Friday 13 April 2018

446 A - கடிதம்

446 A - சிறுகதை

அன்பின் சுரேஷ்

நலமாக இருக்கிறீர்களா தம்பி ? நேற்றுடன்  கல்லூரி முடிந்து இன்று தேர்வுகள் துவங்கின. காலை மதியம் என எனக்கு இரட்டை  ட்யூட்டி இருந்தது.   காலையில் தேர்வு அறையில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு  50 நிமிடங்கள் முன்னரே எழுதி முடித்துவிட்டார்கள்.

உடன் தரைத்தளத்திற்கு இறங்கி விடைத்தாள்களைக்கொடுக்க அவசரப்படாமல்,காலியாயிருந்த, அந்த தேர்வறையாக மாறியிருந்த வகுப்பறையில் ஒரு கடைசி பென்ச்சில் அமர்ந்து ஜெ அவர்களின் தளத்தை திறந்தேன்

3 சிறுகதைகளைக்குறித்த பதிவில்  காயத்திரியைக்கடக்கும் முன்பே கனிமொழியைப்பார்த்தது போல முதல்கதையின் சுருக்கத்தைத்தாண்டி இரண்டாவதில் உங்கள் பெயரைபார்த்ததும், அதைச்சொடுக்கி உள் நுழைந்தேன்.

முழுதும் வாசித்தபின்னர் முதலில் தோன்றியது, உங்களின் கதைகளில் ஒரே மாதிரியான தன்மை இல்லவே இல்லை என்பதுதான். இதுவரை 3 வாசித்திருக்கிறேன், எஞ்சும் சொற்களிலும் இதிலும் கதை சொல்லியின் பார்வையிலேயே கதை நகர்கிறது என்பதைத்தவிர மற்ற எதையும் ஒப்பிட முடியவில்லை

பரிசில் உரையாடல் இருந்தது அதிகம்.

ஒவ்வொரு கதையும் மிகத்தனித்துவமாகவே இருக்கின்றது. எஞ்சும் சொற்களில்  ஒவ்வொரு பத்தியிலும் இருந்த வீச்சு இதில் இல்லாமல் நெகிழ்ச்சியாய் கொண்டுபோயிருக்கிறீர்கள்.

பதின்பருவத்து பையன்களின் உணர்வெழுச்சிகளை அழகாக பதிவு செய்கின்றது கதை.

பேருந்து எண்ணும், அது கடக்கும் இடங்களின் பெயர்களும் சொல்லியிருப்பது கதையின் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கதையுடன் வாசிப்பவர்களை ஒன்றச்செய்கிறது.

அந்த வயதில்  பையன்களுக்கு எதிர்பாலினரின் உடல் மாற்றங்கள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சிகளையும் குழப்பங்களையும் அழகாக சொல்கிறீர்கள்.

அந்த கவிதா டீச்சர், மயக்கும் விழிகளும் செழிப்பான கன்னங்களுமாய்,  இதை வாசிக்கையில் அழியாத கோலங்கள்  நினைவில் எழுந்தது, பதின் பருவத்தில் டீச்சர் மீது மையல் கொள்ளூவதும் ஒரு அழகிய நினைவுதான், இந்தபருவத்தை தாண்டி வந்த பலருக்கும் புன்னகையை வரவழைத்திருக்கும் வாசிப்பு.

எனக்கு ஷோபாவை நினைவு படுத்தியது வாசிப்பு

கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஒரு பெண்ணை எப்போதும் புடவையில் பார்ப்பேன் சதாரணமான பெணாகவே தோற்றம் அளிப்பாள்.

ஒருமுறை அவளின் மகனை வெறிநாய் கடித்துவிட்டதால் அவள் விட்டிற்கு சென்ற போது ஜீன்ஸும் குர்தாவும் அணிந்து அடர்ந்து நெளியும்கூந்தல் முதுகில் காடு போல பரத்தியிருக்க ஒரு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வழிகாட்டியபடி வந்த அவளைப் பார்த்ததும் எனக்கு ஷோபாவின் நினைவு வந்தது.

ஷோபாவைபோலவே சாதாரணமாகதெரியும் ஆனால்அற்புத அழகினை எதோ ஒரு கோணத்தில் எப்படியோ காண்பிக்கும் அழகி அவளும் என் எண்ணிக்கொண்டேன்.

கவிதாடீச்சரை நான் ஷோபா போல கற்பனை செய்து கொண்டேன்.

அம்மாத்தனமான அன்பில் இவனுக்கு ஏற்படும் குற்றவுணர்ச்சியையும் நுண்மையாக புரிந்துகொள்ள முடிந்தது. ஒருசில வரிகளில் ஒரு பெரும் சித்திரத்தை மறைமுகமாக கொண்டு வந்து சேர்த்துவிடுகிறீர்கள்.

முந்தய ஒரு கதையில் கணவனின் சவத்துடன் வண்டியில் ஏறும் பெண்ணொருத்தி  யாருடனோ அலைபேசியில் பேசும் ஒருசில சொற்றொடரில் அவளின் முழுவாழ்வையும் புரிந்துகொள்ள முடிந்ததைப் போல.

