Monday 3 December 2018

தந்தையரின் காமத்தை கிசுகிசுத்தல் - சி.சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் நாவலை முன் வைத்து

தந்தை என்ற அடையாளம் எப்படியெல்லாம் உருமாறி இன்றைய நிலையை எட்டியிருக்கிறது என தொன்மங்களையும் புராணங்களையும் கொண்டு சிந்திக்கும் போது நமக்கு சில முடிவுகள் கிடைக்கின்றன. தந்தை என்ற அடையாளம் அடிப்படையில் பெருங்காமத்துடன் குன்றாத வீரியத்துடன் தொடர்புடையது. நம்முடைய தொன்மையான நாயகர்களான தசரதன் சாலமன் போன்றவர்கள் ஆயிரக்கணக்கான மனைவியர்களை கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இது மிருகங்களில் இருந்து சற்று மேம்பட்ட நிலைநோக்கிய ஒரு பயணத்தின் தொடக்கம் எனலாம். பெண்ணை அடைவதற்கான ஆற்றல் கொண்ட ஆண் பல பெண்களை அடைந்து பல மைந்தருக்குத் தந்தையாகி ஒரு குழுவினை உருவாக்கி அதற்கு தலைமை கொண்ட ஒரு செயல்முறையின் வெளிப்பாடாகவே நம்முடைய ஆரம்பகால பெருந்தந்தைகளின் சித்தரிப்பு இருந்திருக்கிறது. ஆகவே அதிகராம் என்பதே தொடக்க காலங்களில் பல பெண்களுடன் இணைந்து மகவீனும் திறன் என்று வகுத்துக் கொள்ளலாம். தந்தை என்ற அடையாளம் கொண்டவர் பிறரிடமிருந்து கீழ்படிதலை எதிர்பார்ப்பதற்கும் தன்னுடைய எல்லையில் ஆளுகையை வெளிப்படுத்த விழைவதற்கும் அடிப்படைக் காரணம் தந்தை என்ற அடையாளம் கீழ்படிதலை உருவாக்கி அடையப்பட்டது என்பதே. ஆனால் சமூகம் விரிவடையும் போது காமத்தின் வழியே குலத்தின் மீது அதிகாரம் செலுத்திய "தந்தை" என்ற அடையாளம் மேம்பாடு அடையத் தொடங்கியது. ராமனும் மோசஸஸும் அடுத்த கட்டத்தில் வந்து அமர்கின்றனர்.

அறத்தின் மூர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட்ட ராமனின் அடிப்படை நற்குணமாக இன்றளவும் கொள்ளப்படுவது அவனுடைய பாலியல் ஒழுக்கமே. அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பாலியல் ஒழுக்கம் என்பது இன்றும் எதிர்பார்க்க முடியாத குணமாகவே இருக்கிறது. அப்படியிருக்க ஒரு அரசனின் மகனாகப் பிறந்தவன் சுயக்கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையவனாக கற்பனை செய்யப்பட்டது அதிலும் ஆயிரக்கணக்கான மனைவியர் கொண்ட தந்தையின் மூத்த மைந்தனான ஒருவன் அப்படி புனையப்பட்டது என்பது சமூக ஒழுங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றமே.

மோசஸஸும் நெஃப்ரிடியரி என்ற அதிகராம் படைத்த பேரழகியைத் துறந்து ஆடு மேய்ப்பவரின் மகளான சேஃப்ராவை மணந்து இறுதிவரை அவளுக்கு உண்மையானவாக சித்தரிக்கப்படுகிறான். அடுத்தகட்டத்தில் தொன்மமாகவும் வரலாறாகவும் நமக்கு கிடைக்கு புத்தரும் ஏசுவும் மகாவீரரும் காமத்தை விலக்கியவர்களாக இருக்கிறார்கள். அதாவது காமத்தால் உருவான தந்தை என்ற அடையாளம் அது விலக்கப்படுவதால் அதனினும் பெரிய அடையாளமாக மாறுகிறது. நாம் முன்னோடியாக கொள்ளும் எந்த பிம்பத்தின் காமத்தைப் பற்றியும் நாம் பேச விரும்பாதவர்கள் ஆனோம். ஐரோப்பிய ஒழுக்கவியலின் தாக்கத்தை நாம் காமத்தை பேசாததற்கான பிரதானமான காரணமாகச் சொல்லலாம் என்றாலும் தந்தை என்ற அடையாளத்தை காமத்தை விட்டு விலக்கிப் பார்க்கும் ஒரு பண்பு நம்மிடம் மெல்ல வேரூன்றி வளர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. தியாகத்தின் கண்டிப்பின் வழிகாட்டுதலின் பிம்பமாக நாம் கட்டமைத்துக் கொள்ளும் தந்தையின் காமம் பேசப்பாடது இருப்பதே சரியானது என்றும்கூட நாம் முடிவுசெய்து கொண்டிருக்கலாம்.

