அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கரங்கள்

படையப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி.

ஊர் நிலப்பிரபுவான கதாநாயகனின் அப்பாவுக்கும் அவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு வரும்.

தம்பி அண்ணனைப் பார்த்து "ஊர் மரியாதைகள் எல்லாம் உனக்கே கிடைக்கின்றன. நான் ஒரு வேலைக்காரனைப் போல இந்த வீட்டில் இருக்கிறேன். அம்மா உன்னை மட்டும் தான் பெற்றாளா? நான் கூத்தியாளுக்கு (படத்தில் வரும் வார்த்தை. தவறான நடத்தை கொண்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்று அர்த்தம்) பிறந்தவனா?" என்று கேட்டு விடுவார். உடனே அண்ணன் கோபப்பட்டு "ஆமடா நீ கூத்தியாளுக்கு பிறந்தவன் தான்" என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை அறுபது வயதை நெருங்கும் தம்பியிடம் முதன்முறை கூறுவார். அதாவது அண்ணன் நிலப்பிரபுவின் அப்பா "தவிர்க்க முடியாத" சூழ்நிலையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு விடுகிறார். அப்பெண் கருத்தரிக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு நிலப்பிரபுவின் அம்மா தான் கருத்தரித்திருப்பதாகச் சொல்லி மறைவான ஒரு ஊருக்குச் சென்று தம்பியை ஈன்றெடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறாள். அந்த "கூத்தியாள்" குறித்த விளக்கங்கள் படத்தில் கிடையாது.

இந்த காட்சியமைப்பில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது நிலப்பிரபு தன் அப்பாவின் சபலத்திற்கான விலையாக தன் தம்பியின் இருப்பை கேள்விக்கு உட்படுத்துவது தான். இரண்டாயிரம் வாக்கில் வந்த ஒரு திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது. நிலப்பிரபு ஏதோ "அநீதியை" இத்தனை நாள் பொறுத்துக் கொண்டது போல அந்த "உண்மையை"  சொல்லும் போது ஊர் முக்கியஸ்தர்கள் படத்தின் கதாநாயகன் என அனைவரும் மௌனம் காப்பார்கள். ஒருவர் கூட "உன் தம்பி உன் அப்பாவின் மகன் என்பது தான் முக்கியம். அவருடைய காமத்தால் பிறந்தவன். அவன் உன் அம்மாவுக்கு பிறக்கவில்லை என்பது எந்த வேறுபாட்டையும் உருவாக்குவதில்லை" என்ற எளிய நியாயத்தை அங்கு சொல்வதில்லை. ஒருவேளை நிலப்பிரபுவின் அம்மா மற்றொருவருடன் உறவு கொண்டு அந்த பிள்ளை பிறந்திருந்தால் நிலப்பிரபுவுக்கு தம்பி சொத்தில் பங்கு கேட்பதன் உரிமையை மறுப்பதற்கான அடிப்படை நியாயம் இருந்திருக்கலாம்.

மீஸான் கற்கள் நாவலில் வரும் பூக்கோயத் தங்ஙள் என்ற கதாப்பாத்திரம் இத்தகையது. ஊரையே தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் ஜமீன்தார் தங்ஙள். விடிவதற்கு முன் நறுமண திரவியங்களை உடலில் பூசி அலங்கரித்துக் கொண்டு தன் ஆளுகையில் இருக்கும் யாரோ ஒரு கூலித்தொழிலாளியின் வீட்டில் புகுந்து அங்கிருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்டு அவளை "ஆசீர்வதிப்பார்". படையப்பா படத்தில் வரும் நிலப்பிரபுவின் அப்பாவும் அத்தகைய "ஆசீர்வாதத்தையே" செய்கிறார் . மீஸான் கற்களில் தங்ஙகளின் அந்த செயலை அன்றைய சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாக வாசிக்கவே இடம் அதிகம். ஆனால் படையப்பாவில் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தில் இருந்த ஒருவரின் "அதிகாரக் காமத்தால்" பிறந்த மகனின் மீது அந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றான இதில் வரும் இக்காட்சியின் முரண் தமிழ் சமூகத்தில் எந்த எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்பதே நம் சமூகத்தின் பொது மனநிலை நவீன நியதிகள் மீது கொண்டிருக்கும் விலக்கத்துக்கான சான்று. ஆனால் "கூத்தியாளுக்கே" பிறந்தவன் எனினும் நிலப்பிரபு தன் தம்பிக்கே அனைத்து சொத்தையும் விட்டுக் கொடுத்து வீட்டை விட்டு வெளியேறும் போது புலாங்கிதம் அடைய நம்மால் முடிகிறது.

