நாயகிகள் நாயகர்கள் குறித்து சுபா

அன்புள்ள சுரேஷ்,

நாயகிகள் நாயகர்கள் நேற்றும் இன்றுமாய் வாசித்து முடித்தேன். உங்கள் சிறுகதைகள் இணையத்தில் அவ்வப்போது வாசித்து வருகிறேன் என்றாலும் ஒரு தொகுப்பாக வாசிப்பது இதுவே முதல் முறை. 

உடனிருப்பவன், ஈர்ப்பு, நீலப்புடவை, சொட்டுகள், இடைவெளி போன்ற (இன்னும் சில விடுபட்டிருக்கலாம்) கதைகளை வாசித்தவுடன் அக்கதைகளின் ஏதோவொன்று சலனமேற்படுத்துவதையும் சில நாட்களுக்கேனும் உள்ளே வாதமும் எதிர்வாதமுமாய் சரடுகள் நீட்சி கொண்டிருந்ததும் உண்டு. எனில் தொகுப்பாக வாசிக்கும்போது ஒருவேளை இதுதான் சுரேஷ் எழுத்து என்று மனது ஒன்றை அடையாளப்படுத்திவிடுமோ என்று தோன்றியது. எனில் ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்று புதிதாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. 

கதைகளின் பொதுவான தன்மையெனச் சொல்ல வேண்டுமெனில் 'எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல்' நாயகனைப் போல எல்லாவற்றையும் மூன்றாகப் பார்ப்பது என்று சொல்லலாம். எனில் பார்வையின் செல்திசை வாசகனைப் பொறுத்தளவில் முதலில் மேல்தளத்தில் கதைமாந்தருக்கு நிகழ்வதை உணரும் நுகர்வுப் பார்வை, இரண்டாவது உங்கள் கதைகள் பலவற்றிலும் கதைமாந்தர்களின் தொடர் மனவொழுக்கின் வழி கட்டமைத்து உருவாகி வரும் நிபுணத்துவப் பார்வை, மூன்றாவது அருவமாக அது வாசகனின் உள்ளே அவனறிந்தும் தொட்டுவிட இயலாது இருக்கும் ஏதோ ஒரு கசங்கலையோ, அழுகலையோ காட்டிவிடும் கலைஞனின் பார்வை. இதில் மூன்றாவதாக வாசகன் தொட நேரும் அந்த மூலப்பொருளைக் கலைப்படுத்துவதில் உங்கள் எழுத்து தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது. ஆலரசுக்குளத்தில் வருவதைப் போல காலில் குத்திய கண்ணாடியைப் பிடுங்கும் போது மண்டைக்குள் குடையும் வலி போல ஒன்றை இக்கதைகள் வாசித்தபின் சில நாளைக்கு ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக காட்சி சித்தரிப்புக்கு பயன்படுத்தும் சில உவமைகள். மாசிலன் கதையின் தொடக்க வரி போல: 
//நாயின் பளபளக்கும் உடலில் விழுந்த செஞ்சிராய்ப்பென இரவினைக் கிழித்துக்கொண்டு ஓசையில்லாமல் லெனின் முன் விரைந்து சென்றது ஒரு இரு சக்கர வாகனம்//

//பளிங்குக் கல்லை வாயில் போட்டு மெல்லுவது போல ஒரு சொரணையற்ற அசூசையை தனா தன்னுள் உணர்ந்தான்.// - வீட்டில் அம்மா இல்லாதபோது

//மொத்த உடலும் ஒரு நொடி கண்ணாடியில் வைத்து இறுக்கப்பட்டது போல முறுக்கிக் கொண்டது.//- ஆலரசுக்குளம்
கதைநாயகர்களின் இயல்புக்கேற்றார் போன்ற சொற்கள் வழி காட்சியை கடத்திவிடும் சூட்சுமம் பல இடங்களில் தெரிகிறது. 

நெரிசலும் வியர்வையைமாய் பேருந்துப் பயணத்தின் ஒவ்வாமை பல கதைகளில் வந்து போகிறது, அவ்விதம் பயணம் செய்த பல தருணங்களை நினைவூட்டி யாருடைய வியர்வையோ படிந்துவிட்ட என் கையை சற்று அருவருப்புடன் விலக்கிய படியே வீடுவரை நடந்த பொழுதுகள் நினைவிலெழுந்தன. பெரியம்மா வீடு சிறுவனைப் போல நெரிசல்களில் சில நிமிடங்களில் அழுந்தி கொல்லப்படப்போவதாக, தொலைந்துவிட்டதாக உணர்ந்த பால்யம் கண் முன் வந்தது. அது இன்றும் திரளின் மீதான விலக்கமாக, கூட்டங்களில் உள்ளுக்குள் சுருங்கிக் கொள்ளும் தன்மையாக இருந்து கொண்டேயிருக்கிறது. 

சில்ற, குற்றுளம் எனப் பல கதைகளில் பேருந்துப் பயணம் வந்து போகிறது. நாளின் கணிசமான பகுதி பயணங்களில் கழிவதால் நெரிசலான பேருந்து உங்களை சலனப்படுத்தும், சலிப்பேற்படுத்தும் சில்லறைத் தன்மைகளின் குறியீடாகவே ஆகிவிட்டதெனத் தோன்றுகிறது.
//தலையில் எண்ணெய் வைக்காமல் செம்பட்டை பிடித்த முடியோடு வாயிலோ கழுத்திலோ பாக்கெட்டின் வெளியிலோ கர்சீப்பை தொங்க விட்டவாறு, எதிலும் அலட்சிய பாவனையும் முகத்தில் ஒரு மெல்லிய வெறுப்பும் கலந்து தங்களை அணுக முடியாதவர்களாகக் காட்டிக் கொள்ளும் இறுக்கமான உடையணிந்த பலரை நான் பயணிக்கும் பேருந்தில் காண முடியும்.//- குற்றுளம்

//பேருந்தில் பேசப்படுவதும் பழையதாகவே இருக்கும். ஏதோவொரு நாளில் உறைந்து போய்விட்ட ஊர்.// - அலுங்கலின் நடுக்கம். 
தேடிச் சோறுநிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி..பாரதியின் வேடிக்கை மனிதர்களைப் போன்ற ஒரு விளாசல் விழுந்து கொண்டே இருக்கிறது 😊

நடையின் சீரான வேகமும், எண்ணவொழுக்கை அதன் உளவியலோடு எழுதும் நுட்பமும் தங்களுடைய பெரிய பலமென நினைக்கிறேன். ஆண் பெண் உறவுகள் மட்டுமல்ல, அனைத்து வகையான உறவுகளின் அடியோடும் உளவியல் சிடுக்குகளை வெகு நேர்த்தியாக தொட்டெடுக்கிறீர்கள். 
சொட்டுகள் கதை மட்டும் மனவோட்டத்தின் விதம் பெண்ணுடையாதாய் இல்லாமல் ஆணுடையது போல உணர்ந்தேன். ஒருவேளை எனக்கு அந்நியமாகப் படுகிறதோ என்னவோ.

அன்புடன்,
சுபா

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024