பேசப்படாது விலக்கி வைக்கப்பட்ட ஒன்று என்பதாலேயே அதனை பேசும் போது நமக்கொரு கிளர்ச்சி தோன்றுகிறது. ஒருவரின் மாண்பினை (சமூகத்தில் அவர் ஈட்டிக்கொண்ட தந்தை நிலை) குலைக்க அவரது காமத்தைப் பேசுவது ஒரு வழியாக இருக்கிறது. திராவிடர்கள் முருகன் போன்ற இந்துக் கடவுள்களை திட்டுவதற்கு அவருக்கு இரண்டு மனைவி இருந்ததை காரணமாகச் சொல்வார்கள். இது நேரடியாக ஒரு தொன்ம உருவகத்தின் ஒழுக்கத்தை அதன் வழியாக அதன் காமத்தைப் பேசுவதே. ஆக இரண்டு காரணங்களுக்காக தந்தையரின் காமத்தை நாம் பேசத் தலைப்படுகிறோம். ஒன்று விலக்கி வைக்கப்பட்ட ஒன்றை பேசும் போது தோன்றும் ரகசியக் கிளர்ச்சிக்காக மற்றொன்று இழிவு செய்வதற்காக. இவ்விரண்டு நோக்கங்களும் இல்லாமல் ஆழ்ந்த சமநிலையுடன் தந்தையை புரிந்து கொள்வதற்காக அவர்களது இச்சையை ருசிகளை ஆய்வது என்றொரு நிலை உண்டு. அப்படியொரு ஆய்வை நோக்கித் தன் தேடலை விரித்துக் கொள்ளும் ஒரு  படைப்புக்கு இயல்பாகவே ஒரு செவ்வியல் தன்மை வந்துவிடும். தந்தையரின் காமத்தைத் தேடும் பயணத்தின் வழியாக அது தன்னுடைய காமத்தையும் கண்டடைந்திருக்கும்.

சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் என்ற இந்த நாவலில் அத்தகைய தேடல் நிகழ்த்தப்பட்டதற்கான தடயங்கள் தெரியவில்லை. அதேநேரம் இது காந்தியை இழிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட புனைவாகவும் இல்லை. இது காந்தியைப் பற்றிய ஒரு கிசுகிசுப்பு. விலக்கி வைக்கப்பட்ட ஒன்றை பேசவேண்டும் என்ற கிளர்ச்சிக்கென இக்கருப்பொருள் நாவலாக்கப்பட்டிருப்பதாக எண்ண வேண்டியிருக்கிறது.

இன்றைய உலகில் தந்தை என்பது நேரடியாக காமத்துடன் தொடர்புடைய ஒரு அடையாளம் அல்ல. அது மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட ஒன்று. அக்கறை, பொறுப்பேற்றுக் கொள்ளல்,எந்நிலையிலும் குடும்பத்தை தாங்கி நிற்றல் என ஒரு தந்தையிடம் இன்று எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு தந்தையாக காந்தி இந்தியாவுக்கு மாறிய பிறகே இந்த நாவல் தொடங்குகிறது. 1942ம் ஆண்டு ஆகாகான் மாளிகையில் காந்தி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். உடன் இருக்கும் அவர் மனைவியை கவனித்துக் கொள்வதற்கு என அவருடைய ஒன்றுவிட்ட பேத்தியான மநுபென் என்ற பதின்மம் தாண்டாத சிறுமி ஆகாகான் மாளிகைக்கு வருகிறாள். காந்தியின் காமம் தொடர்பான பரிசோதனைகள் அப்போதே தொடங்கிவிட்டிருக்கின்றன. காந்தியின் செவிலியான சுஷீலா நய்யார் காந்தியுடன் இணைந்து குளிப்பது மநுவுக்கு கிளர்ச்சியைத் தூண்டுகிறது. கஸ்தூர்பா கொஞ்ச நாட்களில் இறந்து போகிறாள். காந்திக்கு மநுவின் மீதான அன்பு அதிகரிக்கிறது. அதை விளங்கிக் கொள்ள இயலாமல் காந்தி தத்தளிக்கிறார்.

