்த்தபோது எப்படி இருந்தானோ இன்றும் அப்படித்தான் இருக்கிறான். ஆனால் என் மீது அவனுக்கிருக்கும் அன்பு என்னையே பல சமயம் அச்சுறுத்துகிறது. அது தூய்மையான அக்கறைப்பா. கருணை அல்ல ஆண்மையின் பெருமிதம் அல்ல தூய கனிவு. அவன் எனக்கு அம்மாவைப் போலத்தான் தெரிகிறான். எப்போதும் என்னைக் கடிந்து கொள்வான். நானடையும் எந்த உணர்வுப் பரவசத்திலும் பங்கேற்கமாட்டான். ஆனால் என்னை கூர்ந்து கவனித்தபடிதான் இருப்பான். என் ஆழம் மாயங்களைத் தாண்டி உண்மையிலேயே மலரும் போதோ கூம்பும் போதோ இணைந்து கொள்ள அவன் என்றுமே இருந்திருக்கிறான். அவனை நான் தொடர்ந்து என் பிரியமானவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பேன். உன்னுடன் அண்ணன்களுடன் என் உற்ற தோழிகளுடன் என்னைத் தீவிரமாக காதலித்து என்னைக் கொலை செய்யும் ஆவலுடன் காத்திருக்கும் அத்தை பையன்களுடன் கல்லூரி நண்பர்களுடன் என. சிறுபிள்ளையிடம் கதை கேட்பதைப் போல நடந்து கொள்வான். அவன் அன்றே அறிந்திருந்தான் போல இந்த உறவுகள் அத்தனையும் பாவனை என. அவன் ஜாதியை அறிந்த போது நானே ஒரு கணம் ஆடித்தான் போனேன். சரி நம் குடும்பம் காதலை ஏற்காதா என்ன? காதல் திருமணம் நடந்ததே இல்லையா என்ன? என்று ஆறுதல் தேடினேன். ஆனால் அந்த காதல் திருமணங்கள் அனைத்துமே நம் ஜாதிக்குள் நடந்தன. பார்கவி சித்தி மைதிலி அத்தை ரகுராம் அண்ணன் என இவர்கள் தங்களுடையது காதல் திருமணம் என ஏன் பீற்றிக் கொள்கிறார்கள் என எனக்கு கோபம் கோபமாக வந்தது. எப்படியும் ரவியை நீங்கள் ஏற்பீர்கள் என நான் சொன்னேன். ரவி தெளிவாகவே அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளப் போவதில்லை எனச் சொல்லி விட்டான். அவர்கள் உங்களை விட எவ்வளவோ நாகரிகமானவர்கள். என்னைப் பார்க்கக்கூட விழையவில்லை.
ஆனால் நீ அவனை பார்க்க வேண்டும் என்றாய். அவனும் வந்தான். எவ்வளவு இழிவான கேள்விகளை என் செல்லத்தை நோக்கி கேட்டாய். அப்பா மன்னித்து விடு. இழிவு உன்னிலிருந்து தான் வெளியேறியது. உன் ரத்தத்தில் உன் வழியாக என் ரத்தத்திலும் மிக மிகக் கேவலமான ஒரு மனிதன் ரத்தம் கலந்திருக்கிறது. என் செல்லம் எவ்வளவு அமைதியாக உன் சாதிப்பெருமைகளை கேட்டுக் கொண்டான். நானும் உன்னிடம் சொன்னேன். அவன் என்னை வலை வைத்துப் பிடிக்கவில்லை. நான் தான் அவனை துரத்தித் துரத்தி காதலித்தேன் என. அக்காதல் தீவிரமடையும் முன்னே அவன் தன்னைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டான். சொன்ன பிறகே என்னைப் பற்றி கேட்டான். அவனுடைய அத்தனை நாகரிகத்தையும் ஒரு நொடியில் நீ குலைத்துப் போட்டாய். ஆபாசமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டு அவனை நோக்கி கை ஓங்கினாய். அப்பா அந்த நொடி நான் உன்னை தீவிரமாக வெறுத்தேன். அதுவரை உன்னை ரசிக்கும் பெண்ணொருத்தி என்னில் இருந்தாள் என்பதற்காக என்னை வெறுத்தேன். அப்போது நீ வெறுமொரு குரங்கென மாறிவிட்டிருந்தாய். மூர்க்கமாய் தாக்கி பணிய வைத்துப் புணரும் குரங்கென்றானாய். கம்பீரமென வீரமென உன்னில் நான் ரசித்த அனைத்துமே என்னில் இருந்த பெண் மிருகத்தால் ரசிக்கப்பட்டது தான். குறி தூக்கி அலையும் குரங்கு. நீ வேறொன்றும் அல்ல. பண்பாடென உருவாகி வந்த ஏதுமற்ற ஆதிக்குணம் நிறைந்த வெறுங்குரங்கு. கூசிச் சுருங்கினேன்.உன் தகுதியை எடைபோடத் தொடங்கினேன். எதையுமே நுட்பமாக செய்யத் தெரியாதவன். குடும்பத்தைத் தாண்டி பரிவென ஒன்றில்லாதவன். குடும்பத்தின் மீதான உன் பரிவே அந்த குரங்குத்தன்மையால் வருவதுதான். என் மீதான உன் மேலாதிக்கத்தை நிறுவவே அவனை அடிக்கப் பாய்ந்தாய். அப்பா உடல் ரீதியாக ரவி உன்னினும் பலமானவன். அவன் உன்னை திருப்பித் தாக்கி இருக்கலாம். ஒரு வித்தியாசமான பிரம்மை எழுகிறது அப்பா. ஒருவேளை அவனும் திருப்பித் தாக்கி இருந்தால் நீ உண்மையிலேயே குரங்கென மாறி அவனை கொலை செய்ய முனைந்திருப்பாயோ. எஞ்சுகிறவன் என்னை ஆடை கலைந்து அங்கே கிடத்தி புணர்ந்திருப்பானோ என்று தோன்றுகிறது. இக்காலத்துக்கு ஒவ்வாத மனிதன் அப்பா நீ. உனக்கு உன்னுடைய உண்மையான நேற்று என்னவென்று தெரியாது. இன்றின் நிதர்சனமும் தெரியவில்லை. நீ செல்லக்கூடிய அதிகபட்ச எல்லை என்னைக் கொல்வது. அதைத்தான் செய்வாய். ஏனெனில் உன்னைச் சூழ்ந்திருக்கும் பேடிகள் அதைத்தான் செய்தார்கள். நீயும் பேடியென நான் அறிவேன்.
கொஞ்சம் யோசிச்சு பாருப்பா. உன்னோட சாதிப்பெருமை பச்சை தேவிடியாத்தனம் என உனக்குத் தெரியவில்லையா? உன்னிடம் காசு இருக்கும் வரை தேவிடியா போல உன்னைச் சூழ்ந்து ஒரு கூட்டம் மொய்க்கும். ஆனால் உன் மனசாட்சி உன்னை கேட்காதா?
அப்பா எத்தனை நாளைக்கு நீயோ அம்மாவோ இல்ல உன்னோட சாதியோ என் கூட நிக்கும்.இன்னும் பதினஞ்சு வருஷமோ இருபது வருஷமோ நீ செத்துப் போயிடுவா. அதுக்கப்புறம்? எல்லாருமே சாவத்தானப்பா போரும். எனக்கு பிடிச்சவனோட கொஞ்ச நாள் நான் வாழறதுல உனக்கென்னப்பா பிரச்சினை. எல்லோருமே தனித்தனியாத் தானப்பா சாகப்போறோம். என்னோட எனக்காக வாழ்ற ஒருத்தன் இருக்கான். என்னோட எப்பவுமே அவன் இருப்பாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குப்பா. உறவு ப்ரெண்ட்ஸ் ஜாதி எல்லாமே பாதில போறதுதானப்பா. நமக்காக ஒருத்தர் உண்மையான இருக்கிறதோட சுகம் உனக்கு புரியாதுப்பா. ஏன்னா நீங்கெல்லாம் மலப்புழு மாதிரி. ஜாதிக்குள்ள பொறந்து ஜாதிக்குள்ள புணர்ந்து அதுலயே செத்து போறவங்க. நான் அதுல ஒரு ஆளு இல்லப்பா. ஜாதிக்குள்ள நடக்குற கல்யாணம் எல்லாமே வியாபாரம் மட்டும் தானப்பா. நீங்க அன்பையோ அக்கறையோ எங்க பாத்தீங்க. ஒன்னா போட்டு பூட்டி வெக்கணும். அவ்வளவு தான். அது எப்படிப்பா முடியுது. ஜாதிக்குள்ள ஒருத்தன் பொறுக்கியா குடிகாரனா வக்கில்லாதவனா இருந்தாகூட பரவால்லன்னு உனக்கு தோணும். ஒரு நவீன மனுஷனா லஞ்சம் குடுத்து வேலைக்குச் சேராதவனா நல்லவனா குடிக்காதவனா பொறுப்பானவனா இருக்கிறவன உன் ஜாதி இல்லங்குறதுக்காக உன்னால வெறுக்க முடியுதுன்னா நீ செத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு அர்த்தம்ப்பா.
இங்க எங்களுக்கு யாருமே இல்லப்பா. ஒவ்வொன்னையும் பாத்து பாத்து நாங்களேதாம்ப்பா உருவாக்குறோம். ஆனா வருத்தமா இல்லப்பா. ரவி அப்பா அப்பப்போ வந்து பார்க்கிறார். இருந்தாலும் தனியாதான் இருக்கோம். நீங்க யாரும் என்ன ஏத்துக்க போறதில்லன்னு எனக்கு வருத்தம் எல்லாம் இல்லப்பா. சொல்லப் போனா இப்பத்தான் வாழ்க்கை தொடங்கின மாதிரி இருக்கு. உனக்குள்ள ஒரு கேவலமான எண்ணம் ஓடும். ஆம்பள சொகத்துல சொக்கிப் பேசுறேன்னு நீ நெனப்ப. ஏன்னா பல தடவ நீ அத சொல்லி இருக்க. அதையும் நாங்க தாண்டின மாதிரி தான் இருக்கு. இப்போ நா கன்சீவாய் இருக்கேன். இத சொல்லத்தான் உனக்கிந்த லெட்டர்.
நீ நிம்மதியாக சாகக்கூடாது என இறைவனை மனமாரப் பிரார்த்திக்கும்
உன் அன்புத் தேவிடியா
யாழினி
Comments
Post a Comment