ஈர்ப்பு குறித்து பவித்ரா
அன்பு சுரேஷ்,
வணக்கம்.. ஜெயமோகன் அவர்களது தளத்தில் தான் "ஈர்ப்பு" வாசித்தேன்.. அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்தேன்.. எனது கருத்துகளைப் பகிரவே இந்த அஞ்சல்..
ஈர்ப்பு சற்றே நெடுங்கதை தான்.. "எனக்குஎல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது" என்று துவங்குவதில் இருந்தே, என் எதிரில் ஒருவர் அமர்ந்து அவரைப் பற்றி பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இறுதி வாக்கியம் வரை, தொய்வின்றி அந்தச் சரடை இழுத்துச் செல்வது உங்கள் கதைமொழியின் வலிமை.. அதற்கு பாராட்டுகள்.. ஆண் பெண் உறவு குறித்த எத்தனையோ கதைகளை படித்திருக்கிறேன்.. அவற்றில் எல்லாம் இல்லாத, நிர்த்தாட்சண்யமாக ஸ்கேன் செய்தது போல் பெண் மனதின் அக ஆழத்தை தொட்டு விட்டது தான் இக்கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.. பெண்களைத் தூற்றுவது என்ற தன்மையுடன் இது இல்லை.. ஒரு மனிதன், தன் அனுபவத்திலிருந்து பெண்களின் நடவடிக்கையை, போலித்தனத்தை, கீழ்மையை, அலசி ஆராய்ந்து அப்பட்டமாக வெளிப்படுத்தியவை தான் ஈர்ப்பு முழுவதும் உள்ளது. அக்கதை சொல்லியின் பார்வையுடன் பயணித்தால் முழுமையாக உணர முடியும்..
சமீபத்தில் இரு குழந்தைகளைக் கொன்று விட்ட பெண்ணைப் பற்றிய பரபரப்பு செய்திகளை, சமூகம் எவ்வாறு கையாண்டது என்பதை செய்த்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளங்களில் பார்த்த பின், ஈர்ப்புக்கு ஏன் இத்தனை விமர்சனம் வருகிறது என்பதைப் புர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை.. புனித பிம்பத்தை கிழித்தெறிந்தது தான் எதிர்ப்புக்கு காரணம்..
ஜெயமோகன் அவர்களின் பதிவையும் படித்தேன்.. அதில் அவர்
"
இக்கதையின் தரிசனரீதியான போதாமை ஒன்றுண்டு. எனக்கு அது என்னுடைய அவதானிப்பாகவே உள்ளது. கதைசொல்லி சூழ்ச்சி நிறைந்தவன். ஆகவே மொத்த ஆண்பெண் உறவையும் சூழ்ச்சிகளாக, காய்நகர்த்தல்களாக சித்தரிக்கிறான். ஆகவே கதையே உறவுகள் என்பவை ஒருவகையான சூழ்ச்சிவலைதான் என்ற பார்வையை உருவாக்கி முன்வைக்கிறது
என் அவதானிப்பில் பெரும்பாலும் மானுட உறவுகள் உணர்ச்சிகரமான அசட்டுத்தனத்தாலும், அன்றாடச் சலிப்பிலிருந்து தப்ப விழையும் துடிப்பினாலும்தான் உருவாகின்றன. ஆகவே இக்கதை தன்னளவில் எல்லைக்குட்பட்டது என நினைக்கிறேன்" இவ்வாறு கூறுகிறார்.
என்னைப் பொறுத்தவரை, உறவுகள் முதல் அறிமுகம் வரை இவ்வாறு உருவாகலாம்.. உறவின் இழை நெய்யத் தொடங்கும் போதே கணக்குகளும், மதிப்பீடுகளும் இருவரிடமும் உருவாகத் தொடங்கி விடுகின்றன என்பதே மானுடத்தின் கீழ்மை.. அதை அப்பட்டமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. அந்த கணக்குகளின் அளவு, நுண்மை, வேண்டுமானால் மாறுபடலாம்... ஒருவரையொருவர் ஜெயிக்கும் சூதாட்டமாய் தான் ஆண் பெண் உறவு எல்லா தளங்களிலும் இயங்குகிறது..
சுரேஷ் , உங்களின் புகைப்படம் பார்த்த பின் நீங்கள் தான் இதை எழுதினீர்கள் என்று நம்புவது சற்றே கடினம் தான்.. இத்தனை சிக்கலான கதைக்களனை அழகாய் கையாண்டிருக்கிறீர்கள்..
சுரேஷ்,
இரு விஷயங்கள் என் முந்தைய அஞ்சலுடன் இணைக்கப்பட வேண்டும்..
பொசுங்கைத்தனம் என்ற வார்த்தையை, நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.. ஈர்ப்பின் மையப்புள்ளி அவ்வார்த்தை தான் என்று நினைக்கிறேன்..
"ஆண்கள் பெரும்பாலும் இரண்டுவகை தான். பெண்ணின் விரிசலை சரியாக உணர்ந்து அங்கு தாக்கி அவளுள் நுழைகிறவர்கள். விரிசலை கண்டுபிடிக்கும் நாசூக்கு இல்லாமல் அவளை முட்டிக்கொண்டிருப்பவர்கள்."
இந்தக்கணிப்பு மிகச் சத்தியமானது...
இறுதியில் சொல்லும், சாலையை இருட்டில் கடக்கும் பாம்பு போல என்ற சொல்லாடல் உங்கள் தனித்துவம்.. அதே போல், "பிளக்கப்பட்ட ஆழமான புண் போன்றிருந்தனஅவ்வுதடுகள்."
இந்த வெளிப்பாடு கதைசொல்லியின் நஞ்சூறிய சிந்தனைக்குறியீடு..
அருமை..
வாழ்த்துக்கள்
பவித்ரா
ஈர்ப்பு வாசிக்க
https://solvanam.com/2018/08/ஈர்ப்பு/
Comments
Post a Comment