மநுவுக்கும் காந்தியின் மீது பேரன்பு தோன்றுகிறது. மநுவை சில வருடங்கள் தன்னை பிரிந்திருக்க அனுமதித்த காந்தி மீண்டும் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார். இந்திய சுதந்திரம் நெருங்கும் காலகட்டம் இந்து முஸ்லிம் கலவரங்கள் உச்சம் பெரும் சூழல் என்கிற நிலையில் மநு காந்தியிடம் வருகிறாள்.  பதின்மம் கடந்த மநுவை தன்னுடன் நிர்வாணமாக உறங்கச் செய்கிறார் காந்தி.  ஆசிரமத்தில் காந்தியுடன் இதற்கு முன் அப்படி உறங்கிய பெண்களுக்கு மநுவின் மீது பொறாமை தோன்றுகிறது. காந்தியின் சத்திய பரிசோதனைகளில் ஒன்றான இந்த நிர்வாண உறக்கத்தை அவரே வெளிப்படுத்துகிறார். பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்ப தான் செய்தது சரிதான் என்று காந்தி பலருக்கு கடிதம் எழுதுகிறார். தக்கர் பாபா காந்தியுடனும் மநுவுடனும் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்துகிறார். சில நாட்கள் தன் பரிசோதனைகளை கைவிடும் காந்தி மீண்டும் அப்பரிசோதனையை கையிலெடுக்கும் போது அடையும் தரிசனத்தோடு இந்த நாவல் முடிகிறது.

இப்படி நேரடியாகச் சொல்லும்படியானதாகவே இந்த நாவலின் கதைப்போக்கு இருக்கிறது. சிறிய சிறிய அத்தியாயங்கள் கதாமாந்தர் யாருடயை அகத்தத்தளிப்புகளின் உள்ளும் புகுந்து பார்க்க அனுமதிக்காத கதையோட்டம் இரண்டும் சேர்ந்து கதையுடலை அமைக்கின்றன. மநுவின் பார்வையில் காந்தியை சொல்ல முயன்றிருப்பதும் காந்தி என்ற பேராளுமை அவருடன் இருந்த பிற ஆண்களுக்கு எவ்வளவு வதையாக விளங்கியிருப்பார் என்பதை பியாரேலால் வழியாக சொல்லி இருப்பதும் இந்த நாவலில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்.

அன்னை தந்தை ஆசிரியன் தெய்வம் என்றொரு வைப்புமுறை நம்மிடம் உண்டு. அன்னை என்ற அடையாளம் மனிதனின் உடலோடு நேரடியாகவும் தந்தை என்பது மறைமுகமாகவும் தொடர்பினை கொண்டது. ஆசிரியனும் தெய்வமும் இன்னும் சற்று தள்ளி இருக்கின்றன. உணர்வெழுச்சி கொண்ட மாணவன் ஆசிரியனை தந்தை என எண்ணுவது ஒரு நிலை. மநு காந்தியை தன் தந்தை என்ற நிலையில் இருந்து நகர்த்தி அன்னை என எண்ணிக் கொள்கிறாள். இந்த நாவல் முன் வைக்கும் தரிசனமாக இதை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் மநுபென் "Bapu My mother"என்றொரு நூலை முன்பே எழுதியிருக்கிறார். மநு ஏன் காந்தியை அன்னையாக உணர்கிறாள் என்பதை அவதானிப்பதற்கான கூறுகளும் நாவலில் இல்லை. இறுதியில் இந்த நாவலில் தரிசனம் என எஞ்சக்கூடியது காந்தியின் அகங்காரம் மநு என்ற தூயவளிடம் கனிவதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. காமம் என்பது அகங்காரமே. அதை வெல்வதற்கு காந்தி மேற்கொள்ளும் பயணத்தின் இறுதியில் அவர் மநுவை சந்தித்துக் கனிகிறார் என நாவல் முடிகிறது. ஆனால் இம்முடிவு திட்டமிட்டு எட்டப்பட்டதாக எந்த வித புதுத் திறப்புகளையும் அளிக்காததாக இருக்கிறது.  காந்தி என்ற படிமத்தை படிமமாக மட்டும் நிறுத்தி புரிந்து கொள்ள முயல்வதாகவோ காந்தி என்ற வரலாற்று மனிதரின் காமத்தை புறவயமாக அணுகும் தன்மையுடனோ இந்த நாவல் எழுதப்படவில்லை.

காமம் என்ற பேசுபொருள் இருப்பதனால் இந்த நாவல் உத்வேகம் மிக்க வாசிப்பைத் தரலாம். ஆனால் அதைக்கடந்து இந்த நாவல் ஏதேனும் புதுமையை நிகழ்த்தியிருக்கிறதா என்று கேட்டுக்கொண்டால் இல்லை என்ற பதிலையே சென்றடைய வேண்டியிருக்கிறது. கிசுகிசுக்கும் போதோ கிசுகிசுப்புகளை கேட்க நேரும்போதோ தோன்றும் கிளர்ச்சியைத் தாண்டி இப்பிரதி வேறெதையும் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment