வரையறுத்தல் - கடிதம் 2
அன்புள்ள சுரேஷ் வணக்கம்
தங்கள் வரையறுத்தல் கதை வாசித்தேன். அதை பற்றிய என் மனப்பதிவை உங்களுடன் பகிரவே இக்கடிதம்.
கதையின் மைய கணம் என்னை தீண்டியதை என்னால் நிச்சயம் மறுக்க முடியாது. குறிப்பாக அந்த கலவரத்தின் துவக்கம் அந்த குடும்பத்தை சூறையாடும் அந்த பகுதி. அந்த காதல் செய்தி அவ்வூரில் பயமாகவே பரவுகிறது. குறிப்பாக நாயகியின் அம்மா பக்கத்து வீ ட்டு பெண்ணிடம் இருந்து இந்த செய்தியை அறியும் தருணம் அவள் மனதில் பரவும் அந்த பயம் நம்முள்ளும் பரவுகிறது. அந்த பயத்தின் தாக்கம் தன் வீட்டை கொளுத்தப்போகிறார்கள் என்ற செய்தியை அறியும் வரை அந்த பெண்ணிடம் வளர்ந்தபடியே செல்கிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை என்பதே அவளுக்கு மிகப்பெரிய ஆசுவாசமாக பெரும் நிம்மதியாக உணர்கிறாள். பொருடசேதம் என்பதெல்லாம் உயிர் சேதத்திற்கு பின் தான் . பொருளின் மீது பிடிப்பு கொள்ள முடியாத ஒரு வாழ்க்கை அவ்வாழ்க்கையின் அகம் இக்கதையில் சரியாக வந்திருக்கிறது.
மிக மெதுவாக இரு தனி மனிதர்களின் அந்தரங்க விஷயமாக மாறி வரும் காதல் ஏன் இரு சமூக சிக்கலாக இருக்கிறது? தனி மனிதர்கள் அனைவரையும் இருகக்கட்டி இருக்கும் சமூகம் எனும் அந்த மாய வலையை அதன் ஒரு கண்ணியை அதன் சிக்கலை காட்டுகிறது வரையறுத்தல். இன்று நாம் மெதுவாக சமூக வலையின் கன்னியின் பின்னல் அமைப்பை மாற்றியபடி இருக்கிறோம் . இக்கதையும் அந்த பின்னல் அமைப்பின் ஒரு முடிச்சின் மீதும் அம்முடிச்சை இருக்கும் கண்ணிகள் மீதும் வெளிச்சமிடுகிறது.
சாதி தாண்டி ஒரு காதல் மலர்ந்தால் அங்கே ஒரு ஊர் எரிக்கப்படும் நிலை சாதாரணமாக இருந்தது. இன்று அது மட்டுப்பட்டு அந்த காதலர்களை தேடி கொள்வதில் தன் கவனத்தை வைத்திருக்கிறது. அதுவும் பொது வெளியில் அதிகமாக முன்வைக்கப்பட்டு தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. விவாதத்தின் ஒரு தரப்பிற்க்கு மாலதி வந்து சேர்கிறாள். அவள் பங்குக்கு அவள் தரப்பை அவள் உரை வழியாக இன்னும் சற்று திடப்படுத்துகிறாள். அனுபவத்தின் வழியாக ஒருவருக்குள் ஒரு கருத்து திரண்டு திடமான ஆகிருதியாக வடிவம் கொள்ளும் சித்திரம் அழகாக வந்திருக்கிறது.
ஆனால் இக்கதையின் முக்கிய பலவீனம் என்பது அதன் வடிவம் மற்றும் நடை. வடிவத்தின் காரணமாகவே கதை அதன் மைய இலக்கை அதிக பட்ச விசையுடன் தாக்கவில்லை. அவர்கள் தாக்கப்படும் அந்த இரவு நமக்கு கொடுக்கும் உணர்வில் நம்மை குவிப்பதற்க்கு பதிலாக அவ்வுணர்வில் இருந்து நம்மை விலக்கி செல்கிறது. கதையின் மையம் கனமான ஒன்றை சொல்லும் போது வடிவம் அந்த கனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக பார்க்கிறது. இது ஒரு வகையில் கதையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. நல்லகதையை சாதரண கதையாக ஆக்குகிறது. நடை இன்னும் இருக்கமாக வந்திருக்க வேண்டும் .
வடிவப்பரிசோதனையை இக்கதையில் செய்திருக்க வேண்டாமோ என தோன்றுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
என்றும் நலமே சூழ்க
அன்புடன்
பா.சதிஷ்
Comments
Post a Comment