நவீன சமூகத்திலும் அதிகாரக்காமம் செயல்முறையில் உள்ளது. முனைவர் பட்ட வழிகாட்டி,மாவட்ட ஆட்சியர்,அமைச்சர், மேலாளர் என அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் ஆளுகைக்கு கீழே வருகிறவர்களை (பெண்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதே அதிகம்) உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இந்த நவீன அதிகாரக்காமம் வெகுஜன கலை வடிவங்களில் தவறானதாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் மரபான அதிகாரக்காமம் அத்தகைய விமர்சன நோக்குடன் பார்க்கப்படவில்லை என்பதையே படையப்பா படம் சுட்டுகிறது.

இந்த நிலப்பிரபுத்துவ சமூகம் நவீன வளர்ச்சிகளை அஞ்சத் தொடங்கியதை தொன்னூறுகளிலும் அதற்கு சற்று முன்னும் பின்னும் வெற்றி பெற்ற படங்களை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் ஒரு பஞ்சாயத்து நாட்டாமை தீர்ப்பு சொல்வதை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் வியந்து பார்ப்பதையும் நாட்டாமை திரைப்படத்தில் ஒரு வெற்றி பெற்ற பெரும் தொழிலதிபர் நாட்டாமையின் முன் ஷூவைக் கழற்றிவிட்டு தலை குனிந்து நிற்பதையும் சூரிய வம்சம் திரைப்படத்தில் ஒரு நிலப்பிரபு காவல் நிலையத்தில் நவீன சட்டதிட்டங்களை பேசுவதையும் இணைத்துப் புரிந்து கொண்டால் நம் சமூகம் நவீனத்தை எப்படி பணிய வைக்க முயல்கிறது என்பது நமக்குப் புரிபடும். மாவட்ட ஆட்சியராகவே ஆகியிருந்தாலும் பேப்பர் வெயிட்டை எடுக்கும் சாக்கில் அலுவலகத்திலேயே மாமனாரின் காலில் விழச் சொல்கிறது (படம்:சூரிய வம்சம்) நம் மரபு. ஆனால் விவசாயக்கூலிகளாக நிலம் சார்ந்து மட்டுமே வாழ வேண்டும் என்ற தேவை குறைந்து நவீன சமூகம் புதுப் பொருளியல் வாய்ப்புகளைத் தேடி மக்கள் புறப்படத் தொடங்கிய போது இந்த "ஜமீன்தார் தன்மை" மிக்க படங்களின் வரத்து குறையத் தொடங்கி விட்டது. கோவில் படிக்கட்டுகளில் நின்று பொன் நாணயங்களை சிந்தையில்லாமல் முகத்தில் "கருணை பொங்க" அள்ளிக் கொடுக்கும் ஜமீன்தாரை(படம்:முத்து) இனி நாயகனாகக் காட்ட முடியாது. அந்த ஜமீன்தாருக்கு அந்த பொன் நாணயங்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தன என்று இன்றைய பார்வையாளன் கேள்வி எழுப்புவான்.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் பாரம்பரிய "ஜாதிய அதிகாரம்" உடைய சமூகம் கொலையை எப்படிக் கையாளும் என்பதை பெருமிதத்துடன் நம்முன் பறைசாற்றியது. குள்ளமான சற்று அவலட்சமான உடல் கொண்ட ஒருவன் படத்தின் நாயகியை காதலிக்கிறான். அப்பெண் அவனை மறுத்து விடுகிறாள். அந்த கோபத்தில் அவன் அவளை அவமானப்படும்படி திட்டுகிறான். பொங்கி எழும் நாயகனும் அவனது நண்பர்களும் திட்டியவனை கொன்று விடுகின்றனர். இறந்தவனின் குடும்பத்துக்கு சில ஏக்கர் நிலங்களை அளிப்பதன் வழியாக அந்தக் கொலையை கதாநாயகனின் அப்பா "சரிகட்டி" விடுகிறார். கொலையுண்டவனின் குடும்பமும் "அவர்களை" எதிர்த்துக் கொண்டு பிழைக்க முடியாது என்பதால் நிலத்தைப் பெற்றுக் கொண்டு அமைதி அடைந்து விடுகிறது. அதேநேரம் தற்போது வெளியான கொம்பன் என்ற திரைப்படம் தொன்னூறுகளில் அதிகாரம் மிக்கவர்களாக காண்பிக்கப்பட்ட நாட்டாமைகள் "ஒன்றுக்கும் ஆகாதவர்களாக" மாறிப்போயிருப்பதை சித்தரிக்கவும் தவறவில்லை.

