தனிமையெனும் நிரந்தர நிலை

/இக்கேள்வியை வெவ்வெறு வகைகளில் நண்பர்களிடமிருந்து எதிர்கொண்டபடியே இருக்கிறேன். இக்கேள்வியின் ஊற்றான உளக்கசப்பை அடைந்து அதைக் கடக்கும் முனைப்பில் இருப்பவன் என்ற முறையில் தோழி ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட இக்கேள்வியையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் அவரது அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்/

தனிமை வரமா, சாபமா? எதுவாயினும் மனித மனத்தை பொறுத்து தான், எனினும், தனிமையை விட கடுமையானது எதுவும் உண்டோ என்பது போல தோன்றி விடுகிறது, சில சமயங்களில் நம்முடைய எண்ண ஓட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது.

-----

அன்புள்ள -----

தனிமையை வரம் சாபம் என்றெல்லாம் பொதுமைபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தனிமையின் சாதக பாதக அம்சங்களை நன்கறிவேன். இளவயதில் மனித உறவுகளில் மற்ற எல்லோரையும் விட சற்று அதிகமான புனிதத்தை கற்பனை செய்ததாலோ என்னவோ உறவுகள் அப்படி இல்லை என்ற விஷயத்தை உணரத் தொடங்கியபோது உள்ளொடுங்கியவனாகி விட்டேன். மனித உறவுகளை இரக்கமேயின்றி கீறி பார்க்கும் ஒரு மனநிலை ஏற்பட்டுவிட்டது. சமீபமாக அதிலிருந்தும் சலித்து வெளியேறுகிறேன். ஆனால் உறவுகளை நம்பியபோதும் கசந்து விலகியபோதும் தனிமையில் தான் இருந்திருக்கிறேன். அத்தனிமை ஒன்றை உணர்த்தியது. உறவுகள் சமூகம் என்ற அமைப்பினால் மனிதனுக்குள் தோன்றிய உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைபவை மட்டுமே. இப்படிச் சொல்லலாம். ஒரு அலுவலகத்தில் புறச்சூழல் மாற மாற அலுவலக விதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா. உதாரணமாக நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற கட்டாய விதியை அலுவலகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் முன்பு கண்காணித்துக் கொண்டிருந்தார். இன்று அதற்கென ஒரு இயந்திரம் இருக்கிறது. விதி தளரவில்லை. அதை கட்டாயமாக பாவிக்கும்படியான சூழலை இந்த இயந்திரம் உருவாக்கி விடுகிறது.

அதுபோலத்தான் எல்லா மனித உறவுகளும். தேவை சார்ந்தவை. புறத்தின் ஒழுக்க விதிகளும் உறவு வரைமுறைகளும் மாறுவதற்கு ஏற்றது போல மாறிக்கொண்டிருப்பவை. அவற்றை நிரந்தரமானவை புனிதமானவை என்று நம்ப வைப்பது சமூகம் நீடிப்பதற்கு தேவையானதொரு தந்திரம்.  இந்தப் புரிதல் நான் உணர்ந்து அடைந்தது.இந்த சமூக ஏற்பாட்டிற்குள் வாழும் நாம் நம்மைச்சுற்றி புழங்கும் உறவுகளை தவிர்த்து விலகி நிற்க இயலாது. ஆனால் அவ்வுறவுகள் எதுவும் நம் தனிமையை போக்கிவிட முடியாது.

உறவுகள் பொழுதுபோக்குக்காக மட்டுமே. கணவன் மனைவி காதல் குழந்தை என எதுவானாலும் அனைத்தும் ஒருவகையான உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குதான்.  மனிதர்களின் உணர்வு வீரியத்தைப் பொறுத்து உறவுநிலைகள் அமைகின்றன. நமக்கு இந்த உணர்ச்சி பொழுதுபோக்கில் ஆர்வமிருப்பின் அதில் நாம் ஈடுபடலாம். திளைக்கலாம். இதை அறிந்தோ அறியாமலோதான் அத்தனைபேரும் உறவில் திளைக்கிறார்கள். இதை அறிந்து திளைப்பதும் வெளியேறுவதும் நம்மை சமநிலையில் வைத்திருக்கும்.

நான் இதை அறிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். உறவுகளை வெறும் தேவை சார்ந்து அணுகாமல் அதேநேரம் ரொம்பவும் உணர்வுபூர்வமாக மாற்றிக் கொள்ளாமல் ஒரு நடுநிலை பேணுகிறேன். நடுநிலையை நீடித்துக் கொள்ள சிரமமாகவே இருக்கிறது. ஆனால் அதுவே சரியான புள்ளி என்றொரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவற்றை கழித்துவிட்டு பார்த்தால் என் அன்றாடம் முழுத்தனிமையால் ஆனது. அது எனக்கு பல வகையிலும் நலம் பயப்பதாகவே அமைகிறது. தனிமைப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எழும்போதெல்லாம் தனிமை அளிக்கும் சுதந்திரத்தை மனதில் கொண்டு அவ்வெண்ணத்தைக் கடக்கிறேன்

சுரேஷ் பிரதீப்

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024