பாகீரதியின் மதியமும் புனைவின் சாத்தியங்களும்




நாவல் என்ற வடிவத்தின் மீதான தொடர் வாசிப்பு தேவைப்படும் ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணம் நண்பர்களுடன் நாவல் குறித்து பேச நேரும்போது தோன்றும். நாவல் வடிவம் தொடர்கதையில் இருந்து ஏன் வேறுபடுகிறது என்பதை தொடர்ச்சியாக சொல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து புதுமையான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தபோதே சிறுகதை நாவல் குறுநாவல் குறுங்கதை புதுக்கவிதை என பல்வேறு நவீன இலக்கிய வடிவங்கள் உருவாகி வருகின்றன. இந்த வடிவங்களில் நாவலுக்கான சாத்தியம் மட்டும் விரிவானது. ஒரு எல்லைக்கு மேல் வரையறுத்துச் சொல்ல முடியாதது. தமிழில் வெளிவந்திருக்கும் நாவல்களை திரும்பிப் பார்க்கும் போது நாவல் என்ற வடிவத்தின் உருமாற்றத்தை தெளிவாகக் காண முடியும். நாவல் என்ற பிரக்ஞையுடன் எழுதப்பட்ட படைப்புகள் (பொய்த்தேவு, புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை), இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட நவீனத்துவ நாவல்கள்(கரைந்த நிழல்கள், ஜே.ஜே.சில குறிப்புகள்), இயல்புவாதப் படைப்புகள்(பிறகு),இறுக்கம் தளர்ந்த விரிந்த கதைக்களத்தை நோக்கி பயணிக்க எத்தனித்த பின் நவீனத்துவ படைப்புகள் (விஷ்ணுபுரம்), யதார்த்த தளத்தை மீறாத கண்டிப்புடன் இயங்கிய படைப்புகள்(ஆழி சூல் உலகு,மணல் கடிகை) என பல்வேறு தளங்களில் நாவல் தன் சாத்தியங்களை விரித்துக் கொண்டுள்ளது. அவ்வகையில் பாகீரதியின் மதியம் புனைவினை ஒரு விளையாட்டாகப் பார்ப்பதற்கான சாத்தியங்களை முன் வைக்கிறது. நாவலின் ஊடாகவே இது விளையாட்டுதான் என மீண்டும் மீண்டும் ஆசிரியரால் சொல்லவும்படுகிறது. இந்த நாவலை முக்கியமானதாக மாற்றுவது அதன் விளையாடும் தொனியும் அதன் வழியாக நாவல் கட்டமைக்க முனையும் தரிசனமுமே.


ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட கதை
மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகளை இந்த நாவலுக்கு முன்னோடிப் பிரதியாகக் கொள்ளலாம். தனிமையின் நூறு ஆண்டுகள் மார்க்கேஸால் நமக்கு சொல்லப்படும் ஒரு கதை தான். அங்கு ஏற்கனவே எல்லாமும் நடந்து முடிந்துவிட்டது. அதை நமக்கு நாவலாசிரியர் அவருக்கான பாணியில் எடுத்துச் சொல்கிறார். பாகீரதியின் மதியமும் இந்த புறச் சட்டகத்தில் தான் நகர்கிறது. ஒரு புராதனமான கதை சொல்லல் பாணி. முழுக்கதையும் தெரிந்த ஒருவரின் முன் அமர்ந்து கதை கேட்கும் அனுபவத்தைத் தரும் அதேநேரம் ஒரு நவீன நாவலை வாசித்த நிறைவையும் வெறுமையையும் இப்படைப்பு தருவதே இதன் வெற்றி எனக்கொள்ளலாம்.
1974-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈ.வெ.ராவின் பிறந்த தினத்தில் தொடங்கும் நாவல் இரண்டரை வருடங்கள் நீடித்து முடிகிறது. வாசுதேவன் என்ற பிராமண இளைஞனின் குடுமியை ஒரு விவாதத்தின் போது ஏற்படும் கோபத்தினால் உறங்காப்புலி என்ற தி.மு.க தொண்டனான இளைஞன் அறுத்துவிடுகிறான் என்பதுதான் கதையின் மையம் எனவும் அதைச்சுற்றி நிகழ்பவையும் தான் எழுநூறு பக்கங்களைத்தாண்டி விரியும் இந்த நாவலின் கதைக்களம் என்றும் சொல்வது நம்புவதற்கு சற்று சிரமமானதே. ஆனால் இந்த களத்திற்குள் ஆசிரியர் கட்டற்ற மொழிப்பெருக்கின் வாயிலாக கட்டமைக்கும் உலகம் ஒரு இயல்பான மாயத்தன்மையுடன் அமைந்து இப்புனைவை நவீன நாவலாக்குகிறது. நீண்ட வாக்கியங்கள், அடைப்புக்குறிக்குள் சொல்லப்படும் சம்பவங்கள்(உள் அடைப்புக் குறிகளும் நிறையவே உள்ளன), உரையாடல் மேற்கோள்களுக்குள் கொடுக்கப்படாமல் கதாப்பாத்திரங்களின் குரலை வாசகனே கண்டறிய வேண்டிய கட்டாயம் என வாசிப்பதற்கு ஒரு சவாலான புனைவாக பாகீரதியின் மதியம் தன்னை முன்னுறுத்திக் கொள்கிறது. சிடுக்கற்று நகரும் மொழி நாவலுக்கு இயல்பாகவே ஒரு மாயத்தன்மையை கொடுத்துவிடுகிறது. ஆனால் நாம் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு புனைவுதான் என்பதை ஆசிரியரே நினைவுறுத்தியும் விடுவதால்(நேயர்களே, இக்கதையில் என்று வரும் வரிகள்) வாசிப்பு சவால்கள் ஆர்வமூட்டுவதாக ஆகிவிடுகின்றன. ஒரு துயரார்ந்த தேடல்கள் நிறைந்த விவரிப்புகளையோ அல்லது சலிப்பூட்டும் எதார்த்தத்தையோ வாசிக்கிறோம் என்ற மனநிலையை புனைவின் "ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட கதை" என்ற அம்சம் தகர்த்தெறிந்து விடுகிறது.

மொழிபும் முரண்களும் மாயமும்
நாவல் தன்னகத்தே ஒரு முரணியக்க வடிவத்தைக் கொண்டுள்ளது. அத்தியாயங்களாக பிரிக்கப்படவில்லை எனினும் பத்திகளுக்கு இடையேயான இடைவெளியைக் கொண்டு சற்று நீண்ட இடைவெளியைக் கொண்ட பத்திகளை ஒரு அத்தியாயமாக வரையறுத்துக் கொள்ளலாம். அவ்வகையில் பெரும்பாலான அத்தியாயங்கள் தனக்குள்ளே இரு மாறுபட்ட கருத்தியல்கள் மிக நெருக்கமாக உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நாவலின் தொடக்க அத்தியாயத்தில் தி.மு.க தொண்டனும் ஒரு ஆச்சார பிராமணனும் ஈ.வெ.ரா பிறந்தநாளின் போது பேசிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல உறங்கப்புலி பேராச்சாப்பாவில் கூக் பழங்குடியினப் பிரதிநிதியான இங்க்ளய்யாவும் நிகழ்த்தும் உரையாடல்களைச் சுட்டலாம். இந்த விவாதத் தொனி பெரும்பாலான அத்தியாயங்களை ஒரு தீவிர பாவத்துடன் சித்தரிக்க முனைந்தாலும் அதற்கு அடுத்த அத்தியாயமோ அல்லது சித்தரிப்போ அந்த தீவிரத்தன்மையை உடைத்துவிட்டு நம்மை விளையாட அழைக்கின்றன. உறங்காப்புலி இங்களய்யாவுடன் நிகழ்த்தும் இறுதி உரையாடல் நீங்கலாக பெரும்பாலான அத்தியாயங்கள் தன்னுள்ளேயே ஒரு பகடித்தன்மையைக் கொண்டுள்ளன. ஈ.