பென்சீனின் அறுகோணம் அவனுக்கு சுடிதாரையும் ஸாண்டல் சோப்பின் நறுமணத்தையும் நினைவுபடுத்துவதை மிக ரசித்தேன் நானும் இப்படி நிறைய combinations  வைத்திருக்கிறேன்.

இன்று கூட தேர்வறையில் ஒரு பெண் பலாச்சுளைகள் போல பெரிய பெரிய  இதழ்களுடன்  இருந்த  மஞ்சள் ஷெண்பகப்பூக்களை தலையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு நேர்மேலே மின்விசிறி இருந்ததால் அறையெஙுகும் நிரம்பியிருந்தது ஷெண்பக மணம்.

அனைவரும் போனபின்பு நான் மட்டும் 446 வாசிக்கையிலும் என்னால் அந்த மெல்லிய மணத்தை அறையில் உணர முடிந்தது இனி சுரேஷ் பிரதீப்பின் 446 நினைவுக்கு வருகையில் ஷெண்பக மணமும், … and .vice versa

Je   சார் ஒருமுறை சொல்லியிருந்தார் ரயில் பயணமும் சினிமாப்பாட்டுக்களும் குறித்த ஒரு பதிவில், ஒரு வகையான ஃபைல் ஒன்றை நினைக்கையில் ஒரு குறிப்பிட்ட பாட்டு நினைவுக்கு வரும் என்று.
 

துருவேறிய தூசு நிறைந்த  பேருந்துதான் எனினும் அவனின் இந்த பருவமும் அதில்நிகழ்பனவும், மிக மிக அழகானதால் கதையும் அத்தனை அழகாக போகின்றது

// எரிபொருள் தீராத ஓட்டுநர்தேவையற்றதாக இப்பேருந்து சென்றுகொண்டே இருக்கும். நறுமணம் மிக்கவியர்வை உடையவளாக லாவண்யாஇப்பேருந்தில் அமர்ந்திருப்பாள். நான்அவளெதிரே காலங்களற்றுஅமர்ந்திருப்பேன். முதலில் இந்தசாலையும் பின்பு இப்பேருந்தின்சக்கரங்களும் மறையும். தொடர்ந்துபேருந்தின் இருக்கைகளும் அதன்உடலும் மறையும். அடுத்ததாக நானும்பேருந்தெனும் ஓட்டமும் மறையும். பின்னர் அவளும் மறைவாள். பின்னர்அந்த நறுமணம் மட்டும் காற்றில்என்றுமே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது தாக்குண்டவனைப்போல அந்த நறுமணத்தை நாசியில்உணர்ந்தான். //

இந்த வரிகளில் சுரேஷ் பிரதீப்பை எப்படியோ என்னால் அடையாளம் காண முடிந்தது, ஒரு கதையில் எழுத்தாளரின் signature  வரிகள் என்று சில இருக்கும் இந்தக்கதையில் இவையே அவை என்னைப்பொருத்தவரையில்

முடிவில் வருத்தமென்றாலும் நரேனின் வளரும் மனதின் எழுச்சிகளும் அவை புனைந்துகொண்ட பலவும் அன்றைய துயரத்தில் எப்படியோ கலைந்து போவதை  உணர முடிந்தது

கல்லூரி முடிந்துவிட்டதால் அமர்ந்திருந்த அறையில் கரும்பலகையில் நிறைய பெயர்களும்  ஒரு கோணலாக வரையபட்ட வில்லும் அதன் எதிர்முனையில் அம்பிகா என்னும் பெயருக்கு அடியில் சீறிசென்று நின்றிருந்த அம்புமாய்  இருந்தது. கலவையான பல உணர்வுகள் நிரம்பியிருந்திருக்கும் அப்படியான ஒரு வகுப்பறையில் இந்தகதையை வாசித்தது வித்தியாசமாகவும் பொருத்தமாகவும் தோன்றியது எனக்கு

மரபென்ச்சில் எல்லாம் இதய வடிவங்களும் அதற்குள் பெயர்களும் அவற்றைத்துளைத்துச்சென்ற அம்புமாய் இருந்தது

காதல் துவங்கும் இடம் கல்விக்ககூடங்கள்  அள்லவா?

காதல் முடிந்தும் விடுகின்றது பலருக்கும் அங்கேயே

வீடு வந்து சரணிடம் இரவுணவின் போது இக்கதையை சொல்லிக்கொண்டிருந்தேன்

அவனால் இறுதியில் நரேனின் கனவுகளும்  கற்பனைகளும் சட்டனெ கலைவதை மட்டும் புரிந்துகொள முடியவல்லை  என்றான்

அவன் வாசிக்கையில் வேறுமாதிரி உணர்வானாயிருக்கும்

அழகிய  கதை சுரேஷ்

உங்களின்கதைகளுக்கு நான் ரசிகை ஆகிவிட்டிருக்கிறேன்

வாழ்த்துக்கள் தம்பி

அன்புடன்

லோகமாதேவி

No comments:

Post a Comment