ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 1
ஒருநாள் கழிந்தது டிபிகல் சுரேஷ் கதை. ஆனால் வழக்கமாக இருக்கும் ஒரு எதிர்பாரா அதிர்ச்சி இதில் இல்லை.
அமுதாவின் பாத்திரம் மெல்ல மெல்லத்தான் துலங்கிவருகிறது.. முதலில் புதிதாக குடிக்க கற்றுக்கொண்ட கொளுத்து வேலைக்கு போகின்றவள் என்று ஒரு குடிசை வீட்டில் குடிகாரக்கணவனுடன் இருக்கும் ஒருத்தியைக்குறித்தான உளச்சித்திரம் ஏற்பட்டிருந்தது. பின்னர் பசுமை வீடு என்றதும் கொஞ்சம் தேவலாம் போல என்று அச்சித்திரம் கொஞ்சம் மெருகேறியது, பின்னர் கேஸ் அடுப்பு, சேமியா பாத் ,ஒரு நல்ல பள்ளியில் படிக்கும் மகள், தொலைக்காட்சி சீரியல் பார்ப்பவள் என்று முதலில் எண்ணியதற்கு முற்றிலும் மாறான ஒரு அமுதாதான் சைக்கிளில் பேருந்துநிலையம் செல்கிறாள். அவள் படித்தவளும் கூட என்று பேருந்தில் ஏறியதும் தெரிகின்றது. படித்த அமுதா கட்டிடவேலைக்கு போவது ஆச்சர்யமாகவே இருந்தது.
அபிரமியின் பாத்திரம் அச்சு அசல் கொளுத்து வேலைக்கு போகும் அடுத்த நாளைக்கான வேலையை எப்படியும் உறுதிப்படுத்திக்கொண்டே வீட்டுக்கு திரும்பும் , நான் அன்றாடம் காணும் பலநூறு பெண்களுடையது.
வழக்கம் போலவே சில வாக்கியங்கள் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுத்தின.strong என்று நான் எப்போதும் நினைக்கும்படியும் சுரேஷ் எப்படி இதெல்லாம் எழுதறாரு என்று வியக்கும்படியும் இருக்கும் சில வரிகள்/வார்த்தைகள் இருந்தன இதிலும்.
//புதுப்பத்தினியாக //மீண்டும் வேலைக்கு போவது
//புண்ணில் கொட்டிய மண்//
//திறமையும் வேட்கையும் கொண்ட கொத்தனார்கள்//
கார்களில் செல்கிறவளின் ஞாபகம் // ஒரு துரோகச்செயலைப்போல // மீண்டும் வருவது. (மீள மீள வாசித்தேன் இதை)
பேருந்தில் இப்படி கொஞ்சம் எல்லை மீறி நடத்துனர், ஓட்டுநர் மற்றும் அருகிலிருக்கும் ஆண்களிடம் பேசிக்கொண்டு வரும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன். இந்த மீறல் அவர்களுக்கு ஒருவித விடுதலையை அளிக்கின்றது என்று நினைப்பேன்.
சென்ற வாரம் கூட ஒரு மில் வேலைக்கு செல்லும், தோழிகளுடன் வந்திருந்த பெண், அப்போதுதான் பஸ்ஸில் ஏறிய ஓட்டுநரிடம் ’’எந்நேரம் நிக்கறது, இப்போ பஸ்ஸை எடுக்கலைன்னா உங்களை டைவோர்ஸ் பண்ணிருவேன் பாத்துக்குங்க’’ என்றாள், அவர் ’’டைவோர்ஸ் பன்ணிட்டு வேறெ எங்கே போவே?" என்றதும் உடனிருந்தவர்கள் பலமாக சிரித்ததும் நினைவுக்கு வந்தது
கலவனை வழித்து வீசி பூசுவது, கலவைக்கு மணல் எடுத்துக்கொண்டு போவது, கதவுகளின்னும் வைத்திருக்காத கூடம், சட்டை அனிந்துகொண்டு பூச்சுவேலையை நாசூக்காக செய்யும் மேஸ்திரி இதெல்லாம் எப்படி எழுதினீங்க?
கமலாபுரம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி என்று அந்த ஊர்களின் பெயர்களை சொல்வது கதையுடன் ஒரு ஒட்டுதலைத் தருகிறது.
அந்த கச்சிதமான உடற்கட்டுடன் இருந்த மேஸ்திரி அன்று அமுதாவுக்கு எற்படுத்திய எரிச்சலும் ஒவ்வாமையையும் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் விளக்கவில்லையெனினும் அபிராமி தொட்டவுடன் ஏற்படும் அருவருப்பும் அப்படியேதான் அமுதாவாக இருந்து வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிந்தது.
உடலும் உள்ளமும் களைத்த அமுதா மாலை பயணிக்கும்பேருந்தில் அந்த முதியவர் சலுகை எடுத்துக்கொண்டு பேசுவதும் திடீரென அந்த சலுகை எல்லைமீறியதாக பிற ஆண்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு, காட்சி சட்டென மாறுவதும், அமுதாவின் எப்போதோ ஏற்பட்டிருந்த ஏதோதோ காயங்களுக்கு அங்கு மருந்து போடப்படுவதுமாய் அந்த கடைசிப்பகுதி பிரமாதம்.
மிக நல்ல வலுவான கதை இது சுரேஷ்.
அன்புடன்
தேவி
இக்கதை பல்வேறு வாசிப்பு சாத்தியங்களை கொண்டிருந்தாலும், எனக்கு வலுவாக தோன்றியது ஒரு பெண் தன் உடலை அவதானிப்பதின் பதற்றங்கள் தான் கதை மையம் என.
உண்மையில் அமுதா மனதளவில் சிறுமிதான், ஒரு வளர்ந்த பெண்ணுக்கு தாயான போதும் அமுதாவின் அகத்துள் உள்ள சிறுமி புறத்தின் ஈவு இரக்கமற்ற எதார்த்தத்தை எதிர்கொள்ள நேரிடுவதை ஆசிரியர் கூர்ந்த மொழியால் சிற்சில வார்த்தைகளிலேயே கனமாக காட்சிப் படுத்தியுள்ளார்.
வேட்டை, பழங்குடி காலகட்டங்களில் பெண்கள் இயல்பாக மது அருந்தி இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன், ஒரு நீண்ட அகழிக்கு பின் பெரும்பான்மை பெண்கள் இயல்பாக மது அருந்த தொடங்கும் காலம் இது, இவளின் புதிய மதுப்பழக்கத்தை இயல்பாக கணவன் கடந்துசெல்லும் காட்சி அதை காட்டுகிறது.
வீட்டில் பணியிடத்தில், பயணத்தில், என எங்குமே தன்னை வெறும் உடலாக நுகர் பொருளாக எல்லோரும் பார்ப்பது குறித்து அவளுக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை, உள்ளார்ந்து தான் மேலும் அழகாக இருக்க வேண்டும் இளமை குன்றாது இருக்க வேண்டும் எல்லா இன்பங்களையும் துய்க்க வேண்டும் என்றுதான் பதட்டம் கொள்கிறாள்.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இதை விடவும் பாலியல் சீண்டல்கள் இருந்திருக்கும் தோட்ட வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு, அந்தப் பெண்களின் துயரமும் அமுதாவின் துயரமும் ஒன்றுதானா?
யாரிடமும் எந்த எதிர்ப்பும் காட்டாத அமுதா அந்த பெரியவரின் வார்த்தைகளால் ஏன் அவ்வளவு சீற்றம் கொள்கிறாள் ? அமுதாவே அறியாத ஆழத்து உண்மையை அவர் அசைத்துப் பார்க்கிறாரா?
கதிர் முருகன்
கோவை
Comments
Post a Comment