வெ.ரா இறந்தது முதல் அவசர நிலை உச்சகட்டத்தில் திகழ்ந்த ஒரு காலகட்டத்தைத் தொட்டு அக்காலகட்டம் மெல்ல முடிவுக்கு வருவது வரையிலான ஆண்டுகளை இந்த நாவல் தன்னுடைய சமூகப் பின்புலமாக நிகழ்த்திக் கொள்கிறது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை (தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது,ரயில்வே ஊழியர் போராட்டம் போன்றவை) அடிப்படையாகக் கொண்டு நாவலின் புறக்களம் பின்னப்பட்டிருக்கிறது. இக்களத்தில் பா.வெ நிறைய தகவல்களைத் திரட்டி உழைத்திருக்கிறார். அதை பெரும் மெனக்கெடல்களும் பிரயாசைகளும் இன்றி அநாயசமான மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நாவலின் மொழிபு வாசகனிடம் அதீதமான கற்பனையைக் கோருகிறது. விரைந்து நகரும் பேருந்தில் ஓடிச்சென்று ஏறுவதைப் போல் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் வகுப்பில் பாதியில் புகுந்து கவனிக்கத் தொடங்குகையில் அளிக்க வேண்டிய உழைப்பினைப் போன்றதொரு மனநிலையை இந்ந நாவல் வாசிப்பு கோருகிறது.
என் வாசிப்பில் யதார்த்தத்தை மீறிய சித்தரிப்புகள் புனைவில் ஏன் தேவைப்படுகிறது என்பதை பின் வருமாறு அவதானிக்கிறேன்.
புனைவிலக்கியம் எவ்வளவு பெரிய அல்லது சிறிய விஷயத்தை சொல்ல முனைந்தாலும் அதனுடைய அடிப்படை நோக்கம் மனித மனத்தின் முடிவின்மையை புரிந்து கொள்வதும் அதை நிகழ்த்திக் காட்டுவதும் தான். புனைவில் புதிய வடிவங்கள் மனித மனத்தை சொல்ல ஒரு எழுத்தாளனுக்கு ஏற்கனவே புழங்கும் வடிவங்கள் போதாமலாகும் போது பிறக்கின்றன. அப்படியொரு வெளிப்பாட்டு முறை பிரபலமாகும் போது அதற்கு ஒரு பொதுப்பெயர் (வரலாற்றுப் புனைவு,மீபுனைவு,மிகுகற்பனை,மாய யதார்த்தம்)  உருவாகி வருகிறது. அவ்வகையில் பாகீரதியின் மதியம் தன்னுடைய வெளிப்பாட்டிற்கென மாயத்தன்மை கொண்ட ஒரு கதைகூறல் முறையைத் தேர்ந்து கொள்கிறது. இப்புனைவின் நாயகி பாகீரதி தான். மதிய நேரங்களில் தவிர்க்கவே முடியாமல் அவளை தூக்கம் ஆட்கொள்கிறது. அப்போது அவளுக்கு வரும் கனவுகளில் அவள் காண்பவை அவளது வாழ்வை பெரிதும் பாதிக்கின்றன. அப்படியொரு மதியக் கனவின் போதுதான் அவளது கணவின் குடுமி வெட்டப்படுகிறது. அச்சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்பவற்றை ஒரு மாயச்சரடின் வழியாக மட்டுமே கட்ட முடியும். ஏனெனில் கனவு உளவியல் மனிதர்களின் அகம் என்றே நகரும் இப்புனைவிற்கு அது தேர்ந்து கொண்ட மாயத்தன்மை கொண்ட வடிவம் வலு சேர்ப்பதாக உள்ளது.