தொடர்பற்ற பல விஷயங்களை பேசியது போன்ற தன்மை இக்கட்டுரைக்கு வந்து விட்டது. இவற்றை இணைக்க முயல்கிறேன்.

சமூகத்தில் மாற்றம் என்பது கருத்தியல் தளத்தில் நடைபெறும் மாற்றங்களால் மெல்ல உருவாகி வருகிறது. அந்த மாற்றம் அதிகாரத் தளத்தில் உடனடியாகவும் சமூகத் தளத்தில் மெல்லவும் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. சுதந்திர இந்தியா முதன்முறையாக தன்னை ஜனநாயகத்துக்குள் நுழைத்தக் கொள்கிறது. இந்த ஜனநாயகம் என்பது அன்று தேவையான ஒரு மாற்றமாக இருந்தது. பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சொகுசு நீடிக்க வேண்டும் என்பதற்காக மாற்றங்களை விரும்பாதவர்களாகவும் அதிகாரம் இல்லாதவர்கள் தங்களுக்கு அதிகாரத்தில் பங்கோ உரிமையோ வேண்டும் என்பதற்காக மாற்றங்களை வரவேற்கிறவர்களாகவும் இருப்பார்கள்.

இந்தியா ஜனநாயக யுகத்துக்கு முன்புவரை நிலத்தின் அடிப்படையில் அதிகாரத்தை வைத்திருந்த ஒரு சமூக அமைப்பாகவே இருந்தது. இந்த நில அதிகாரம் ஜாதிய அதிகாரமாக சமூகத்தில் வெளிப்பட்டது. (இன்றும் நிலத்தின் மீதான அதிகாரமும் நிலத்தின் வழியாகக் கிடைத்த செல்வமும் நவீன சமூகத்தில் ஜாதிய கூறுகளை நிலைநிறுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன).

சுதந்திரத்திற்கு சற்று முந்தைய மற்றும் சற்று பிந்தைய திரைப்படங்களை அல்லது வேறு கலை வெளிப்பாட்டு வடிவங்களை காணும் போது ஒன்று புலப்படுகிறது. அவை (தரமானவையோ தரமற்றவையோ) பொதுவாக நவீன விழுமியங்களில் ஒரு கள்ளமில்லாத நம்பிக்கையை வைத்திருக்கின்றன. ஜாதிக்கு எதிரானவனாக ஜனநாயகத்தை வலியுறுத்துபவனாக அன்றைய திரைப்படங்களின் நாயகன் இருக்கிறான். எம்.ஜி.ஆர் படங்களில் நிலச்சுவான்தார்கள் பெரும்பாலும் வில்லன்களாகவே வருகின்றன. நேரடியாக இல்லையெனினும் கதாநாயகன் ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவனாக அல்லது ஒடுக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒருவனாக வருகிறான். நகரமயமாக்கல் தொடங்கி முதல் தலைமுறையினராக பெரும்பான்மை மக்கள் அதுவரை இருந்த மரபான வாழ்க்கைச்சூழலில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு நகரம் நோக்கி நகரத் தொடங்கினர். நகரமயமாக்கல்  ஒரேநேரம் காலத்தின் கட்டாயமாகவும் அதுவரை பேசப்பட்ட சமத்துவம் தீண்டாமை ஒழிப்பு போன்ற நோக்கங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதாகவும் இருந்தது. நம்முடைய பாரம்பரிய ஜாதிய மனம் செயல்படத் தொடங்கியது இங்குதான். பல பஞ்சங்களை சந்தித்து ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டு  எஞ்சிய வயிற்றுக்கே பத்தாத பொருளியல் வாய்ப்புகளைக் கொண்டு மெல்ல முயன்று மேலெழுந்த சமூகம் வயிற்றுப்பாடு தீர்ந்ததும் அதை உண்மையில் போக்கிய நவீன சமூக விழுமியங்கள் மீது தன் பார்வையை திருப்பியிருக்க வேண்டும். ஆனால் நாம் ஜாதியை நோக்கித் திரும்பினோம்.

