எஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு

சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப்பு என்றால் ஒருசில வகைகளில் மனமுவந்து ஆம் எனலாம். வளரும் எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளின் தாக்கத்தின் துல்லியத்தை தெளிவுப்படுத்தக்கூடிய முயற்சியின் ஒரு சிறு துகள் தான் இக்கட்டுரையே தவிர மொத்தமாகவே அக்கதைகளை தராசில் நிறுத்தி பார்த்து தரம் பிரித்துப் பார்க்கும்  முயற்சியால் விளைந்தது அல்ல.

முதல் கதையான ‘வீதிகளி'ல் வரக்கூடிய பிரவீணாவினூடாக ஒரு சிறிய கிராமத்தின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது கதைக்களம்.  வருடங்கள் பல உருண்டோடிய பின் சந்திக்கும் தோழிகளின் உணர்வு ரீதியான கொந்தளிப்புகளையும் குறுகுறுப்பையும் வர்ணிக்கும் எழுத்தாளரின் சிரத்தை மிளிரும் இடமென்றால் அது தோழிகளில் ஒருத்தி மணமாகி கைக்குழந்தையுடன் இருப்பதையும் அவளை யதேர்ச்சயாக காணும் இன்னொருத்தியின் மனஅலைகளில் விரியும் வியப்புக்கலந்த நுண்ணுர்வுகளின் வெளிப்பாடுகளை விவரித்திருக்கிற விதத்தைச் சொல்லலாம். அதிலும் அவர்களின் உரையாடல்களின் தொனியை சிறிதேனும் கூர்ந்து நோக்கும் தருணங்களில் புலப்படுவது என்னவெனில் மெல்லிய நீரோடையின் சலனமற்ற ஓட்டமானது கிளைப்பிரிகையில் சற்றே ஆர்ப்பரித்தடங்கும் ஓசையை நினைவு கூர்வதாய் இருக்கிறது. இவ்விரு பெண்களின் அகப்போராட்டங்கள் பின்னிப் பிணைந்து புறத்தோற்றம் கொள்ளும் மனிதர்களை நாம் எங்கும் காணலாம். அத்தகையதொரு நிஜ மனிதர்களின் நிகழ்வுகளை எவ்வித்ததிலும் பூசி மொழுகாமல் உள்ளதை உள்ளபடிக்கே வாழ்வியல் யதார்த்தங்களோடு பொருந்திப்போகும் வண்ணம் கதைக்கூறல் முறையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. திருமணம் என்னும் மையப்புள்ளி எப்படி அதில் இணைந்துவிட்டளுக்குள்ளும் அந்த நிறுவனத்திற்கு வெளியே நிற்பவளுக்குள்ளும் விவரிக்க முடியாத பல மென்சலனங்களை தோற்றுவித்து செல்லும் என்னும் பார்வையில் விரிந்திருக்கக் கூடிய கதையின் சொல்லாடல்களை எல்லாம் நன்றென்கிற இரகத்தில் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். 

எஞ்சும் சொற்கள் என்ற கதையின் கதைக்களமானது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சாதிகள் சான்றிதழ் சரிப்பார்க்கும் பொருட்டு காத்திருப்போர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் பார்வையில் விரிகிறது. கீழ்நிலை சாதிகளின் மேல் படிந்திருக்கும் எள்ளல்களும், எளக்காரத் தோரணைகளுடன் கூடிய உதாசீனப்படுத்தல்கள் எல்லாம் சாதீய அடுக்குகளில் மேல்லுள்ளவர்களால் மட்டுமல்ல சமயங்களில் அதிகார வர்க்கத்தினர்களின் எல்லைக்குட்படுகிறப் போது ஒரே பிரிவை சார்ந்தவர்களாலேயும் தரம் தாழ்த்தப்படக்கூடும் என்னும் பார்வை சற்றே புதுமையாய் தெரிகிறது. அதிலும் பொறியியல் படிப்பு முடித்து தற்போது இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்பவனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிற போதும் சாதீய அடிப்படையில் ஒன்றானவர்களே என்னும் உரிமையில் ஆட்சியர் தன் மீது விட்டெறிந்த வார்த்தைகள் தந்த கணத்தின் வலியையும், அருவருப்பையும் உணரும் இளைஞனின் மனக்கொதிப்பை கதையின் இறுதி வரிகள் மிக கச்சிதமாக படம் பிடித்துக்காட்டுகிறது.   

பரிசுப்பொருளில் எதிர்படும் மோனிகாவின் பாத்திரப்படைப்பில் பெரிதானதொரு மாற்றங்களை காணமுடியாவிட்டாலும் கூட நவீன யுகத்தின் பிரபலமானதொரு முழக்கமான உபயோகித்து தூக்கியெறியக்கூடிய பண்டமாகத் தான் பெண்களின் அவலநிலைகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நீட்சியினை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

பதினொரு அறைகள் என்கிற தலைப்பு ஒருவித யூகத்தை தருவிக்கிற போதும் கதையின் விவரணைகள் எல்லாம் மையக் கதாபாத்திரமான இளைஞனுள் உறைந்துப்போய் இருக்கும் தாயை பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் அவனுடைய  வன்மங்கள் வடியும் தருணத்தை நோக்கியே பின்னப்பட்டிருக்கிறது. அதிலும் தாய் என்கிற பிம்பத்தின் எதிர்மறை படிமங்களும் வழக்கத்தில் நைந்துப்போன வாதமான பெற்ற மகன் குறித்த பாசப்பிணைப்பென்பது முற்றாக கட்டவிழும் தருணமானது கைவிடப்பட்ட மகனின் மனதில் எத்தகையதொரு எதிர்மறை தாக்கத்தினை ஊற்றெடுத்து விடக்கூடும் என்பதை கதையின் முடிவில் வரக்கூடிய நிகழ்வில் மிக நேர்த்தியாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொறியியல் மாணவனும் இந்நாள் இளம் எழுத்தாளன் என்கிற அடையாளத்துடனும் தன்னை நிறுவிக்கொள்ள விழையும் அசோக்கின் பாத்திரப்படைப்பானது மடி கதையில் மிக நன்றாகவே புனையப்பட்டிருக்கிறது. அசோக்கின் சலனமற்ற தன்மையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிற திவ்யாவினுடைய ஆளுமையும், அவளின் தீர்மானிக்கப்பட்ட கேள்விக்கணைகள் எல்லாம் அவன் மீது மோதும் தருணங்களில் வெளிப்பட்டிருக்கும் சிற்சில ஊடல்கள் எல்லாம் ஒரு பறவையின் சிறகு உதிர்தலுக்கிணையாகவே அத்தனை நலினத்துடனும் இயல்புடனும்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திவ்யாவின் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகள் தன்னை சூழ்ந்துக்கொள்ளும் நிமிடங்களை ஒருவித உறுதிதன்மையுடனே கையாண்டுக்கொண்டிருக்கும் அசோக்கின் பாதுகாப்பு வளையமான மென்கர்வங்கள் உடைப்படும் தருணங்களை கடந்துவரும் போது ஒரு கணம் நிஜ மனிதர்களின் உரையாடலை அவர்களின் ஜன்னலுக்கு வெளியே நின்று வேடிக்கைப்பார்ப்பதை போன்றதொரு பிரமிப்பை வாசிப்பு ஏற்படுத்தி தருகிறது.  இன்னும் ஒருப்படி மேலேப்போய் இன்றைய இளம் எழுத்தாளர் என்கிற மிடுக்குடன் சுரேஷ் மிளிரும் இடமென்று சொன்னால் அது கதையின் முடிவில் அவர் கையாண்டிருக்கக்கூடிய நுண்பகடியை சொல்லலாம். “அவளை வாசலில் கண்டபோதே இந்தக்காட்சி வேறெப்படியும் முடியாதென நான் ஊகித்திருந்தேன் என்பது இறுதி முத்தத்திற்கு பிறகு ‘லவ் யூ’ என்று அவள் மார்பில் சாய்ந்தபோது தெரிந்தது.”

கணவன் மனைவிக்கிடையேயான தாங்கிப்பிடித்தலும் தாக்குப்பிடித்தலுக்குமான பெரிதானதொரு சவாலாகவே தொத்தி நிற்கும் உளவியல் சிக்கல்களை அணுவணுவாக ‘மறைந்திருப்பவை’ கதையில் மிக யதார்த்தமாக கட்டியெழுப்ப முனைந்திருக்கும் எழுத்தாளர் தீபாவின் மனப்பிறழ்வின் பிண்ணனியை விவரிக்கும் தருணங்களில் மிதமானதொரு சறுக்கலை சந்தித்திருக்கிறாரோ என்றே எண்ணத்தோன்றியது அவளுடைய சிறுவயது அதிர்வுகளை பதிவு செய்திருக்கிற இடத்தினில். அதிலும் குட்டிகளை ஈன்றதுமே அவற்றில் ஒன்றை தின்றுவிடுகிற தாய் நாயை தீபா மிக அருகில் முதல் முறையாக காணும் போது என்று சொல்லப்பட்டிருக்கிற போதும் அப்படிப்பட்டதொரு குரூரத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய ஜீவனாக (அது இயல்பே எனினும்) நாயை கற்பனை செய்துப்பார்க்க மனம் ஒப்பாமல் போய் விடுகிறது. மேலும் திருமணத்திற்கு பின்பான தீபாவின் மனத்தடுமாற்றங்களும் சரி அவளின் தொடர் வதைப்படலுக்கான கதை நகர்தலும் சரி வாசகர்களின் தர்க்க நெறிகளின்று சற்றே தள்ளியிருப்பதைப் போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் கதையின் மீதான பிடிப்பை தளர்த்திவிட்டதாகவே தெரிந்தது கதையின் நிகழ்வுகளை கடந்து வருகிற போது. குறிப்பாக கதையின் முடிவுமே கூட துரிதகதியில் ஒருவித நாடகத்தன்மையுடன் முடித்து வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றியது தீபாவின் மரணச்செய்தியை வாசிக்கும் போதினில்.

சாதீய கட்டமைப்புகளின் இறுக்கத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆசிரியரின் கதைசொல்லல் தொனியானது “ஆழத்தில் மிதப்பது”வில் சற்றே மாறுப்பட்டிருக்கும் இடமென்றால் அது கதைசொல்லிகளாக மூன்று முக்கிய பாத்திரங்களின் வழியாக கதைபுனையப்பட்டிருப்பதை சொல்ல்லாம். மற்றபடி ரம்யாவின் உயிரியல்  பெற்றோர்களின் அடையாளமானது அவளிடமிருந்து மறைக்கப்படுவதற்கான அவசியம் ஏனோ அவசியமற்றதாக தெரிவதாலோ என்னவோ கதையின் ஆரம்பத்தில் உணரப்படும் சுவாரசியத்தொனியின் அழுத்தம் குறைவதான உணர்வை கொடுப்பதாக இருக்கிறது கதையை முடிக்கும் தருணத்தில்.

பதின்ம வயதுடைய மாணவனின் பார்வையில் விரியும் கதையான 446A கதையின் உள்ளடுக்கில் அவ்வெண் கொண்ட பேருந்தின் சிறு தூர பயணம் போலவே நரேனின் பதற்றத்துடனும், பரப்பரப்புடனும் அசுர வேகமெடுத்து மிதமான வேகத்தில் நகர்ந்து திடீர் திருப்பத்தில் போய் நிற்கிறது. அதிலும் நரேனின் மனதில் தேங்கியிருக்கும்  பெண்கள் குறித்தான நினைவுகள் எல்லாம் அவர்களின் வியர்வை நெடியுடனோ அல்லது மைசூர் சாண்டல் சோப் நறுமணத்துடனோ வந்துப்போவதென்பது அன்றாடங்களில் உழலும் பெண்களின் வாழ்வியல் கூற்றுகளில் ஏதோ ஒன்றுடன் இணைக்கப்பட்டதைப் போன்றதொரு எண்ணத்தை தோற்றுவிப்பதாய் இருக்கிறது. 