மனிதர்களின் தனிமையால் அவர்களுக்குள் கிளைத்தெழும் அகச்சிக்கல்களின் வாதைகளைப் பேசுவதாகவே இப்புனைவை நான் வாசிக்கிறேன். பாகீரதி தன்னை ஓவியங்களுக்குள் அடையாளம் கண்டு கொண்டு தன் தனிமையை போக்கிக்கொள்கிறாள். வாசுதேவனுக்கு அது பிராமண நியமனங்களாகவும் உறங்காப்புலிக்கு அது திராவிடக் கொள்கைகளின் மீதான ஈடுபாடாகவும் இருக்கிறது. நாவல் ஏதோவொரு விதத்தில் தன் மௌனத்தின் வழியாக இந்த மனிதர்களின் தனிமையை விரக்தியைப் பேசத்தான் செய்கிறது. தன்னை கலைக்கு ஒப்புக் கொடுப்பதன் வழியாக ஓசுரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த சங்கிலி தன் தனிமையைப் போக்கிக் கொண்டு ஜெமினி எனும் ஓவியனாகிறான். அவன் வாழ்வும் காதலும் தேடலும் பாகீரதியை வந்தடைகிறது. பாகீரதிக்கு மனநோய் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவரை அணுகிறான் வாசுதேவன். மனநல மருத்துவரான நம்பிக்கு பாகீரதி தன் பழைய காதலி என்ற பிரம்மை தோன்றுகிறது(அது மற்றொரு உபகதை). அவரை பாகீரதியைத் தேடிச்செல்வதன் வாயிலாக இப்புனைவை தன் இறுதியை எய்துகிறது.

ஈடேறாத பிரியங்களின் கதை
அவசர நிலை காலகட்டம் நக்ஸலைட்டுகள் ஒடுக்கப்படுதல் என காத்திரமான அரசியல் பின்புலத்தை இந்த நாவல் கொண்டிருந்தாலும் பெரும்பாலான பக்கங்கள் தனிமனிதர்களின் அகத்தை பிரதிபலிப்பதாகவே நகர்கின்றன. கலையினால் ஈர்க்கப்படும் மனங்கள், உணர்த்த முடியாத பிரியங்களால் வதைபடும் மனிதர்கள் என பாகீரதியின் மதியம் தன்னுள்ளே ஒரு இருளான பாதையைக் கொண்டுள்ளது.
சரணடையாமல் விடுபட முடியாத பேரழகியாக பாகீரதி சித்தரிக்கப்படுகிறாள். மிக இள வயதில் அவள் கைகளுக்கு கிடைக்கும் ஜெமினி வரைந்த ஓவியம் அவள் கனவினை வளர்ப்பதாக இருக்கிறது. ஜெமினியின் கதை பீஹாரிலும் கல்கத்தாவிலுமாக விரிகிறது. துஸாத் பழங்குடி ஓவியங்களின் வழியே தன்னுடைய ஓவிய பாணியை ஜெமினி உருவாக்கிக் கொள்கிறான். அப்பழங்குடியினப் பெண்ணான சவிதாதேவியை ஜெமினி மணந்து கொள்கிறான். இளவயது முதலே அவளுடன் திரிந்த விபின் பாஸ்வான் அவர்கள் மணத்தை ஏற்றாலும் அவனால் சவிதாவை மறந்துவிட முடிவதில்லை. அதுபோலவே வாசுதேவனின் மனைவியை நோக்கி ஈர்க்கப்படும் உறங்காப்புலியின் அன்பும். சவிதாதேவியும் உறங்காப்புலியும் தங்கள் நனவிலியில் நிகழ்த்தும் உரையாடல் பகுதி இப்புனைவின் உச்சம் எனச் சொல்லலாம். அதுபோலவே உறங்காப்புலியின் மீதான பிரியத்தை பாகீரதி வாசுதேவனுக்கு விளக்கும் இடமும் ஆங்காரம் அழுத்த வாசுதேவன் அவளை வன்புணரும் இடமும் மனித அகத்தின் தனிமையை இருளை பிரதிபலிப்பவையாக உள்ளன.
