உண்ணப்படுதல்
எனக்கும் வரலாற்றுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? வரலாறு ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு பக்கமாகவும் நடந்து போய்கொண்டிருக்கிறோம். அது நடப்பது அரசப்பாதை. அரசனின் யானை போல கம்பீரமாக நடந்து செல்கிறது. நானோ ஒரு குறுகிய பழுதடைந்த சாலையில் அந்த யானை என்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற ஏக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். வரலாற்றுக்கு அதை நீங்கள் பார்த்த கணமே உங்களை உறிஞ்சத் தொடங்கும் ஆற்றலுண்டு. நான் அதனை கவனிக்காமல் என் குறுகிய பாதையில் நிம்மதியாக வாழ்ந்த நாட்கள் ஏக்கந்தரும் நினைவுகளாக என்னுள் எஞ்சிக் கிடக்கின்றன. அப்போது என் நாட்கள் என்னிடமிருந்தன. நான் கற்பித்து வைத்திருந்த வாழ்க்கைக்கான குறுகிய அர்த்தம் என்னை மகிழ்ச்சியும் கோபமும் கொண்டவனாக வைத்திருந்தது. ஆனால் நான் வரலாற்றை என்று திரும்பிப் பார்க்கத் தொடங்கினேனோ அன்றே என் வாழ்க்கை குறையத் தொடங்கிவிட்டது. என் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது. என் நாட்கள் ஒழுகி ஒழுகிச் சென்று வரலாற்றில் சேகரமாகத் தொடங்கிவிட்டன. என்னிடமிருப்பதெல்லாம் இந்த கணம் மட்டும்தான். என்னுடைய கடந்துபோன நாட்களை எல்லாம் இணைப்பாதையில் நடக்கும் அந்த யானை திருடிக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று அந்த யானையை இன்னும் கூர்மையாகப் பார்த்தேன். அது தன்னைச் சுற்றி எண்ணற்ற நுண்துளைகளை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துளையின் வழியாகவும் அது உறிஞ்சுகிறது. என்னைப் போன்ற எண்ணிலடங்கா சிறியவர்களை உண்டு கொழுத்து தான் அது முன்னேறுகிறது. நான் முடிவு செய்து விட்டேன். என்னுடைய இன்னொரு நாளை நான் வரலாற்றுக்கு தின்னக்கொடுக்கமாட்டேன்.
Super sir I just imagine me like that also.ur words are incomparable level.my best wishes
ReplyDelete