நவீனகால யுவதிகளின் குறியீடாகவே ‘அபி’ கதையில் வரும் அபியை காண முடிகிறது. அவளின் தெளிவும், துணிச்சலும், மன உறுதியும் நம்மை புருவமுயர வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது. கணவன் ஸ்ரீராமிடமோ காதலன் சரணிடமோ உணர்ந்துக்கொள்ள முடியாத நெருக்கத்தையும் அரவணைப்பையும் தோழி அர்ச்சனாவினிடத்தில் உணர்ந்துகொள்கிறாள். பொதுவாகவே சுரேஷின் கதைகளில் பெரிதும் வியக்க வைக்கிற காரணிகளாக தெரிவது எதுவென்றால் ஒரு தேர்ந்த உளவியல் நிபுணருக்கே உரித்தான நிதானத்துடனும் கூரிய அனுமானங்களுடனும் மனிதர்களின் உளவியலின் அடுக்குகளில் உள்புகுந்து அவற்றின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய நுண்ணுர்வுகளையும் ஆழ்மனத்தகவல்களையும் எவ்வித சமரசமோ, மேல்பூச்சோ இன்றி வார்த்தைகளில் வடித்து விடக்கூடிய திறமையால் சற்றே தனித்து தெரிவதை சொல்லலாம். பல சமயங்களில் மனதின் தென்படக்கூடிய சமநிலையின்மையை உள்ளதை உள்ளபடிக்கே எப்படி இவரால் வார்த்தைகளாக கொண்டு வர முடிகிறதென்று வியக்க தோன்றினாலுமே சில சமயங்களில் மனவறையின் ஒருபாதியை பதிவு செய்ததுப்போக அதன் மறுபாதியை பதிவு செய்ய கவனமின்யாக தவறிவிட்டாரோ என்றும் நினைக்க தோன்றிகிறது. அதுப்போல தான் ஸ்ரீராமிடம் அறை வாங்கும் அபியை பார்க்கும் தருணத்தில் அர்ச்சனாவின் மனக்குரலாக எதிர்படும் வார்த்தைகளில் வெளிப்படும் மெல்லிய குரூரமானது அதற்கு பின்பான சிறிய வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் முடங்கிப்போய் கிடப்பதில் சிறிய ஏமாற்றத்தை உணர முடிகிறது. “அந்த அறையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்” என்கிற உணர்வுகளின் அதிர்ச்சியைப்போலவே தோழிகளின் அத்தனை அந்நியோன்த்தை தாண்டியும் அபி மற்றும் ஸ்ரீராம் பிரிவிலோ அல்லது சரணுடன் அவள் இணைய முடியாமல் போனதினாலோ எவ்வித பாதிப்புகளையோ, பதற்றத்தையோ அர்ச்சனாவினுள் காண முடியாததை முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

பொதுவாகவே சிறுகதைகளில் கையாளப்படுகிற கதை சொல்லல்பாணியான ஒருவித நேர்கோட்டுத் தன்மையில் பயணிக்கும் கதைக்களமானது ‘வரையறுத்தல்’ கதையில் பெரிதும் மாறுப்பட்டு  புதுமையை தாங்கி நிற்கிறது. குறிப்பாக காலவரிசைப்படி பலவருட இடைவெளிகளுடன் முன்னும் பின்னுமாக நகர்த்தப்பட்டிருக்கும் நிகழ்வுகளினால் படிப்போர் மனதில் மிதமானதொரு குழப்பத்தையும் ஏற்படுத்திடா வண்ணம் கனக்கச்சிதமாகவே கதையை புனைந்திருக்கிறார் ஆசிரியர். அதனோடுக்கூடவே நவீன காலத்திலும் சாதிகளின் இறுக்கத்தின் பிடி சற்றும் தளர்ந்திடா வண்ணம் மேலும் மேலும்  இறுகிக்கொண்டுப் போவதுப் பற்றியும் அது நீட்சிக்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அதன் குறியீடுகள் சமகாலத்தில் எவற்றிலெல்லாம் பிரதிப்பலித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பெரிய கூட்டத்தின் முன்பாக மாலதியின் உரையாக பதிவு செய்ய விழைந்திருக்கும் ஆசிரியரின் முயற்சி நம்மை சற்றே வியப்பில் ஆழ்த்துகிறது.  இன்னும் சொல்லப்போனால் துளியளவு இடறினாலும் பலத்த சறுக்கலை சந்தித்திருக்கக் கூடிய கதைக்களத்தையும் அதை பலத்த பிரயத்தனுங்களுடன் வடிவமைத்து சலிப்புத்தட்டாதப்படிக்கு சொல்லியிருக்கிற விதத்திற்காகவுமே ஆசிரியருக்கு பெரிதானதொரு பாராட்டுதல்களை வழங்கலாம்.  