"அற்புதமான கடந்தகாலம்" என்ற ஒரு புனைவு ஆதிக்கத்தன்மை மிக்க புனைவுகளைக் கொண்ட ஜாதியினருக்கு எண்பதுகளில் தோன்றத் தொடங்குகிறது. நவீன சமூகம் தங்களது உயர்ந்த விழுமியங்களை கெடுத்துவிட்டதாக நகரத்தில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்தனர். குழந்தைகள் மூன்று வேளை உணவும் சுகாதாரமும் மருத்துவ வசதிகளும் உடைய எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்களது பால்யம் மகிழ்ச்சிகரமானதாகவே இருந்திருக்கும். ஆனால் அடக்கப்பட்ட ஜாதிய மனோபாவத்துடன் நகரத்தின் அத்தனை வசதிகளையும் அனுபவித்தபடி வாழ்கிறவர்கள் "கிராம பால்யம்" என்ற ஒன்றை கற்பனை செய்தனர். இந்த கற்பனைக்கு ஒரு தேவையும் இருந்தது. நில உடைமையாளர்கள் சுதந்திரத்திற்கு முன்புவரை அனுபவித்து வந்த அதிகாரத்தை பஞ்சங்களும் தேசிய எழுச்சியும் குலைத்துப் போட்டுவிட்டது. அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டுமெனில் ஜனநாயக விழுமியங்களை பேசியே அவற்றைப் பெற முடியும். ஆனால் அந்த விழுமியங்களில் தீண்டாமை ஒழிப்பு பெண் கல்வி சட்ட ரீதியான  விவாகரத்து உரிமை பெண்களுக்கு சொத்தில் பங்கு என்பது போன்ற இந்த "பாரம்பரிய அதிகாரிகளின்" இருப்பையே குலைத்துப் போடும் பல அம்சங்கள் நிறைந்திருந்தன. ஆகவே அவர்கள் அடக்கி வாசித்தனர்.

"கிராம புனிதப்படுத்தலை" சினிமாவில் பாரதிராஜா தொடங்கி வைக்கிறார். அதுவரை இருந்த நகரத்தினரின் "கிராமத்தாகம்" இணைந்து கொள்ள நவீன சமூகம் அந்த நாள் வரை எதற்கு எதிராக பேசி வந்ததோ அதன்மீதே "பாசம்" வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு அசல் கிராமத்தானின் உண்மையான பலங்களான இயற்கையுடனான நெருங்கிய உறவு, மரபான மருத்துவ அறிவு , மழையை கணிக்கும் திறன் போன்றவையெல்லாம் பின் தள்ளப்பட்டு நேர்மை வீரம் போன்ற லட்சிய அதீதங்கள் ஜாதி தடவப்பட்டு திரைப்படங்களின் வழியாக ஊட்டிவிடப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் வில்லனாக இருந்த ஜமீன்தார் கதாநாயகனாக மாறுகிறார்.

சின்ன கவுண்டர் படத்தில் நகரத்தில் இருந்து வரும் ஒரு இளைஞன் படத்தின் நாயகன் தான், தான் படித்து பட்டம் பெறுவதற்கு காரணம் என்ற "உண்மை" தெரியாமல் கதாநாயகன் கூலியாள் என நினைத்து பெட்டிப்படுக்கைகளை தூக்கச் சொல்லி விடுகிறான். அந்த இளைஞனின் அப்பா அதற்கென மகனைத் திட்டுகிறார். மரபான அதிகாரம் நவீனத்திடம் எதிர்பார்க்கும் நன்றியுணர்வு அது. முன்பே சொன்னது போல நாட்டாமை படத்தில் நகரத்தில் இருந்து வரும் தொழிலதிபர் நாட்டாமையின் முன் "பணிந்து" நிற்கிறார். நாட்டாமையே தான் தொழிலில் மேன்மை அடைய காரணம் என்கிறார். அதுவரை நாட்டாமையை அலட்சியமாக எண்ணிய நாட்டாமையின் தம்பி மனைவி நாட்டாமையின் "மேன்மை"களை கண்டு அவரது காலில் விழுகிறாள். கிராமப்பாசம் மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பது இதுதான். அது நவீனத்தை பணிந்து நிற்கச் சொல்கிறது, தன் காலில் வந்து விழச்சொல்கிறது , எச்சில் துப்ப கோளாம்பியை நீட்டச் சொல்கிறது. மேற்சொன்ன திரைப்படங்களில் இந்த காட்சிகள் எதுவுமே விமரிசன ரீதியாக வைக்கப்படவில்லை. பாரம்பரிய அதிகார மேன்மையை நிலைநிறுத்தும் வண்ணமே வைக்கப்படுகின்றன. சின்னக் கவுண்டரில் கவுண்டர் ஆடு மேய்க்கும் பெண்ணை நிர்பந்தம் காரணமாக மணம்புரிந்து கொள்வது அன்றைய திரைப்பார்வையாளனை "உச்" கொட்ட வைத்திருக்கும்.  ஒருவேளை அந்த ஆண் கீதாரியாகவும் பெண் கவுண்டர் இனமாகவும் இருந்திருந்தால் அந்தத்திரைப்படம் வெற்றியடைந்திருக்காது. நம்முடைய மனநிலையின் மையப்போக்கு எக்காலத்திலும் சாதிக்கு ஆதரவானதே.  பெண்களுக்கு எதிரானதும் கூட.

இது நிற்க. இன்றைய நிலை என்ன? முன்பை விட அபாயகரமாக ஜாதியை நோக்கி நாம் விரைந்து கொண்டிருக்கிறோம். கிராமப்பாசம் என்ற மேல்பூச்சு கூட இல்லாமல் நேரடியாக விமர்சனமின்றி ஜாதி திரைப்படங்களில் முன் வைக்கப்படுகிறது. நவீன நீதியின் மீது இன்றைய சமூகம் கொள்ளும் அவநம்பிக்கையும் ஜாதியப்புனைவுகள் கருத்தியல் தளத்தில் உடைத்தெறியப்படுவதும் அல்லது எதிர்புனைவுகள் உருவாக்கப்படுவதும் மரபதிகாரம் கொண்டவர்களை பதற்றமடையச் செய்கிறது. ஆகவே அவர்கள் இன்னும் மூர்க்கமாக ஜாதியைப் பற்றுகின்றனர்.

நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு நிறுவனங்கள் என அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்த வெளிநாட்டுக்கு தப்பிச் சொல்லும் வாய்ப்பும் இல்லாத ஒரு சாமானிய மனம் தன்னை தன் மரபதிகாரத்துடன் இணைத்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. இது ஒரு வகையில் ஜனநாயகத்தின் தோல்வியும் கூட.கிராமங்களில் சுற்றி வந்தால் ஒன்றை அவதானிக்க முடியும். வெளிப்படுவதற்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளின் வழியாக தன் ஜாதியையும் சேர்த்து முன்னிறுத்திக் கொள்ளும் பல இளைஞர்களைக் காணலாம். அவர்களுக்கு இன்றைய சமூகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளத் தெரியவில்லை. தாங்கள் பின் தங்கி இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை ஜாதியை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது.

உண்மையில் விவாதிக்கப்பட வேண்டியவை இரண்டு விஷயங்கள் மட்டுமே. ஒன்று நவீன சமூகத்தின் மீதான இளைஞர்களின் நம்பிக்கையிழப்பு. மற்றொன்று புதுப்புது சமூக வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஜாதியின் தன்மை.

இவை பேசுபொருளாக சமூகத்தின் மைய விவாதத்துக்கு வருவதைக்கூட சாதியதிகாரம் விரும்பாது. அது விரும்பாது என்பதாலேயே இவ்விஷயங்கள் பேசுபொருளாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024