நாவலின் மையம் பாகீரதியின் மீது உறங்காப்புலி கொள்ளும் உயிர்ப்பான காதல் தானோ என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைச் சுட்டவே அவசர நிலைப் பிரகடனம்,தேனியில் அமைக்கப்படும் விசாரணைக் கைதிகள் முகாம்,பேராச்சாப்பா எனும் பழங்குடி கிராமம் அக்கிராமத்தின் இறைவியான பேராபுடீமா என அனைத்தும் வருவதான தோற்றத்தை நாவல் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. வாசுதேவனால் உறங்காப்புலி சிறை செல்ல நேர்கிறது. பாகீரதியிடம் தவறாக நடந்து கொண்டதன் குற்றவுணர்வு அழுத்த வாசுதேவன் சிறையில் இருந்து தப்பிய உறங்காப்புலியை சந்திக்க கல்கத்தா செல்கிறான்(பேராபுடீமை மற்றும் இங்க்ளய்யா வழியாக அங்கும் ஒரு கதை விரிகிறது). வாசுதேவன் உறங்காப்புலியை சந்தித்த பிறகு அவனை அழைத்துக் கொண்டு பாகீரதியை சந்திக்க வருகிறான். அதற்கு பிறகான சம்பவங்கள் மௌனமாக விடப்பட்டிருப்பதே இந்த புராதன கதை சொல்லல் பாணியில் நகரும் நாவலை வேறு பரிணாமத்திற்கு மாற்றிவிடுகிறது. பின் இணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கும் பேராபுடீமாவின் கதையை பல வகையிலும் நாவலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது. உறங்காப்புலிக்கு மாற்றாக அப்பின்னிணைப்பில் உறங்கும் (நிஜ) புலி ஒன்று வருகிறது. பேராபுடீமாவும் உறங்க ஏங்குபவளாக சித்தரிக்கப்படுகிறாள். ஒருவேளை சவிதா தேவி பேராபுடீமா அவளுக்கு அன்னை போன்று விளங்கும் அநூபா பாகீரதி எல்லோரும் ஒரே பெண் தானோ என்ற பிரம்மையை வாசித்து முடிக்கையில் நாவல் கொடுக்கிறது. பாகீரதியின் அழகும் அவள் அகத்தை புரிந்து கொள்ள நினைக்கும் ஆண் மனதின் தவிப்புமாக நாவலை நினைவில் நிறுத்தலாம். ஒரு வகையில் இத்தனை மாயங்கள் வழியாக இந்த நாவல் முன் வைக்க நினைப்பதும் பாகீரதியின் அகத்தைத்தான்.
தரிசனம் என்ற நிலையைக் கடந்து பாகீரதியின் மதியத்தை முக்கியமான புனைவாக மாற்றுவது நாவல் எனும் வடிவத்தில் இப்படைப்பு எடுத்துக் கொண்டிருக்கும் சுதந்திரமே.  வாசகனை மேலும் சிக்கலான வடிவங்களுக்குள் பயணிக்க வைக்கும் எத்தனமும் உழைப்பும் இந்த நாவலை மறுக்க முடியாத வாசிப்பினை கோருவதாக மாற்றிவிடுகின்றன. கதை சொல்லல் பாணியின் வழியாக ஒரு படைப்பை இவ்வளவு சுவாரஸ்யமானதாக மாற்ற இயலும் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஓவியம் எனும் மற்றொரு கலை வடிவத்தையும் பெண்ணின் அகத்தையும் அக்காலகட்ட அரசியலையும் மனித மனத்தின் உளவியல் தடுமாற்றங்களையும் பல்வேறு கதாப்பாத்திரங்களின் வழியாக கூற முற்பட்டிருப்பது சந்தேகமே இல்லாமல் பெரும் வெற்றியே(ஒருவேளை வழமையான வடிவங்களில் இந்த நாவல் பயணிக்க முயன்றிருந்தால் இன்னும் அதிகமான பக்கங்களை எடுத்துக் கொண்டிருக்கும்).
நாவலின் தொடக்கத்தில் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும் தடையற்ற மொழிப்பெருக்கு பிற்பகுதியில் சலிப்பூட்டத் தொடங்கிவிடுகிறது. கதாப்பாத்திரங்களின் குணங்கள் வேறுபட்டவையாகத் தெரிந்தாலும் கூட அவர்களின் குரல்கள் ஒன்றுபோல ஒலிப்பது(தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு ஆங்கிலக்குரல்) நாவலில் சற்றே செயற்கைத்தனத்தை புகுத்திவிடுகிறது. பாகீரதி உறங்காப்புலியிடமும் வாசுதேவனிடமும் தன் நிலையை பகிர்ந்து கொள்ளும் இடங்களும் ஓவியக்கலை ரீதியான விவாதங்கள் நடைபெறும் இடங்களில் அபாரமாக வெளிப்படும் உரையாடல் மொழி பிற இடங்களில் நீட்டி முழக்கி சலிப்பூட்டுகிறது. அதோடு ஆசிரியர் கட்டமைக்கும் விளையாட்டான கதை சொல்லல் உத்தியை கைப்பற்றிய பிறகு அதில் பரவசம் கொள்வதைத் தாண்டி வாசகன் இப்புனைவால் அடையப்பெறுவது என்ன என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. திராவிட-பிராமண,விவசாயி-ஜமீன்தார்-பழங்குடி என பல முரண்படும் தரப்புகள் படைப்பினுள் உரையாடிக் கொண்டாலும் அவ்வுரையாடல்கள் பெரும்பாலும் ஏற்கனவே இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் உணர்வுநிலைகளின் சற்று உணர்வுப்பூர்வமான நீட்சியாக மட்டுமே புனைவினுள் இடம்பெறுகின்றன. மாறாக ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய பிறர் சொல்ல முடியாத கூரிய விமர்சனங்கள் இப்படைப்பின் அரசியல் தளத்தினுள் இடம்பெறவில்லை. பாகீரதியின் மதியத் தூக்கத்தின் வழியாக ஆசிரியர் நம்மை அழைத்துச் செல்லும் மன உலகங்கள் வலுவான இழையாகவும் புற உலகம் சற்றே வலுக்குறைந்த மற்றொரு இழையாகவும் இப்படைப்பை உருவாக்கியிருக்கின்றன.
புனைவினை கையாளும் விதங்களை அறிவதற்கெனவும் ஒரு தேர்ந்த வாசகன் நீந்திக் களிக்கவும் வாசிக்கப்பட வேண்டிய படைப்பு பாகீரதியின் மதியம்.
பாகீரதியின் மதியம் , காலச்சுவடு பதிப்பகம்,விலை ₹.750

Comments

  1. அருமையான விமர்சனம். உடன் பாகீரதியின் மதியத்தை வாசித்து புனைவுவெளியில் நீந்திக் களிக்க வேண்டும் என்ற ஆவலை எழுப்பிவிடுகிறது. விரைவான வாசிப்பினூடாக இத்தனை நுட்பமாக ஒரு நாவலை ஆராய்ந்து எழுதி ஆரம்பநிலை வாசகர்களாகிய எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி ஒரு புனைவு நாவலை அணுகுவது என்று வழிகாட்டியுள்ளது மிக மிக உதவிகரமானது. இதில் வாசகனுக்கு மட்டும் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு புனைவு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சங்ளையும் கூறியுள்ளது பாராட்டத்தக்கது. விமர்சனமே ஒரு புனைவு நாவலை வாசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. மிக ஆழமான சிறந்ததொரு விமர்சனம் பா.வெங்கடேசன் அவர்களின் பாகீரதியின் மதியத்திற்கு கிடைத்துள்ளது. தங்கள் வாசிப்பும் விமர்சனமும் மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024