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளிலேயே வாசிப்பிலும், புரிதலிலும் மிகப்பெரிய சவாலாகிப்போன கதையென்றால் அது நிச்சயம் ‘ஈர்ப்பு’ என்பதில் சந்தேகமில்லை. வழக்கமானதொரு சுரேஷின் கதை சொல்லல் பாணியில் அமைந்த கதை என்பதாலோ என்னவோ தனிப்பட்ட மனிதனின் உளவியல் சிக்கல்களின் படிமுடிச்சுக்களை அவிழ்க்க வேண்டி மிகுந்த மெனக்கெடல்களை மேற்கொண்டிருக்கும் ஆசிரியரின் முயற்சிகளை ஒருவாறாக யூகிக்க முடிகிற போதும் வாசகரின் பார்வையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பிரமிப்பையும் புரிதலில் உணரப்பட்டிருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றியும் சிறிதேனும் கவனத்தில் கொண்டிருக்கலாமோ என்னும் கேள்வியை தவிர்க்க முடியாமல் போகிறது. குறிப்பாக கதையின் விவரணைகளை உள்வாங்கும் பொருட்டு   பெரிதானதொரு அயர்ச்சியை உணரும் போது. இருப்பினும் ஈர்ப்பை சுமார் ரக கதையென்று புறந்தள்ளிடவும் முடியா வண்ணம் அதன் உள்ளடக்கமானது மிதமானதொரு கனத்தை தாங்கி நிற்கிறது. கதையின் முடிவைத் தவிர வேறெங்கும் உணரப்படாத ஒட்டுதலின்மை வாசிப்பின் போது ஒருவித சலிப்பையும், அயர்ச்சியையும் கொடுக்கிற போதும் கதைசொல்லியாக வரும் நடுத்தர வயது ஆணின் தாழ்வு மனப்பான்மையால் விளையும் வெறுமையையும், பொறுமல்களையும் புதிதானதொரு முறையில் பதிய வேண்டி கதாசிரியர் பயணித்திருக்க கூடிய தொலைவு என்பது ஒருவகையில் பிரமிப்பை ஏற்படுத்தி ஒருசில இடங்களில் புதுமையான வார்த்தைகளுடன் சற்றே விசித்திரமாகவும் தென்படுகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கூடிய இறுதி கதையான ‘பாரம்’ முழுக்கவே மனவியலின் படிமங்களாலும் வடிந்ததுப்போக மிச்சமிருக்கக்கூடிய ஆழ்மன நினைவடுக்குகளின் குறியீடுகள் பற்றிய விவரணைகளால் விரவிக்கிடக்கிறது. மேலும் பாரம் மற்றும் சுமை என்கிற குறியீட்டு சொற்களினூடாக எழுத்தாளர் சொல்ல விழைவது யாதெனில் மனிதர்களுள் உறைந்திருக்கும் வாழ்வியலை நீட்சிக்கொள்ளும் பேரவாவினை வலுப்படுத்தும் அக மற்றும் புறகாரணிகளாக தென்படுவது அவர்தம்மை இறுக்கிப்பிடித்திருக்கும் நினைவோடைகளினால் மட்டுமே என்னும் கருத்தை பதிவு செய்வதற்காக என்பதுப்போலவே இருக்கிறது. இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக  “எல்லா செயல்களிலும் இன்பம் என்பது கண நேர உணர்ச்சி தான். சுமை தான் நிரந்தரம். கரையான் அரித்த மரத்தூண் அந்தக் கரையான் உருவாக்கிய மண் படலத்தால் தாங்கப்படுவது போல மனிதர்கள் தங்கள் சுமைகளால் மட்டுமே உலகில் தாங்கப்படுகிறார்கள்” என்கிற வரியினூடாக ஆசிரியர் சற்றே அழுத்தந்திருத்தமாய் பதிவிட்டு செல்கிறார்.

- அசோக மலர் 

(அசோக மலர் இந்த வாசிப்பனுபவத்தை எழுதிய வாசகியின் புனைப்பெயர். ஷோபா சக்தியின் கதையொன்றில் இருந்து இப்பெயரை எடுத்துக் கொண்டதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.)

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024